Sunday 22 December 2019

“நூரம்பர்க்” குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் இந்துக்களையும் உள்நாட்டு அகதிகளாக்கி படுகொலை செய்யும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலைக் கருவறுப்போம்!!

நூரம்பர்க்குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் இந்துக்களையும் உள்நாட்டு அகதிகளாக்கி படுகொலை செய்யும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலைக் கருவறுப்போம்!!

  
இந்துத்துவ பாசிச மோடி கும்பல் இஸ்லாமியர்களையும் ஒடுக்கப்பட்ட இந்துக்களையும் நாடற்றவர்களாக மாற்றி இந்துநாட்டை உருவாக்கும் தனது இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக இரண்டு பாசிச சட்டங்களை இந்திய மக்கள் மீது ஏவியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act-2019) மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டம் (National Registers of Citizens Act) எனப்படும் இந்த பாசிச சட்டங்கள் இந்து ராஜ்ஜியத்தையும் அதன் மூலம் ஏகாதிபத்திய புதிய காலனிய சாம்ராஜ்ஜியத்தையும் சட்டபூர்வமாக அமைப்பதற்கான எதிர்ப் புரட்சிகர சட்டங்களாக திகழ்கின்றன. இச்சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவிக் காடையர்கள் இராணுவ உடையில் மக்களின் இரத்தத்தைக் குடிக்கின்றனர். பிணந்திண்ணிக் கழுகுகளான மோடி-அமித்ஷா  கும்பல் போராடிவரும் மாணவர்களையும், பெண்களையும் சுட்டுத் தள்ளுகிறது.அடக்குமுறைகளை மீறி அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் கிளர்ச்சி வடிவத்தை எட்டியுள்ளன. தமிழகம் முழுவதும் மாணவர்கள்-இளைஞர்கள் வீறுகொண்டு போராடிவருகின்றனர். இந்திய மக்கள் மீது ஓர் மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை திணித்துள்ளது பாசிச மோடி கும்பல்.

இந்து ராஜ்ஜியத்தை நிறுவும் குடியுரிமை சட்டம்

1955 குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை என்பதை அனுமதிக்கிறது. இச்சட்டத்தைத் திருத்தி மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மோடி-அமித்ஷா காட்டுமிராண்டி கும்பல். இது இவர்களின் அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அரசு மதமாக உள்ள இஸ்லாமிய மதத்தால் ஒடுக்கப்படும் இந்துக்கள், பார்சிகள், சமணர்கள் (ஜைனர்கள்), பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்தவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தஞ்சம் அடைவதாகவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும், இஸ்லாமியர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகளாக இங்கு வருவதை தடுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். பண்டார பரதேசிக் கூட்டம் பிதற்றுகிறது.

ஆனால் பாகிஸ்தானில் இந்துக்களை விட அதிகமாக ஒடுக்கப்பட்டு இந்தியாவிற்கு வரும் இலட்சக்கணக்கான அஹமதியாஇஸ்லாமியர்களுக்கும், மியான்மர் அரசின் பவுத்த பாசிசத்தால் ஒடுக்கப்படும் ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கும், பூடான் கிறித்தவர்களுக்கும், சிங்கள பவுத்த பேரினவாத பாசிசத்தால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கும், வங்கதேச இஸ்லாமியர்களுக்கும், ஆப்கானின் ஷியா இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிச சட்டங்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக பண்டாரங்கள் நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டன. குடியுரிமைச் சட்டத்தின் நடைமுறை வடிவமே தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டமாகும்.

குடியுரிமைச் சட்டம் இசுலாமிய மதத்தால் ஒடுக்கப்பட்டவர்களை பற்றி மட்டுமே பேசுவதால் இது இசுலாமிய எதிர்ப்பையும், இந்து மதம் மற்றும் அதன் நட்பு மதங்களையும் உள்ளடக்கிய இந்து நாட்டை அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. அதுவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளை மட்டுமே இணைத்து, பவுத்த பாசிச இலங்கை-மியான்மர் நாடுகள் மற்றும் நேபாள இந்து மதவெறி நாடுகளை இணைக்காமல் விட்டது என்பது அப்பட்டமாக இந்து மதவெறி தேசத்தை அமைப்பதற்கான சட்டமாக இவை விளங்குவதோடு, அந்நாடுகளின் இந்து மதம் மற்றும் பவுத்த மத பாசிசத்தையும் ஆதரிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்து மதம், பவுத்த மதம் மற்றும் இஸ்லாம் மதம் போன்றவை தமது சொந்த மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினரை ஒடுக்குவதை இந்துத்துவ கோட்பாட்டின்படி ஆதரிக்கிறது.

எனவே, இச்சட்டங்கள் அப்பட்டமாக இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவதோடு, இந்து மதம் மற்றும் பவுத்த மத பாசிசத்தால் ஒடுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும், ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கும் (அதாவது ஆர்.எஸ்.எஸ் மொழியில் இந்துக்களுக்கும்) எதிரானதாக விளங்கி அவர்களையும் உள்நாட்டு அகதிகளாக மாற்றும் இந்து ராஜ்ஜிய சட்டங்களாகும்.

இச்சட்டங்கள் யூதர்களுக்கு குடியுரிமை மறுத்து நாடற்றவர்களாக மாற்றி இனச் சுத்திகரிப்பு செய்த நூரம்பார்க் சட்டங்களுக்கு இணையான பாசிச சட்டங்களாகும். ஜெர்மனியின் தூய ஆரிய இனவாத பாசிசத்திலிருந்து இந்துத்துவம்பிறந்ததை போலவே, மோடியின் குடியுரிமைச் சட்டங்களும் ஹிட்லரின் நூரம்பர்க் சட்டங்களிலிருந்தே பிறந்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்தின் நடைமுறை வடிவமே பதிவேடுகள் சட்டம்

குடியுரிமைச் சட்ட திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டம் இரண்டும் பிரித்து பார்க்க முடியாததாகவும் பிரிக்கக் கூடாததாகவும் உள்ளன. இன்னும் சொல்வதெனில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு பதிவேடுகள் சட்டம் சேவை செய்கிறது. அதற்கு நடைமுறை வடிவம் தருகிறது.

பதிவேடுகள் சட்டம் அசாம் மாநிலத்திற்கு மட்டும் என முதலில் சொல்லிவிட்டு தற்போது இந்தியா முழுவதும் அமல்படுத்தவுள்ளதாக மோடி கும்பல் அறிவித்துள்ளது.


அசாமிற்கு 1971 மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு அதாவது வங்கப் பிரிவினைக்குப் பிறகு, வங்காள தேசத்திலிருந்து (பங்களாதேஷ்) சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி 1979ல் அசாமில் போராட்டம் வெடித்தது. வங்கதேசப் பிரிவினைக்கு பாசிச இந்திரா கும்பலும் சோவியத் சமூக ஏகாதிபத்திய-அமெரிக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளும் பின்புலமாக இருந்தன. 2000க்கும் மேற்பட்டவர்கள் வந்தேறிகள் என கொல்லப்பட்டனர்.

1985 ஆம் ஆண்டு ராஜீவ் அரசுடன் அசாம் மாணவர் அமைப்பு உள்ளிட்ட போராளி குழுக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. 1971 மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்கப்பட முடியாதவர்களின் பெயர்கள் குடியுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படவில்லை.

தேசிய குடியுரிமை பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி 2009 ஆம் ஆண்டில் அபிஜீத் சர்மா என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பதிவேட்டை புதுப்பிக்கும் பணியை துவங்க உத்தரவிட்டது. அதன்படி 1971 மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிற்கு முன்பு வந்தவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாதவர்கள், 1971-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்கள் இந்த தேதிக்கு முன்பே குடியேறியவர்கள் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் பட்டிலியிடப்பட்டு அகதிகளாக்கப்படவுள்ளனர். இதில் பெரும்பகுதி இசுலாமியர்களும், இந்துக்களும், அசாம் வெள்ள பாதிப்புகளால் தங்கள் அடையாளங்களை இழந்தவர்களும் அடங்குவர்.

பட்டியலில் இல்லாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றிருந்த சூழலில் தற்போது மோடி கும்பல் இதில் இந்துக்களை மட்டும் இங்கேயே அனுமதித்து இசுலாமியர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.  

1955 குடியுரிமை சட்டத்தில் புலம் பெயர்ந்து இங்கு வாழ வந்தவர்கள் 11 ஆண்டுகள்  வசித்தப் பிறகு குடியுரிமை பெறலாம் என்று இருந்ததை ஆறு ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் இசுலாமியர்கள் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது மோடி ஆட்சி. காங்கிரசு கும்பல் 1985இல் பெருந்தேசிய வெறி பாசிசத்திலிருந்து இதை அணுக, பாஜக கும்பலோ இந்துத்துவ பாசிசத்திலிருந்து அணுகுகிறது. இதனாலேயே தற்போது அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கும், மேற்கு வங்கத்திலும் கலவரங்கள் வெடித்துள்ளன.

அசாம் மாநிலம் மட்டுமன்றி எல்லா மாநிலங்களுக்கும் பதிவேடுகள் சட்டம் விரிவுபடுத்தப்படும் என்பதன் பொருள் இந்தியாவெங்கும் உள்ள இசுலாமியர்களையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களையும், சாதி, மத, இனக் கலவரங்களால் தங்களுடைய அடையாளங்களை இழந்தவர்களையும் நாடற்றவர்களாக உள்நாட்டு அகதிகளாக மாற்றும் தேசத் துரோக நடவடிக்கையாகும்.

இந்துக்களுக்கு எதிரான இந்து ராஜ்ஜியம்

இசுலாம் மதத்தால் ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்பதன் மூலம் அரசியல், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு வருபவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது; ஆனால் இந்த தேசிய இன மக்கள் சிங்கள-பௌத்த மதத்தால் ஒடுக்கப்படுவது பற்றி மூச்சு விடவில்லை மோடி ஆட்சி. எளிமையாகச் சொல்வதெனில் தேசிய இன ஒடுக்குமுறையை வெறும் மத ஒடுக்குமுறையாக - அதுவும் இசுலாம் மத ஒடுக்குமுறையாக மட்டுமே சித்தரிக்கிறது மோடி கும்பல். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற வாதத்தை, தமிழர்கள் இந்துக்களா இல்லையா என்ற வாதமாக சங்பரிவாரங்கள் திசைத் திருப்புகின்றன.

தேசிய இனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி சாதி-மத-இனக் கலவரங்களை மோடி ஆட்சி தூண்டி வருகிறது என்பதற்கு நேற்று காஷ்மீரமும், இன்று அசாமும், நடூர் சாதி தீண்டாமை படுகொலைகளும் நேரடி உதாரணங்களாகும். ஆந்திர தேசிய இனத்தை இரண்டாக உடைத்த காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு முன்னோடியாகும்.

தேசிய இனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்திய பிறகு சாதி ரீதியாக பிளவுபடுத்துவது இந்துத்துவாவின் - இந்து ராஜ்ஜியத்தின் திட்டமாகும். தமிழ் தேசிய இனம் வன்னியர் தேசம், கொங்கு தேசம், பறையர் தேசம், தேவர் தேசம் என கூறு போடப்பட்டு ஒரு கோடி பேருக்கு ஒரு மாநிலம்என்ற ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் இந்தியா நூறு சமஸ்தானங்களாக மாற்றப்படும். இந்த இந்து ராஜ்ஜியம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இன உணர்வை பிளவுபடுத்தி திசைதிருப்புவதன் மூலம் வலுவாக ஏகாதிபத்திய புதிய காலனிய சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டு இந்நாட்டின் மூலப்பொருட்களும், இயற்கை வளங்களும், மனித உழைப்பும் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படும். இந்திய துணை கண்டம் உள்ளிட்ட காலனிய பிரதேசங்கள் மீண்டும் மத்தியகால சுரண்டலுக்கு ஆட்படவுள்ளன. அதற்காகவே சர்வதேச நிதி மூலதன சேவைச் சட்டத்தைமோடி கும்பல் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே புதிய காலனிய பொருளாதார கொள்கைகள் ஏற்படுத்திவரும் நெருக்கடியால் சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் இச்சட்டத்தால் மேலும் கடுமையாக பாதிக்கப்படும். இச்சட்டத்தின் மூலம் தங்குதடையற்ற கட்டற்ற நிதி மூலதனம் அனுமதிக்கபடுவதால் ஏற்படப்போகும் நெருக்கடிகளை எதிர்த்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும், போராட்டங்களே எழாமல் இருப்பதற்கும்தான் இந்து ராஜ்ஜியம் கட்டியமைக்கப்படுகிறது. சர்வதேச நிதி மூலதன சேவைச் சட்டத்தின் மூலம் அந்நிய நிதி மூலதனத்திற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்குகிறது.

ராம ராஜ்ஜியத்தில் ராமர் யார்? அனுமர்கள் யார்?

மோடி கும்பலின் இந்து ராஜ்ஜியம் உண்மையில் இந்துக்களுக்கான ராஜ்ஜியம் அல்ல. இந்துக்கள் மீதான ஏகாதிபத்திய - தரகு வர்க்க - நிலவுடைமை வர்க்கம் ராஜ்ஜியமாகவே அது இருக்கும். இந்துக்களின் தேசிய வெறி - மதவெறியின் மீது கட்டப்படும் இந்த ராமராஜ்ஜியத்தில் ராமர்களாக ஆட்சியில் அமரப் போவது ஏகாதிபத்தியவாதிகளே ஆவர்; அம்பானிகளும் அதானிகளும்- மூப்பனார்களும் வாண்டையார்களும் அனுமார்களாக விளங்குவார்கள். இந்த ராஜ்ஜியத்திற்குள் இஸ்லாமியர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் இடமில்லை. அவர்கள் கொத்தடிமைகளாகவும் மலிவான கூலி உழைப்பின் மூலம் மூலதனத்தைப் பெருக்கும் அத்துக் கூலிகளாகவும், கார்ப்பரேட் அடிமைகளாகவும் இருப்பர். நாடெங்கும் அசாம் மாதிரியில் வதைமுகாம்கள் உருவாக்கப்படும். இந்தியா தேசிய இனங்களின் வதைக் கூடங்களாக- கொலைக் களங்களாக மாறும். எனவே ராம ராஜ்ஜியம் என்பது எதிர்புரட்சிகர ராஜ்ஜியமாகும்.

இல்லாத ராமனுக்கு கோவில்; இருக்கிற அஹமதுக்கும் சுப்பனுக்கும் வதை முகாம்:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களின் மத உரிமையை மோடி கும்பலும் உச்சநீதிமன்றமும் பறித்து விட்டது. இஸ்லாமியர்களின் மசூதிகளும், தாஜ்மஹாலும் இந்துக்களின் கோவில்களை இடித்து கட்டப்பட்டதாக அவர்கள் நம்பினால் அனைத்து மசூதிகளையும் இடிப்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டியாக விளங்குகிறது. இந்து மதவெறி சங்பரிவார பண்டாரங்களால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களின் மத உரிமை மறுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது குடியுரிமையும் மறுக்கப்படுகின்றது. குடியுரிமைச் சட்டங்கள் அவர்களை ஏதிலிகளாக மாற்றுகிறது. கோத்ரா, குஜராத் மற்றும் அயோத்தி வகைப்பட்ட கலவரங்களால் இஸ்லாமியர்களும் சாதிக் கலவரங்களால் அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட இந்துக்களும், இனக் கலவரங்களால் அடையாளங்களை இழந்த தேசிய இன மக்களும் அகதிகளாக்கப்படுவர். இல்லாத ராமனுக்கு கோவில் கட்டும் இந்த ராமராஜ்ஜியத்தின் மூலம் உயிரோடு இருக்கும் அஹமதையும், சுப்பனையும், குப்பனையும் நாடற்றவர்களாக்கி வதை முகாம்களில் அடைத்து நூரம்பர்க்படுகொலைகளை ஓநாய் மோடி ஆட்சி நிகழ்த்தவுள்ளது.


மோடி கும்பலின் எதிர்புரட்சிகர யுத்தத்தை புரட்சிகர யுத்தத்தால்தான் முறியடிக்க முடியும்

இந்தியாவில் தேசிய இனங்களுக்கிடையிலும், ஒரு தேசிய இனத்திற்குள்ளேயும் விவசாயிகளும் தொழிலாளர்களும் புதிய காலனிய பொருளாதார கொள்கைகளாலும் கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளாலும் இடம் பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக-எழுத்தில் வடிக்க முடியாத துயரத்தில் அலைந்து திரியும் குழுக்களாக செத்து மடிகின்றனர். இந்த பாசிச சட்டங்கள் தமிழகம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களையும் மேலும் ஒடுக்குவதாக உள்ளது.

தமிழர்கள் மும்பை-கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்வதற்கும், பீகாரிகள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்வதற்கும் காரணம் மத்திய, மாநில அரசுகளின் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். இந்துக்கள் என்பதால் இவர்களின் இடப்பெயர்வுகள் நடக்கவில்லை. கூலியுழைப்பை மேலான விலைக்கு விற்பதற்கே இந்த இடப் பெயர்வுகள் நிகழ்கின்றன. இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை எதிரிகளாக பாவிப்பது பாட்டாளிவர்க்க அனுகுமுறையல்ல. தமிழர்களின் வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் புதிய காலனிய - புதிய பொருளாதார கொள்கைகளே ஒழிய பிற மாநில மக்களின் இடப் பெயர்வுகள் அல்ல.

அசாம் தேசிய இன மக்களின் வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் காரணமல்ல, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைகளே காரணம். இன்னும் சொல்வதெனில் வங்கதேச பிரிவினைக்குக் காரணமே பாசிச மத்திய அரசுதான். எனவே, பிரிவினைக்குப் பிறகு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் குடியேறியுள்ள வங்காள (பங்களாதேஷ்) தேசத்தின் இந்து, இஸ்லாம் மக்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது மட்டுமின்றி அசாம் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் மத்திய அரசின் தார்மீகக் கடமையாகும். ஆனால் அசாம் தேசிய இனத்தை மத ரீதியாக பிளவுபடுத்தி, குறுகிய தேசிய இன உணர்வையும் தூண்டிவிட்டு அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை கலவர பூமியாக்குகிறது பாசிச மோடி ஆட்சி.

ஆகவே, இந்திய துணைக் கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தும் பாசிச மத்திய அரசின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளால் ஒடுக்கப்படுகின்றன என்பதை போராடும் தேசிய இன மக்கள் உணர்ந்து ஐக்கியப்பட்டு மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராட வேண்டுமே ஒழிய தங்களுக்குள் பகைமையை வளர்த்து மாண்டுவிடக்கூடாது.
 
இந்த புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களில் இருந்து அமல்படுத்தப்படுகின்றன. அமெரிக்க - நேட்டோ மற்றும் சீன-ரஷ்ய ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான காலனியாதிக்கம், பனிப்போரால் முன்பை விட நெருக்கடிகள் தீவிரம் பெறுவதும், அது பாசிசத்திற்கு இட்டுச் செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டன. ஏகாதிபத்திய நிதிமூலதன முரண்பாடுகளும் நெருக்கடியும் காலனி நாடுகளை காவு கேட்கின்றன.

மெக்சிகர்கள், ஆப்பிரிக்கர்கள் மீதான அமெரிக்க பாசிசம், சிரிய அகதிகள் மீதான ரஷ்ய பாசிசம், உய்குர் முஸ்லிம்கள் மீதான சீன பாசிசம், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் பாசிசம், தமிழீழ-மலையக மக்கள் மீதான சிங்கள பாசிசம் மற்றும் இஸ்லாமியர்கள் - இந்துக்கள் மீதான இந்துத்துவ பாசிசம் அனைத்திற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களின் - காலனிய நாட்டு தரகு வர்க்க கும்பல்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே தோற்றுவாய் ஆகும்.

மெக்சிகோ சுவர் முதல் நடூர் தீண்டாமைச் சுவர் வரை, ருவாண்டா இனப்படுகொலை முதல் யூத இனப்படுகொலை வரை, சிரியா ஜார்ஜியா மீதான ருஷ்யாவின் ஆக்கிரமிப்பு முதல் ஹாங்காங் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு வரை, இஸ்லாமியர் இந்துக்கள் மீதான இந்திய பாசிசம் முதல் ஈழத் தமிழர் மீதான சிங்கள பாசிச வரை அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் அகதிகளாக்கப்படுவதற்கு காரணம் ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்க கொள்கைகளே ஆகும். ஏகாதிபத்தியத்தை சவக்குழிக்கு அனுப்பாமல் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை.

ஏகாதிபத்திய நிதிமூலதன-அதிகார தரகு வர்க்க மூலதனத்தின் நலன்களுக்கான இந்தியப் பாசிசத்தால் ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், சிறு குறு நடுத்தர தேசிய முதலாளிகள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பிற புரட்சிகர, சனநாயக சக்திகள் அனைவரையும் உள்ளடக்கி கீழிருந்து ஒருபாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும்.

உடனடி கடமையாக, இந்த நூரம்பர்க்குடியுரிமை சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராடுவது நமது கடமையாகும். ஹிட்லர் பாசிசத்தை ஸ்டாலின் தலைமையிலான சோசலிச அரசு வீழ்த்தியது. மோடி-அமித்ஷாக்களின் வடிவில் ஹிட்லர்கள் தோன்றும்போது ஸ்டாலின்கள் தோன்றுவதும் தவிர்க்க முடியாததாகும்.


இச்சட்டங்களை ஆதரித்து வாக்களித்த அதிமுக, பாமக போன்ற தமிழின துரோகி-இந்துத்துவ எடுபிடி எம்.பி.க்களை பதவி விலகக் கோரி அவர்களை முற்றுகையிடுவதும், இப்போராட்டங்களை இந்தியாவெங்கும் கட்டியமைப்பதும் அவசியமாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான முற்றுகை போராட்டங்கள் இந்த பாசிச சட்டங்களை குப்பைத் தொட்டியில் நிச்சயம் தூக்கி எறியும். மோடி கும்பலின் எதிர்புரட்சிகர யுத்தத்தை புரட்சிகர யுத்தத்தால்தான் முறியடிக்க முடியும். அதற்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மற்றும் பாரதி முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போரை நாம் முன்னெடுப்பது வரலாற்றுத் தேவையாகும். இதுவே இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவல்ல  புதிய ஜனநாயகப் புரட்சியை சாத்தியப்படுத்தும்.  

சமரன் டிசம்பர்  2019