Friday 29 November 2019

தோழர் ஏ.எம்.கே மார்க்சிய-லெனினிய தத்துவ ஆசான்


தோழர் ஏ.எம்.கே
மார்க்சிய-லெனினிய தத்துவ ஆசான்
 
மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்பதையே மார்க்சிய வழிபாடு என்கிறார்கள் மார்க்சியத்தின் பரம விரோதிகள். ஏ.எம்.கே வழியை உயர்த்திப் பிடிப்பதையே ஏ.எம்.கே வழிபாடு என்று சொல்பவர்களும் அவர்களாகவே இருக்கிறார்கள். எனவேதான் நாம் மார்க்சிய வழியை -ஏ.எம்.கே வழியை இன்னும் வலுவாக உயர்த்திப் பிடிக்க உயிராயுதம் ஏந்த வேண்டியுள்ளது.

ஏ.எம்.கே என்ன செய்துவிட்டார்? அவர் ஏன் கட்சி கட்டவில்லை? ஏன் புரட்சி நடத்தவில்லை? எனும் கேள்விகள் ஓடுகாலிகளாலும் கலைப்புவாதிகளாலும் ஓயாமல் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்ஸ் ஏன் கட்சி கட்டவில்லை ? ஏன் புரட்சி நடத்தவில்லை? லெனின் ஏன் பாசிசம் பற்றி பேசவில்லை? ஸ்டாலின் ஏன் புதிய காலனியம் பற்றி பேசவில்லை? மாவோ ஏன் தொண்டு நிறுவனங்கள் பற்றி பேசவில்லை? ஏன் அகிலம் கட்டவில்லை? எனும் வறட்டுத்தனமான கேள்விகளுக்கு ஒப்பானவை இக்கேள்விகள். தனக்கு வரலாறு என்ன பணித்ததோ அதை ஏ.எம்.கே சிறப்பாக செய்தார்.

ஏ.எம்.கே இதையெல்லாம் செய்திருக்கலாம் எனும் அக்கறையோடு கூறும் நண்பர்களும் உண்டு. ஆனால் ஏ.எம்.கே.வின் அரசியல் எதிரிகளின் கேள்விகளில் அவர் ஏதும் செய்யக்கூடாது எனும் வன்மத்தையே காண முடிகிறது. இவர்களுக்கும் அவர் மீதும் புரட்சியின் மீதும் அக்கறை கொண்டு வினவும் நண்பர்களுக்கும் இக்கட்டுரையே பதிலாகும்.

தோழர் ஏ.எம்.கே எதிர் புரட்சிகர கலைப்புவாத கட்டத்தில் மார்க்சியத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டு மார்க்சிய லெனினியத்தை பாதுகாத்து புதிய காலனிய கட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்தவர்.

மார்க்சிய­-லெனினிய தத்துவ கருவூலத்திற்கு தோழர் ஏ.எம்.கே. ஆற்றிய பங்களிப்பை அவர் வாழ்ந்த வரலாற்று நிலைமைகளிலிருந்து மதிப்பிட வேண்டும். காலம், சூழலை தவிர்த்துவிட்டு மதிப்பிட்டால் அவரது மார்க்சிய-லெனினிய தத்துவார்த்தப் பங்களிப்புகளை புரிந்துகொள்ள முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச ஏகபோக நிதி மூலதனத்தின் விளைபொருட்களான குருசேவ் திருத்தல்வாதமும் அதன் இறுதிவடிவமான கோர்பசேவ் கலைப்புவாதமும், டெங் கும்பலின் திருத்தல்வாதமும், ரஷ்யா மற்றும் சீனாவில் சோசலிச அரசுகளையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கலைத்து முதலாளித்துவ அமைப்புகளாக மாற்றிவிட்ட ஓர் சூழலில்;

இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கலைக்கப்பட்டு முதலாளித்துவக் கட்சிகளாக மாற்றப்பட்டு உலகில் சோசலிச முகாம்என்பது எங்குமே இல்லாத ஓர் சூழலில்;

மார்க்சியம் எவற்றையெல்லாம் சாதித்ததோ, அவற்றையெல்லாம் திட்டமிட்டு கலைத்துவிட்டு கம்யூனிசம் தோற்றுவிட்டது; மார்க்சியம் காலாவதியாகிவிட்டது; வரலாறு முடிந்துவிட்டதுஎன்று ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் புதிய காலனியச் சுரண்டலுக்குப் பிறந்த கோர்ப்பசேவ் மற்றும் புதிய இடது கலைப்புவாதங்கள் கொக்கரித்துக் கொண்டு மண்ணுக்கேற்ற மார்க்சியம்என்ற பெயரில் மார்க்சியத்தை மண்ணுக்குள் புதைத்துவிடலாம் என்று கனவு காணும் ஒரு சூழலில்;

ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்தை மூடி மறைக்கவும், அதற்கு எதிராகப் புரட்சிகர எழுச்சிகளை வராமல் தடுக்கவும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் திருச்சபை மிஷினரிகள் மூலம் எம்.எல். அமைப்புகளுக்குள் ஊடுருவி கலைப்புவாதக் கருத்துகளைப் பரப்பி உலகெங்கிலும் இந்தியாவிலுமுள்ள அநேக மா.லெ. அமைப்புகளை முதலாளித்துவ நிறுவனங்களாக மாற்றியும், இனி எங்குமே ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாகிவிடக் கூடாது என்பதற்கான அனைத்து துரோகங்களையும் நடத்தி வரும் ஒரு கலைப்புவாதச் சூழலில்;

எது மார்க்சியம் எது திருத்தல்வாதம்? எது கோர்ப்பசேவ் கலைப்புவாதம்? எது புதிய இடது கலைப்புவாதம் என்று மா-லெ இயக்கங்கள் என்று சொல்லிக்கொள்பவையும் கூட எல்லைக்கோடு போட்டுப் பார்க்க முடியாமல் திணறிவரும் சூழலில்;

நவீன திருத்தல்வாதத்தையும்-வலது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து உருவான எம்.எல். அமைப்புகள் மாவோயிசம் எனும் பெயரில் லின்பியோவின் இடது நரோத்தினச திரிபில் வீழ்ந்து பல குழுக்களாகக் கலைந்து போன ஓர் சூழலில்;

பெரும் நம்பிக்கையூட்டிய நேபாளப் புரட்சியும் பிரசண்டாவின் கலைப்புவாதத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஓர் சூழலில்;

நவம்பர் புரட்சிக்கு முந்தய காலகட்டத்திற்கு - ஒரு நூற்றாண்டிற்கு முந்தய காலகட்டத்திற்கு இணையான, உண்மையில் அதைவிட மோசமான காலகட்டத்திற்கு அதாவது சோசலிச முகாம்கள் உருவாக்கப்பட்டு கலைக்கப்பட்ட ஒரு எதிர்புரட்சிகர கலைப்புவாதச் சூழலில்;

மார்க்சும் எங்கெல்சும் மார்க்சியத்தைப் படைப்பதற்கு எதிர்கொண்ட அரசியல்-பொருளாதார-தத்துவ ரீதியான தாக்குதலுக்கு சமமான, அதைவிட மோசமானதொரு கலைப்புவாதக் காலச் சூழலில்;

வாழ்நாள் முழுதும் தனது மேதமைமிக்க மார்க்சியப் படைப்பாற்றலால் பல்முனை கலைப்புவாதத் தாக்குதல்களிலிருந்து மார்க்சிய-லெனினியத்தை மீட்டெடுத்துப் பாதுகாத்து ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தத்தின் புதிய காலனிய கட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்தவர் தோழர் ஏ.எம்.கே. அவர் நமது காலத்தின் சிறந்த மா-லெ தத்துவ ஆசானாகவும், நேர் நிகரற்ற புரட்சியாளராகவும், தியாகதீபமாகவும் விளங்குகிறார். ஏ.எம்.கே. பற்றிய இந்த மதிப்பீடு அகவயத்தில், ஆர்வக்கோளாறில், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எடுத்த மதிப்பீடுகள் அல்ல. அதற்கு ஏ.எம்.கே. மிகப்பொருத்தமானவர் என்பதை அவரது பின்வரும் தத்துவார்த்த பங்களிப்புகள் நிரூபிக்கின்றன. அவரது நிலைபாடுகள் பல ஆவணங்களாக வெளிவந்துள்ளன. மற்றவை கையெழுத்துப் பிரதிகளாகவும் (னீணீஸீusநீக்ஷீவீஜீt) ஆவணமாக்கப்படவேண்டிய நிலையிலும் உள்ளன.

ஏ.எம்.கே அவர்களின் அரசியல் - சித்தாந்தப் பங்களிப்புகளை பின்வருமாறு சுருக்கமாக தொகுத்துக் கூறலாம்.

1. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம்

கோர்பசேவ் கலைப்புவாதத்திற்குப் பிறகு புதிய இடது கலைப்புவாதம் மற்றும் பின்நவீனத்துவ கருத்துகள் மார்க்சியத்தின் மீது தொடுத்த தாக்குதலிலிருந்து மார்க்சியத்தை உயிராய் காத்தார் ஏ.எம்.கே. மார்க்சியம் குறையுள்ள தத்துவம் என்றும், மார்க்சியத்திற்கும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளுக்கும் இடையில் பொது உடன்பாட்டைக் கண்டறிவது என்றும் கூறி மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மார்க்சியத்தோடு எண்ண முதல்வாத முதலாளித்துவக் கருத்துகளை கலந்து மார்க்சியத்தின் ஆன்மாவை அழிக்க முயற்சிப்பது தத்துவத் துறையில் கலைப்புவாதம் என்றார் ஏ.எம்.கே. பெரியாரியம், அம்பேத்காரியம், காந்தியம், ஆன்மீகவாதம், மாயாவாதம், அத்வைதம், துவைதம், டிராட்ஸ்கியம், காவுத்ஸ்கியம், கிராம்சியம் போன்ற மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளை மார்க்சியத்தோடு கலப்பது தத்துவத் துறையில் கலைப்புவாதம் என்று முதன்முதலில் முன்வைத்தவர் ஏ.எம்.கே.

இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பாட்டாளிவர்க்கத்தின் உலகக் கண்ணோட்டமாகும். மார்க்சிய தத்துவத்தின் மிகவும் அடிப்படையான இக்கண்ணோட்டத்தின் மீது புதிய இடது கலைப்புவாத முகாம் தொடுத்த தாக்குதலிலிருந்து ஏ.எம்.கே. மார்க்சியத்தைக் காத்தார்.

மனிதனின் பொருளாயத வாழ்வே அவனது சிந்தனையை தீர்மானிக்கிறது. சிந்தனை அவனது வாழ்வைத் தீர்மானிப்பதில்லை என்கிறது மார்க்சியம்.

சமூகத்தின் உற்பத்தி முறையே அச்சமூகத்தின் அடித்தளமாக உள்ளது. இந்த அடித்தளமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செல்வாக்கு செலுத்தினாலும் அடித்தளமே இறுதியிலும் இறுதியாக தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது. அதாவது சமூக அடித்தள மாற்றமே மேற்கட்டுமானத்தை மாற்றுகிறது என்று மார்க்சியம் கூறுகிறது.

மார்க்சியத்தின் இந்த அடிப்படையின் மீது புதிய இடது கும்பல் பின்வருமாறு தாக்குதல் தொடுக்கிறது. புதிய இடது கருத்துகளுக்கும் மார்க்சியத்திற்கும் இடையில் எல்லைக் கோடிட்டு பிரித்துக் காட்டினார் ஏ.எம்.கே.

1) அடித்தளம், மேற்கட்டுமானம் என சமூகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது; அடித்தளம், மேற்கட்டுமானம் இரண்டுமே ஒருங்கிணைந்த வரலாற்று முழுமை Historical Block); மேற்கட்டுமான மாற்றத்தின் மூலம் அடித்தளத்தையே மாற்றலாம் என்றெல்லாம் கிராம்சிய கருத்துகளை எடுத்தாண்டு புதிய இடது கும்பல் மார்க்சியத்தின் மீது தாக்குதல் தொடுத்ததை ஏ.எம்.கே. முறியடித்தார்.

2)  அடித்தளம் மேற்கட்டுமானம் பற்றிய மார்க்சின் கருத்தை அம்பேத்கார் தலைகீழாக புரட்டிவிட்டதாக எஸ்.வி.ராஜதுரை போன்ற புதிய இடதுகள் கூறுகின்றனர். அதாவது அடித்தளம், மேற்கட்டுமானம் பற்றிய மார்க்சின் கருத்தை அருவமாக கட்டிடத்திற்குப் பொருத்தி மேல்கட்டுமானத்தை இடிக்காமல் அடித்தளத்தை இடிக்க முடியாது என்று கூறி , அகமணமுறை ஒழிப்பு மதமாற்றம் போன்ற மேற்கட்டுமான சீர்த்திருத்தங்களின் மூலமாகவே சாதியை ஒழிக்கமுடியும் என்று அம்பேத்கார் கூறுகிறார். இதை எடுத்தாண்டு புதிய இடதுகள் மார்க்சியத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். ஏ.எம்.கே புதிய இடதுகளின் அம்பேத்காரியத்தை தலைகீழாக புரட்டிப் போட்டார். அதாவது அகமணமுறை ஒழிப்பு, மத மாற்றம் மூலம் சாதி ஒழியாது; சன நாயகப் புரட்சியின் மூலமே சாதிக்கான அடித்தளத்தை தகர்க்க முடியும் என்றார்.

3)   பார்ப்பனிய எதிர்ப்பே சமூக அடிதளத்தை மாற்றிவிடும் என்ற பெரியாரியத்தை ஒரு புரட்சிகர கருத்தாக புதிய இடதுகள் பிரச்சாரம் செய்கின்றனர். பார்ப்பனியத்தின் பொருளியல் அடிதளத்தை ஏ.எம்.கே எடுத்துக்காட்டி, இந்த அடிதளத்தை தகர்க்காமல் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது என்றார். ஏகாதிபத்திய புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் தரகுவர்க்க அரைநிலவுடமை உற்பத்தி முறையின் மேல்கட்டுமானமே பார்ப்பனியம் எனவும் இந்த பிற்போக்கான உற்பத்தி முறையை ஜனநாயகப் புரட்சியின் மூலம் தகர்க்காமல் சாதியையும் பார்ப்பனியத்தையும் வீழ்த்த முடியாது என்று முதன் முதலில் முன்வைத்தவர் ஏ.எம்.கே.

4)  உற்பத்தி முறையில் உற்பத்தி சக்தியையும், உற்பத்தி உறவுகளையும் புதிய இடதுகள் தனித்தனியாக பிரிக்கின்றனர்; இது பின் நவீனத்துவம் என்றார்.

5)  உற்பத்தி உறவுகளே அடித்தளமாகவும் மேல்கட்டுமானமாகவும் உள்ளது என்று கூறி சாதியை அடிதளத்திலும் மேற்கட்டுமானத்திலும் வைக்கின்றனர். மேற்கட்டுமானத்தில் உள்ள மதத்தை அடித்தளமாக வைத்து மத ஒழிப்பின் மூலம் சாதி ஒழிப்பு பேசுகின்றனர். இது புதிய இடது கலைப்புவாதம் என்றார்.

6) அரசு வடிவில் வன்முறை பிரியோகத்திற்கான அரசு எந்திரம் வேறு; தத்துவ பிரியோகத்திற்கான அரசு எந்திரம் வேறு என்று கூறி மேற்கட்டுமான அம்சங்களை இரண்டாக பிரித்து வர்க்க சார்பு முதலாளித்துவக் கருத்தியலை வர்க்க சார்பற்றதாக வைக்கின்றனர். இது அல்தூசரின் புதிய இடது கருத்து என்றார்.

7)  கிராம்சியின் வரலாற்று முழுமை என்ற கருத்திலிருந்து அடித்தளம் மேற்கட்டுமானத்தை குறுக்கு வெட்டாகவும் (horizontal), செங்குத்தாகவும் (vertical) கூறு போட்டதை ஏ.எம்.கே அம்பலப்படுத்தினார். இது மார்க்சிய லெனினியத்தை சிற்றுரு கருத்தியலாக முன்வைக்கும் புதிய இடதுகளின் கருத்து என்றார்.

8)  புதிய இடதுகளும், திருத்தல்வாதிகளும் வரலாற்று பொருள்முதல்வாதத்தை திருத்திப் புரட்டியதை அம்பலப்படுத்தினார். வரலாற்று பொருள்முதல்வாதம் இந்தியாவுக்கு பொருந்தாது என்று புதிய இடதுகள் முன்வைக்கின்றனர். அதாவது புராதன பொதுவுடமை சமூகம், ஆண்டான் அடிமை சமூகம், நிலவுடமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம், சோசலிச சமூகம், கம்யூனிச சமூகம் என்ற வரிசையில் இந்தியாவின் உற்பத்தி முறை நிலவவில்லை என்று கூறி, இங்கு அடிமைச் சமூகமே இல்லை என்று கூறுகின்றனர். மாற்றாக சாதி சமூகம் மட்டுமே உண்டு என்கின்றனர். இதை மார்க்ஸ் கூறிய ஆசிய உற்பத்தி முறைகருத்தை வறட்டுத்தனமாக பொருத்தி முன்வைக்கின்றனர். இதை மறுத்து வர்ண சமூகமே இந்தியாவில் நிலவிய அடிமை சமூகம் என்றார் ஏ.எம்.கே. ஆண்டான் அடிமை சமூகத்தின் மேற்கட்டுமானமே வர்ணக் கருத்தியல். நிலமானிய உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமே சாதியமும் பார்ப்பனியமும் என்றார்.

9)   வர்ணம், சாதியை மரபினமாக முன்வைக்கும் பூலே, பெரியாரின் கருத்துகள் ரிஸ்லே போன்ற காலனிய இனவியலாளர்களின் கருத்து என்றார். மார்க்சின் ஆசிய உற்பத்தி முறையை வறட்டுத்தனமாக பொருத்தி இனம் மற்றும் இனக் குழுக்களே சாதிகளாக நிலைப்பட்டன என்று புதிய இடதுகள் முன்வைக்கின்றனர். இதை மார்க்சியத்திற்கு எதிரானது என்றார்.

10)    தமிழகத்தில் ஆசிய உற்பத்தி முறையை திணைக் கோட்பாட்டிற்கு வறட்டுத்தனமாக பொருத்தி குலச் சமூகம், குலமரபுக் குழு சமூகம், வேளாண் சமூகம் யாவும் ஒரே காலகட்டத்தில் தோன்றி நிலவின என புதிய இடதுகள் கூறுகின்றனர். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நான்கு சமூக வகைகளும் ஒரே காலகட்டத்தில் நிலவியதாகவும் அதிலிருந்து குலமரபு குழுக்கள் சாதிகளாக நிலைப்பெற்றன என்றும் புதிய இடதுகள் முன்வைக்கும் கருத்துகள் வரலாற்று பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது என்றார்.

11) குவாண்டம் இயற்பியல் பற்றிய கருத்துகளைத் திரித்து, பொருளை பகுத்துக்கொண்டே சென்றால் இறுதியில் பொருள் மறைந்துவிடுகிறது என்றும், எனவே, பொருளும் சிந்தனையும் ஒன்றே என்றும் கூறுவது புதிய இடதுகளின் கருத்து; மார்க்சியக் கருத்தல்ல என்றார்.

12)  பொருளின் உடபொருள் மாற்றமே அப்பொருளின் பண்பை மாற்றும் எனும் அளவு மாற்றம், பண்பு மாற்றம் பற்றிய இயக்கவியலின் விதிகளை திரித்து , கொள்ளளவு மாற்றமே பண்பு மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற கருத்து புதிய இடதுகளின் கருத்து என்றார்.

13)   எதிர்மறைகளின் ஒற்றுமை போராட்டம் பற்றிய விதியில், ஒற்றுமையை மட்டும் பேசி போராட்டத்தை மறுப்பதும். போராட்டத்தை மட்டும் பேசி ஒற்றுமையை மறுப்பதும்; ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும் என்பதை மறுப்பதும் மார்க்சியத்திற்கு எதிரானது என்றார்.

2. புதிய காலனியம் பற்றி

அ)புதிய காலனியம் பற்றிய அடிப்படை வரையறைகளை மாவோ கொடுத்திருந்த போதிலும், அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தய புதிய காலனியம் பற்றிய அடிப்படையிலான வழிகாட்டுதலாகும். மாவோவின் வரையறைகளிலிருந்து, புதிய காலனியம் பற்றிய ஆய்வுகளை வளர்த்தெடுத்து அரசியல்-தத்துவ வழிகாட்டுதலைத் தந்துள்ளார் ஏ.எம்.கே.

            இரண்டாம் உலக யுதத்திற்குப் பின்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு;

அதாவது;

1.  அட்லாண்டிக் சாசனம்

2.  மார்ஷல் திட்டம்

3. பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் உருவாக்கப் பட்ட சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகள்.

4.  அமெரிக்கா தலைமையிலான பல்வேறு இராணுவக் கூட்டுகள்

மற்றும் பிற பல்வேறு மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, புதிய காலனியம் பற்றிய கோட்பாட்டு வரையறைகளை முன்வைத்துள்ளார் ஏ.எம்.கே.

இரண்டாம் உலகப்போரின் காலத்தில் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியங்களை மீட்பதற்காக முன்வைக்கப்பட்ட கீன்சிய தத்துவமும் பொருளாதாரக் கொள்கைகளும் 1970 களில் படுதோல்வி அடைந்தன. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி பெருமளவில் வெடித்தது. அத்துடன் சோவியத் சமூக எகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ மீட்சிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்க சக்தியாக வளர்ந்து புதிய காலனிய - புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. டங்கல் திட்டம், காட் மற்றும் காட்ஸ் ஒப்பந்தம் , புதிய பொருளாதாரக் கொள்கை - உலகமய தாரளமய தனியார்மய கார்ப்பரேட்மய கொள்கைகள் பற்றிய அவரது ஆய்வுகள் புதிய காலனியம் குறித்த மிகச் சிறப்பான வழிகாட்டுதலாகும்.

பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ மேலாதிக்க கனவு நொறுங்கி வருவது பற்றியும், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியமாக மாறியது பற்றியும், சீனா முதலாளித்துவப் பாதைக்குச் சென்றது பற்றியும் ஆய்வு செய்து ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான நான்காம் முரண்பாடு முடிந்துவிட்டது எனும் அவரின் வழிகாட்டுதல் சர்வதேச திருத்தல்வாதத்தை மறுத்து மார்க்சிய லெனினியத்தைத்தை நிலை நாட்டியது.

அண்மையில் அமெரிக்க - நேட்டோ ஏகாதிபத்திய முகாமும், சீன-இரசிய ஏகாதிபத்திய முகாமும் அநீதியான பனிப்போர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது; ஆகவே அநீதிப் போரை நீதிப் போராக மாற்றுவோம், உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்றார். இதிலிருந்து இவ்விரண்டு முகாம்களின் காலனிய ஆதிக்கத்திற்கும் பனிப்போருக்கும் ஆட்பட்டுள்ள நாடுகளின் தேசிய விடுதலை மற்றும் கம்யூனிச இயக்கங்கள் தமது அரசியல் போர்தந்திரம்-செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் ஏ.எம்.கே.

மாவோவிற்குப் பிறகு புதிய கலானியம் பற்றியும், புதிய காலனிய மறு மங்கீட்டுப் போர்கள் பற்றியும், முதல் பனிப்போர் உள்ளிட்ட ஏகாதிபத்தியப் போர்களையும், அண்மையில் இரண்டாம் பனிப்போர் பற்றியும் லெனினிய வழியில் ஆய்வு செய்து லெனினியத்தை நிலை நாட்டி வளர்த்தெடுத்தார். உலகம் சோசலிச முகாம் இல்லாத முதல் உலகப் போருக்கு முந்தய வரலாற்றுக் கட்டடத்திற்கு சென்றுவிட்டது எனவும், முதல் உலகப் போரில் லெனின் முன்வைத்த உலகப் போரை உள் நாட்டுப் போராக மாற்றுவோம் எனும் சர்வதேசிய நிலைப்பாடுதான் இன்றும் பொருந்தும் எனவும் அவர் முன்வைத்த வழிகாட்டுதல் இன்றைய பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை லெனினிய வழியில் நிலை நிறுத்தியுள்ளது.

ஆ) தொண்டு நிறுவனங்களைப் பற்றி

ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தின் தரகர்களாக, ஐந்தாம் படைகளாக, தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறது எனவும், அவை புதிய பொருளாதாரக் கொள்கைகளின் செயற்கருவியாகச் செயல்படுகிறது எனவும், அவை எம்.எல். அமைப்புகளுக்குள் ஊடுருவி கலைப்புவாதக் கருத்துகளைப் பரப்பி முதலாளித்துவ நிறுவனங்களாக மாற்றுகிறது எனவும், புதிய வகைப்பட்ட தரகு வர்க்கங்களான தொண்டு நிறுவனங்களை தனிமைப்படுத்த வேண்டிய சக்திகளாக வரையறுத்தும், ஏ.எம்.கே. அவர்கள் முன்வைத்த அரசியல் நிலைபாடு என்பது புதிய காலனியம் பற்றிய தனிச்சிறப்பான பங்களிப்பாகும்.

இ) விவசாயப் புரட்சித் திட்டம்

புதிய காலனிய - வேளாண் கொள்கைகளிலிருந்து, பன்னாட்டு ஏகபோக நிதிமூலதன நலன்களுக்காக உலக அளவில் வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகி வருவது பற்றி ஆராய்ந்து வேளாண் துறையில் விவசாய புரட்சிக்கான திட்டத்திற்கான வழிகாட்டுதலை முன்வைத்துள்ளார் ஏ.எம்.கே.

புதிய காலனியாதிக்கம் பற்றியும், விவசாயப் புரட்சித் திட்டம் பற்றியும் மார்க்சிய-லெனினிய தத்துவப் பங்களிப்பு செய்தது மட்டுமின்றி, புதிய காலனியாதிக்கம் பற்றிய பல்வேறு திரிபுவாத, கலைப்புவாத நிலைபாடுகளையும் பின்வருமாறு மறுத்துள்ளார்.

1. இந்தியா பழைய காலனியாதிக்கத்திலிருந்து முழு சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், அரசியல் சுதந்திரம் பெற்றுள்ளது ஆனால் பொருளாதாரச் சார்பு நாடு என்றும், நிலவுடமை முறை ஒழிந்துவிட்டது என்றும் கூறி சோசலிச புரட்சித் திட்டத்தை வைப்பது திருத்தல்வாத நிலைபாடுகளாகும்.

2. இந்தியா சுதந்திரம் அடையவில்லை என்று கூறினாலும் போலி சுதந்திரம் என்று பேசி மறுகாலனிய நாடு என்று வரையறுப்பதும் வலது விலகல் நிலைபாடாகும்.

3. இந்தியா சுதந்திரம் பெற்று முதலாளித்துவ நாட்டிலிருந்து ஏகாதிபத்திய நாடாக மாறிவிட்டது என்றும், அது தரகு வர்க்கப் பார்ப்பனிய ஏகாதிபத்தியமாக உள்ளது என்றும் கூறி இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் பிரிந்து சென்று தனிநாடு அமைத்துக்கொள்ளுதல் என்பது மற்றுமொரு திரிபுவாத நிலைபாடாகும்.

4. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற பெயரில், ஒரு முகாமை எதிர்த்து இன்னொரு ஏகாதிபத்திய முகாமை ஆதரிப்பதும், அந்த குறிப்பிட்ட ஏகாதிபத்திய முகாமினுடைய தொண்டு நிறுவனங்களுடன் ஐக்கியம் போராட்டம் என்ற பெயரில் அவற்றுடன் ஐக்கிய முன்னணி அமைப்பது எனும் பெயரில் தொண்டுநிறுவனங்களைக் கட்சிக்குள் அனுமதிப்பது வலது திருத்தல்வாத நிலைபாடாகும்.

இவ்வாறு, ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரச் சகாப்தத்தின் புதிய காலனியக் காலகட்டம் குறித்த ஏ.எம்.கே. அவர்களின் மா-லெ அரசியல்-தத்துவ நிலைபாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க புதியதொரு பங்களிப்பாகும்.

3) தேசிய இனப் பிரச்சனை பற்றி

தேசிய இனப் பிரச்சனை பற்றிய மா.லெ கோட்பாடுகளை இந்தியாவிற்கு மிகச் சரியாக பொருத்தினார் ஏ.எம்.கே. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில், தேசிய இனங்கள் உள்நாட்டு தரகு பெரும் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கம் என்ற இரட்டை ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்றன என்றும், புதிய ஜனநாயகப் புரட்சியில் இவ்விரண்டு ஒடுக்கு முறைகளையும் தகர்ப்பதில், உள்நாட்டு விடுதலை மற்றும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, சமத்துவம் என்ற இரண்டு வடிவங்கள் எடுப்பது பற்றியும், இரு வடிவங்களுக்கு இடையிலான இயங்கியல் உறவுகளைப் பற்றியும் கோட்பாடுகள் வரையறுத்து மாவோவிற்கு பிறகு புதிய காலனிய நாடுகளில் தேசிய இனப் பிரச்சினை பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை வளர்தெடுத்தார்.

பிரிவினையை தனிவழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற லெனினிய நிலைபாட்டிலிருந்து காஷ்மீர் மற்றும் ஈழம் பற்றிய தேசிய இனப் பிரச்சினையில் தனி நாடு கோரிக்கையை தீர்வாக வைத்தார். இலங்கையில் தனித்தமிழ் ஈழம் என்பதை இந்தியாவிற்கு பொருத்தி தனித் தமிழ்நாடு பேசுவது முதலாளித்துவ தேசியவாதம் என்று மிகச்சரியாக வரையறுத்தார்.

இந்தியாவில் எழுந்த நதி நீர்ச் சிக்கல்களை தேசிய இனச் சிக்கலகளாக வரையறுத்தார். இதை புதிய காலனிய உலகமயக் கொள்கைகளோடு இணைத்து நதிகள் வணிகமயம் கார்ப்பரேட்மயம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும் என்றார். இதை மூடி மறைக்கவே தேசிய இன வெறி ஊட்டப்படுகின்றன என்றார். முல்லைப் பெரியார் பிரச்சினையில் நீருக்கு மின்சாரம் எனும் தீர்வையும், காவிரிப் பிரச்சினையில் ஹெல்சிங்கி கோட்பாட்டு அடிப்படையிலும் தீர்வை முன்வைத்தார்.

4) காலனிய இனவியல் குறித்து

இந்தியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க புதிய காலனிய நாடுகளில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உருவாக்கிய காலனிய இனவியல் கோட்பாடு (இந்தியாவில் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு) அந்நாடுகளில் 300 ஆண்டுகளாக, ஏகாதிபத்திய எதிர்ப்பை மழுங்கடித்து தேசிய இன-மொழி உணர்வும், தேசிய இன உருவாக்கமும் நிகழாமல் இருப்பதற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது என்றார். பைபிள் கதைகள் மூலம் உடலியல் மற்றும் மொழிக் குடும்ப கோட்பாடுகளை முன்வைத்து பல தேசிய இனங்களை ஒரே பிரதேசமாக இணைத்தும், துண்டாடியும் காலனிய வாதிகள் உண்டாக்கிய இந்த துரோகத்தனமான கோட்பாட்டை முறியடிக்காமல், பாட்டாளி வர்க்க தேசிய இனக் கொள்கையை நிலை நிறுத்த முடியாது என்றும் வரையறுத்தார். சாதியையே தேசிய இனமாக முன் வைக்கும் காலனிய இனவியலை நிராகரித்தும், திணைக் கோட்பாடு பேசி தேசிய இனங்களை உடைப்பதை மறுத்தும் தேசம் பற்றிய மார்க்சிய வரையறையைப் பின்வருமாறு வளர்த்தெடுத்தார் ஏ.எம்.கே.

தேசம் பற்றிய மார்க்சிய வரையறையில் சாதியை இணைத்து மார்க்சியத்தை பின்வருமாறு வளர்த்தெடுத்தார்.

தேசம் என்பது முதலாவது மக்கள் சமூகமாகும். இந்த மக்கள் சமூகம் இன அடிப்படையிலோ, இனக்குழு அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ அமைந்தது அல்ல; மாறாக அது வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற மக்கள் சமூகமாகும்”.

மார்க்சின் ஆசிய உற்பத்தி முறை பற்றிய கருத்தாக்கத்தை புதிய இடதுகள் வறட்டுத்தனமாக பொருத்தி சாதி, மதம், தேசிய இனம், இந்தியாவின் உற்பத்தி முறை பற்றிய மார்க்சிய-லெனினியக் கருத்துகளை திரித்துப் புரட்டியதை காலனிய இனவியல் பற்றிய தனது ஆவணத்தில் ஏ.எம்.கே அம்பலப்படுத்தியுள்ளார்.

மார்க்சிய ஆசான்கள் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றிய காலனிய இனவியல் குறித்த இந்த ஆய்வு ஏ.எம்.கே. அவர்கள் தத்துவ ஆசான் என்பதற்கான ஆகச் சிறந்த நிரூபணம் ஆகும். காலனிய இனவியல் குறித்து ஏ.எம்.கே முன்வைத்துள்ள பாட்டாளி வர்க்க நிலைபாடு, மா-லெ தத்துவக் கருவூலத்திற்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான சர்வதேசப் பங்களிப்பாகும்.

5) மொழியியல் பற்றி

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்ற 70ஆம் ஆண்டு திட்ட வரையிலிருந்து, இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகள் ஆங்கில, இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்டு அழிந்து வருகின்றன என்றார். இதற்குத் தீர்வாக ஜனநாயகப் புரட்சியின் மூலம் தேசிய இனங்களின் சமத்துவம் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது அவசியம் என்றார். அந்தந்த தேசிய இனத்திற்கு ஒரு மொழிக் கொள்கை தாய்மொழிக் கல்வி என்ற கோட்பாட்டை முதன் முதலில் வைத்தவர் ஏ.எம்.கே.

மார்க்சியமும் மொழியியலும்என்ற ஸ்டாலினின் ஆய்வு நூல் மொழியியலுக்கு புதிய தத்துவார்த்தப் பங்களிப்பை செய்திருந்தது. இதை மேலும் செழுமைப்படுத்தி ஐரோப்பிய காலனியவாதிகள் உருவாக்கிய மொழிக் குடும்பம் பற்றி மார்க்சிய நிலைபாட்டிலிருந்து ஆய்வு செய்து ஏ.எம்.கே வளர்த்தெடுத்துள்ளார். தேசிய இனங்களின் மொழிகளுக்குள் பொதுவான வேர்ச்சொல், இலக்கண அமைப்பு , உச்சரிப்பு இருப்பதாலேயே அம்மொழிகளை ஒரு மொழி குடும்பமாக காலனியவாதிகள் வரையறுத்ததை மறுத்தும், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி உருவாகிறது என்பதை மறுத்தும், ஒரு மொழிக் குடும்பத்தில் இருக்கிற பல தேசிய இனங்களை ஒரே மரபின தேசியமாக வரையறுப்பதை (ஆரிய, திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து ஆரிய, திராவிட இனமாக வரையறுப்பது) மறுத்தும் மொழிக் குடும்பம் பற்றிய இனவியல் கோட்பாடுகள் தவறானவை என்பதை மார்க்சிய அடிப்படையில் நிறுவியுள்ளார்.

தேசிய இனப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை குறித்த ஆய்வுகள் மூலமும் காலனிய இனவியல் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைபாட்டிலிருந்தும் பின்வரும் திரிபுவாத, புதிய இடது நிலைபாடுகளை மறுக்கிறார் ஏ.எம்.கே.

1)  இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டு இங்கு பல தேசிய இனங்கள் இருப்பதை மறுத்து, அவற்றின் சுயநிர்ணய உரிமையையே பிரிவினை என்று கருதுவது திருத்தல்வாதம்.

2) இந்தியாவை சுதந்திர நாடு, பார்ப்பனிய ஏகாதிபத்திய நாடு என்று கூறி, எல்லா தேசிய இனங்களும் பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வது என்பது திருத்தல்வாதம்;

3) ‘தனி ஈழம்ஆசியாவின் அயர்லாந்து என்று பார்க்காமல், இந்தியாவில் தனித் தமிழ்நாடு என்பது முதலாளித்துவ தேசியவாதம்.

4) தேசியம் என்பது கற்பிதம், தேசிய இனம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறி, தேசிய இனங்களை உடைப்பது (தனி தெலுங்கானா, காஷ்மீர்); சாதியை இனமாக, இனக் குழுவாக முன்வைத்து சாதிய தேசியம் பேசி (கொங்கு நாடு, வன்னிய தேசம்) தேசிய இனங்களை உடைப்பது, திராவிட தேசியம் என்ற இனவாத தேசியம் மற்றும் கலாச்சார தேசியம் பேசுவது புதிய இடது கருத்துகளாகும்.

5) உலகமய காலத்தில் நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் சந்தைக் கோட்பாடு முன்னுக்கு வந்துள்ளதாகக் கூறி, தேசிய இனப் பிரச்சினையை முதன்மை முரண்பாடாக முன்வைத்து, தேசிய இனங்கள் அனைத்தும் தனி நாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற திரிபுவாத - புதிய இடது கலைப்புவாத நிலைபாடுகளை மறுத்துள்ளனார் ஏ.எம்.கே.

4) சாதிப் பிரச்சினை பற்றி (On Caste Question)

ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் தரகு வர்க்க, நிலவுடமை உற்பத்தி முறை சாதியமைப்பை பாதுகாக்கிறது என்றார். சாதி முறை(Caste System) நிலமானிய உற்பத்தி முறையின் மேற்கட்டுமானம்; பார்ப்பனிய எதிர்ப்பால் சாதியை ஒழிக்க முடியாது என்றார். பார்ப்பனியத்தையே ஏகாதிபத்தியம் தான் பாதுக்ககிறது என்றார். எனவே, புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம், சாதிக்கான அடித்தளத்தை தகர்க்க முடியும் என்று சாதி குறித்த மார்க்சிய வரையறையையும், சாதி ஒழிப்பிற்கான செயல் தந்திரங்களையும் முதன் முதலில் முன்வைத்தவர் ஏ.எம்.கே. ஆவார். நிலமானிய உற்பத்தி முறை நிலவுகின்ற இந்தியா உள்ளிட்ட புதிய காலனிய நாடுகள் அனைத்திற்கும் ஏ.எம்.கே.வின் வழிகாட்டுதலே சாதி ஒழிப்பிற்கான மார்க்சிய வழிகாட்டுதலாக உள்ளது. இது மார்க்சியத்திற்கு செய்த புதிய பங்களிப்பு மட்டுமின்றி, மார்க்சியத்தை அடுத்தக் கட்டத்திற்கு வளர்த்தெடுத்துள்ளதை குறிக்கிறது.

சாதி குறித்த தத்துவ வழிகாட்டுதல் மூலம் பின்வரும் மார்க்சிய விரோத நிலைபாடுகளை மறுத்துள்ளார் ஏ.எம்.கே.

1)  இந்தியாவில் மட்டும் சாதி உண்டு; சாதி என்பது இனம்; வர்ணமும் சாதியும் ஒன்று; சாதியும் வர்க்கமும் போன்ற திருத்தல்வாத -புதிய இடது கருத்துகளை மறுத்துள்ளார்;

2) பார்ப்பனியம்-இந்து மதம் இரண்டும் சாதியின் அடித்தளம்; சாதி என்பது உற்பத்தி உறவுகளாகவும் உள்ளது; அடித்தளமாகவும், மேற்கட்டுமானமாகவும் உள்ளது என்பது புதிய இடது கிராம்சியவாதம் என்றார்;

3) சாதி-மத ஒழிப்பிற்கு அம்பேத்கரியமும், பெரியாரியமும் தான் தீர்வு என்பதை மறுத்து, மார்க்சியத்தில் தீர்வு உண்டு என்று நிறுவினார். தலித்தியம், வன்னியரியம் போன்ற அடையாள அரசியல் சாதிவாதம் எனவும் வர்க்கப் போராட்டத்தைச் சீர்குலைக்கிறது என்றும் கூறினார்.

4)  ஆசிய உற்பத்தி முறையை வறட்டுத்தனமாக பொருத்தி இந்தியாவில் நிலவுடமை இல்லை என்று கூறி சாதி என்பது உழைப்பு மற்றும் உழைப்பாளர் பிரிவினையிலிருந்து மட்டுமே உருவானதாகப் பார்ப்பது தவறு என்றும் கூறினார்.

5) முதலாளித்துவ சமூகத்திலும் சாதி கருத்தியல் துறையில் நிலவும் என்று கூறுகிற கிராம்சியவாதக் கருத்துகளை மறுத்துள்ளார்.

5) மதம் குறித்து

மதம் குறித்த மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை இந்தியாவிற்கு மிகச் சரியாகப் பொருத்தினார் ஏ.எம்.கே.

மதம் சுரண்டல் சமூகத்தின் விளைபொருள் (மேற்கட்டுமானம்) என்றும், வர்க்கச் சமூகம் தோன்றும் போதும், அதற்குப் பிறகான வர்க்கச் சமூகங்களிலும் சுரண்டல் வர்க்கத்தின் ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மதம் சேவை செய்கிறது எனவும், வர்க்கமற்ற சுரண்டலற்ற சமூகத்தில் மதத்திற்கான சமூக வேர்கள் தகர்க்கப்படும் எனவும், இடைப்பட்ட வரலாற்றுக் கட்டங்களில் மதம் உற்பத்தி முறைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்றார். ஆனால் சாதி அவ்வாறு தொடர முடியாது என்றும்; மதத்திற்கான சமூக வேர்களும், சாதிக்கான சமூக வேர்களும் வேறானவை எனவும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையைத் தகர்க்கும் புதிய ஜனநாயகப் புரட்சியின் வாயிலாக சாதிக்கான சமூக வேர்களைத் தகர்க்க முடியும் என்றும் கூறினார். இந்தக் கட்டத்தில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்படும் என்றும்; வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில்தான் மதத்திற்கான சமூக வேர்கள் தகர்க்கப்படும் என்றும்; மதம் பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்றும் மார்க்சியத்தை இந்தியாவிற்கு பொருத்தினார்.

மேலும், இதுவரை கிறித்துவ மதம் பற்றிய ஆய்வுகள் பழைய ஏற்பாட்டிலிருந்து தொடங்காமல் புதிய ஏற்பாட்டிலிருந்து தொடங்கியதால், கிறித்துவ மதம் தோன்றும் போதே முற்போக்கு பாத்திரம் வகித்தது என்ற வரையறை நிலவி வந்தது. ஆனால் கிறித்துவ மதம் தோன்றும் போதே சுரண்டல் வர்க்கத்தின் கருவியாகப் பிற்போக்கு பாத்திரம் வகித்தது என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்து ஆய்வு செய்து அதை முதன் முதலில் நிறுவியவர் ஏ.எம்.கே.

மதம் பற்றிய மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களைக் கொண்டு மார்க்சியத்தைத் திரிக்கும் புதிய இடது கலைப்பு வாதிகளின் பின்வரும் கருத்துகளை நிராகரித்துள்ளார் ஏ.எம்.கே.

1)  கிறித்துவ மதம் ஒடுக்கப்பட்டவர்களின் மதம் என்று கூறி விடுதலை இறையியலை முன்வைப்பது தவறு;

2) மதம் பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் இந்து மதத்திற்குப் பொருந்தாது; இந்து மதம் மதமே அல்ல; பவுத்தமும், இசுலாமும் மதங்கள் அல்ல; அவை முற்போக்கு மார்க்கங்கள் போன்ற புதிய இடது கருத்துகளை மறுத்து அவைகளும் சுரண்டல் வர்க்கத்தின் கருவிகளாக செயல்படுகின்றன என்றார்; கிறித்துவ மதம் ஒடுக்கப்பட்டோரின் மதம், மதம் என்பது அடித்தளமாக உள்ளது என்பதை மறுத்தார்;

3)  மதம் அரசுக்கு மட்டுமல்ல; கட்சிக்கும் தனிநபர் விவகாரமாகக் கருத வேண்டும் போன்ற புதிய இடது கருத்துக்களை நிராகரித்துள்ளார்;

4) மதத்திற்கு எதிராகப் போர் தொடுப்பது; நாத்தீகப் பிரச்சாரத்தை வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்பதை மறுத்து, நாத்தீகப் பிரச்சாரத்தையே பண்பாட்டுப் புரட்சி இயக்கமாக நடத்த வேண்டும் என்ற பெரியாரியத்தையும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு மத மாற்றத்தைத் தீர்வாக முன்வைக்கும் அம்பேத்கரியத்தையும் முறியடித்துள்ளார்.

6) இந்தியப் பாசிசம் பற்றி

பாசிசம் பற்றிய ஏ.எம்.கே. அவர்களின் ஆய்வுகள் மிக முக்கிய வரலாற்றுப் பங்களிப்பைக் குறிக்கின்றன.

பாசிசம் என்பது ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான சர்வாதிகாரம் எனும் மார்க்சிய அடிப்படையைப் பின்பற்றி இன்றைய புதிய காலனியக் கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார் ஏ.எம்.கே. இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் பாசிசம் என்பது ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களிலிருந்தும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நலன்களிலிருந்தும் கட்டியமைக்கப்படுகிறது என்ற வரையறைகளை முன்வைத்து மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளார். இந்திய பாசிசத்தின் வர்க்கத் தன்மையை துல்லியமாகக் கணித்து, “காங்கிரசும் பா.ஜ.க.வும் இந்திய பாசிசத்தின் இரு முகங்கள் என்றார். மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் இவ்விரு கட்சிகளின் தொங்கு சதைகளாக இருந்து இந்தியப் பாசிசத்திற்கு சேவை செய்கிறது என்றும்; இந்திய பாசிசம், சாதி-மத-தேசிய இன ஒடுக்குமுறை என்ற மூன்று தளங்களில் செயல்படுகிறது என்றும் கூறினார்.

பாசிச எதிர்ப்பையும் புதிய காலனியாதிக்க எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது போன்ற வழிகாட்டுதலும் பாசிசம் பற்றிய அவரது புதிய பங்களிப்புகளாகும்.

பாசிசம் பற்றிய கோட்பாட்டு வரையறைகள் புதிய காலனிய அடிமை நாடுகளுக்கு மட்டுமன்றி, ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பொருத்தினார். முதலாளித்துவ நாடுகளில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பாசிசம் மத வடிவம் எடுக்காமல் இன வடிவம்-நிற வடிவம் எடுக்கிறது; ஏகபோக நிதி மூலதன நெருக்கடியின் விளைவே ஏகாதிபத்திய நாடுகளின் இனவாத பாசிசத்தின் பொருளியல் அடிப்படை; ஆனால் காலனிய நாடுகளில் இன்னும் ஜனநாயகப் புரட்சி முடியாத காரணத்தினால் புதிய காலனிய ஏகபோக நிதிமூலதன நலன்களிலிருந்து சாதி, மத, தேசிய இன ஒடுக்குமுறை வடிவங்கள் எடுக்கின்றன என்பது பாசிசம் பற்றிய மார்க்சிய அனுகுமுறைக்கு அவர் தந்த தத்துவ வழிகாட்டுதலாகும்.

இலங்கையில் சிங்கள பௌத்தப் பேரினவாதப் பாசிசம், தமிழீழத்தின் மீதான ஒடுக்குமுறையைத் தனது வாழ்வாகக் கொண்டு ஏகபோக நிதி மூலதனத்திற்குச் சேவை செய்கிறது என்ற ஏ.எம்.கே-வின் தத்துவ வழிகாட்டுதல் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

பாசிசம் பற்றிய புதிய இடது கருத்துகளை பின்வருமாறு ஏ.எம்.கே. மறுக்கிறார்:

1)  பாசிசம் என்பது உளவியல் கோளாறாகப் பார்க்கும் ஃபிராய்டிசத்தை மறுத்துள்ளார்.

2) இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் பாசிசத்தை ஆரிய இனவாதப் பார்ப்பனியப் பாசிசமாகவும் (எம்.என்.ராய் கருத்துகளிலிருந்து) புதிய இடதுகள் முன் வைக்கின்றன. பார்ப்பனியப் பாசிசம் என்பது தரகு முதலாளித்துவக் கோட்பாடு என்பதை ஏ.எம்.கே. கோட்பாட்டு ரீதியில் நிறுவியுள்ளார். இதுவும் பாசிசம் பற்றிய புதிய மார்க்சியப் பங்களிப்பாகும்.

3)  இந்தியாவில் பாசிசமே இல்லை. வெறும் மதவெறி தான் உண்டு என்று கூறி பாசிசத்தை வெறும் மதவாதமாக வரையறுத்து சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற வலது திருத்தல்வாத கட்சிகள், மதச்சார்பற்ற கட்சி என்று காங்கிரசுடன் கூட்டணி வைப்பது வலது சர்ந்தப்பவாதம் என்று அம்பலப்படுத்தினார்.

4)  பாசிசம் என்பது ஒன்றுமில்லை (Fascism is Nothing) என்ற கிராம்சிய வரையறையும், நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் கூட பாசிசம் வரும் என்ற புதிய இடது வரையறையும் தவறு என்றார். டிராட்ஸ்கியின் போனபர்ட் பாசிசம், கிராம்சியின் கலாச்சார மேலாதிக்கம் , கீழ்நிலை பாசிசம் (subaltern fascism) மார்க்சியத்துக்கு எதிரானது என்றார்.

5)  கார்ப்பரேட் காவி பாசிசம், இந்துத்துவ கார்ப்பரேட் பாசிசம், பார்ப்பனிய பாசிசம் போன்ற நிலைப்பாடுகள் ஏகாதிபத்திய நிதி மூலதன பாசிசத்தை மறுத்து பாசிச எதிர்ப்பை பாஜக எதிர்ப்பாக சுருக்குவதும், கதர் பாசிச காங்கிரசு கும்பலுக்கு முட்டுக் கொடுப்பதுமாகும் என்றார்.

இவ்வாறு பாசிசம் பற்றிய அவரது தத்துவப் பங்களிப்புகள் புதிய காலனிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சிக்கான அரசியல் தத்துவ அடிப்படையிலான போர்தந்திர-செயல்தந்திரங்களை வழங்கியுள்ளது. இதுவும் ஏ.எம்.கே. அவர்களின் குறிப்பிடத் தக்க சர்வதேசியப் பங்களிப்பாகும்.

7) கலைப்புவாதம் பற்றி

கலைப்புவாதம் பற்றிய லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏ.எம்.கே. புதிய காலனியாதிக்க கட்டத்தில் தோன்றிய கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்து நான்கு துறைகளில் கலைப்புவாதம்என்று மா-லெ தத்துவத்தை வளர்த்தெடுத்தார். எதிர் புரட்சிகர காலங்களில், கட்சி பின்னடைவையும் அடகுமுறையையும் சந்திக்கும் காலங்களில் கட்சிக்குள் இருக்கும் ஊசலாட்ட சக்திகள் கலைப்புவாத்திற்கு பலியாகின்றனர் எனவும், அவ்வாறு பலியாகிவிட்டு தலைமைதான் கலைப்புவாதத்தில் ஈடுபடுகிறது என அவர்கள் பேசுவதாகவும் கூறுகிறார். இவ்வாறு புரட்சிகர இயக்கத்தை கலைப்புவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழங்கியுள்ளார்.

1. தத்துவத் துறையில் கலைப்புவாதம்

மார்க்சியம் குறையுள்ள தத்துவம் என்றும், மார்க்சியத்திற்கும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளுக்கும் பொது உடன்பாடுகளைக் கண்டறிவது என்றும் கூறி, மார்க்சியத்துடன் எண்ணமுதல்வாத, முதலாளித்துவ கருத்துகளான பெரியாரியம், அம்பேத்காரியம், கிராம்சியம், காந்தியம், அத்வைதம், டிராட்ஸ்கியம், காவுத்ஸ்கியம் போன்றவற்றைக் கலப்பது தத்துவத் துறையில் கலைப்புவாதமாகும்.

2. அரசியல் துறையில் கலைப்புவாதம்

ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் இன்று பொருந்தாது என்றும், ஏகாதிபத்தியங்களுக்கிடையில் மறுபங்கீட்டுக்கான யுத்தம் இல்லை என்றும், தனி நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்றும் கூறி, அதற்கு மாற்றாக காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியத்தையும், அதன் மலிவான வடிவமான டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியையும் முன்வைப்பது அரசியல் துறையில் கலைப்புவாதமாகும்.

3. செயல்தந்திரத் துறையில் கலைப்புவாதம்

இலக்கற்ற தன்னியல்பு செயல்தந்திரத்தை முன்வைப்பது. சூழ்நிலைக்கு ஏற்ற குறிப்பான திட்டத்தை முன்வைக்க மறுப்பது, முதலாளிய நாடுகளில் உள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதைப் போலவே, ஏற்றத்தாழ்வான சமூக வளர்ச்சியுள்ள காலனிய நாடுகளின் பாராளுமன்றங்களை பயன்படுத்த முடியாது என்பதை மறுப்பதும், மாறாக பாராளுமன்றம் வாயிலாகவே ஜனநாயகப் புரட்சியும், சோசலிசமும் சாத்தியம் என்றும் கூறி அமைப்பை சட்டவாத, பாராளுமன்றவாத அமைப்பாக மாற்றுவது செயல்தந்திரத் துறையில் கலைப்புவாதமாகும்.

4. அமைப்புத் துறையில் கலைப்புவாதம்

தலைமறைவு அமைப்பை துறந்துவிடுவது, இருவழிப் போராட்டத்தை மறுப்பது, ஜனநாயக மத்தியத்துவத்தை மறுப்பது, அமைப்பை முதலாளித்துவ நிறுவனமாக மாற்றுவது போன்றவை அமைப்புத் துறையில் கலைப்புவாதமாகும்.

மேற்கூறிய கலைப்புவாத கருத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடி முறியடிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட முடியாது என்றார் ஏ.எம்.கே. இந்த கலைப்புவாத போக்குகளால்தான் மா-லெ அமைப்புகள் தொடர்ந்து பிளவுப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, ஏ.எம்.கே அவர்களின் கலைப்புவாதம் பற்றிய இந்த மார்க்சிய பங்களிப்பானது மா-லெ அமைப்புகளை பாட்டாளி வர்க்க அமைப்புகளாக நிலைநிறுத்துவதற்கு வழிகாட்டுகிறது. அத்தகைய பாட்டாளி வர்க்க அமைப்புதான் புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்க முடியும்.

8) பாராளுமன்றத்தில் பங்கேற்பு - புறக்கணிப்பு பற்றி

பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது அல்லது புறக்கணிப்பது பற்றிய மா-லெ கோட்பாட்டை இன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய கட்டத்திற்கு மிகவும் சரியாக பொருத்தி ஏ.எம்.கே. வளர்த்தெடுத்தார்.

பாராளுமன்றத்தில் நிரந்தரமாகப் பங்கேற்பது அல்லது நிரந்தரமாகப் புறக்கணிப்பது என்ற வலது, இடது திரிபுகளையும் தவறு என்று ஏ.எம்.கே. நிறுவினார்.

ஏகாதிபத்திய காலனிய நாடுகளில் நிதிமூலதன ஆதிக்கம் சமச்சீரற்ற வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய இனங்களுக்கிடையில் மட்டுமின்றி, ஒரு தேசிய இனத்திற்குள்ளாகவே சமச்சீரற்ற வளர்ச்சி ஏற்படுத்துகிறது. எனவே, புரட்சிகர நிலைமைகளும் சமச்சீரற்று இருக்கும். அதாவது ஒரு பகுதியில் அரசியல் பிரச்சாரம் மறுபகுதியில் கிளர்ச்சி மற்றொரு பகுதியில் ஆயுத எழுச்சி என சமச்சீரற்றதாக இருக்கும். எனவே ஒரு பகுதியில் பாராளுமன்றத்தில் பங்கேற்பு, மறுபகுதியில் ஆயுதப் போராட்டம் என்பது பாராளுமன்றவாத - திருத்தல்வாதத்தில் முடியும் என்றார்.

பாராளுமன்ற பங்கேற்பு, புறக்கணிப்பு இரண்டுமே போர்த்தந்திரமில்லை, செயல்தந்திரமே என்றார். நிரந்தர பங்கேற்பு என்பது வலது விலகல், நிரந்தரப் புறக்கணிப்பு இடது விலகல் என்றார். எந்தக் கட்டத்தில் பங்கேற்பது, எந்தக் கட்டத்தில் புறக்கணிப்பது என்பது புரட்சியின் அலை ஏற்றம், அலை இறக்கம் மற்றும் கட்சி, மக்கள்படை, வர்க்கப்போராட்ட வளர்ச்சியைப் பொருத்ததுமே ஆகும் என்றார். பாராளுமன்ற புறக்கணிப்பு-பங்கேற்பு பற்றியும், சட்டரீதியான-சட்ட விரோதமானப் போராட்ட வடிவங்களை இணைப்பது பற்றியும், புரட்சியின் எழுச்சிக் கட்டத்தில் உருவாகும் இடைக்கால அரசில் பங்கெடுப்பது பற்றியும் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரங்கள் வெவ்வேறு என்றார். ஏ.எம்.கே அவர்கள் முன்வைத்துள்ள வழிகாட்டுதல் இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக் கூடியதாக உள்ளன.

9) மூன்று உலகக் கோட்பாடு பற்றி

டெங்கின் மூன்று உலகக் கோட்பாடு பாட்டாளி வர்க்க கோட்பாடல்ல, அது திருத்தல்வாதக் கோட்பாடே என்ற ஏ.எம்.கே. அவர்களின் ஆவணம் முக்கியமானதொரு சர்வதேச ஆவணம் ஆகும். சோவியத் எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் அமெரிக்க ஆதரவு மற்றும் அமெரிக்க எதிர்ப்பு என்ற பேரில் ருஷ்ய ஆதரவு நிலைபாடு திரிபுவாத நிலைபாடு என அம்பலப்படுத்தியது. மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரம் பெற்றுவிட்டன என்ற திருத்தல்வாத நிலைபாட்டை அடித்து நொறுக்கிய ஆவணம் அது.

ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான நான்காம் முரண்பாடு முடிந்துவிட்டது எனும் அவரின் வழிகாட்டுதல் சர்வதேச திருத்தல்வாதத்தை மறுத்து மார்க்சிய லெனினியத்தைத்தை நிலை நாட்டியது.

10) பிரசந்தாவின் கலைப்புவாதத்தால் நேபாளப் புரட்சியின் தோல்வி பற்றி

ஏ.எம்.கே.வின் இந்த ஆய்வு நூல் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சர்வதேசிய ஆவணமாகும். ஏனெனில் இந்நூல் தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்தை புதிய காலனியக் கட்டத்தில் நிறுவி காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டிலிருந்து உருவான பிரச்சந்தாவின் கலைப்புவாதத்தை மறுக்கிறது.

தோழரின் இந்த ஆய்வு ஏகாதிபத்திய எதிர்ப்பையும் நிலவுடைமை எதிர்ப்பையும் இரண்டு கட்டமாகப் பிரிப்பது என்ற பேரில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடுவதை தவறு என்கிறது. இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதாகக் கூறி தரகுமுதலாளித்துவப் பாராளுமன்றக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை மறுக்கிறது. புரட்சிகர எழுச்சிப் பாதை, நீண்ட மக்கள் யுத்தப் பாதை என்ற இரண்டையும் இணைப்பது கதம்பவாதச் செயல்தந்திரம் என்கிறது. புதிய ஜனநாயகப் புரட்சியும், சோசலிசப் புரட்சியும் ஒரு சங்கிலியின் இரண்டு கரணைகள் என்பதை நிறுவுகிறது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற பேரில் தொண்டு நிறுவனங்களைக் கட்சிக்குள் அனுமதித்து, நேபாளக் கட்சி கலைப்புவாதக் கட்சியாக மாறியதை அம்பலப்படுத்துகிறது. நேபாளத்தில் புரட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் பற்றிய தோழரின் ஆய்வு இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் நடத்தப்பட வேண்டிய புதிய ஜனநாயகப் புரட்சிக்கான அவரது மாபெரும் பங்களிப்பாகும்.

11)  மக்கள் அதிகாரம் செயல்தந்திரம் பற்றிய விமர்சனம்

பிரசந்தாவின் கலைப்புவாதச் செல்வாக்கிற்கு ஆட்பட்டு மக்கள் அதிகாரம் என்ற செயல்தந்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. பார்ப்பனிய பாசிச எதிர்ப்பு என்ற பெயரால், பார்ப்பனரல்லாத தரகு முதலாளித்துவக் கட்சிகளுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ள அந்த அமைப்பின் நிலைபாடு தரகு முதலாளித்து நிலைபாடு என்பதை ஏ.எம்.கே. நிறுவியுள்ளார். கட்டமைப்பு நெருக்கடி என்ற பெயரில் தாக்குதல் செயல்தந்திரத்தை வைத்துள்ளது தன்னியல்பு வழி என்று விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் அந்த அமைப்பு புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முந்தைய இடைக்காலக் கட்டமாக மக்கள் அதிகாரத்தை நிறுவுவது என்று சொல்கிறது. இதிலிருந்து தரகு முதலாளித்துவ மற்றும் தொண்டு நிறுவன கூட்டு, பாராளுமன்றவாத நிலைபாடு வைத்திருப்பதை விமர்சனப்படுத்துகிறது. ஏ.எம்.கே-வின் இந்த ஆவணம் அரசியல் செயல்தந்திரம் பற்றிய சிறப்பான ஆவணமாகும்.

12) கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாதம் பற்றிய விமர்சனம்

மாவோவின் மாபெரும் விவாத நிலைபாடு குருசேவின் நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்து மார்க்சியத்தை நிலைநாட்டியது. இது உலகளவிலும் இந்தியாவிலும் கம்யூனிச இயக்கங்கள் குருசேவ் வழி மற்றும் மாவோ வழியை ஏற்று இரண்டு முகாம்களாக பிரிந்தன. அதற்கான சர்வதேச, தேசிய நிலைமைகள் மற்றும் காரணங்கள் பற்றிய சிறப்பான மார்க்சிய ஆய்வு நூலான இது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும். மேலும் இந்த ஆவணம் ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவ மீட்சிக்கான காரணங்கள் பற்றிய ஆய்விற்கான அடிப்படைகளை வழங்கியுள்ளது.

சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் பிளவுக்கான காரணங்களையும், எம்.எல் இயக்கங்களின் பிளவுக்கான காரணங்களையும் தீர்வையும் இந்நூல் முன்வைக்கிறது. எம்.எல் இயக்கங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிய செயல்தந்திரம் வகுப்பதற்கு ஏ.எம்.கே.வின் இந்த ஆவணம் வழிகாட்டியாக திகழ்கிறது.

13)  புதிய ஜனநாயகப் புரட்சிகுறித்த திருத்தல்வாத, கலைப்புவாத கருத்துகள் பற்றி

புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிய மா-லெ கருதுக்களுக்கு எதிராக பின்வரும் திருத்தல்வாத-கலைப்புவாத கருத்துக்கள் நிலவுவதாகவும், இவற்றை பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல் மக்களை அணிதிரட்டுவது சாத்தியமில்லை எனவும் ஏ.எம்.கே கூறுகிறார்.

அவையாவன:
·   தனியரு நாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்தை மறுத்து, காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியம்மற்றும் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிபோன்ற கலைப்புவாதக் கருத்துக்களை முன்வைத்து உலகப் புரட்சிபேசுவது.

·  இன்றைய புரட்சிஎன்பது ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி; புதிய காலனிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சி என்பதை மறுப்பது

·  புதிய ஜனநாயகப் புரட்சியை உலக சோசலிசப் புரட்சியின் ஓர் அங்கமாக பார்க்க மறுப்பது

·  ஜனநாயகப் புரட்சியை இரண்டு கட்டங்களாகப் பிரித்து ஜனநாயகப் புரட்சியை கைவிடுவது; அதாவது,

1. ஏகாதிபத்திய எதிர்ப்பையும், பாசிச எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து பாசிச எதிர்ப்பு அரசாங்கம் அமைப்பதுஎனும் பெயரில் ஜனநாயகப் புரட்சியை கைவிடுவது.

2. ஏகாதிபத்திய எதிர்ப்பையும், நிலபிரபுத்துவ எதிர்ப்பையும் இரண்டாகப் பிரித்து இரண்டையும் வெவ்வேறு கட்டங்களாக எதிர்ப்பது என்ற பிரசந்தா கலைப்புவாதத்தை முன்வப்பது;

3. நிலபிரபுத்துவ எதிர்ப்பையும் வெறும் பார்ப்பனிய எதிர்ப்பாக சுருக்கி ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுப்பது; இதன் மூலம் பார்ப்பனியத்தை மறைமுகமாக பாதுகாப்பது.

· இந்தியா ஓர் புதிய காலனிய நாடு என்பதையும், அது தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதையும் மறுப்பது; இந்தியாவை சுதந்திர நாடு என்பது.

· அந்நிய நிதி மூலதனத்தால் சுதேசிய முதலாளித்துவம் வளரும் என்று கூறி ஜனநாயகப் புரட்சியை மறுப்பது.

·  இந்தியாவின் உற்பத்தி முறையானது, ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் தரகு முதலாளிய-அரை நிலவுடமை உற்பத்தி முறை என்பதை மறுத்து, சுதந்திர முதலாளிய உற்பத்தி முறை நிலவுவதாகக் கூறி சோசலிசப் புரட்சிதிட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஜனநாயகப் புரட்சியை மறுப்பது.

· பார்ப்பனிய பாசிச எதிப்பு’ ‘மக்கள் அதிகாரம்போன்ற செயல்தந்திரங்களை ஜனநாயகப் புரட்சியின் இடைக்கட்டம்எனும் பெயரில் முன்வைத்து புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிடுவது.

· பாராளுமன்றவாத சோசலிசப் புரட்சிமற்றும் பாராளுமன்ற வழியிலான மக்கள் ஜனநாயகப் புரட்சிபேசுவதும்; நிரந்தர பாராளுமன்ற பங்கேற்பு மற்றும் நிரந்தர பாராளுமன்ற புறக்கணிப்பு பேசுவதும் ஜனநாயகப் புரட்சியை கைவிடுவதாகும்.

· ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும், மறுபங்கீட்டிற்கான போரையும் மறுப்பது; உலகமயம் மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை மட்டும் ஏகாதிபத்தியமாக பார்த்து புதிய காலனிய, அமைதி வழியிலான நிதி மூலதன ஆதிக்கத்தை மறுப்பது

·  சி.பி.ஐ, சி.பி.எம். போன்ற கட்சிகளின் வலது திரிபை எதிர்த்து ஓர் அரசியல் வழியை முன்வைப்பதற்கு மாறாக, , மாவோயிசம் எனும் பேரால் லின்பியோ வழியை முன்வப்பது, அதாவது அழித்தொழிப்பு(Annihilation) எனும் நரோத்தினிய இடது திரிபை முன்வைப்பது மா-லெ வழியிலான ஜனநாயக புரட்சியை கைவிடுவதாகும்.

·  இந்தியாவையே தரகு பார்ப்பனிய ஏகாதிபத்திய நாடுஎன்று கூறி முதலாளித்துவ தேசிய வாதத்தைமுன்வைப்பதும், பாசிசம் நிலவும் சூழலில் புதிய ஜனநாயக புரட்சி பேசுவது டிராட்ஸ்கியவாதம் என்று கூறி முதலாளித்துவ தேசியவாதம் பேசுவதும் ஜனநாயக புரட்சியை கைவிடுவதாகும்.

·  கார்ப்பரேட் - காவி பாசிசம்’, ‘இந்துத்துவ கார்ப்பரேட் பாசிசம்’ ‘பார்ப்பனிய பாசிசம்என்று கூறுவது ஏகாதிபத்திய நிதிமூலதன பாசிச எதிர்ப்பை பா.ஜ.க. எதிர்ப்பாக சுருக்குவதும், பாசிச காங்கிரஸ்-தி.மு.க. கும்பலுக்கு முட்டுக் கொடுப்பதும் ஜனநாயக புரட்சியை கைவிடுவதுமாகும்.

· புதிய காலனிய - புதிய பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதில், ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும் திராவிடமும் ஒன்றே என்று காண மறுத்து, ஆரியத்திற்கு எதிராக திராவிடத்தை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பை கைவிடுவது ; ஆரிய-திராவிட இனவாதம் பாட்டாளி வர்க்க தேசிய இனக் கொள்கை மற்றும் விவசாயப் புரட்சிக்கு தடையாக உள்ளதை காண மறுப்பது.

14) இந்தியப் புரட்சியின் போர் தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றி

இந்திய பொதுவுடமை இயக்கங்களில் புரையோடிப்போய் கிடக்கும் வலது , இடது திரிபுவாத வழிகளை மறுத்து , மா- லெ வழியில் புதிய சனயாகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டவகைப்பட்ட அரசியல் வழியை விஞ்ஞானபூர்வமாக முதன்முதலில் முன்வைத்தவர் ஏ.எம்.கே ஆவார். பெரும்பானமை ஆவணம் என அழைக்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம் இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகள் அனைத்திலும் சன நாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதறாகன அரசியல் தத்துவ வழிகாட்டியாக திகழ்கிறது.

15)  ஏ.எம்.கே அவர்களின் செயல்தந்திர வழிகாட்டுதல்கள்

70 திட்டம் அடிப்டையில் சரி எனும் நிலைப்பாட்டிலிருந்து திட்டவகைப்பட்ட செயல்தந்திரங்கள் வகுத்துக் கொடுத்து அமைப்பை அரசியல் வழியில் வளர்த்தார்; நிலை நிறுத்தினார்.

டங்கல் திட்ட எதிர்ப்பு;புதிய பொருளாதார கொள்கைகள் எதிர்ப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு; தனித் தமிழீழ ஆதரவு; ஆங்கில-இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் ஒரு மொழிக் கொள்கை - தாய் மொழிக் கல்விக்கான போராட்டங்கள்; செம்மொழி மாநாடு எதிர்ப்பு; காஷ்மீரின் தனி நாட்டு விடுதலை ஆதரவு; இந்திய சிறைக்கூடத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சமத்துவம் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், சாதி ஒழிப்பு பற்றிய மார்க்சிய நிலைபாட்டிலிருந்தும், மதத்தை அரசிடமிருந்து பிரிக்கும் நிலைபாட்டிலிருந்தும் சாதி-மதக் கலவரங்களை எதிர்த்தப் போராட்டங்கள்; சங்கரமட - திருப்பனந்தாள் மட எதிர்ப்பு இயக்கம்; ஊழல் பெருச்சாளி ஜெயா-சசி கும்பல் எதிர்ப்பு; கூடங்குள அணு உலை ஆதரவு; பாராளுமன்ற புறக்கணிப்பு செயல் தந்திரம்; ஏகாதிபத்திய புதிய காலனிய எதிர்ப்பு மற்றும் தொண்டு நிறுவன ஊடுருவல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மா-லெ வழியிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து அமைப்பை அடுத்தக் கட்டத்திற்கு தோழர் ஏ.எம்.கே. கொண்டு சென்றார்.

ஓரடி முன்னால் ஈரடி பின்னால்என்று லெனின் கூறியதைப் போல, அமைப்பு ஒவ்வொரு செயல்தந்திரத்திற்கும் ஓரடி முன்னேற, கலைப்புவாதத்தால் ஈரடி பின்னோக்கிச் சென்றது. ஒவ்வொரு கலைப்புவாத செயல்தந்திரத்திற்கும் ஆளும் வர்க்கம், புதிய இடதுகள், தொண்டு நிறுவனங்கள் பின்புலமாக இருந்தன.

16) கட்சி ஸ்தாபனக் கோட்பாடுகள் பற்றி

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழியில் இந்தியாவின் குறிப்பான நிலைமகளுக்கேற்ப கட்சி ஸ்தாபன கோட்பாடுகளை வரையறுத்து தந்துள்ளார் ஏ.எம்.கே.

ஏ.எம்.கே அவர்களின் வாழ்க்கை ஓர் மாபெரும் மார்க்சிய லெனினியவாதியின் வாழ்க்கையாக உள்ளது. அவர் ஒரு தலைச்சிறந்த புரட்சியாளருக்கான முன்னுதாரணமாக திகழ்கிறார். தியாகத்தில் எவரும் அவரை வெல்வது கடினம். எதிரிகளுக்கு அச்சமூட்டும் கலகக்காரராக , தோழர்களுக்கு வாஞ்சையுள்ள தோழராக அவர் வாழ்ந்தார். ஏ.எம்.கே அவர்களை நினைவுகூரும் தருணம் என்பது நம்மிடம் புரட்சிகர சிந்தனை தோன்றும் தருணமாகும்.

சமரன் என்றால் ஏ.எம்.கே என எதிரிகளாலும் அறியப்பட்ட தோழர் ஏ.எம்.கே இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு மார்க்சியத்தை மிகச்சரியாக பொருத்திய மார்க்சிய படைப்பாளி (Creative Marxist) ஆவார். தோழர் ஏ.எம்.கே நமது காலத்தின் மார்க்சிய லெனினிய தத்துவ ஆசானாக திகழ்கிறார். பாட்டாளி வர்க்கம் தன் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கு தகுதியான தலைவராக ஏ.எம்.கே இருக்கிறார். காற்று இருக்கும் வரை காரல்மார்க்சும் எங்கல்சும் லெனினும் ஸ்டாலினும் மாவோவும் இருப்பார்கள். இவர்களின் தலைச்சிறந்த மாணவரான ஏ.எம்.கே.வும் இருப்பார்.

சமரன், நவம்பர், 2019