Friday 14 February 2020

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் பகுதி 4


செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து
ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்
பகுதி 4


மனோகரன் கூறுகிறார்: ஸ்டாலினச எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது என்ற பேரில் ஏகாதிபத்திய சதிவலையில் வீழ்ந்து (டிராட்ஸ்கி) எதிர்ப்புரட்சியாளனாக சீரழிந்தார்.

டிராட்ஸ்கி சோசலிசப் புரட்சி முடியும்வரை புரட்சிக்கு எதிரான கருத்துகளை பேசிவந்தான். பிப்ரவரி புரட்சியை ஏற்கவில்லை. சோசலிசப் புரட்சியை ஜனநாயகப் புரட்சி என்றான். 1917 அக்டோபர் புரட்சியை சோசலிசப் புரட்சி இல்லை என்றான். சோசலிசப் புரட்சி முடிந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பதற்கான லெனினியக் கோட்பாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தான். டிராட்ஸ்கி எப்போதும் எதிர்ப்புரட்சியாளனாகவே இருந்தான். ஸ்டாலினால் எதிர்ப்புரட்சியாளன் ஆகவில்லை. அவ்வாறு கருதுவது எண்ணமுதல்வாதம் ஆகும்.

மேலும் ஸ்டாலினால் டிராட்ஸ்கி ஏகாதிபத்திய சதிவலையில் வீழவில்லை. அவன் எப்போதும் ஏகாதிபத்திய ஆதரவாளனாகவே இருந்தான். இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் பக்கம் டிராட்ஸ்கி இருந்துகொண்டு மத்தியத்துவம் பேசினான். இது சொல்லில் சோசலிசம், நடைமுறையில் ஏகாதிபத்திய சேவை, சமூக தேசியவெறி என்றார் லெனின். போல்ஷ்விக் கட்சி வரலாறு (பக்கம் 240) கூறுவதாவது: பாட்டாளிகளின் லட்சியத்திற்குக் குந்தகம் விளைவிப்பதில் மறைமுக சமூக தேசிய வெறியினர்கள். அதாவது மத்தியத்துவம்என்று பேசிய பேர்வழிகள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. இந்தப் பேர்வழிகள் - காவுட்ஸ்கி, டிராட்ஸ்கி, மார்டாவ் முதலியவர்கள் சமூக தேசிய வெறியினர்கள். செய்த காரியங்களைப் பகிரங்கமாக சரியானவைதான்என்று சாதித்தனர். அவர்களை ஆதரித்துத் தாங்கிப் பேசினர். இவ்விதம் பாட்டாளி வர்க்கத்திற்குத் துரோகம் செய்வதில் சமூக தேசிய வெறியினருடன் சேர்ந்துகொண்டனர்.

முதல் உலகப் போர் சமயத்தில் உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுக, சொந்த அரசின் தோல்வியை நாடுகஎன்று லெனின் முழங்கினார். ஆனால் காவுத்ஸ்கியும் டிராட்ஸ்கியும் தந்தையர் நாட்டைப் பாதுகாப்போம்என்று கூறி பிற்போக்கான ஜார் ஆட்சியையும் கெரன்ஸ்கி அரசாங்கத்தையும் ஜெர்மன் ஏகாதிபத்தியத்தையும் ஆதரித்தனர். இதை லெனின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத் தாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டில் சோசலிசத் தாயகத்தை பாதுகாப்பதற்கு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தலாம் என்ற லெனினியக் கோட்பாட்டின் அடிப்படையில் (சோசலிசமும் போரும்) ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரில் சோசலிச சோவியத்தை பாதுகாக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளை கையாண்டு பாசிசத்தை வீழ்த்தினார். சோவியத்தையும் உலக மக்களையும் காப்பாற்றினார். இந்த நிலைபாட்டை டிராட்ஸ்கி எதிர்த்தான். நடைமுறையில் ஜெர்மன் பாசிசத்திற்கு சேவை செய்தான்.

இவ்வாறு டிராட்ஸ்கி முதலிலிருந்தே ஏகாதிபத்திய ஆதரவாளனாகவே இருந்தான். அவன் ஸ்டாலினால் ஏகாதிபத்திய சதி வலையில் வீழ்ந்தான் என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கியை ஆதரிப்பதாகும். இது ஏகாதிபத்திய ஆதரவு நிலைபாடு ஆகும். லெனினியத்திற்கு எதிரானதாகும்.

மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியவர்.

டிராட்ஸ்கி இயக்க மறுப்பியல்வாதி, திருத்தல்வாதி. கலைப்புவாதி, எதிர்ப்புரட்சியாளன். மூலதனம் நிதிமூலதனமாக வளர்ச்சியடைந்ததை பார்க்க மறுத்தவன். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாட்டை மறுத்தவன். டிராட்ஸ்கிய மார்க்சியம் (டிராட்ஸ்கியை மார்க்சியவாதி என்பது) என்பது இயக்க மறுப்பியலையும், இயக்கவியலையும் கலக்கும் சித்தாந்த கலைப்புவாதமாகும். ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி சகாப்தத்தின் லெனினியக் கோட்பாடுகளை வாழ்நாள் முழுதும் தாக்கியவன். அவன் மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதியாவான். இவனை மார்க்சியவாதி என்று மனோகரன் கூறுவது அப்பட்டமான டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும்.

மேலும் அ.மார்க்ஸ் கும்பலையும் டிராட்ஸ்கியையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்கிறார் மனோகரன்.

லெனினுக்கு பிறகு லெனினியத்தை அனைத்து துறைகளிலும் உயரத்திப் பிடித்தவர் ஸ்டாலின். லெனின் போலவே உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்து, கூட்டுத் தலைமை முறையில் கட்சியை வழி நடத்தியவர். மிகச் சிறந்த மார்க்சிய லெனினியவாதியாக திகழ்ந்த ஸ்டாலினை எதேச்சதிகாரவாதி என்பது மார்க்சிய விரோத நிலைப்பாடாகும். ஸ்டாலின் ஒரு எதேச்சதிகாரவாதி என்றும் இதை எதிர்ப்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய கடமை என்றும் குருசேவ் தனிநபர் தாக்குதல் நடத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குழி தோண்டிப் புதைத்தான். நவீன திருத்தல்வாததை கொண்டு வந்து முதலாளித்துவ மீட்சிக்கு வழி வகுத்தான். நம் ஆசான் ஸ்டாலினை தாக்குவதற்கு குருசேவ் டிராட்ஸ்கியின் கருத்துகளையே பயன்படுத்திக் கொண்டான். குருசேவின் பொய்யுரைகள் அனைத்தும் டிராட்ஸ்கியின் கருத்துகளே என வரலாற்றாசிரியர் குரோவர் பர் தனது குருசேவின் பொய்யுரைகள்எனும் நூலில் எழுதியுள்ளார். டிராட்ஸ்கி லெனினையும், ஸ்டலினையும் வெறும் நடைமுறையாளர்கள் எனவும், சர்வாதிகாரிகள் எனவும் கூறியவன். ஓடுகாலி டிராட்ஸ்கியின் சீடனே குருசேவ் ஆவான். டிராட்ஸ்கியின் வழியில், குருசேவின் வழியில் புதிய இடது கலைப்புவாதிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தாக்குவதற்கும், மார்க்சியம் தோற்றது என பிரச்சாரம் செய்யவும், மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசுவதற்கும் ஸ்டாலின் எதேச்சாதிகாரவாதிஎனும் அவதூறில் இருந்துதான் துவங்குகின்றனர். டிராட்ஸ்கியின் வரலாற்றுப் புரட்டுகளையும், குருசேவின் பொய்யுரைகளையும் புதிய இடதுகள் பரப்புகின்றனர். எம்.எல் இயக்கங்களில் ஊடுருவி சீர் குலைக்க ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் அடிவருடிகளாக செயல்படுகின்றன.

தமிழகத்தில் அ.மார்க்சு கும்பலும், எஸ் வி ஆர், கோவை ஞானி கும்பலும் ஸ்டாலின் எதேச்சாதிகார எதிர்ப்பு எனும் பெயரில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்க்கிறார்கள். மார்க்சியம் தோற்றது என்று கூறி மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசுகிறார்கள். டிராட்ஸ்கியையும் குருசேவையும் ஆதரிக்கிறார்கள். அ. மார்க்சு கும்பல் ஸ்டாலின் எதேச்சாதிகாரவாதி என்று தாக்குவதற்கு டிராட்ஸ்கியின் அவதூறுகளையே பயன்படுத்துகின்றது; நிறப்பிரிகையிலும், மேடைகளிலும் பேசி ஏகாதிபத்திய சேவை செய்து வருகின்றது.

எஸ்.வி. ராஜதுரை தனது ருஸ்யப் புரட்சி எனும் நூலில் ஸ்டாலின் சர்வாதிகாரமாக நடந்து கொண்டார் என எழுதுகிறார். எதிர் புரட்சிக்காரர்களை நசுக்கினார் என்கிறார். எதிர் புரட்சியாளர்களை ஜன நாயக ரீதியாக உரிய விசாரணையுடன் சோவியத் அரசு தண்டித்தது என்பதை மூடிமறைத்து ஸ்டாலினை தாக்குகிறார், டிராட்ஸ்கியை ஆதரிக்கிறார்.

ஸ்டாலின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது என்ற பேரில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை எதிர்ப்பதுதான் புதிய இடது அரசியலின் அடிநாதமாகும்.

ருஷ்யப் புரட்சி எனும் நூலில் டிராட்ஸ்கி புரட்சியில் முக்கிய பங்கு பெற்றதாக எஸ் வி ராஜதுரை பின்வருமாறு எழுதுகிறார். பக்கம் 24 (விடியல் பதிப்பகம் ருஷ்யப் புரட்சி): டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் அக்டோபர் புரட்சியில் சிறப்புப் பாத்திரம் வகித்ததாகவும், அதற்கு அவர்தான் உந்துதல் தந்ததாகவும் சொல்லப்படுவதை விமர்சிக்கும் ஸ்டாலின், டிராட்ஸ்கி புரட்சியில் சிறப்பு பாத்திரம் வகித்ததாக தம்மைத் தாமே முன்னிறுத்திக் கொள்வதுடன் கட்சி மத்தியக் கமிட்டி, கட்சியின் பெட்ரோகிரேட் மத்தியக் கமிட்டி ஆகியவற்றின் தலைமைப் பாத்திரத்தை பற்றி ஏதும் சொல்வதேயில்லை என்றும் கூறுகிறார்”.

ஆக, புரட்சியில் டிராட்ஸ்கி முக்கிய பங்கு வகித்ததாகவும், அதை ஸ்டாலின் மூடி மறைப்பதாகவும் எஸ்.வி. ராஜதுரை வரலாற்றை புரட்டுகிறார். இதையே டிராட்ஸ்கியவாதிகளும் பேசுகின்றனர். மனோகரனும் இதையே பேசுகிறார். டிராட்ஸ்கி போலவே ஸ்டாலினும் புரட்சியில் பங்கு பெற்றார் என ஒப்புக்கு சொல்வது புதிய இடது பாணியாக உள்ளது. அந்த பாணி இந்த நூலில் உள்ளது. ஸ்டாலின் எதிர் புரட்சியாளர் என்பது நவீன டிராட்ஸ்கியவாதிகளின் பாணியாக உள்ளது. இந்த பாணியிலேயே மனோகரனும் ஸ்டாலினை எதிர் புரட்சியாளர் என்கிறார். மனோகரன் ஸ்டாலின் புரட்சியில் பங்கு பெற்றதை பற்றி ஏதும் பேசவில்லை. டிராட்ஸ்கி புரட்சியில் பங்குபெற்றதாக பேசுகிறார். லெனினுக்கு எதிராக ஸ்டாலினை நிறுத்துவது, பிறகு லெனினை கேள்விக்குள்ளாக்குவது, ஸ்டாலினைத் தாக்க மாவோவை பயன்படுத்துவது, பிறகு மாவோவையும் தாக்குவது, அதைத் தொடர்ந்து ஏ.எம்.கே.வைத் தாக்குவது என்ற மனோகரனின் அனுகுமுறை டிராட்ஸ்கியவாதிகளின் அனுகுமுறையாகும். ஆனால் மாவோ வழியில் விமர்சனம் வைத்ததாக கூறுகிறார்.

பக்கம் 36 இல், புரட்சிகர எழுச்சியை டிராட்ஸ்கி ஆதரித்ததாக பொய்யான தகவலைக் கூறுகிறார். சோவியத்தின் இரண்டாவது காங்கிரசு துவங்குவதற்கு முன்பு டிராட்ஸ்கி எழுச்சியை துவக்க கூடாது என டிராட்ஸ்கி சொல்லவில்லை என்கிறார். இது பொயான தகவல் என முன்பே பார்த்தோம்.

அதே நூலில் பக்கம் 67ல் எஸ்.வி.ஆர் கூறுவதாவது: கோவை ஞானி வெளியிட்டு வந்த பரிமாணம் ஏட்டில் வெளிவந்த நேர்க்காணலில் (தாமோதரன்) டிராட்ஸ்கி பற்றி அவர் கூறியவை பின்வருமாறு: ஸ்டாலினே நமது பேராசான், வழிகாட்டி, அவரே சோவியத் நாட்டில் சோசலிசம் கட்டுகிறார், உலக சோசலிசத்தின் தலைவர் அவரே என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நான் கம்யூனிசத்திற்கு புதியவன். மேலும் மார்க்சிய லெனினியத்தை அதிகம் கற்றுத் தேராதவன். எனவே எனக்கு சொல்லப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். அரசியல் குருமார் பாமர மக்களுக்கு ஞான ஒளி புகட்டுவது இந்திய அரசியல் மரபு. இந்த மரபுடன் ஸ்டாலனியம் சரியாக பொருந்தியது.

புதிய இடது தாமோதரன் ஸ்டாலினிசம் என்று கூறுவதை எஸ்.வி.ஆர். எடுத்துக் காட்டுகிறார். ஸ்டாலினசம் என்பதன் பொருள் ஸ்டாலின் சர்வாதிகாரி, ஸ்டாலின் பலரை களையெடுத்தார் என்பதாகும். இதிலிருந்தே ஸ்டாலின் நீக்கம் (Destalinism) பேசி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கிறார்.

மாஸ்கோவிலிருந்து வந்த படுகொலை செய்த செய்திகளைக் கேட்டு தோழர்கள் மிகவும் கலங்கினர்... ...இரஷ்யப் புரட்சியும் சோவியத் சாதனைகளையும் பேசிய காங்கிரஸ்காரர்களில் ஒருவரான நேருவே 1938ல் நடந்த களையெடுப்புகள் பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்களோ டிராட்ஸ்கி வாதிகளும் பாசிசமும் ஒன்றே என்றோம். ஸ்டாலினின் களையெடுப்புகளுக்கு பலியாகிய புக்காரின், ஜினோவிவ், ராடக் போன்றோர் சோசலிசத்தின் எதிரிகள் என்றும், ஏகாதிபத்தியத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை செய்த ஒற்றர்கள், நாசகாரர்கள் என்றும் நானும்தான் நம்பினேன்... ....இன்று திரும்பிப் பார்க்கும்போது இதெல்லாம் எங்களுக்கு மட்டுமல்ல கம்யூனிச இயக்கம் முழுமைக்குமே நன்மை பயக்கவில்லை என்று உணர்கிறேன். டிராட்ஸ்கி பாசிசத்தை கடுமையாக எதிர்த்தார். ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் பாசிச பொறியில் விழுந்துவிடக் கூடாது என எச்சரித்தார். இந்த டிராட்ஸ்கியைதான் நாங்களும் எங்களைப் போன்ற ஆயிரக் கணக்கானோரும் பாசிஸ்டுகள் என முத்திரைக் குத்தினோம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஸ்டாலினிசத்தை காப்பதுதான் ரஷ்யப் புரட்சியை காப்பதாக நாங்கள் உண்மையாக நம்பினோம்......உண்மையில் ஸ்டாலினசத்தை நாங்கள் மார்க்சிய லெனினியம் என்று நம்பிக்கொண்டிருந்தோம்......நான் டிராட்ஸ்கியன் அல்ல. ஸ்டாலினே எனது வழிபாட்டு தெய்வமாக இருந்தார். அந்த விக்கிரகம் சுக்குநூறாக உடைந்து போனது. அதற்குப் பதிலாக புதிய விக்கிரகம் வேண்டுமென விரும்பவில்லை. ஏனெனில் இப்போது சிலை வழிப்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. டிராட்ஸ்கி, புக்காரின், ரோசாலுக்சம்பர்க், கிராம்சி, லூக்காஸ் இன்னபிற மார்க்சியரை எல்லா கம்யூனிஸ்டுகளும் சிரத்தையாய் படித்து விமர்சனபூர்வமாய் மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இவர்களைக் கழித்துவிட்டால் மார்க்சியம் ஏழ்மைபட்டுப்போகும். டிராட்ஸ்கி ஏகாதிபத்திய ஒற்றன், பாசிசக் கைக்கூலி என்ற ஸ்டாலினிய வரலாற்றுத் திரிபை நான் நம்பவில்லைஎன்று தாமோதரனின் கருத்துகளை எஸ்.வி.ஆர். எடுத்துக்காட்டுகிறார்.

ஸ்டாலின் எதேச்சதிகாரவாதி, பாசிச முறையில் அவர் பலரை களையெடுத்தார் என்று டிராட்ஸ்கியும் குருசேவும் கூறிய அதே பொய்யுரைகளை தாமோதரன், எஸ்.வி.ஆர். போன்ற புதிய இடது கலைப்புவாதிகள் இவ்வாறு பேசுகிறார்கள். டிராட்ஸ்கி ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர் என்று லெனின் கூறியதையும், குருசேவ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்று மாவோ கூறியதையும் இந்தக் கலைப்புவாதிகள் திட்டமிட்டு மூடிமறைக்கிறார்கள். வரலாற்று ஆசிரியர் குரோவர் ஃபர் டிராட்ஸ்கி கும்பலுக்கும் ஜெர்மன் பாசிச கும்பலுக்கும் இடையிலான உறவுகள் பற்றி ஆதாரபூர்வமாக ஜெர்மன் பாசிசத்துக்கும் டிராட்ஸ்கிக்கும் இடையிலான உறவு பற்றிய நூலில் எழுதியுள்ளார். மேலும் டிராட்ஸ்கி புகாரின் கும்பல் ஜெர்மன் பாசிசத்திற்கு உளவுவேலை பார்த்தது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு பின்வருமாறு கூறுகிறது. நூல் பக்கம் 505 “4. புக்கரின், டிராட்ஸ்கி கோஷ்டியைச் சேர்ந்த உளவாளிகள், நாசவேலைக்காரர்கள், தேசத்துரோகிகள் முதலிய சதிகாரக் கும்பலிலிருந்து மிஞ்சி நின்றவர்கள் பரிபூரணமாக ஒழிக்கப்படுதல் - சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத்துக்கு தேர்தல்.

புக்காரின் - டிராட்ஸ்கி கும்பல் செய்த கொலைகார காரியங்களைப்பற்றி 1937-ம் வருடத்தில் பல புதிய உண்மைகள் வெளிப்பட்டன. பியாடகோவ், ரடேக் ஆகியவர்கள்மீது நடந்த வழக்கும், துக்காசெல்ஸ்கி, யாகிர் முதலியவர்கள்மீது நடந்த வழக்கும், இறுதியில், புக்கரின், ரைகோவ், கரெஸ்டின் ஸ்கி, ரோஸன் கோல்ட்ஜ் முதலியவர்கள் மீது நடந்த வழக்கும் இந்தப் புதிய உண்மைகளை வெட்டவெளிச்சமாக்கின. புக்காரினைச் சேர்ந்தவர்களும், டிராட்ஸ்கியைச் சேர்ந்தவர்களும் நெடு நாட்களுக்கு முன்பே ஒன்று சேர்ந்துவிட்டார்கள்; “வலதுசாரியினர் - டிராட்ஸ்கீயவாதிகள் ஐக்கிய அணிஎன்ற பெயரில் பொதுமக்கள் விரோதிகளின் கோஷ்டியை அமைத்து வேலை செய்து வந்தனர் என்ற அந்த வழக்கு விசாரணைகள் நிரூபித்தன.


மனித வர்க்கத்தில் கழிக்கப்பட்ட இந்தக் குப்பை கூழங்களெல்லாம், டிராட்ஸ்கி, ஜினோவீவ், காமெனெவ் முதலிய பொதுமக்கள் விரோதிகளுடன் சேர்ந்து, அக்டோபர் சோசலிசப் புரட்சி நடந்த நாளிலிருந்து லெனினுக்கு விரோதமாகவும், சோவியத் கட்சிக்கும், சோவியத் சர்க்காருக்கும் விரோதமாகவும் சதிசெய்து வந்தனர் என்று அந்த வழக்குகள் காட்டின. பிரெஸ்ட்-லிட்டோல்ஸ்க் சமாதான ஒப்பந்தத்தை முறிப்பதற்கு 1918-ம் வருடம் கோடையில் இடது சாரிசோசலிச புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து செய்யப்பட்ட சதி; 1918-ம் வருடம் கோடையில் லெனினைத் துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்தியது; 1918-ம் வருடம் கோடையில் இடதுசாரிசோசலிச புரட்சிக்காரர்கள் கலகம் செய்தது; உள்ளிருந்தே லெனினுடைய தலைமைப் பதவியைப் பலவீனப்படுத்துவது என்ற லட்சியத்தைக்கொண்டு 1921ம் வருடத்தில் கட்சிக்குள் வேற்றுமைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு உண்டுபண்ணி தீவிரப்படுத்தியது; லெனின் நோய்வாய்ப்பட்டபோதும் காலமான பிறகும் கட்சியின் தலைமைப் பதவியை வீழ்த்துவதற்கு முயற்சி செய்தது; அந்நியநாட்டு சர்க்கார்களின் உளவு ஸ்தாபனங்களுக்கு சோவியத் சர்க்காரின் இரகசியங்களை அனுப்பியது; தோழர் கிராவை கொடூரத்தனமாக படுகொலை செய்தது; தேசத்தில் பல இடங்களில் தொழிற்சாலைகளை உடைத்தது; வெடிவைத்துத் தகர்த்தது பயங்கொண்ட மிருகம்போல் தோழர்கள் மெஸின்ஸ்கி, குயிபிய­வ், கார்க்கி ஆகியவர்களை கொலை செய்தது - இவையாவும், இது போல் இருபது வருடகாலத்தில் அவர்கள் செய்த வேறு பல காரியங்களும், அந்நிய முதலாளித்துவ சர்க்காரிகளின் உளவு ஸ்தாபனங்கள் இட்ட கட்டளைகளின் பேரில், டிராட்ஸ்கி, ஜினோவ், காமெனெவ், புக்காரின், ரைகோவ் முதலியவர்களாலும், அவர்களுடைய கைக்கூலிகளாலும - அவர்கள் நேராகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்குகொள்ள - செய்யப்பட்டன என்று வழக்கு விசாரணைகள் நிரூபித்தன.

ஸ்டாலின் காலத்தில் எதிர்ப்புரட்சியாளர்கள் மக்கள் நீதிமன்றம் முன் மிகவும் ஜனநாயக முறையில் விசாரிக்கப்பட்டு ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட பிறகு, அவர்களே குற்றங்கள் ஒப்புக்கொண்ட பிறகு தண்டிக்கப்பட்டனர். இந்த விசாரணைப் பற்றி குரோவர் ஃபர் மாஸ்கோ விசாரணை என்ற தனது ஆங்கில நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

டிராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களை மார்க்சியவாதிகள் என்று தாமோதரன் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் மார்க்சிய லெனினிய விரோதிகள் என்று முன்பே பார்த்தோம். இதிலிருந்து புதிய இடதுகள் டிராட்ஸ்கியை தனது ஆசானாகவும் ஸ்டாலினை எதேச்சதிகாரவாதியாகவும் சித்தரிக்கின்றனர் என்பது தெளிவு. மனோகரனும் டிராட்ஸ்கியை மார்க்சியவாதி என்று சொல்வதன் மூலம், ஸ்டாலினிடம் இடது, வலது விலகல் உள்ளது என்று சொல்வதன் மூலம் அவர் எதேச்சதிகாரி என்று சொல்வதன் மூலம் புதிய இடதுகளின் கருத்தை ஆதரிக்கிறார்.

அதே நூலில் பக்கம் 71ல் எஸ்.வி.ஆர் எழுதுகிறார். ஸ்டாலினுக்குப் பதிலாக டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்திருந்தால்? இப்படிப்பட்ட யூகங்களுக்கு பதில் சொல்வது கடினம் டிராட்ஸ்கி விஷயங்களின் நிர்வாக அம்சத்தின் மீது அதிக கவனம் செலுத்தியதாக லெனின் கூறியது நினைவுக்கு வருகிறது. தொழிற்சங்கங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இராணுவ ரீதியான கட்டுப்பாட்டுடன் பொருளுற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அவரது ஆலோசனை லெனினால் நிராகரிக்கப்பட்டது.என்கிறார்.

லெனினுக்குப் பிறகு டிராட்ஸ்கிதான் சிறந்த தலைவர் என்றும் ஸ்டாலின் தகுதியானவர் இல்லை என்றும் எஸ்.வி.ஆர். கூறுகிறார். மேலும், டிராட்ஸ்கியின் மீதும் விமர்சனம் வைப்பதைப் போல புதிய இடதுகள் நாடகமாடுகிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது. இந்த அனுகுமுறையையே மனோகரனும் மேற்கொள்கிறார்.

II. ஸ்டாலின் பற்றிய மனோகரனின் மதிப்பீடு

ஸ்டாலின் இந்தியப் புரட்சியின் எதிரி, சீனப் புரட்சியின் எதிரி, உலகப் புரட்சியின் எதிரி என்றெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்புரட்சியாளர் என்று டிராட்ஸ்கி வாதிகளைப் போல 20.01.2019 சீரமைப்புக் கமிட்டியில் நடந்த வாதத்தில் கடுமையாக மனோகரன் தாக்கி பேசினார்.

அறிக்கையில் மனோகரன் கூறுவதாவது: ஸ்டாலினின் எதேச்சதிகாரப் போக்கும், பாசிசத்தை எதிர்த்த ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும் இடது வலது விலகலைக் கொண்டதேயாகும்.

ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் பற்றி ஸ்டாலின் பற்றிய நினைவு நீடூழி வாழ்க! என்ற சமரன் கட்டுரையில் (ஜனவரி 1979) ஏ.எம்.கே. பின்வருமாறு கூறுகிறார்: மகத்தான மார்க்சிய - லெனினிய வாதியான ஸ்டாலின் லெனினுடைய போதனைகளை துணிச்சலுடனும், திடமாகவும் பாதுகாத்தார். லெனினுடைய போதனைகளுக்கு தனது அப்பழுக்கற்ற அர்பணிப்பையும், விசுவாசத்தையும் காட்டினார். தனது எண்ணற்ற தத்துவ நூல்களின் மூலம் மார்க்சிய-லெனினிய கருவூலத்திற்கு அழியா பங்கினை வழங்கியுள்ளார்.

தோழர் ஸ்டாலின் ஒரு மகத்தான பாட்டாளி வர்க்க சர்வ தேசிய வாதியுமாவார். ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தந்து, ஊட்டமளித்தார். இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கப் பேருதவி புரிந்தார். 1943-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்படும் வரை அதற்கு அவர் தலைமை தாங்கினார். அது கலைக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட் தகவல் அகலத்தின் (Communist Information Bureou) பணிகளுக்கு வழிகாட்டினார். பட்டாளி வர்க்கத்தையும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு போராளி என்ற முறையில் ஹிட்லரின் பாசிசத்தை தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கினார்.

அவர் சோவியத் மக்களின் மாபெரும் சுய தியாகத்தை வளர்த்ததாலும், சோவியத் மக்களுக்கும் உலகத்திலுள்ள போராடும் அனைத்து மக்களுக்கும் இடையில் ஒரு நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தியதாலும், இத்தோடு அல்லாமல் பாசிச முகாமிற்கும் பிற ஏகாதிபத்திய முகாமிற்கும் இடையிலான முரண்பாட்டை சரியாக பயன்படுத்தி ஒரு சரியான பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கியதாலும் அவரால் இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை முறியடிக்க முடிந்தது. ஏகாதிபத்திய விருந்திற்கு கடைசியாக வந்த விருந்தாளியாக ஹிட்லரின் பாசிசம் இருந்தது. எனவே அது அப்போருக்கு ஊற்றுக் கண்ணாகவும், அப்போரில் ஆக்கிரமிப்பாளனாகவும் இருந்தது. இதை ஸ்டாலின் சரியாகப் பகுப்பாய்வு செய்து ஒரு பாசிச எதிர்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமைத் தாங்கினார். ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து பிற ஏகாதிபத்தியங்களுடன் சேருவது சரியா என வினாவெழுப்பிய வறட்டுத் தத்துவ நிலையை அவர் மேற்கொண்டிருந்தால், ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமை தாங்குவதற்கு அவர் தவறியிருந்தால் சோசலிஸ்ட் சோவியத் யூனியனுக்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கும் என்ன கதி நேர்ந்திருக்கும்? சோவியத் யூனியன் சீரழிந்து இரட்டை அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருக்கும்; ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் புரட்சியும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும். எனவே ஹிட்லரின் பாசிசத்தைத் தோற்கடித்தது. மனித குலம் முழுவதற்கும் அவர் ஆற்றிய அருமையான, அழியாத் தொண்டாய் அமைந்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தோழர் ஸ்டாலின் சோவியத் யூனியனைப் புதுபிக்கும் பணிக்குத் தலைமைத் தாங்கினார். சோசலிச முகாமைச் சேர்ந்த புதிதாகத் தோன்றிய மக்கள் ஜனநாயக குடியரசுகளுக்கு தக்க நேரத்தில் உதவியளித்து வழிகாட்டினார். மற்ற நாடுகளின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு பேராதரவைத் தந்தார்.”. இவ்வாறு தோழர் ஏ.எம்.கே ஸ்டாலின் அகிலத்திற்கு வழிகாட்டியது பற்றியும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் பற்றியும் மார்க்சிய லெனினிய நிலைபாடு என்றும் கோட்பாடு ரீதியாக முன்வைத்துள்ளார்.

மக்கள் புரட்சி ஜூன் 2005 இதழில் மே 9, பாசிசத்தை எதிர்த்த ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் வெற்றி... சோவியத்தின் வெற்றி விழா என்ற தலையங்கக் கட்டுரையில் ஏ.எம்.கே. பின்வருமாறு கூறுகிறார்:

சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை மாற்றிவிட்டது

1941 ஜூன் 22இல் ஜெர்மனியின் பாசிச ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.

முதலில் நிலமைகள் சோவியத் யூனியனுக்கு சாதகமற்றதாகத்தான் இருந்தன. யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் ஜெர்மன் துருப்புகள் சோவியத் யூனியனுடைய பிரதேசங்களின் கணிசமான பகுதியை கைப்பற்றிவிட்டது. உக்ரேனின் மிகப்பெரிய பகுதியைக் கைப்பற்றிய பிறகு மற்றும் பைலோ ரஷ்யா, மால்டோவியா, லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு எதிரி டோம்பாசின் மீது படை எடுத்து லெனின்கிராடை முற்றுகையிட்டு மாஸ்கோவின் மீது பயங்கரமாகத் தாக்கினான்.

யுத்தநிலைமைகள் இவ்வளவு கடினமாக இருப்பினும் சோவியத் யூனியனின் நுழைவு, யுத்தத்தின் தன்மையை அடிப்படையிலேயே மாற்றிவிட்டது. சோவியத் யூனியனின் நுழைவே அந்த யுத்தத்தை முற்போக்கான, ஜனநாயக ரீதியான மற்றும் பாசிச எதிர்ப்புதன்மை கொண்ட யுத்தமாக மாற்றிவிட்டது. இக்காலத்திற்கு முன்னர் இந்த யுத்தம் மேற்கத்திய ஜனநாயக அரசுகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய வாதிகளின் கைகளில் இருந்தது; மற்றும் அவர்களின் வர்க்க நலன்கள் மேம்படுத்துவதற்காக மட்டுமே இயக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலைமைகளில், இந்த யுத்தம் பாசிச எதிர்ப்பு யுத்தமாக இல்லை; இருந்திருக்கவும் முடியாது. சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கு ஒரு திட்டவட்டமான பாசிச எதிர்ப்பு தன்மையை மட்டுமே வழங்கவில்லை. அத்துடன் மேற்கு ஜனநாயக நாடுகளுக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுத்தது.

பாசிஸ்டு ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றோடு பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்த முரண்பாடுகளின் காரணமாகவும் மற்றும் அவர்களுடைய சொந்தமக்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் பிரிட்டனும் அமெரிக்காவும் சோவியத் யூனியனோடு ஒரு கூட்டணி வைத்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டன. ஜெர்மனிக்கு எதிராக குவிந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு உடன்படிக்கையை 1941 ஜூலையில், பிரிட்டனுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான யுத்தத்தில் பரஸ்பர உதவிக்கான ஒரு உடன்பாடு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 1942 ஜூனில் செய்து கொள்ளப்பட்டது.

1930வது ஆண்டுகளின் இடைப் பகுதியில் சோவியத் அரசாங்கம் பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்க வேண்டுமென அறைகூவல் விட்டது. அதை ஏற்று ஒரு சமாதான முன்னணி அமைக்கப் பட்டிருந்தால் யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்; ஆரம்பகட்டத்திலேயே பாசிசம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் உலகமுதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலகை யுத்தத்தின் மூலம் மறுபங்கீடு செய்யவேண்டும் என்ற வெறிகொண்டிருந்த காரணத்தால் அன்று அந்த கருத்தை நிராகரித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல சோசலிச நாட்டை (சோவியத் யூனியனை) ஒழிக்க விரும்பியது மிக முக்கியமான காரணமாகும்.

பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட பிறகுதான், பயங்கரமான இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தங்களை வெளியே கொண்டுவருவதற்கு கம்யூனிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துக் கொள்ள முன்வந்தார்கள். ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி, காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் திட்டத்திற்குக் குறைவான பாசிச எதிர்ப்பு ஜனநாயகம், தேசிய விடுதலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணி என்ற அரசியல் வழியை முன்வைத்துப் போராடியது சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடாகும். பாசிசத்தை எதிர்த்து முழுசக்தியுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச முன்னணி அமைப்பது என்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் (கமின்டர்ன்) ஏழாவது மாநாட்டின் அரசியல்வழி இரண்டாம் உலகயுத்ததின் பொது யுத்ததந்திரமாக ஆகிவிட்டது. இது உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமை முறையின் சிறப்புக்கு உதாரணமாகும்.

இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின் வகுத்த பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் மார்க்சிய லெனினிய அடிப்படையில் மிகச் சரியானது என்றும் அது மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் வெற்றி என்றும் இது ஸ்டாலினின் மிகச் சிறந்த பாட்டாளிவர்க்க சர்வதேசிய வழிகாட்டுதல் என்றும் இதன் மூலம் பாசிசத்தை வீழ்த்தி சோவியத்தையும் உலக மக்களையும் காப்பாற்றினார் என்றும் ஏ.எம்.கே. தெளிவாக நிறுவியுள்ளார்.

ஆனால், மனோகரனோ ஸ்டாலின் அகிலம் கலைத்தது தவறு என்றும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் ஸ்டாலின் இழைத்த தவறுகள் இடது வலது விலகலைக் கொண்டது என்றும் கூறுகிறார். இது ஏ.எம்.கே நிலைபாட்டை கைவிட்டு ஓடுவதாகும். டிராட்ஸ்கியவாதிகளின் கருத்தாகும். டிராட்ஸ்கிதான் ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு என்ற பிரச்சாரத்தை முதலில் துவங்கியவன். இவ்வாறு கூறி ஜெர்மன் பாசிசத்திற்கு உளவு வேலை பார்த்தவன். டிராட்ஸ்கியவாதிகளின் பொய்களையே மனோகரனும் கூறுகிறார்.

ஒருபுறம் மனோகரன் தோழர் ஸ்டாலின் தனி நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியும் என்ற லெனினிசத்தின் அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நின்று சோவியத் சோசலிச நாட்டை பாதுகாத்தது மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்தி உலக மக்களைக் காப்பாற்றினார். அதுவே அவரது சாதனை. சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கு அவர் அளித்த கொடையும் அதுவே ஆகும்என்று கூறுகிறார். மறுபுறம் அதில் இடது வலது விலகல் இருப்பதாக சந்தர்ப்பவாதமாக கூறுகிறார்.

20.01.2019 நடந்த வாதத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஸ்டாலின் சரியாக வழிகாட்டவில்லை என்றார் மனோகரன். இது குறித்து ஏ.எம்.கே. ஸ்டாலின் பற்றி சமரன் கட்டுரையில் கூறுவதாவது: தோழர் ஸ்டாலின் ஆசிய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் மீது மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்தினார். அந்த நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு பாட்டாளி வர்க்க முன்னணியை உருவாக்குவதற்காக பெருமளவு பாடுபட்டார். தோழர் ஸ்டாலினால் வகுக்கப்பட்ட தேசிய இனக்கொள்கை தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையை ஒழிப்பதற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தது.என்று ஸ்டாலின் சரியாக வழிகாட்டியதாகவே கூறுகிறார்.

ஸ்டாலின் தலைமையிலான மூன்றாவது அகிலம் காலனிய, அரைகாலனிய நாடுகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைக்கவும் பாசிச நாடுகளில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அமைக்கவும் மிகச் சரியாக வழிகாட்டியது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியையே எப்போதும் பின்பற்றியது.

தொடரும்...


சமரன்
ஜனவரி 2020