Tuesday 30 March 2021

தமிழக சட்டமன்ற தேர்தல்: இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தாது! மாநில உரிமைகளையும் மீட்காது!

 


தமிழக சட்டமன்ற தேர்தல்: இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தாது! மாநில உரிமைகளையும் மீட்காது!

தமிழகம், பாண்டிச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய-அம்பானி அதானி தரகு முதலாளித்துவ நலன்களுக்காக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன. இதை மூடிமறைக்க மோடி அமித்ஷா கும்பல் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைத்துவருகிற ஒரு சூழலில் இந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆளும் இந்துத்துவப் பாசிச பாஜக-அதிமுக தலைமையில் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக தலைமையில் பெருந்தேசிய வெறி பாசிசக் கட்சியான காங்கிரசு, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகள் ஓர் அணியாகவும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டு பிரதான அணிகளை தவிர அமமுக (தினகரன்), ஓவைசி அமைப்பு மற்றும் தேமுதிக ஓர் அணியாகவும், மநீம (கமல்), சமக மற்றும் ஐஜேகே ஓர் அணியாகவும், நாம் தமிழர் கட்சி (சீமான்) தனியாகவும் போட்டியிடுகின்றன.

இந்துத்துவப் பாசிச பாஜகவின் எடுபிடி எடப்பாடி ஆட்சி ஒழிக!

எடப்பாடி ஆட்சியானது மத்தியில் ஆளும் இந்துத்துவ பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்களின் எடுபிடியாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்துமதவெறி பாசிஸ்டான ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக, பாஜகவின் இயற்கை கூட்டாளியாக (Natural alliance) விளங்கியது. தற்போது பாஜகவின் வெளிப்படையான செயற் கருவியாக, அடிவருடித்தனமான அமைப்பாக, தமிழ் மாநிலக் கிளையாக அஇஅதிமுக கட்சியானது எடப்பாடி ஓபிஎஸ் கும்பலால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி கும்பலின் அனைத்துவிதமான பாசிச நடவடிக்கைகளுக்கும் துணை போனது எடப்பாடி அரசு.

அவையாவன:

1.       ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற பாசிச திட்டத்தின்கீழ் அனைத்து தேசிய இனங்களின் பண்பாடுகளை ஒடுக்கும் விதமாக பாஜக ஆட்சி கொண்டுவந்த ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்தது. அதுமட்டுமின்றி மெரினாவில் எழுந்த தமிழக மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களை ஒடுக்கி வன்முறையை ஏவி போலீஸ் ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்தது.

2. தமிழகத்தின் கனிம வளங்களை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வதற்காக மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை (பாரத் மாலா திட்டம்) திட்டத்தை அமல்படுத்தியது மட்டுமின்றி அதை எதிர்த்துப் போராடியவர்களை கடுமையாக ஒடுக்கியது.

3.  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற கார்ப்பரேட் நலன்களுக்கான திட்டங்களை அமல்படுத்தியது. இத்திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது.

4.  பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக மருத்துவத்துறை மீதான மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வு சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ஆதரித்து அனிதாக்களை படுகொலை செய்தது.

5.    காஷ்மீர் தேசிய இனத்தை 370 இரத்தின் மூலம் துண்டாடிய பாசிச சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

6.       தேசிய இனங்களை மதரீதியாக பிளவுபடுத்தி ஒடுக்கும் இந்து ராஜ்ஜிய குடியுரிமைச் சட்டங்களான சிஏஏ (CAA), பதிவேடுகள் சட்டம் (NRC) மற்றும் தேசிய கணக்கெடுப்பு திட்டம் (NPR) ஆகிய சட்டதிட்டங்களை எடப்பாடி கும்பல் ஆதரித்தது. அதுமட்டுமின்றி இச்சட்டங்களை எதிர்த்துப் போராடிய இஸ்லாமியர்கள் மீது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அரசு பயங்கரவாதத்தை ஏவியது. மேலும் இந்து முன்னணி போன்ற காவிக் கும்பல்களின் குடியுரிமைச் சட்ட ஆதரவு போராட்டங்களுக்கு காவல் காத்தது.

7.       அமெரிக்காவின் கல்வித்துறை நெருக்கடியை தீர்ப்பதற்காகவும் இந்துத்துவப் பாசிசத்தை கட்டி அமைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தது மட்டுமின்றி இவற்றை எதிர்த்த போராட்டங்களுக்கு அனுமதி தராமல் ஒடுக்கியது.

8. வேளாண்துறை முழுவதையும் கார்ப்பரேட் மயமாக்கும் புதிய காலனிய வேளாண் சட்டங்களையும், மின்சாரத் துறை மீதான மாநில உரிமையைப் பறித்து அதானி அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவையும் ஆதரித்தது. மேலும் இவற்றை எதிர்த்தப் போராட்டங்களை ஒடுக்கியதோடு மட்டுமின்றி அவற்றை திசைதிருப்ப பாஜக முன்னெடுத்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தது.

9.       எந்த ஒரு தனி நபரையும் தீவிரவாதியாக சித்தரித்து பிணையின்றி சிறையில் அடைக்கும் ஊபா சட்ட திருத்தத்தை (2019) ஆதரித்தது. இச்சட்டத்தின் செயல் கருவியான என்ஐஏ (NIA) சட்டத் திருத்தத்தையும் ஆதரித்தது எடப்பாடி அரசு. இவற்றைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

10.   பொள்ளாச்சியில் இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த அதிமுகவினரைப் பாதுகாத்து நியாயப்படுத்தியது.

11. பாபர் மசூதியை தரைமட்டமாக்கி அங்கு ராமர் கோவில் கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது.

12. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 13 பேரை படுகொலை செய்து தூத்துக்குடியில் இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை அரங்கேற்றியது.

பாஜக உத்தரவின் பேரில் தமிழக அரசு பணிகளில் வட மாநிலத்தவரை அதிக அளவில் அனுமதிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 14,16,19 ஆகியவற்றிற்கு உட்பட்டு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. மின் வாரியம், வருமான வரி, தெற்கு ரயில்வே, பாரத வங்கி உள்ளிட்ட துறைகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து பாஜக ஆதரவு வடமாநிலத்தவரை அனுமதித்தது. வர்தா, ஓக்கி, கஜா, நிவர் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணம் கூட பெற்றுத் தரவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போது மோடி அரசுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தது. இவ்வாறாக தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்தது எடப்பாடி அரசு.

மோடி கும்பல் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளித்து, அதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை மக்கள் தலையில் சுமத்தும் பாசிச பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்றவகையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது மட்டுமின்றி மத்திய பட்ஜெட்களை ஆதரித்து பேசியது. பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை சுமார் ரூ.100, காஸ் சிலிண்டர் விலை ரூபாய் 820 என்ற அளவிற்கு மோடி அரசு விலை உயர்த்தியப் பிறகும் அதை குறைக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எடப்பாடி ஆட்சி. அண்மையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி என்று அறிவித்துள்ளது. இதற்கான வட்டி தொகை ரூபாய் 32,000 கோடி ஆகும். ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூபாய் 73 ஆயிரம் கடன் சுமையைச் சுமத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வரும்போது டாஸ்மாக் வருவாய் ரூபாய் 14 ஆயிரம் கோடி ஆகும். தற்போது வருவாய் ரூபாய் 29 ஆயிரம் கோடி ஆகும். மோடி அரசின் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கேட்க திராணியற்ற எடப்பாடி அரசு, ஆறு சிலிண்டர் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1500 உதவித்தொகை. நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் வாய்ச்சவடால் அடிக்கிறது. இதற்கான நிதி எங்கிருந்து வரும்? டாஸ்மாக் வருவாயிலிருந்துதான் தரமுடியும். ஒருபுறம் டாஸ்மாக்கின் மூலம் அடித்தட்டு மக்களின் அடிவயிற்றில் அடித்து பணத்தை பிடுங்கிக் கொள்வது; மறுபுறம் அதே பணத்தில் இலவசங்களை காட்டி மக்களை ஏமாற்றுவது என்ற மக்கள் விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. இந்த லட்சணத்தில் வெற்றி நடை போடும் தமிழகம்என்று வெட்கமின்றி பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையில் தமிழகம் தள்ளாடுகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கை-வெற்று அறிவிப்புகள், இலவச ஏமாற்றுகள்

அம்மா இல்லம்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச வீடு, இலவச வாஷிங் மெஷின், குலவிளக்கு திட்டம், பேருந்தில் மகளிருக்கு சலுகை, 6 இலவச கேஸ் சிலிண்டர், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, விலையில்லா அரசு கேபிள், எழுவர் விடுதலை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, படிப்படியான மது விலக்கு என்ற வெற்று அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது அதிமுக. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்து விட்டு தற்போது வாய்ஜாலம் காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. இவற்றிற்கான நிதி ஆதாரம் என்ன என்பது பற்றி குறிப்பிடவே இல்லை. ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் என்ற திட்டத்திற்கு மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ஆகும். தமிழகத்தின் கடன் தொகை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி எப்படி நிறைவேற்றப் போகின்றது எடப்பாடி அரசு?

அதிமுக மற்றும் பாமக எம்பிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை எனில், குடியுரிமை சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறியே இருக்காது. ஆனால் தற்போது மானவெட்கமின்றி சட்டங்களை திரும்பப் பெற அழுத்தம் தரப்படும் என்கிறது எடப்பாடி கும்பல். ஆனால் பாஜக அதற்கு வாய்ப்பில்லை என்று பிரச்சாரத்தின் போதே கூறிவிட்டது. ஏற்கனவே நகை கடன் தள்ளுபடி, விவசாய தள்ளுபடி என்று கூறியது. ஆனால் விவசாய கடன்கள் பெருமளவு வங்கிகள் அல்லாத கந்து வட்டி முறையிலேயே விவசாயிகளால் வாங்கப்படுகின்றன. நகைக்கடன் களும் தனியார் அடகு கடைகளில் அதிகம் பெறப்படுகின்றன. எனவே இவை வெற்று அறிவிப்புகள் ஆகும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்கிவிட்டு அதை டாஸ்மாக் மூலமாக பிடுங்கிக் கொண்டு சென்று விடும் என்று இல்லத்தரசிகள் இப்போதே கூறத் தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி ஆட்சியின் படுதோல்வியை எடுத்துக்காட்டுகிறது.

அதிமுகவின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணி

எடப்பாடி ஆட்சியின் மூலம் மறைமுகமாக தமிழகத்தை ஆண்டு வரும் பாஜக இந்த தேர்தலில் அதிமுக, பாமக கட்சிகளின் வாக்கு வங்கியுடன் 20 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற காடையர்களின் இந்துத்துவப் பாசிச ஆட்சியை அரங்கேற்ற அதிமுக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் சேவகம் செய்கின்றன.

அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலிருந்து தொடர்கிறது. சீட்டுபேரம், நோட்டு பேரம் படியாததால் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறி சசிகலா மாஃபியா கும்பலின் அமமுக (தினகரன்) கட்சியில் இணைந்து உள்ளது. அஇஅதிமுகவை எதிர்த்து உருவான தமாகா (வாசன்) இன்று அக்கட்சியின் காலடியில் விழுந்து கிடக்கிறது.

பாமக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு திடீரென்று கோரிக்கை எழுப்பியது. தேர்தல் பேரத்திற்கான அழுத்தம் தருவதற்காகவும், வன்னிய மக்களிடம் இழந்துபோன செல்வாக்கை மீட்கும் பொருட்டும் சந்தர்ப்பவாதமாக இந்த கோரிக்கையை எழுப்பியது பாமக. பாஜக உத்தரவின் பெயரில் எடப்பாடி அரசு 10.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்துவதற்கான சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் கமிட்டி ஆய்வு தொடங்கும் முன்பே அவசர அவசரமாக சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த உள்ஒதுக்கீடுடானது எம்பிசி பட்டியலில் உள்ள மற்ற சாதியினர் மத்தியில் கோபத்தை கிளறி உள்ளது. சாதிய முரண்பாடுகளை உண்டாக்கும் இத்தகைய நடவடிக்கையானது உண்மையில் பாஜகவின் சாதியவாத செயல் தந்திரத்திற்கு சேவை செய்வதாகும்.

இவ்வாறாக அதிமுகவின் கொள்கைகள், அரசியல் கூட்டணிகள் அனைத்தும் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்களின் இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்வதாகவே அமைந்துள்ளன. ஆகவே, பாஜக அதிமுகவின் பாசிச கூட்டை வீழ்த்துவதும், ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட சங்பரிவார காவிகாடையர்களை தமிழகத்தை விட்டும் நாட்டை விட்டும் ஓட ஓட விரட்ட வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும்.

இந்துத்துவப் பாசிச பாஜக அதிமுக கூட்டணிக்கு மாற்று திமுக காங்கிரஸ் கூட்டணி அல்ல! ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவப் பாசிசத்திற்கு சேவை செய்வதில் இரண்டு அணிகளும் ஒன்றே!

தமிழகத்திற்கு 1998இல் பாஜகவை அறிமுகப்படுத்திய பெருமை பாபர் மசூதி இடிப்பிற்கு கரசேவை செய்ய தயார் என அறிவித்த இந்து மதவெறி பாசிஸ்ட் ஜெயலலிதாவையே சேரும். பின்பு அவர் 1999இல் பாஜகவிற்கு தந்த ஆதரவை திரும்பப் பெற்ற போது பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து தமிழ் மண்ணில் பாஜகவை தடம் பதிக்க செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி ஆவார். காங்கிரஸ§க்கு மாற்றாக பாஜகவால் ஒரு நிலையான ஆட்சியை தர முடியும் என்ற நிலை உருவாக முக்கியக் காரணம் திமுகதான். வாஜ்பாய் தவறான கட்சியில் உள்ள சரியான மனிதர்என்று தனது சந்தர்ப்ப வாதத்திற்கு முட்டுக் கொடுத்து மத்தியில் அதிகாரத்தை சுவைத்தார் கருணாநிதி. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு முரசொலியில்(1999) “சிறுபான்மை மக்களிடையே பாஜகவை பற்றி ஒருவித சந்தேகத்தை சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வாறு சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டுஎன்று எழுதினார் கருணாநிதி.

1999இல் பாஜக ஆட்சிக்கு கருணாநிதி மட்டும் முட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால், இந்துத்துவப் பாசிச பாஜக மத்தியில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஒரு ஆட்சியை நடத்தி இருக்க முடியாது. அந்த ஐந்து ஆண்டுகளில் தான் பாஜக என்ற பாசிச கட்சி இந்தியா முழுமைக்கும் வேர் பரப்பி, கிளை அமைத்து விஷ விருட்சமாக வளர்ந்தது. மேலும்...

1.   1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்லாமியர்கள் மதத் தீவிரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவு செய்தவர் கருணாநிதி.

2.  1998ஆம் ஆண்டு கோவை கலவரத்தில் இஸ்லாமியர்களும் அவர்தம் உடமைகளும் வேட்டையாடப்படும் போது ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தது திமுக ஆட்சி.

3.  1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து ஆர்எஸ்எஸ் காரரான சிபி ராதாகிருஷ்ணனை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து நல்லகண்ணுவை தோற்கடிக்க வைத்தது திமுக.

4.  2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கி எச்ச ராஜா போன்ற கழிசடைகளை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்து அழகு பார்த்தது திமுக.

5.   2009இல் தமிழீழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது மத்தியில் ஆண்ட காங்கிரசைத் தாங்கிப்பிடித்து பதவியையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொண்டதைப் போல 2002இல் குஜராத்தில் 3000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அமைச்சரவையில் அங்கம் வகித்து அதை நியாயப்படுத்தியவர் கருணாநிதி. குஜராத்தில் நடந்ததுப் பற்றி தமிழகத்தில் உள்ள என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் கேட்டு வெட்கமின்றி இந்துத்துவப் பாசிசத்திற்கு வாலாட்டியவர் கருணாநிதி.

6.   2013 ஏற்காடு இடைத்தேர்தலில் கடிதம் எழுதி பாஜகவிடம் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டவர் கருணாநிதி.

7.    ஆர்எஸ்எஸ் என்பது திராவிடர் கழகம் போல ஓர் சமூகநல அமைப்புதான். அதை திமுக தொண்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முரசொலியில் கட்டுரை தீட்டியவர் கருணாநிதி.

8.  நெருக்கடியான காலங்களில் தங்களுக்கு உதவியது திமுக தான் என்று அண்மையில் ஸ்டாலினை சந்தித்து ஆர்எஸ்எஸ் நினைவு கூர்ந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின், திமுக இந்துக்களின் கட்சி; ஆனால் திமுக இந்து விரோத கட்சி என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். சிறுபான்மையினக் காவலராகக் காட்டிக்கொள்ளும் திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்குக் கூட வாய்ப்பு வழங்கவில்லை. திமுகவின் அதிகார பீடங்களில், உயர்மட்டக் குழுக்களில், மாவட்ட பொறுப்புகளில் இஸ்லாமியர்களை அமர்த்தியதே இல்லை. இவ்வாறாக இந்துத்துவ பாசிச பாஜக விற்கு சேவகம் செய்கின்ற கட்சிதான் திமுக. இவ்வாறு மதவாதத்தில் திமுக ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொள்கிறது. ஆகவேதான் இந்து மதவாதத்தைக் காரியவாதமாகக் கையாளும்-இந்துத்துவாவை காரியக் கமிட்டித் தீர்மானமாக நிறைவேற்றி அதை கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள காங்கிரசு கட்சியுடனும் இந்து மதவெறி பாஜகவுடனும் இணக்கம் காண்கிறது.

கடந்த நாடளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மற்று திமுக தான் என்று கூறிய திமுக-இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதுவரை இவர்கள் எந்த மாநில உரிமையை மீட்டார்கள்? ஒன்றுமில்லை. பாசிச என்.ஐ.எ. சட்டத்திற்கு ஆதரவு தந்தார்கள்.

திராவிடக் கட்சிகள் இந்துத்துவப் பாசிசத்தின் தொங்கு சதைகளாக விளங்குவதன் காரணம் என்ன?

மத்தியில் ஆளும் பாஜகவின் இந்துத்துவப் பாசிசத்திற்கும், காங்கிரசின் பெரும் தேசிய வெறி பாசிசத்திற்கும் திமுக அதிமுக போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் மாறி மாறி சேவகம் செய்து தொங்கு சதைகளாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம், மத்தியில் அதிகாரத்தை சுவைத்து அமைச்சரவையில் பங்கு பெற்று கோடிகளில் புரள்வதற்கு மட்டுமல்ல, மிக முக்கியமாக பாசிசத்தின் மூலவேரான ஏகாதிபத்திய-இந்திய தரகு முதலாளித்துவ ஏகபோக நலன்களுக்கு சேவை செய்யும் ஒரே அரசியல் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிப்பதுதான் அடிநாதமான காரணமாகும். ஆகவேதான் பாசிசத்திற்கு மாற்றாக இக்கட்சிகளால் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க முடிவதில்லை.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, இந்திய பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணம் ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய-அம்பானி அதானி போன்ற தரகு முதலாளித்துவ ஏக போகத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய- புதிய பொருளாதாரக் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருவதுதான் காரணம் ஆகும். ஆகவே திமுக சில சில்லறை சீர்திருத்தங்களை முன்வைக்க முடியுமே தவிர இந்துத்துவப் பாசிசத்திற்கு மாற்றாக ஒருநாளும் விளங்க முடியாது.

சித்தாந்த அடிப்படையிலேயே கூட, திராவிட மாயை ஆரிய மாயைக்கு எதிரானது போன்ற ஓர் தோற்ற மாயையை ஐரோப்பிய காலனிய வாதிகள் உருவாக்கினர். உண்மையில் இரண்டும் எதிர் எதிரானது அல்ல. ஏகாதிபத்திய சேவையில் இரண்டும் ஒன்று தான். ஜோன்ஸ், முல்லர் போன்ற ஐரோப்பிய காலனியாதிக்க புனைவாக உருவாக்கிய ஆரிய இனவாத மாயை ஏற்றுக்கொண்டே எல்லீசு, கால்டுவெல் போன்ற காலனிய வாதிகள் திராவிட இனவாத மாயையை உருவாக்கினார்கள். ஆகவே ஆரிய இனவாதத்தை ஏற்பது என்பது திராவிட இனவாதத்தையும் ஏற்பதாகும். திராவிட இனவாதத்தை ஏற்பது என்பது ஆரிய இனவாதத்தையும் ஏற்பதாகும். இந்த இனவாத மாயைகளில் மக்களை மூழ்கடித்து அம்முரண்பாடுகளின் ஊடாக காலனிய ஆட்சியை வலுவாக நிலைநிறுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இன்றும், ஆரிய-திராவிட மாயைகளில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டு, ஆரிய இனவாதத்தை ஏற்றுக் கொண்ட காங்கிரசு, பாஜக கட்சிகளுக்கு மாற்றாக, திராவிட இனவாதத்தை ஏற்றுக்கொண்ட திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளும், சமூக நீதி, தலித்தியம் பேசும் கட்சிகளும் முன்நிறுத்தப்படுகின்றன. மத்திய மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையிலான கள்ளக்கூட்டு இவ்வாறாக மூடி மறைக்கப்பட்டு அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. ஆரியமும், திராவிடமும் ஏகாதிபத்தியத்திற்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். ஆரியம்- காவி, கதர் குழந்தை; திராவிடம்-கருப்பு குழந்தை. ஆரிய இனவாதத்திலிருந்து உதித்த பார்பனிய பாசிசத்திற்கு திராவிட இனவாதம் மாற்றாக விளங்காது. எனவே இந்த தேர்தல் ஆரியத்திற்கு எதிரான திராவிடத்தின் போர் என்பது அப்பட்டமான மோசடியாகும்.

எடப்பாடி ஆட்சியின் இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்வதற்கான ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து காங்கிரசு, திமுக, இடதுசாரிகள், விசிக போன்ற எந்த ஒரு கட்சியும் பேசவில்லை. குடியுரிமை சட்டங்கள், நீட், தேசிய மருத்துவ ஆணைய மசோதா, தேசிய கல்விக் கொள்கை, ஜல்லிக்கட்டு தடை, இந்தி சமஸ்கிருத மொழி திணிப்பு, 2019 ஊபா சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டம், வேளாண் சட்டங்கள் போன்ற பாசிச நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு வலுவான மக்கள் இயக்கத்தையும் கட்டிப் போராடாமல், வெற்று அறிக்கைகளோடும், ஒரு சில அடையாளப் போராட்டங்களோடும் நிறுத்திக் கொண்டது திமுக. தற்போது தேர்தல் அறிக்கையிலும் இந்த சமரசவாதப் போக்கு தொடர்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை, பெரும்பாலான அம்சங்களில் அதிமுக அறிக்கையோடு ஒத்துப்போகிறது.

திமுக தேர்தல் அறிக்கை இந்துத்துவப் பாசிசத்திற்கு மாற்று அல்ல என்பதை நிரூபிக்கிறது

இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்வதிலும், உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும், ஊழலில் திளைப்பதிலும், இலவசங்களைக் காட்டி மக்களை ஏய்ப்பதிலும், மாநில உரிமைகளை மத்தியில் அடகு வைப்பதிலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான். எவ்வித வேறுபாடும் இல்லை. நீட், ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி, ஊபா, என்.ஐ.ஏ, எட்டு வழிச்சாலை போன்ற பல சட்டத்திட்டங்களில் இவ்விரு கட்சிகளின் நிலைபாடும் ஒன்றே ஆகும். இதை இரண்டின் தேர்தல் அறிக்கையும் கூட நிரூபிக்கிறது. அறிக்கையில் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் போகின்றன.

திமுகவின் தேர்தல் அறிக்கை பாஜகவின் இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்த அறைகூவல் ஒன்றும் விடுவிக்கவில்லை. அறிக்கை முழுதும் அதிமுக எதிர்ப்பே பிரதானமாக உள்ளது. அதிமுக அரசு அரசியல் அமைப்பின் கூட்டாட்சிக்கு மாறாக மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டதாக கூறுவதன் மூலம், 1)அரசியல் சட்டம் கூறாதவற்றைக் கூறி அதைப் புனிதப்படுத்துகிறது; 2)காங்கிரசும் பாஜகவும் மாறிமாறி மாநில உரிமைகளைப் பறித்ததை மூடி மறைக்கிறது.

எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றில்லாமல், வலியுறுத்தப்படும், அழுத்தம் தரப்படும், முயற்சிக்கப்படும் என்றுதான் இரு கட்சிகளும் கூறுகின்றன. காரணம் சட்டமன்றத்தின் அதிகார எல்லை அவ்வளவுதான். எவ்வித அதிகாரமுமற்ற சட்டமன்றத்தின் பெயரை தமிழக ஊராட்சி மன்றம் என பெயர் மாற்றுவதே பொருத்தமாக இருக்கும். திமுகவின் வாக்குறுதிகள் பின்வருமாறு:

1. இந்துக் கோவில்களை புனரமைக்க 1000 கோடியும், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளை புனரமைக்க 200 கோடியும் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பானது பெரும்பான்மை இந்துக்களை கவரும் தந்திரமே ஆகும். அதுமட்டுமின்றி இந்துமத கோவில்களுக்கு புனித யாத்திரை செல்பவர்களுக்கு நிதியுதவி போன்ற அறிவிப்பும் சங் பரிவாரங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

2.  நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு கண்துடைப்பாகும். இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்று திமுக நன்கறிந்து தான் இதை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் சட்டம், சிஏஏ சட்டம், எட்டு வழிச் சாலை, காட்டுப்பள்ளி துறைமுக திட்டம் குறித்த அறிவிப்புகளுக்கும் இது பொருந்தும்.

3.  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் குடி உரிமை கோரும் வகையில் குடியுரிமைச் சட்டங்கள் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஸ்டாலின், இஸ்லாமியர்களின் எதிர்ப்புணர்வை ஈடுகட்ட குடியுரிமைச் சட்டங்கள் திரும்ப பெற வலியுறுத்தப்படும் என்று பின்பு அறிவித்தார். குடியுரிமைச் சட்டங்கள், தேசிய கணக்கெடுப்புத் திட்டம் மற்றும் பதிவேடுகள் சட்டம் ஆகியவற்றை உறுதியாக அமல்படுத்தமாட்டோம் என்று அறிவிக்க தயாரில்லை திமுக.

4.     இந்தி மொழி எதிர்ப்பின் பெயரில் ஆங்கில மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு தமிழ் மொழியை அழித்து வரும் திமுக, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காத திமுக, எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏமாற்று வித்தையே ஆகும்.

5.  கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிய காங்கிரசு கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என்கிறது. பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட (பறிக்கப்பட்ட) கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது.

6.     பெருந் தேசிய வெறி பாசிச காங்கிரசு கும்பல், தமிழீழ விடுதலைக்கு மாபெரும் துரோகம் இழைத்து இறுதி யுத்தத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள பேரினவாத பாசிச அரசு கொன்று குவிப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இதை எதிர்த்துப் பேச வக்கில்லாமல் மைய பதவிகளை தக்க வைத்துக்கொள்ள இனப்படுகொலைக்கு துணை போனது திமுக. போர்க்குற்றவாளியான காங்கிரசுக்கு துணை போன திமுகவும் போர்க் குற்றவாளியே. இதை மூடி மறைத்து இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை, எழுவர் விடுதலை, தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்புக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறது திமுக.

7.  அரசுத் துறைகள், தனியார் துறைகளில் 70% தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் இது அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14,16,19 ஆகியவற்றிற்கு எதிரானது என்றும் சட்டவல்லுனர்கள் கூறுகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார்மயம், கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட பிறகு, கல்வியிலிருந்து அடித்தட்டு மக்கள் துரத்தப்பட்டு விட்டனர். 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த கருணாநிதியால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அது போல் தான் இதுவும் ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பே.

8. சமூக நீதியை அழிக்கும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே சமூக நீதியைக் காக்கப்போவதாக கூறுகிறது. இது சமூக நீதிக்கு சவக்குழி வெட்டும் துரோகமாகும்.

9. இதர பொருளாதார அறிவிப்புகளை மூலதனம், முதலீட்டுச் செலவு பற்றிய ஆக்கப்பூர்வமான உற்பத்திசார் திட்டங்கள் எதுவும் இல்லாமல் அறிவித்துள்ளது. மாநில அரசுகளால் ஏகாதிபத்திய-தரகு முதலாளித்துவக் கும்பல்களின் நலன்களுக்கு உட்பட்டே திட்டங்களை உருவாக்க முடியும். அவர்கள் கடைக்கண்பார்வை இன்றி சுயமாக எதையும் செய்யும் அதிகாரமற்ற மாநில அரசுகள் திகழ்கின்றன.

நீட், சிஏஏ, திரும்பப்பெற வலியுறுத்துதல்; தமிழ் வழிக்கல்வி; இந்து கோவில்கள் புணரமைப்பு; எழுவர் விடுதலை; மகளிர்க்கு பயணக்கட்டணச் சலுகை; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; மின் கணக்கீடு; நூறு நாள் வேலைத்திட்டம்; மாணவர்களுக்கு மடிக்கணினி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி; மது விலக்கு; உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களில் இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் ஒத்துப்போகிறது.

புதிய காலனிய ஜி.எஸ்.டி. வரியை காங்கிரஸ் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அதை திமுக, சிபிஎம் ஆதரித்தது. பிறகு பாஜக அதை தீவிரமாக அமல்படுத்தியது.

நீட் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த போது திமுக அதை ஆதரித்தது. பிறகு பாஜக அதை நடைமுறைபடுத்திய போது அதிமுக ஆதரித்தது. நீட் தேர்வை கேரள சிபிஎம் அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது.

ஸ்டெர்லைட், எட்டுவழிச் சாலை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் இருந்த போது ஆதரவு தெரிவித்தது. தற்போது எதிர்ப்பது போல் நாடகமாடுகிறது.

ஊபா சட்டத் திருத்தம் 2012ஐ திமுக ஆதரித்தது. 2019 திருத்தத்தை அதிமுக ஆதரித்தது. ஊபாவின் செயற்கருவியான என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் 2019ஐ இரண்டு கட்சிகளும் ஆதரித்தன.

பாபர் மசூதியை இடித்த காவிக் குண்டர்களுக்கு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சிபிஎம், திமுக, அதிமுக ஆதரித்தது.

இவ்வாறு இரண்டு திராவிடக் கட்சிகளும் காங்கிரஸ், பாஜகவின் அரசியல், பொருளாதார பாசிசக் கொள்கைகளை ஆதரிப்பதில் ஒன்றேயாகும். இவ்விரு கட்சிகளும் தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சியாக இருப்பதைப் பொறுத்தும் மத்தியில் அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளதைப் பொறுத்துமே ஆதரிப்பதும், எதிர்ப்பதாக நடிப்பதும் என சந்தர்ப்பவாதமான நிலையை மேற்கொள்கின்றன. காரணம் இவ்விரண்டு கட்சிகளும் மாநில தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் இரண்டு பிரதிநிதிகளாவர்.

திமுகவின் சந்தர்ப்பவாதத் தேர்தல் கூட்டணி

திமுக-காங்கிரஸ்-விசிக-இடதுசாரிகள் கூட்டணி என்பது குறைந்தபட்ச செயல்த்திட்டம் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. திமுகவை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் கூட்டணியாகும்.

சனாதன எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்பு என்று திருமா பேசுகிறார். ஆனால் திமுக ஆட்சியில் அமர்ந்துவிட்டாலே சனாதனம் ஒழிந்துவிடுமா? ஏற்கனவே திமுக ஆட்சியில் இருக்கும்போது ஒழிந்ததா? பார்ப்பனர் அல்லத இடைநிலை சாதி ஆதிக்க சக்திகளின் சனாதனத்தை திமுக நிலைநாட்டவில்லையா? நிலவுடமை உற்பத்தி முறையை ஒழிக்காமல் சனாதனத்தை எவ்வாறு வீழ்த்த முடியும்? சனாதன தர்மத்தை, பார்ப்பனிய பன்னாடைத்தனத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு சனாதனத்தை வீழ்த்தப் போகிறதா விசிக? தமிழீழப் படுகொலைக்கு உதவி செய்த போர்க் குற்றவாளியான காங்கிரசுடன் கைகோர்க்க எப்படி முடிகிறது?

இடதுசாரிகளைப் பொறுத்தவரை காங்கிரசு கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று கூறித்தான் இத்தனை ஆண்டுகள் பாஜகவின் மதவாதத்திற்கு மாற்றாக காங்கிரசு ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வந்தனர். அதிலும் கூட மேற்கு வங்கத்தில் மம்தா பிரதான எதிரி என்று கூறி காங்கிரசுடன் சேர்ந்து நிற்கிறது. பாஜகவை விழ்த்துவதற்கு மம்தாவுடன் கூட்டணி சேர தயாரில்லை. மேலும் உள்ளாட்சி தேர்தல்களில் மம்தாவை வீழ்த்த பாஜகவுடன் தொகுதி பங்கிட்டீல் மறைமுகமாக சமரசம் கண்டனர். கேரளத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசுடன் சேராமல் தனித்து நிற்கிறது. காங்கிரசை தோற்கடிக்க இடதுசாரி கூட்டணி பாஜகவிற்கு தொகுதிகளை விட்டுத்தரவும் அதற்குப் பதிலாக மற்ற தொகுதிகளில் இடதுசாரி கூட்டணிக்கு பாஜக வாக்களிக்கவும் மறைமுக ஏற்பாடுகள் ஆகியிருப்பதாக கேரள முன்னால் முதல்வர் உம்மன்சாண்டி (காங்கிர்ஸ்) குற்றம்சாட்டியுள்ளார். இடதுசாரிகளைத் தோற்கடிக்க காங்கிரஸ் பாஜக இடையே இரகசிய உறவு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஓ.ராஜகோபால் ஒப்புதல்வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் காங்கிரசுடன் கைகோர்த்து பாஜகவை வீழ்த்தி மதவாதத்தை முறியடிக்கப் போகிறதாம். அரசுக்கும் மதத்திற்கும் உள்ள உறவை ஜனநாயகப் புரட்சியின் மூலம் துண்டிக்காமல் மதச்சார்பற்ற அரசை அமைக்க முடியாது என்கிற மார்க்சியம் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே? சுவரில் ஜோசப் ஸ்டாலின்; நெஞ்சில் மு.க ஸ்டாலின். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் ஒன்று தான் என்று கூறி கோமாளிக் கிறுக்கன் விஜயகாந்தை முதல்வராக்க முயற்சித்து தோல்வியடைந்தது. தற்போது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டறிந்து திமுகவிற்க்கு முட்டுகொடுக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த வைகோ தனக்கு மாற்றாக ஸ்டாலின் முன்னிறுத்தப்படும் வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்தார். ஆனால் இன்று அதே ஸ்டாலினிடம் மண்டியிட்டு கிடக்கிறார்.

பாசிச எதிர்ப்பில் எந்தவொரு கொள்கையுமற்ற இந்தக் கூட்டணிதான் மதவாதத்தையும்- சனாதனத்தையும் வீழ்த்தப் போகிறதாம். சட்டமன்ற தொகுதிகளைக் கூட சமூக நீதி அடிப்படையில் வழங்காத திமுகதான் சமூக நீதியை நிலைநாட்டப் போகிறதாம். அவ்வளவு ஏமாளிகளா மக்கள்?

ஆளும் வர்க்கங்களுக்கு ஏன் பாசிசம் தேவைப்படுகிறது?

2008ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதார மந்த நிலை தொடர்கிறது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலக மறுபங்கீட்டுக்கான பனிப்போர் துவங்கியவுடன் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகியது. இது கொரோனா பெருந்தொற்று முடக்கத்திற்குப் பிறகு படுபாதாளத்தில் வீழ்ந்தது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் -7.5% ஆக வீழ்ந்துவிட்டது. அமெரிக்காவிற்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்காக புதிய காலனிய-புதிய பொருளாதார உலகமய, தனியார்மய கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கங்கள் அமல்படுத்துகின்றன. இதன் பொருட்டு பொருளாதாரம் மையப்படுத்தப்படுகிறது. இந்த பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. இந்த ஏகபோக உருவாக்கம் பிற வர்க்கங்களையும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் கூட ஒடுக்குகிறது. இந்த ஓடுக்குமுறையை எதிர்த்த மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஆளும் வர்க்கத்திற்கு பாசிசம் அவசியப்படுகிறது.

இந்துத்துவப் பாசிசம் என்பது அமெரிக்க ஏகாதிபத்திய-அம்பானி அதானி போன்ற தரகு பெரும் முதலாளித்துவ-நிலவுடமை வர்க்கங்களின் பாசிசம் ஆகும். அது வெறுமனே பாஜக என்ற கட்சியின் பாசிசம் அல்ல. ஆகவேதான் பாஜகவையும் அதன் எடுபிடி அதிமுகவையும் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலமாகவோ, திமுக-காங்கிரசு கூட்டணியை ஆட்சிக்கு வந்துவிடுவதன் மூலமாகவோ இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்த முடியாது. பாசிசத்தை கட்டி அமைப்பதற்கு பாராளுமன்றமும், சட்டமன்றமும் வெறும் திரையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வர்க்கங்களுக்கான உற்பத்தி முறையை மாற்றி அமைக்காமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது.

அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் அம்பானி அதானி போன்ற ஒருசில தரகு முதலாளிகளுக்கும் எளிதாக சேவை செய்வதற்காகவே (Ease of doing business) பெயரளவில் இருந்த மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன.

1.   அமெரிக்க-இந்திய ராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறையில் அமெரிக்க-அம்பானி-அதானி கும்பல்களின் ஏகபோகத்தை உருவாக்கியுள்ளது.

2.    புதிய கல்வி மற்றும் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையின் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டுள்ளது.

3.       நீட் சட்டம், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மூலம் மருத்துவத் துறை மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது.

4.       புதிய காலனிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்டம் மூலம் வேளாண்துறை, மின்துறை மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது.

5.    ஜிஎஸ்டி வரி விதிப்பானது, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையைப் பறித்து மையத்தில் குவித்துள்ளது.

6.  திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டதன் மூலம் மாநில அரசுகள் நிதி திட்டமிடலை இனி செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறு நிதி திட்டமிடல் மையப்படுத்தப்பட்டுள்ளது.

7.  ஆன்லைன் வர்த்தகம் சிறு வணிகர்களை அழித்து அதனிடத்தில் பன்னாட்டு பெரு வணிகர்களை அமர்த்தியுள்ளது, இவ்வாறு வர்த்தகம் மையப்படுத்தப்படுகிறது.

8. உதான், பாரத்மாலா, சாகர்மாலா திட்டங்கள் மூலம் உள்கட்டமைப்புத் துறை மையப்படுத்தப்படுகிறது.

9.       ஊபா, என்ஐஏ (NIA) சட்ட திருத்தங்கள் சட்டம் ஒழுங்கின் மீதான மாநில உரிமைகளைப் பறித்து மையத்தில் குவித்துள்ளது.

10.  குடியுரிமை பற்றி தீர்மானிக்கும் மாநில அரசுகளின் உரிமை குடியுரிமைச் சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

11.   மூலப்பொருட்கள், கனிம வளங்கள் மீதான மாநில உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம், வனங்கள் சட்டத் திருத்தம் போன்ற சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டு மையப்படுத்தப் படுகிறது.

12.   ஒரு மொழி, ஒரு பண்பாடு எனும் பெயரில் இந்தி-சமஸ்கிருத திணிப்பின் மூலம் தேசிய மொழிகள்-பண்பாடுகள் ஒடுக்கப்படுகிறது.

இவ்வாறு மாநில அரசுகள் வெறும் பொம்மைகளாக, ஊராட்சி மன்றங்களாக, மத்திய அரசின் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் நிர்வாக அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன. தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் ஆளுநர் மாளிகையின் குப்பைத் தொட்டிகளில் கிடக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் கூட கவர்னர்கள் மூலம் கலைக்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் விலை போகின்றனர். அண்மையில் புதுச்சேரியில் இவ்வாறு காங்கிரசு-திமுக ஆட்சியை கலைத்தது பாஜக. இதற்கு திமுகவும் துணை போனது. நாளை தமிழகத்திலும் இது நேரலாம். பாஜகவுடன் திமுக தேர்தல் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் பங்கு பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் மாநில தரகு முதலாளிய வர்க்கங்கள் அகில இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கங்களுடன் சார்ந்தும் பிணைந்துமுள்ளன. எனவே, எவ்வித அதிகாரமும் அற்ற இந்த தேர்தல் முறை மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பது பச்சையான பாராளுமன்றவாத மாயையே ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் மாநிலங்களை வெறும் நிர்வாக அலுவலகங்களாக மாற்றுவதற்கு வழிவகை செய்து தருகிறது. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் பாராளுமன்ற-சட்ட மன்றங்கள் மூலம் மாநில உரிமைகளை மீட்க முடியாது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வக்கற்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

இந்திய அரசியல் சட்டம், இந்தியாவை பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என எங்குமே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா பாரத மாநிலங்களின் ஒன்றியம் என்றே அது வரையறுக்கிறது. அதாவது பல மாநிலங்களை ஒன்றிணைத்து பிரிக்க முடியாமல் ஒன்றறக் கலந்த தன்மையை இது குறிக்கிறது. இதற்கான விளக்கத்தை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இந்த கூட்டாட்சி பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக பல நாடுகள் இணையப் பெற்று இந்திய கூட்டாட்சி உருவாகாததால் இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடிய உரிமை எந்த மாநிலத்திற்கும் இல்லை. அது அழிக்க முடியாத ஒரு கூட்டாட்சி என்பதால் அதை ஒன்றியம் எனப்படுகிறது. நிர்வாக வசதியை உத்தேசித்தும் இந்த நாடும் அதன் மக்களும் பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்திய நாடு ஒன்றறக் கலந்து விட்ட முழுமையான ஒரு நாடு. அதன் மக்கள் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த தனித்ததோர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருகிற ஒரே மக்கள் தொகுப்பினர்... பின்னால் அதை ஊகத்திற்க்குரிய மற்றும் விவாதத்துக்குரிய பிரச்சனையாக விட்டுவைக்காமல், அதை இப்போதே தெளிவாக்கி விடுவது தான் சிறந்தது என நமது சட்ட வரைவுக்குழு கருதுகிறது.

அம்பேத்கரின் மூலமாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கருத்து இந்திய ஒன்றியம் குறித்த ஆளும் வர்க்கத்தின் இறுக்கமடைந்த தன்மையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இன்றைய ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எந்த ஒரு தேசிய இனப் பிரச்சினையிலும் இந்திய அரசியல் சட்ட வரையறைக்குள் தீர்வு காண முடியும், தீர்வு காண வேண்டும் என்பதற்கான கருத்தியல் அடித்தளம் பின்வரும் அரசியல் சட்ட கருத்துரையில் அடங்கியுள்ளது. அவை:

1. இந்திய மாநிலங்கள் வெறும் நிர்வாக வசதியை உத்தேசித்து அமைக்கப்பட்டவை. அவற்றுக்கான தேசிய இன தன்மையோ அரசியல் வகையினமோ இல்லை.

2.       பிரிந்து போகும் உரிமை எந்த ஒரு மாநிலத்திற்கும் இல்லை.

3.    இந்திய மக்கள் தனித்த ஒரே மூலத்திலிருந்து பிறந்த தனித்ததோர் ஆட்சிப் பீடத்தின் கீழ் வாழ்கின்ற ஒரே மக்கள்.

இவை மூன்றுமே வரலாற்றுக்கு முரணானவையாகும் அரசியல் எதார்த்தத்தைப் பிரதிபலிக்காதவையாகவும் உள்ளன. இந்திய மக்கள் தனித்ததோர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்கின்ற ஒரே மூலத்திலிருந்து பிறந்த மக்கள் என்பது இந்தியாவில் உள்ள தேசிய இன மக்களையும் தேசிய இன அரசுகளையும் விளங்கிக் கொள்ள மறுத்து ஏகாதிபத்திய நோக்கிலான இந்தியத்தின் திணிப்பாகும். இதை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கித் தர, அதை இந்திய ஆளும் வர்க்கம் அப்படியே சுவீகரித்துக் கொண்டது. மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக பிரிவுகளாக மட்டுமே கருதப்பட்டு அவற்றுக்கு உரிய அரசியல் வகையின தன்மையும் மறுக்கப்படுதல், தேசிய இனம் என்ற சமுதாய வகையினத்தையே மறுப்பதாகும். இதன் அடிப்படையில்தான் இந்தியா என்பதே தேசிய இனம் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

எனவே மேற்கூறப்பட்ட 3 கருத்துரைகள் தேசிய இனங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கருத்தியல் அம்சங்களாகும். இவை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் ஆகும். இந்த அடிப்படைக் கட்டுமானத்தை தகர்த்து;

1.  இந்தியா தேசிய இனங்கள் தம் விருப்பத்தின் படி ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப் பட்ட கூட்டாட்சி

2.    மாநிலங்கள் என்பவை நிர்வாக மண்டலங்கள் என்றில்லாமல் தேசிய இனங்களின் அரசு அதிகாரப் பகுதிகள்.

3.      மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து செல்லக் கூடிய உரிமை உண்டு.

4.  ஒவ்வொரு தேசிய இன மக்களுக்கும் ஒவ்வொரு தனித்த மூலமும் முறையான வரலாறும் உண்டு.

என்பனவற்றை அடிப்படை கட்டுமானங்களாக வைத்து இன்னொரு அரசியல் சட்ட அமைப்பு தோன்றும் பொழுதே தேசிய இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வரலாறு தொடங்குகிறது என்பது பொருளாகும். இன்றைய அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படைக் கட்டுமானத்தையும், அவற்றிற்கு உட்பட்டு இயங்கும் பாராளுமன்ற-சட்ட மன்றங்களையும் தகர்க்காமல் இது சாத்தியமே இல்லை. அரசியல் சட்டவாதம், பாராளுமன்றவாதம், சட்டமன்ற வாதத்தின் மூலம் இதை நிச்சயம் தகர்க்க இயலாது. புதிய சனநாயகப் புரட்சியின் மூலம் தான் தகர்க்க முடியும்.

தேசிய இன விரோத அடிப்படை கட்டுமானத்தின் மீது உள்ள இந்திய அரசியல் சட்டத்தின் இன்னொரு அம்சமாக இருப்பது வலிமையான மத்திய அரசு என்கிற கருத்தியல் ஆகும். இது தேசிய இனங்கள் மீது மற்றுமொரு பலமான தாக்குதல் ஆகும். இந்த விதத்தில் இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் 1935ஆம் ஆண்டு காலனியகால சட்டத்தை விட மிகவும் மோசமானதாகும். இன்றைய அரசியலமைப்பு சட்டத்தின் மத்திய மாநில உறவுகள் குறித்த சட்ட விதிகளுக்கு வலிமையான மத்திய அரசு என்ற கருத்தே அடிப்படை அம்சமாகும். 1935ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ளதைப் பேன்றே 1949ஆம் சட்டத்திலும் மத்தியப் பட்டியல், பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் என மூன்று வகை உண்டு.

1.   மத்தியப் பட்டியலில் உள்ள இனங்கள் (categories) குறித்து மத்திய அரசே சட்டம் இயற்ற முடியும்.

2.   பொதுப் பட்டியலில் உள்ள இனங்கள் மீது மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். எனினும் அவை குறித்து மத்திய அரசு பின்னர் ஏதேனும் சட்டம் இயற்றினால் அது மாநில அரசின் சட்டத்திற்கு முரணாக இருப்பின் மத்திய அரசின் சட்டம் செல்லுபடியாகும்.

3.     மாநிலப் பட்டியலில் உள்ள இனங்கள் மீது மாநிலங்கள் சட்டமியற்றும், எனினும் மத்திய அரசு விரும்பினால் சட்டம் இயற்றலாம்.

மூன்று பட்டியல் எனத் தோற்றம் அளித்தாலும் சாராம்சத்தில் ஒரே பட்டியலே. அது மத்திய பட்டியலே ஆகும். மத்திய அரசு விரும்பினால் பொதுப்பட்டியலில் மட்டுமின்றி மாநில பட்டியலிலும் சட்டம் இயற்றிவிடலாம். மத்திய அரசின் நீண்ட கூர்மையான அதிகார நகங்களால் எப்பொழுதும் கிழிக்கப் படுவதற்காகவே மாநிலப் பட்டியலும் பொதுப் பட்டியலும் காத்திருக்கும் படியாகவே அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் உண்மையில் அதிகாரமற்ற வையாகும். இந்த அரசியலமைப்புப் சட்டத்தின் மூலமாகவே பெயரளவிற்கு இருந்த மாநில உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்டு மாநில அரசுகள் வெறும் பொம்மைகளாக, உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளாக மாற்றப்பட்டு விட்டன. மத்திய அரசுக்கு தலையாட்ட எந்த பொம்மையை தேர்வு செய்ய வேண்டும் என்பதே சட்டமன்ற தேர்தல் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜனநாயகஉரிமை. எனவே இந்த சட்டமன்றத் தேர்தல்களில் எந்த பலனும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து புறக்கணிக்க வேண்டும்.

பிற கட்சிகளின் நிலைப்பாடு

நாம் தமிழர் கட்சி மாநில சுயாட்சி, சுதேசியப் பொருளாதாரம் குறித்து பேசுகிறது. ஆனால் அந்நிய நிதி மூலதன ஆதிக்கத்தை தகர்க்காமல் இவ்விரண்டும் சாத்தியமில்லை. எவ்வித அதிகாரமுமற்ற சட்டமன்றத்தின் மூலம் அதை சாதிக்க முடியாது. இந்தியா தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதை மறுத்து இந்தியர் அனைவரும் ஒரே தேசிய இனம் என்று கூறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் சட்டமன்ற, பாராளுமன்ற அமைப்பிற்குள் தமிழ் தேசியம் அமைப்பது என்பது வெறும் கற்பனையே. சீமானின் திராவிட இனவாத எதிர்ப்பு சரியே எனினும் அது நடைமுறையில் வெறும் வடுகர் எதிர்ப்பாக மட்டுமே அமைந்துள்ளது. ஆகவேதான் பாஜக-அதிமுகவுடன் சமரசப் போக்கைக் கடைபிடிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் மத்திய மாநில அரசுகளின் புதிய பொருளாதார கொள்கைகள் அதன் பாதிப்புகள் அனைத்தையும் மூடிமறைக்கிறது. ஊழலின் ஊற்றுக்கண்ணான பாராளுமன்ற சட்டமன்ற அமைப்பிற்குள் ஊழல் ஒழிப்பு என்பது சாத்தியமே இல்லை. மேலும் இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகக் கூறினாலும் திமுக எதிர்ப்பை பிரதானப்படுத்தி மறைமுகமாக பாஜக-அதிமுக ஆட்சிக்கு சேவை செய்கிறது.

கிரிமினல் மாஃபியா சசிகலா-தினகரன் கும்பல் பாஜக உத்தரவின் பேரில் அதிமுகவுடன் சமரசம் காண முயன்று தோற்றது. பிறகு தேமுதிக, ஓவைசி அமைப்புகளுடன் இணைந்து பாஜகவின் பி டீம்ஆக செயல்படுகிறது.

தேர்தல் பாதை திருடர் பாதை என முழங்கிய மருதையன் பாஜக-அதிமுகவிற்கு சாத்தியமான மாற்று திமுக மட்டுமே என்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் எதுவும் மாறிவிடாது, இருந்தாலும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார். அறிவாலயத்துக்கு போவதா? போயஸ் தோட்டத்துக்கு போவதா? என கேட்ட மருதையன் பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து அறிவாலயத்தில் அடைக்கலம் ஆகிவிட்டார். திமுக ஆட்சி மூச்சுவிடுவதற்கு வாய்ப்பளிக்கும் கூட்டணி என்கிறார். திமுகவின் தயவில் மூச்சுவிட்டு அவசியம் வாழவேண்டுமா மருதையன்?

மக்கள் அதிகாரம் பெயரில் இரண்டுவிதமான நிலைபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் சாராம்சத்தில் திமுக ஆதரவில் இரண்டும் ஒன்றுதான். ஒரு பிரிவு போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம், சூழ்ந்து வருகிறது காவி கார்ப்பரேட் காவி பாசிசம் என்று கூறுகிறது. ஆனால் அதற்கு மாற்றாக திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னிறுத்தப்படுவதை பற்றி எதுவும் பேசாமல், சீமான், கமல், தினகரன் இவர்கள் ஓரணி; பாஜக அதன் பின்னணி என்கிறது. இதன் மூலம் மறைமுகமாக திமுக-காங்கிரசு அணிக்கு ஆதரவு தருகிறது. இன்னொரு மக்கள் அதிகாரம் பிரிவோ (ராஜூ) கார்ப்பரேட் காவி பாசிச பாஜக அதன் எடுபிடி அதிமுக அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும், ஊழல் எதிர்ப்பு எனும் பெயரில் பெரியாரிய திராவிட கருத்துகளையும் பார்ப்பன சனாதன எதிர்ப்பு மரபையும் அழிக்க நினைக்கும் பாஜக ஆதரவு கமல், சீமானை புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறுகிறது. இது நேரடியாக திமுக-காங்கிரஸ் அணிக்கு முட்டுக் கொடுக்கும் செயலாகும்.

புரட்சிகர இளைஞ்ர் முன்னணி அமைப்பும் கூட பாஜக-அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் கமல், சீமானை புறக்கணிக்க வேண்டும் எனவும், திமுக-காங்கிரஸ் அணிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறது. திமுக அணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை சேகரிக்க அயராமல் பாடுபட்டு வருகிறது.

பாஜக-அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இருக்கிற கோவணத்தை பிடுங்கிக் கொள்ளும். ஆகவே கோவணத்தைப் பாதுகாப்பதற்காக திமுக கூட்டணியை ஆதரிப்பதாக சிபிஎம், சிபிஐ போன்ற திருத்தல்வாதக் கட்சிகள் தங்கள் திருத்தல்வாதத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன. இந்த கோவணப் பாதுகாப்புக் கூட்டணியில் தற்பொழுது மருதையன், மக்கள் அதிகாரத்தின் இரண்டு பிரிவுகள், புஇமு மற்றும் சில தமிழ்தேசிய குழுக்களும் இணைந்துள்ளன. அதிமுகவையும் திமுகவையும் சமப்படுத்துவது சாரம்சத்தில் அதிமுக ஆதரவு நிலைப்பாடு என்ற புதிய ஜனநாயகத்தின் தரகு முதலாளித்துவ நிலைப்பாடே இன்று திமுகவிற்க்கு முட்டுகொடுக்கும் அனைவரின் தாரக மந்திரமாகிவிட்டது.

மேற்கண்ட அமைப்புகள் பார்ப்பனிய எதிர்ப்பின் பேரால் ஏகாதிபத்திய எதிர்ப்பை கைவிட்டு பாராளுமன்றப் பாதையை ஆதரித்து புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் துரோகம் செய்கின்றன.

பாட்டாளி வர்க்க நிலைபாடு

அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களிலிருந்து இந்திய அரசு பாசிச மயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பாசிச ஆட்சி முழுமையாக நிறுவப்படவில்லை. இந்திய அரசை காங்கிரஸ் கட்சி பெருந்தேசிய வெறி பாசிச ஆட்சியாக கட்டியமைக்கிறது. பாஜக இந்திய அரசை ஒரு இந்துத்துவப் பாசிச அரசாக கட்டியமைக்கிறது. பாஜக இந்து மதவெறியை தீவிரமாக கையாளும். காங்கிரஸ் இந்து மதவெறியை காரியவாதமாக கையாளும். ஏகாதிபத்திய நிதிமூலதன-இந்திய தரகுமுதலாளித்துவ மற்றும் நிலவுடமை வர்க்கங்களின் நலன்களே இந்த இருவகை பாசிச வடிவங்களின் பொருளியல் அடிப்படையாகும். இந்த பொருளியல் அடிப்படைக்கு சேவை செய்வதன் மூலம்தான் மாநில தரகு முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் (திமுக, அதிமுக, சிபிஎம், திரிணாமுல் முதலிய) தமது வாழ்வை நீட்டித்துக் கொள்ள முடியும். நாட்டை நாசமாக்கும் புதிய காலனிய புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதில் மாநில தரகுமுதலாளித்துவக் கட்சிகள், சமூக நீதி மற்றும் தலித்திய கட்சிகளுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை. இக்கட்சிகளுக்குள் வேறுபாடு என்னவெனில் இந்திய அரசை பெருந்தேசிய வெறி பாசிச அரசாக கட்டியமைப்பதா (காங்கிரஸ்) அல்லது இந்துத்துவப் பாசிச அரசாக (பாஜக) கட்டியமைப்பதா என்பதேயாகும்.

புதிய காலனியத்துக்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச பாஜக-அதிமுக கூட்டை வீழ்த்துவோம் என்பதன் பொருள் சட்டமன்றத்தில் வீழ்த்துவோம் என்பதல்ல. ஆட்சி அதிகாரத்தை மக்கள் மன்றத்தில் வீழ்த்துவோம் என்ற பொருளில் சொல்கிறோம். ஏனெனில், பாராளுமன்றத்துக்குள்ளே பாசிசத்தை வீழ்த்த முடியாது. பாசிசத்திற்கு ஜனநாயகத் திரைகளாகத்தான் சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. காட் ஒப்பந்தம், புதிய பொருளாதாரக் கொள்கைக்கான ஒப்பந்தங்கள், இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள், நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட அனைத்து அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் அயலுறவுக் கொள்கைகளும் பாராளுமன்ற முறைகளை தூக்கி எறிந்துவிட்டு உயர் அமைச்சரவைக் குழு மற்றும் அதன் அதிகார வர்க்க கும்பலால் இணைந்து தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற மக்களவைப் பிரதிநிதிகளுக்கும் கூட தெரியாமல் பாராளுமன்றத்துக்கு வெளியே இந்த சிறு கும்பல்தான் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றன. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தக் கூட பாராளுமன்றத்திற்கு அதிகாரமில்லை. இதை அரசியல் சட்டமும் அனுமதிக்கிறது. உதாரணமாக காங்கிரஸ் ஆட்சியில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது பாராளுமன்றம் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த அரசியல் சட்டப்படி அனுமதியில்லை என மறுக்கப்பட்டது. மோடி ஆட்சி பண மதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பு பாராளுமன்றத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் கூட தெரியாமல்தான் அறிவிக்கப்பட்டது.

முதலாளித்துவ நாடுகளில் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை ஒரு பொதுவாக்கெடுப்பின் (ஸிமீயீமீக்ஷீமீஸீபீuனீ) மூலம் தீர்மானிக்கிறார்கள். இந்த முதலாளித்துவ ஜனநாயக உரிமைக் கூட இந்தியா போன்ற புதிய காலனியாதிக்க நாடுகளில் இல்லை. மக்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே உண்டு. மக்கள் பிரதிநிதிகள் இடைப்பட்ட காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்களைத் திரும்பப் பெறும் உரிமை இல்லை.

மேலும், இந்தியாவில் நடக்கும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையே ஒரு சிறு கும்பலின் எதேச்சதிகார ஆட்சிமுறைக்கு வித்திடுவதாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் அதிகாரமற்ற தேர்தல் முறையாக உள்ளது.

சிறு கும்பலின் எதேச்சதிகார ஆட்சிமுறைக்கு வித்திடும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறை

2014-நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., மொத்தம் பதிவான வாக்குகளின் மிகக் குறைந்த 31 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று, நாடாளுமன்றத்தில் மிகப்பெரும்பான்மையான 282 இடங்களை பிடித்து அறுதிப் பெரும்பான்மைப் பெற்றதற்குக் காரணம் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் என்ற பிற்போக்கான தேர்தல் முறையே ஆகும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை எவர் பெறுகிறாரோ அவரை தேர்ந்தெடுப்பது என்பதே தொகுதிவாரி பிரதிநிதித்துவம் ஆகும்.

முன்னேறிய முதலாளித்துவ முறைகளில் உள்ளது போல விகிதாச்சார தேர்தல் முறை இருந்திருக்குமானால் பா.ஜ.க.விற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது. விகிதாச்சார தேர்தல் முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் 51 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால்தான் ஒருவர் வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மேலும் ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள வாக்கு சதவீதத்திற்கு ஏற்றாற்போல் அக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

விகிதாச்சார தேர்தல் முறை இருக்குமானால் கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க. வாங்கியுள்ள வாக்குகளில் சதவீத அடிப்படையில் அக்கட்சிக்கு வெறும் 169 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மாயாவதியின் கட்சிக்கு ‘0’க்குப் பதில் 23 இடங்களும், தி.மு.க.விற்கு 10 இடங்களுக்கு கூடுதலாகவும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9க்குப் பதில் 18 இடங்களும் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.வுக்கு 37க்குப் பதில் 13 இடங்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 34க்குப் பதில் 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். எனவே விகிதாச்சார தேர்தல் முறை என்பது ஒப்பீட்டளவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரிவினருக்கும் வாக்குகளின் சதவீதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் பரவலாக கிடைக்கும். அந்த அளவுக்கு எதேச்சதிகார ஆட்சி முறையை தடுத்து நிறுத்தப் பயன்படும்.

இந்த ஆட்சி அமைப்பிற்குள்ளாகவே விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பது எதார்த்தமாக பல்வேறு அரசியல் பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையோ எதார்த்தத்திற்கு புறம்பான பிரதிநிதித்துவப்படுத்தும் முறையைக் கொண்டுள்ளது. சிறுகும்பலின் எதேச்சதிகார ஆட்சி அமைவதற்கு வழிவகுத்துவிடுகிறது. அவ்வாறு அமைந்த ஒரு சிறு கும்பலின் சர்வாதிகார ஆட்சிதான் பாஜக ஆட்சி.

ஆனால் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்க உரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் எவ்வளவுதான் பரந்த ஜனநாயகத் தன்மை கொண்டிருப்பினும் அது எதேச்சதிகார முறையை முற்றாக ஒழிக்கப் பயன்படாது. அந்த முறையும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கக் கூடியதுதான். ஏனெனில் இது பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு இது செயல்படுத்தப்படுவதில்லை. எனவே இதுவும் முற்றாக ஜனநாயகத்தை வழங்காது.

மக்களுக்கு உண்மையில் அதிகாரம் வழங்கக் கூடிய, உண்மையான ஜனநாயக அமைப்பு முறை என்பது சோவியத் ஜனநாயக ஆட்சி முறையே ஆகும். தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்க ஆட்சி முறையை ஒழித்துக்கட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்குவது; நீதித்துறை, போலீசு, இராணுவம் அனைத்தும் கலைக்கப்பட்டு மக்கள் இராணுவம், மக்கள் கமிட்டிகளை நிறுவுவது; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமையை மக்களுக்கு வழங்குவது; வர்க்க அடிப்படையில் தொகுதிகளை பிரிப்பது போன்ற சோவியத் ஆட்சி முறையே உண்மையான ஜனநாயகம் ஆகும். இத்தகைய ஆட்சி முறையை நிலவுகின்ற முதலாளித்துவ அரசமைப்பிற்குள் கொண்டுவர முடியாது. ஒரு புரட்சியின் மூலம் இந்த அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களால்தான் இதை சாதிக்கமுடியும்.

பாராளுமன்ற பங்கேற்பு புறக்கணிப்பு குறித்து லெனின்

பாசிசம் தீவிரமடையும் சூழலில் பாசிசத்தை பாராளுமன்ற வழியில் வீழ்த்த முடியும் என்ற பாராளுமன்றவாத மாயைகள் மக்கள் மத்தியில் ஆழமாக முதலாளித்துவக் கட்சிகளால் விதைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாராளுமன்ற பங்கேற்பு புறக்கணிப்பு குறித்த லெனினின் வரையறைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளுமே மார்க்சிய-லெனினிய பாட்டாளிவர்க்கப் புரட்சிப் பாதையை கைவிட்டுவிட்டன. குருசேவின் திருத்தல்வாத பாராளுமன்றப் பாதையை, அமைதிவழி மாற்றம் என்ற பாதையை மேற்கொண்டுவிட்டன.

மார்க்சிய-லெனினியப் புரட்சிப்பாதை பின்வருமாறு கூறுகிறது:

அரசு என்பது ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமாகும். மிகவும் ஜனநாயக அரசும் கூட ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரம்தான். முதலாளித்துவக் குடியரசு, முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் இயந்திரமாகும். ஆக சுதந்திரமான முதலாளித்துவ குடியரசில் கூட அரசு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கிறது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் இராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரமே நிறுவப் பட்டிருப்பதைக் காணலாம்.

அரசு இயந்திரத்தின் முக்கிய அங்கம் இராணுவமும் போலீசும்தான். எல்லா ஆளும் வர்க்கங்களும் தமது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள பலாத்காரத்தைத்தான் சார்ந்திருக்கின்றன. முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்தமுடியாது. அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சனை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதேயாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும். இப்பாதையை திருத்தல்வாத சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிராகரித்துவிட்டு குருசேவின் திருத்தல்வாதப் பாதையை-பாராளுமன்றப் பாதையை மேற்கொண்டுள்ளனர்.

குருசேவின் திருத்தல்வாத பாராளுமன்றப்பாதை புரட்சி வழியை நிராகரித்துவிட்டு அமைதி வழி மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ தேர்தல் விதிகளுக்குட்பட்டு பாட்டாளிவர்க்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மை பெறமுடியும் என்று கூறுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பாட்டாளிவர்க்கம் பெறமுடிந்தால், அதுவே அரசு அதிகாரத்தை கைப்பற்றியது ஆகும் என்று குருசேவ் கும்பல் கூறுகிறது. முதலாளித்துவ அரசு இயந்திரத்தை கைப்பற்றியதையே பாட்டாளிவர்க்கம் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றியது ஆகும் என்று குருசேவ் திருத்தல்வாதம் கூறுகிறது.

தொழிலாளி வர்க்கம் நாட்டில் ஒரு வலிமை மிக்க புரட்சி இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பிடித்து அதனை ஒரு மக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றுவது என்பதன் பொருள், முதலாளித்துவ வர்க்கத்தின் இராணுவ அதிகாரவர்க்க அரசு இயந்திரத்தை அழித்து அவ்விடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளிவர்க்க மக்கள் அரசை நிறுவுவது என்பதாகும்என்கிறார் குருசேவ்.

பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தில் ஒரு நிலையான பெரும்பான்மையை பெரும்பட்சத்தில் அதுவே சமுதாயத்தை சோஷலிச சமுதாயமாக மாற்ற வகைசெய்யும் என்று கூறுகிறார்கள் திருத்தல்வாதிகள். இவ்வாறு இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் புரட்சிப்பாதைக்கு துரோகம் இழைத்துவிட்டு (அமைதிவழி பாதை) பாராளுமன்றப் பாதையை ஏற்றுக் கொண்டுள்ளன.

நாடாளுமன்றம் குறித்த பாட்டாளி வர்க்கக் கட்சியின் செயல்தந்திரங்கள்

திருத்தல்வாதிகள் சமாதானப் பாதைக்கும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதப் போக்குக்கும் ஏற்பவே செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளுகின்றனர்.

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது. பாட்டாளி வர்க்க சகாப்தம் துவங்கிவிட்டது. எனினும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்பதன் அடிப்படையில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் தங்களது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளக் கூடாது. முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே தமது செயல்தந்திரங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று லெனின் கூறினார்.

லெனின் முன்வைத்தை இரண்டு வரையறைகள்

1. முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிந்துவிட்டது. பாட்டாளிவர்க்க சர்வாதிகார சகாப்தம் துவங்கிவிட்டது.

2. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே பாட்டாளிவர்க்க கட்சிகள் இப்பிரச்சினை குறித்து தமது செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் ரீதியில் காலாவதியாகாத போது அதில் பங்கேற்கும் செயல்தந்திரம் கடைப்பிடிப்பதும் கூட நிரந்தரமானது அல்ல. பாராளுமன்றத்தில் நிரந்தரமாக பங்கேற்பதாலோ அல்லது நிரந்தரமாக புறக்கணிப்பதாலோ ஆகிய இரண்டு செயல்தந்திரங்களும் தவறானது என்று லெனின் கூறினார்.

மேற்கூறப்பட்டதில் முதல் வரையறை போர்த்தந்திர அணுகுமுறையையும், இரண்டாவது வரையறை செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்வதற்கான அடிப்படையையும் வழங்குகிறது.

திருத்தல்வாதிகள் முதலாளித்துவ நாடாளுமன்றம் குறித்த மார்க்சிய லெனினிய போர்த்தந்திரத்தை மட்டுமல்ல செயல்தந்திரத்தையும் புறக்கணித்து விட்டார்கள். நாடாளுமன்றப் பாதையை ஏற்றுக்கொண்டு தங்களது எல்லா நடவடிக்கைகளையும் நாடாளுமன்றவாத நடவடிக்கைகளாகக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.

சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் பாராளுமன்ற வழி குறித்த திருத்தல்வாத கருத்துகள் மா-லெ அமைப்புகளின் மத்தியிலும் செல்வாக்கு செலுத்த தொடங்கியுள்ளன. நேபாளப் புரட்சியின் தோல்விக்குப் பிறகு புதிய ஜனநாயகப் புரட்சியின் மீது நம்பிக்கை இழந்து பிரசந்தா கலைப்புவாதத்துக்கு பலியாகி தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாராளுமன்றவாத மாயையை மக்கள் மீதும் இதர புரட்சிகர அமைப்புகளின் மீதும் திணிப்பதற்கு சில எம்.எல் அமைப்புகள் ஓயாமல் முயற்சி செய்து வருகின்றன. இந்த பாராளுமன்றவாத மாயைகளை முறியடிப்பதும் புரட்சிகர வழிக்கு மக்களை அணிதிரட்டுவதும் அவசியமாகும்.

மேற்கண்ட நிலைமைகளை வைத்து பார்க்கும்போது புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், இந்திய அரசு பாசிசமயமாக்கப்படுவதை எதிர்த்தும் ஒரு தேசபக்த ஜனநாயக முன்னணியை அமைப்பது உடனடி அவசியமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், மீனவர்கள், பெண்கள், தேசிய முதலாளிகள் மற்றும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட ஒரு தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும். இந்த முன்னணியே பாசிச எதிர்ப்பு முன்னணியாக செயல்பட்டு, புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும். புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமாக அமையும் மக்கள் ஜனநாயகக் குடியரசே பாசிச அரசிற்கு உண்மையான மாற்றாகும்.

சமரன், மார்ச் 2021