ஏகாதிபத்தியங்களின்
மறுபங்கீட்டிற்கான யுத்த களமாக மாற்றப்படும் காஷ்மீர்
மத்தியில்
ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் கடந்த 05.08.19
அன்று பாராளுமன்றத்தில் 370
அரசியலமைப்புச் சட்டம் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 35A உள்ளிட்ட பெயரளவு சிறப்பு
அந்தஸ்திற்கான சட்டப்பிரிவுகளை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதைத்
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 (J&K REORGANISATION ACT-2019) மூலம்
காஷ்மீர் தேசிய இனத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைக்கும் தீர்மானத்தையும் (resolution)
கொண்டு வந்தது. அதாவது சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம்
(உ.ம் பாண்டிச்சேரி), சட்டப்பேரவை
இல்லாத நேரடி ஆளுநர் ஆட்சிக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் (உ.ம் சண்டிகர்) என
காஷ்மீர் தேசிய இனத்தை இரண்டாக துண்டாடியுள்ளது மோடி-அமித்ஷா கும்பல். இவ்விரு
தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மைகளான ஜனாதிபதி மற்றும்
காஷ்மீர் ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளன.இதுவரை சட்டவிரோதமாக துண்டாடப்பட்ட
காஷ்மீர் தற்போது சட்டப்பூர்வமாக துண்டாடப் பட்டுள்ளது.
அமெரிக்க
ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்தே மோடி கும்பல்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து காஷ்மீர் தேசிய இனத்தை மதவாத
அடிப்படையில் இரண்டாகக் கூறுபோட்டுள்ளது. இதை அமித்ஷாவின் பாராளுமன்ற உரையே
அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. “35A
உறுப்பை (Article)
நீக்கியுள்ளதன் மூலம் இனி அந்நிய மூலதனம் (FDI) பெருகி
தொழில் வளர்ச்சி ஏற்பட்டு காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும்” என்றார் அமித்ஷா. காஷ்மீரை
மாநில அந்தஸ்துக்கும் கீழானதொரு இந்தியாவின் இரு அடிமை பிரதேசங்களாக
மாற்றியுள்ளதன் மூலம் தனது “ஒரு
நாடு-ஒரு மொழி” திட்டமான
இந்து ராஜ்ஜிய திட்டத்தையும் அரங்கேற்றியுள்ளது பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
அமெரிக்க
ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய பெரும் தரகு முதலாளித்துவ வர்க்க நலன்களிலிருந்து
எடுக்கப்பட்ட மோடி கும்பலின் இந்த நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் வன்மையாகக் கண்டித்து வருவதுடன்
இப்பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றுள்ளன. காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு
நடத்தாமல் 60 ஆண்டுகளாக துரோகம்
இழைத்துவரும் ஐ.நா. சபை நடுநிலை வேடம் போடுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் அனுமதிக்கப் பட்டுள்ள சீன நிதி மூலதன (FDI) நலன்களிலிருந்தும், பாகிஸ்தான் தரகு முதலாளித்துவ வர்க்க நலன்களிலிருந்தும்தான்
ஏகாதிபத்திய சீனாவும், அதன்
புதிய காலனி நாடான பாகிஸ்தானும் மோடி கும்பலின் நடவடிக்கையை கண்டித்து வருகின்றன.
இந்தியா,
பாகிஸ்தானின் பரஸ்பர தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மீது இந்தியா பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும்
தினந்தோறும் இந்து மத வெறியையும் இசுலாம் மதவெறியையும் தூண்டிவருவதுடன், அப்பட்டமாக பரஸ்பரம் தேசிய வெறியைத் தூண்டி போர்ப்
பிரகடனங்களை விடுத்து வருகின்றன. ‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்றும் அணு ஆயுதப்
போருக்குத் தயார் என்றும் மோடி கும்பல் பேசி வருகிறது. காஷ்மீருக்காகப் புனிதப்
போர் (ஜிஹாத்) நடத்தப்படும் எனவும், இரத்தம் சிந்தவும் தயார் என்றும் பாகிஸ்தான் அதிபர்
இம்ரான்கான் பேசி வருகிறார்.
இவ்வாறு
அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய
ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்காக நடந்துவரும்
பனிப்போரில், இந்திய-பாகிஸ்தான்
அரசுகள், காஷ்மீரை தெற்காசியவின்
யுத்தகளமாக (Warfield of South Asia) மாற்றியுள்ளன.
காஷ்மீர் பிரச்சனை மதப் பிரச்சனை அல்ல. மாறாக
அது ஒரு தேசிய இனப் பிரச்சனை ஆகும். காஷ்மீர் தேசிய இனப் பிரச்சினை என்பது
இந்திய-பாகிஸ்தான் பிரச்சனை என்பதையும் தாண்டி தற்போது ஏகாதிபத்திய நலன்களுக்கான
பிரச்சினையாகவும் (Kashmir National Question is now an
Imperialist Question) மாறியுள்ளது.
இந்திய-பாகிஸ்தான்
அரசுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து நடத்தப்பட்டு வந்த காஷ்மீர் விடுதலைப் போராட்டம், கூடுதலாக அந்த அரசுகளுடைய ஏகாதிபத்திய எஜமானர்களின் புதிய
காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகவும் நடத்தப்பட
வேண்டிய புதிய கட்டத்திற்குள் காஷ்மீர் விடுதலைப் போராட்டம் நுழைகின்றது.
காஷ்மீர் மீதான
இந்தியாவின் உள்நாட்டு யுத்தமும், அமெரிக்காவின் ஆசீர்வாதமும்
காஷ்மீருக்கான
பெயரளவு சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ள
மோடி கும்பலின் பாசிச நடவடிக்கையானது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசிர்வாதத்துடன்
நடந்துள்ளது. கடந்த டிசம்பர்-2018 முதல் ஓராண்டாக மோடி கும்பல் இதற்கான சதித் திட்டத்தைத்
தீட்டியுள்ளது.
இந்து
அமெரிக்கன் பவுண்டேஷன் (HAF), ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப்
பி.ஜே.பி. (OFBJP),
ரிபப்ளிக்
இந்து குவாலிஷன் (RHQ) போன்ற அமெரிக்க நிதியில்
இயங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சகோதர அமைப்புகள் காஷ்மீரை துண்டாடுவது குறித்தும், அங்கு அமெரிக்க நிதி
மூலதனத்தைத் தடையின்றி அனுமதிப்பது குறித்தும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளன. இது குறித்து இந்து அமெரிக்கன் பவுண்டேஷனின் (HAF) நிர்வாக இயக்குனர் சமீர் கல்ராவின் (Samir Kalra)
ஒப்புதல் வாக்குமூலம் வருமாறு: “காஷ்மீர்
பிரச்சினையில் இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கைக்கு ஆதரவு தருமாறு அமெரிக்க அரசை
வலியுறுத்தினோம்.” (Live
Mint-6/8/19). காஷ்மீர்
தேசிய இனத்தை உடைத்து அதன் சந்தையைக் கைப்பற்றுவதில் இந்து ராஜ்ஜியம் எனும்
அமெரிக்க மாமன் ராஜ்ஜிய நலன்கள் அடங்கியுள்ளன என்பது தெளிவு.
இதன்
பொருட்டே டிசம்பர்-2018இல்
கஷ்மீர் ஜனநாயகக் கட்சிக்கு தந்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு முப்தி மெகபூபா
ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தது மோடி கும்பல். காஷ்மீர்
மீதான இரண்டு தீர்மானங்களை (Resolution)
நிறைவேற்ற முப்தி மெகபூபா ஆட்சியின் ஒப்புதல் பெற வேண்டியிருந்ததால், குறுக்கு வழியில் ஆளுநர்
ஆட்சியைக் கொண்டுவந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தான, தண்ட, பேத, தரகு வேலைகளைப் பார்த்து
காஷ்மீரை துண்டாடியுள்ளது மோடி கும்பல். பாராளுமன்ற அவைகளில் பெரும்பான்மை பெறும்
பொருட்டு அதிமுக, பகுஜன்
சமாஜ், பிஜூ ஜனதா தளம், ஆம் ஆத்மி மற்றும் டி.ஆர்.எஸ்.
கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை விலைக்கு வாங்கி இந்திய அரசின் ரப்பர்
ஸ்டாம்புகளான ஜனாதிபதி மற்றும் காஷ்மீர் ஆளுநரின் ஒப்புதல் மூலம் காஷ்மீரை
துண்டாடியுள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.
மோடி அரசு
பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானங்களை கொண்டு வருவதற்கு இரண்டொரு நாட்களுக்கு
முன்பே காஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. மின்சாரம், தொலைத் தொடர்புகளைத் துண்டித்து காஷ்மீரை இருளில்
மூழ்கடித்தது. கூடுதலாக 30,000
இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள்
அனுமதிக்கப்படவில்லை.தங்களது தேசம் துண்டாடப்பட்டது கூட தெரியாமலும், உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்துப் போன
காஷ்மீரிகளின் உணர்வுகளையும் துண்டாடியது பாசிச மோடி ஆட்சி.
காஷ்மீர் தேசமும், காஷ்மீரிகளின் தேகமும் பெல்லட் குண்டுகளால் துளைக்கப்படுவது
புதியது ஒன்றுமல்ல. அரை நூற்றாண்டு காலம் மத்தியில் மாறி மாறி ஆண்ட காங்கிரசு, பாஜக உள்ளிட்ட எல்லா அரசுகளும் காஷ்மீரை சுரண்டும் பொருட்டு
அதன்மீது பாசிச அடக்குமுறைகளையும் உள்நாட்டு யுத்தத்தையும் ஏவி வருகின்றன.
ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்வு காண்போம் என்று
வாக்கு தந்து காஷ்மீரிகளின் முதுகில் குத்திய காங்கிரசுக் கும்பலின் துரோகமே
பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் துரோகத்திற்கு துவக்கப் புள்ளியாகும்.
காஷ்மீரில் 10 பேருக்கு ஒரு இராணுவ வீரர் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு
அதிகார இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை ஏழு லட்சம் இராணுவ வீரர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரத்து வளங்களை ஏகாதிபத்தியங்களும், அம்பானிகளும், அதானிகளும் சுரண்டுவதற்கு இந்திய இராணுவம் காவல் காப்பது
மட்டுமின்றி காஷ்மீரத்து பெண்களையும், சிறுமிகளையும் வன்புணர்கின்றது; போராடும் மக்களை இரத்தத்திலும் கண்ணீரிலும் மூழ்கடிக்கிறது.
இதுவரை மத்தியில் ஆண்ட அரசுகள் இலட்சக் கணக்கான காஷ்மீரிகளை கொன்று குவித்துள்ளன.
இந்த இனப்படுகொலையும், பாசிசமும், உள்நாட்டு யுத்தமும், கண்ணீரும் ரத்தமும்தான் காஷ்மீரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ‘சிறப்பு அந்தஸ்தின்’ இலட்சணமாகும். சிறப்பு அந்தஸ்து இல்லாமல் இணைக்கப்பட்ட பிற
மாநிலங்களில் கூட இவ்வளவு கொடூரமான ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்படவில்லை.
370 சிறப்பு அந்தஸ்து - காஷ்மீருக்கா? இந்தியாவிற்கா?
370, 35A
இரத்து பற்றி அமித்ஷா பாராளுமன்றத்தில் “370(1) பிரிவைத் தவிர ஜம்மு காஷ்மீரில் 370 அரசியலமைப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை
முன்வைக்கிறேன்” என்று கூறினார்.
அதாவது, 370 அரசியலமைப்புச் சட்டம் முழுதும் இரத்து செய்யப்படவில்லை.
அதில் 370(1)
பிரிவைத் தவிர மற்ற உட்பிரிவுகளும், உறுப்பு 35Aவும்
மட்டுமே இரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச்
சட்டம் 370இல் மத்தியப் பட்டியல் மற்றும்
பொதுப் பட்டியலில் உள்ள அம்சங்கள் சம்பந்தமாக (matters related to
Union list and Concurrent list) சட்டம்
இயற்றும் அதிகாரத்தை இந்திய அரசுக்கு வழங்குவதை உத்தரவாதப்படுத்தும் உட்பிரிவுகள்
நீக்கப்படவில்லை. மாநிலப் பட்டியல் சம்பந்தமாக (matters related to
State list) சட்டம்
இயற்ற காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கோரும்
உட்பிரிவுகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அதாவது மாநிலப் பட்டியல் முற்றாக
ஒழிக்கப்பட்டு மத்தியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலின் கீழ் மட்டுமே
சட்டங்கள் இயற்ற வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து
எனும் பெயரில் காஷ்மீருக்கு தனியாக பாராளுமன்றம், தனிக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இந்தியச் சட்டங்கள் ஆட்சிக் கவிழ்ப்புகள் -
ஆளுநர் ஆணைகள் மூலம் காஷ்மீர் பாராளுமன்றம் இந்தியப் பாராளுமன்றத்தின் எடுபிடி
மன்றமாக படிப்படியாக மாற்றப்பட்டது. காஷ்மீர் கொடியுடன் இந்தியக் கொடியும்
சேர்ந்தே ஏற்றப்பட்டு வந்தது. இனி இந்தியக் கொடி மட்டுமே ஏற்றப்படும்; காஷ்மீரிகளும் “இனி இந்தியர்கள் என அழைக்கப்படுவார்கள்” என்கிறது மத்திய அரசு.
370 இரத்தின் மூலம் புதிதாக
ஒன்றும் ஜனநாயகம் படுகொலை செய்யப்படவில்லை. காஷ்மீரின் இணைப்பு ஒப்பந்தத்திலேயே (Instrument of Accession)
ஜனநாயகப் படுகொலைக்கான அடிப்படை உள்ளது. காஷ்மீர் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக
காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக இணைக்கப்பட்டது.
370 அரசியலமைப்புச் சட்டம் என்பது
1947 இணைப்பு ஒப்பந்தத்தின் சட்ட
வடிவம் ஆகும். காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புத்துறை (Defense), வெளியுறவுத்
துறை (External
affairs), நிதித்துறை (Finance), தொலைத்தொடர்புத்
துறை (Tele-Communication) சாலை மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புத் துறை (Infrastructure) சம்பந்தமான சட்டங்களை இயற்றும் அதிகாரம் இந்திய அரசிடம்
ஒப்படைக்கப்படுவதாகவும், உள்நாட்டு
நிர்வாகம் (Internal Administration) காஷ்மீர் அரசிடம்
ஒப்படைக்கப்படுவதாகவும் இணைப்பு ஒப்பந்தம் கூறுகிறது. காஷ்மீர் மாநிலத்
தேர்தலையும் கூட இந்திய தேர்தல் ஆணையமே நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது.
1954
ஜனாதிபதி ஆணையின் மூலம் 370 உடன்
தனி உறுப்பாக இணைக்கப்பட்ட 35A
தற்போது 2019 ஜனாதிபதி ஆணையின் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
35A
உறுப்பின் மூலம் குடியுரிமை, காஷ்மீரிகள்
அல்லாதோர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதை தடுக்கும் உரிமை, திருமண உரிமைகள் மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகள் காஷ்மீர்
அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. 35A சட்டம் அமலில் இருக்கும் போதே மாநில அரசுகளை கலைத்து
ஜனாதிபதி ஆணைகள் மூலம் குறுக்கு வழியில் இந்திய தரகு முதலாளிகள் நிலம் வாங்க
அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பெரும் பரப்பளவில் நிலம் வாங்குவதற்கும் சிறப்பு
பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கும், அந்நிய நிதி மூலதனத்தை அதிகளவு ஈர்ப்பதற்கும் சில சட்ட
ரீதியான தடைகள் இருந்தன. தற்போது அப்பிரிவுகள் மொத்தமாக நீக்கப்பட்டு தடையற்ற
அந்நிய நிதி மூலதனச் சுரண்டல் அனுமதிக்கப்படவுள்ளது.
சுருங்கக்கூறின், இணைப்பு ஒப்பந்தமும் அதற்கான 370 அரசியலமைப்புச் சட்டமும் காஷ்மீர் மீதான அரசியல், பொருளாதார, இராணுவ
ஆதிக்கத்தை இந்திய அரசிற்கும், உள்நாட்டு
நிர்வாக உரிமையை காஷ்மீர் அரசிற்கும் வழங்குகிறது. அதாவது காஷ்மீர் அரசுக்கு
பெயரளவிற்கு உரிமையையும், இந்திய
அரசுக்கு வானளாவிய சிறப்பு அந்தஸ்தையும் 370 வழங்கி உள்ளது. இந்த அரசியலமைப்பு முறையின் மூலம்
காஷ்மீரில் மத்திய அரசைச் சார்ந்து வாழும் தரகு முதலாளித்துவ ஆளும் கும்பலை
உருவாக்கி தேவையானதை சாதித்துக் கொண்டு வந்தது பாசிச மத்திய அரசு.
ஏற்கனவே
பாசிச முறையில், தணிக்கை
சம்பந்தமான மத்தியப் பட்டியலின் 76வது
சட்டப் பிரிவும் (1958ல்), மத்தியப் பட்டியலிலுள்ள 97 பிரிவுகளில் 94 பிரிவுகளும், 395 இந்திய அரசியலமைப்புச்
சட்டங்களில் 260
சட்டங்களும், 250க்கும்
மேற்பட்ட மத்திய சட்டங்களும் (central laws) ஜம்மு-காஷ்மீருக்கு
விரிவுபடுத்தப்பட்டு விட்டன. 44-வது
சட்டத்திருத்தம் மூலம் (44th amendment)
அவசரநிலைப்
பிரகடனம் பிற இந்திய மாநிலங்களில் இரத்து செய்யப்பட்ட போதும் ‘உள்நாட்டு அவசர நிலை’ என்று கூறி இந்திரா கும்பல்
கொண்டு வந்த எமர்ஜென்சி ஆட்சி (அவசரநிலைப் பிரகடனம்) காஷ்மீரில் அகற்றப்படவில்லை.
மேலும் பிற மாநிலங்களைப் போலல்லாமல் காஷ்மீரில் பேச்சுரிமையும் கூட சட்டபூர்வமாகவே
மறுக்கப்பட்டு வருகிறது.
எனவே, 370 என்பது இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்தாக விளங்கியதே ஒழிய
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தாக விளங்கவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.
இவ்வாறு, ஏற்கனவே செத்துப்போன 370 சட்டத்தைத்தான் இரண்டாகப் பிளந்து மீண்டும் புதைத்துள்ளது
மோடி கும்பல்.
அமெரிக்க-சீன நிதி
மூலதன ஆதிக்கத்தின் கீழ் காஷ்மீர் மறுபங்கீடு செய்யப்படுகிறது
அ) இந்திய
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமெரிக்க நிதிமூலதனம்
காஷ்மீரில் தடையற்ற
அந்நிய நிதி மூலதனச் சுரண்டலை அனுமதிக்கும் பொருட்டே 35A உறுப்பு நீக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து அரசியல்
பொருளாதாரக் கொள்கைகளும் இங்குள்ள மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருவதைப்
போன்றே காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் தங்குதடையற்ற நேரடி அந்நிய
முதலீட்டை அனுமதிப்பதற்கு 35A தடையாக
இருந்தது. தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளதால் எவ்வித கட்டுப்பாடுமின்றி அந்நிய
முதலீடு வரம்பின்றி காஷ்மீரை சுரண்டவுள்ளது.
காஷ்மீர் தேசிய
இனத்தை அதன் பெயரளவிலான ‘சிறப்பு
அந்தஸ்தை’
இரத்து செய்து இரண்டாக உடைத்த மோடி அரசின் நடவடிக்கையை
இந்திய பெருந்தரகு வர்க்க கும்பல்கள் ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர்.
ஜிண்டால் குழுமத்தின்
நிறுவனர் திரு.ஜிண்டால் “370
சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் ஆகும். பாஜக
அரசின் முடிவு சிறந்த முடிவாகும்” என்றும், “இது துணிச்சலான முடிவு. இந்திய மைய நீரோடையில் காஷ்மீர்
கலந்திருப்பதால் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையோடு காஷ்மீரும் வளரும்” என்றும், “370 காஷ்மீரீகளுக்கு எதிரானது; இனி காஷ்மீர் வளரும்” என்றும் கூறுகிறார்.
ஆர்.பி.ஜி
(RPG) நிறுவனத்தின் தலைவர் ஹர்ஸ் கோயங்கா கூறுவதாவது: “வரலாற்றுச் சிறப்புமிக்க
முடிவு. காஷ்மீரில் ஆரம்ப கால முதலீட்டாளர்களில் நாங்களும் ஒருவர். 80களில் எனது தந்தை இரு
தொழிற்சாலைகளை நிறுவினார். மேலும் துலிப் பூந்தோட்டத்தை நிறுவினார். மோடி அரசின்
நடவடிக்கையானது முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்பின்மையை குறைக்கும்; சுற்றுலா மீண்டும் பெருகும்” என்று கூறுகிறார். 1980 களில் இருந்தே கோயங்கா
கார்ப்பரேட் கும்பல் காஷ்மீரில் முதலீடு செய்து வந்துள்ளதை இது எடுத்துக்
காட்டுகிறது.
மகிந்திரா
நிறுவனத்தின் சேர்மேன் மகேந்திரா கூறுவதாவது: “நமது நாட்டின் வளர்ச்சியை இந்த நடவடிக்கை மேலும்
அதிகப்படுத்தும். காஷ்மீர் நமது நாட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது” என்று பாஜக குரலில் பேசுகிறார்.
“இது ஒரு துணிச்சலான முடிவு; 10 வருடங்களில் இதற்கான பலனை
நாம் பெற முடியும்” என்று
ஜேபி குரூப் (JP GROUP) தலைவர் மனோஜ் கவுர் கூறுகிறார்.
ஓஸ்வெல் குழுமத்தின் தலைவர் மோதிலால் ஓஸ்வெல் அவர்களோ “இப்போதுதான் உண்மையிலேயே
இந்தியா ஒரே நாடாகியுள்ளது” என்றும்; மும்பை பங்குச்சந்தை தலைவர்
ஆஷிஷ் சவுகான் அவர்களும் “காஷ்மீர்
இந்தியாவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது” என்றும்
ஆர்.எஸ்.எஸ் குரலில் பேசுகின்றனர். லோதா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அபிஷேக்
லோதாவும் “மாபெரும்
துணிச்சலான முடிவு” என்று
அறிக்கை விடுத்துள்ளார்.
(தி
இந்து-6/8/19)
காஷ்மீருக்குள்
நுழைந்து அதன் இயற்கை வளங்களையும், மூல வளங்களையும் கைப்பற்றவும் தொழில் தொடங்கவும் இந்திய
தரகு முதலாளித்துவ கும்பல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது மேற்கண்ட
வாக்குமூலங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
ஏப்ரல் 2000ஆம் ஆண்டு முதல் மார்ச் 2008ஆம் வரை சுமார் 6 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அந்நிய முதலீடு காஷ்மீரின்
தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (ஞிமிறிறி) மூலமாக அம்மாநிலத்தில்
அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரின் தொழிற்துறையில் 3397 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2013இல்-450 கோடி,
2014இல்-197 கோடி, 2015இல்-663
கோடி,
2016இல்-973 கோடி, 2017இல்-1008 கோடி என ஆண்டுதோறும் அந்நிய முதலீடு அதிகரித்து
வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட
முதலீடுகள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டவை ஆகும். இது தவிர
அமெரிக்க நிதி மூலதனம் துபாய் வழியாக கடந்த ஆண்டு முதல் காஷ்மீரில் அனுமதிக்கப்
பட்டுள்ளது. 28.2.2018
அன்று அமெரிக்காவின் உத்தரவின் பேரில் மோடி மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் மன்னர்
முன்னிலையில் காஷ்மீரின் நிதியமைச்சர் டாக்டர் பிரபுவிற்கும், துபாயில் இயங்கும் டி.பி
வோர்ல்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் (DP-DUBAI
PORT WORLD) இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது. அதன் அடிப்படையில் டிபி வோர்ல்ட் கார்ப்பரேட் நிறுவனம் ஜம்முவின்
சம்பா பகுதியிலும் காஷ்மீரின் ஓம்போரா (ombora)
பகுதியிலும் முறையே ஒவ்வொரு உலர் துறைமுகம் (dry
ports) என இரு துறைமுகங்களை அமைக்கும்
பணிகளை துவக்கியுள்ளது. இதற்கான முதற்கட்டமாக சுமார் 230 மில்லியன் டாலர் (ரூ.1500 கோடி) அந்நிய முதலீடு
அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு உலர்
துறைமுகங்களும் கார்கோ போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன. சரக்குகளைப்
பாதுகாப்பது, பண்டகக் காப்பகங்கள், குளிர்சாதன அறைகள் போன்ற வசதிகளை கொண்டதே உலர்
துறைமுகங்களாகும். இது ஏற்றுமதி இறக்குமதி மையமாக செயல்படும்.
டி.பி வோர்ல்ட் உலர்
துறைமுகத் திட்டத்திற்கு 100 ஏக்கர்
நிலம் தேவைப்படுகிறது. 100 ஏக்கர்
நிலத்தை பெறுவதற்கு தடையாக இருந்த 35A நீக்கப்பட்டுள்ளதால் டிபி குழுமம் 100 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி இத்துறைமுகங்களை
விரிவுபடுத்தவுள்ளது. இந்த உலர் துறைமுகங்கள் (கடல் இல்லாத பகுதிகளில்
அமைக்கப்படும் துறைமுகங்கள்) ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்திய துறைமுகப் பகுதிகளுடன்
இணைக்கின்றன. இது மட்டுமின்றி டிபி வோர்ல்ட் நிறுவனம்தான் கொச்சி, முந்த்ரா, சென்னை, விசாகப்பட்டினம், குல்பி போன்ற இந்திய துறைமுகங்களை அதானி குழுமத்துடன்
இணைந்து மேம்படுத்தி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக இந்தியாவில்
துவங்கப்பட்டுள்ள உலக வங்கி திட்டங்களான பாரத்மாலா, சாகர்மாலா, உதான்
போன்ற திட்டங்களை காஷ்மீருக்கும் விரிவுபடுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே
தொடங்கிவிட்டன. அண்மையில்கூட காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் இடையில் “வந்தே பாரத்” என்ற ரயில் போக்குவரத்தை மோடி கும்பல் துவக்கியுள்ளது.
இந்தியாவிலுள்ள
மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவற்றின் சந்தைகள் மையப்படுத்தப்பட்டு சர்வதேச நிதி மூலதனச்
சந்தையுடன் இணைக்கப்படுவதன் தொடர்ச்சியாகவே காஷ்மீரின் உரிமையும் பறிக்கப்பட்டு
அதன் சந்தையும் மையப்படுத்தப்படுகிறது.
காஷ்மீர்
அரசு ‘2016 தொழிற்கொள்கை’ (Industrial Policy-2016) மூலம் 20,000 கோடி மதிப்புள்ள அந்நிய
முதலீட்டை ஈர்ப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அண்மையில் அம்பானி கும்பலும் கூட
காஷ்மீரில் முதலீடு செய்து அம்மாநிலத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
அம்பானி
குழுமத்திடம் இருந்து சுமார் ஐந்து இலட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள
ஆரம்கோ (ARAMCO) என்ற அமெரிக்க-அரபு நிறுவனம் காஷ்மீரில் முதலீடு செய்வதற்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரம்கோ நிறுவனமும்,
அம்பானி
கும்பலும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் (CII) இணைந்து
காஷ்மீரில் நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தலைமை தாங்கி நடத்த உள்ளன.
அமெரிக்க நிதி மூலதன சுரண்டல் தடையின்றி அனுமதிக்கப்பட்டு காஷ்மீரின் அரைகுறை
தொழில்களும் அழிக்கப்படவுள்ளன. காஷ்மீரின் வேளாண்மை மற்றும் பணப் பயிர் உற்பத்தி, சுற்றுலா பொருளாதாரம் புதிய
காலனிய நலன்களோடு பிணைக்கப்படவுள்ளன.
மேலும்
லடாக்கில் மிக அதிக அளவில் (5.36%) யுரேனியம்
இருப்பதாகவும், வடக்கு
லடாக்கின் ‘உட்மரு’ பகுதியில் யுரேனியம் மற்றும்
நுட்ரோ ஷியோக் பகுதியில் அதிகளவு தோரியம் இருப்பதாகவும், கிரானைட் (Granite), யூஹெட்ரல்
(Euhedral), ஜிர்கான்
(Zircon) போன்ற அரிய வகை கனிமவளங்கள் இருப்பதாகவும் இந்திய அணு ஆற்றல் துறை ஆய்வு
செய்து அறிவித்துள்ளது. மேலும், அனந்த்நாக், பெரமுல்லா பகுதிகளில் சிமெண்ட்
மற்றும் இதர மூலப் பொருட்கள் பரவிக் கிடக்கின்றது. மலிவான கூலி உழைப்புக்காகவும், இத்தகைய கனிம வளங்களை
கொள்ளையடித்துச் செல்வதற்கும் அமெரிக்க நிதி மூலதன கும்பல்களும், இந்திய தரகு முதலாளித்துவ
வர்க்க கும்பல்களும் காஷ்மீரை கழுகுகள் போல வட்டமிடுகின்றன. சீன ஏகாதிபத்திய
நாடும் கூட லடாக்கில் தனக்குரிய அக்சாய் சின் பகுதியைத் தாண்டி ஊடுருவ
முயற்சிப்பதற்கும்,லடாக்
முழுவதையும் உரிமை கோருவதற்கும் பொருளியல் காரணம் இதுவேயாகும்.
ஜம்மு காஷ்மீரின் வர்த்தக அமைச்சர் நவீன் குமார்
சவுத்ரி “ஐ.டி.சி (ITC), டாடா
(TATA), சுஸ்லான்
ஆற்றல் நிறுவனம் (SUZLON ENERGY), மகிந்திரா, அக்ரோ டெக் (AGRO
TECH), அல்ட்ரா
டெக் (ULTRA
TECH), ராடிசன்
ஹோட்டல்ஸ் (ADDISON HOTELS) போன்ற பெரும் கார்ப்பரேட்
நிறுவனங்கள் காஷ்மீரில் தொழில் தொடங்க அனுமதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும், டி.சி.எஸ்-ஐ.ஓ.என் நிறுவனம்
கல்வித் துறையிலும், ஐ.டி.சி.
நிறுவனம் வேளான் உற்பத்தி மற்றும் சேவைத் துறையிலும் அனுமதிக்கப்படவுள்ளதாகவும்
அறிவித்துள்ளார்.
மேலும்
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் தலைவர் சமீர் குப்தா, காஷ்மீரில் மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ சுற்றுலா போன்ற
துறைகள் அந்நிய முதலீட்டு உதவியுடன் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும், சோலார் மின் ஆற்றல் (solar
power) திட்டம் மற்றும் பிற ஆற்றல் துறைகள் (Power Sectors) தொடங்கப்பட உள்ளதாகவும்
அறிவித்துள்ளார்.
இவ்வாறு, அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனம் மற்றும் இந்திய தரகு
முதலாளித்துவ வர்க்க சுரண்டலை காஷ்மீர் முழுக்க விரிவுபடுத்தும் பொருட்டே ஒட்டு
மொத்த காஷ்மீரையும், சீனாவுக்கு
சொந்தமான அக்ஷாய்சின் பகுதியையும் மீட்க உயிரையும் தருவோம் என்கிறது மோடி-அமித்ஷா
கும்பல்.
ஆ) பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன நிதிமூலதன ஆதிக்கம்:
செப்டம்பர் 11,
2001 இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு
பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறி அந்நாட்டுடன்
அரசியல்-பொருளாதார இராணுவ உறவுகளை அமெரிக்கா மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே
வந்தது. எனவே பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்கள் சீன நிதி மூலதன ஆதிக்கத்தை தமது
நாட்டில் அனுமதிக்க ஆரம்பித்தன. சீன ஏகாதிபத்தியம் பாகிஸ்தானை பல்வேறு அரசியல், பொருளாதார, இராணுவ
ஒப்பந்தங்கள், கூட்டுப் பயிற்சி
மற்றும் ரோந்து மூலம் தமது புதிய காலனியாதிக்க நாடாக மாற்றியுள்ளது. ஆப்பிரிக்க
நாடான டிஜிபோட்டிற்குப் பிறகு சீனா தனது இராணுவ தளத்தை பாகிஸ்தானில் அமைத்துள்ளது.
தெற்காசியப்
பிராந்தியத்தில் சீனாவின் நிதி மூலதன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பாகிஸ்தானும், சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து அமெரிக்க மேலாதிக்கத்தை
நிலைநிறுத்த இந்தியாவும் சேவை செய்து வருகின்றன.
சீனாவின்
உலக மேலாதிக்க முயற்சிக்கான திட்டமாக ‘புதிய
பட்டு சாலை திட்டம்‘ (BOR-NSR-BRI) செயல்படுத்தப்பட்டு வருகிறது. “சீன-பாகிஸ்தான்
பொருளாதார இணைப்புச் சாலை” (CPEC) என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோஜல்
பள்ளத்தாக்கு (Kojal Valley), கில்ஜிட் (Giljit) மற்றும் பல்டிஸ்தான் (Baltisthan) போன்ற நகரங்கள் வழியாக அமைக்கப்பட்டு வருகின்றது. இது பாகிஸ்தானின்
கரகோரம் நெடுஞ்சாலையுடன் இனைக்கப்பட்டுள்ளது. இது அரபிக் கடல், இந்தியப் பெருங்கடலில்
சீனாவிற்கு புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு ‘வளர்ச்சித் திட்டங்கள்’ (Developmental Projects) எனும் பெயரில் சீனாவின் நிதி
மூலதனம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த
இணைப்புச் சாலை 60
பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின்
தெற்காசிய மேலாதிக்கத்திற்கும் இந்தோ-பசிபிக் திட்டத்திற்கும் எதிராகவுள்ளதால்
இந்த இணைப்புச் சாலை திட்டத்தை அமெரிக்காவும், இந்தியாவும் வன்மையாக கண்டித்து வருகின்றன. சீனாவின்
பட்டுச் சாலை திட்டம் காஷ்மீரின் வழியாகச் செல்வதாலும் அமெரிக்காவின் அழுத்தம்
காரணமாகவும் இந்தியா இத்திட்டத்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து இரு நாடுகளும்
ஐ.நா.-வில் முறையிட்டு வருகின்றன.
பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித், பல்டிஸ்தான்
நகரங்களில் சீனாவின் மக்கள் விடுதலைப் படை (PLA) (சீன
இராணுவம்) உதவி (AID) எனும் பெயரில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கில்ஜிட்டில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாமில் (Field Command
Office) சீனா இராணுவ அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. சீனாவின் முதன்மை
இராணுவ அதிகாரிகள் இந்த அலுவலகத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றையும்
விட முக்கியமாக, கில்ஜிட்டிற்கு
அருகில் குஞ்ஜிராப் (Khunjirab) பகுதியில் சீனா, இராணுவ முகாம் (Unit
of PLA) ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் இந்தியாவும்
ஏற்கனவே கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லையில் சீன இராணுவமும் (PLA) பாகிஸ்தானின் எல்லைக் காவல் படையும் (BSF) 2014-ஆம் ஆண்டில் இருந்தே கூட்டு
ரோந்து மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு, சீன நிதி மூலதனம் மற்றும் பாகிஸ்தானின் தரகு முதலாளித்துவ
வர்க்க நலன்களிலிருந்தே ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் உரிமைக் கோருகிறது பாகிஸ்தான்
அரசு.
காஷ்மீரில்
கொட்டிக்கிடக்கும் மூலப் பொருட்களையும், கனிம வளங்களையும், பணப் பயிர் உற்பத்திப் பொருட்களையும், சுற்றுலா பொருளாதாரத்தையும் கொள்ளையடிக்கும் பொருட்டே
அமெரிக்க-இந்திய முகாமும், சீனா-பாகிஸ்தான்
முகாமும் அங்கு செல்வாக்கு மண்டலங்களை நிறுவி காஷ்மீரை மறுபங்கீடு செய்யத்
துவங்கியுள்ளன என்பதை மேற்கூறியவை நிரூபிக்கின்றன. காஷ்மீரில் துவங்கியுள்ள
பனிப்போர் சர்வதேச நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்கா
இந்தியாவையும், சீனா
பாகிஸ்தானையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி காஷ்மீரில் மறைமுக யுத்தத்திற்கு
தயார் செய்து வருகின்றன. இந்த மறைமுக யுத்தமே பனிபோருக்கான அடிப்படையாகும். அதாவது
இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவிற்காகவும்,
சீனாவுக்காவும்
பதிலிப் போரில் (Proxy War) ஈடுப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவும் சீனாவும் காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவும் பாகிஸ்தானும்
பேசித் தீர்க்க வேண்டிய உள்நாட்டு பிராச்சினை என்று கூறி நடுநிலை வேடம் போடுவது
தங்களின் புதிய காலனிய நாடுகளை பனிப்போரில் கருவிகளாக பயன்படுத்தும் சதியே ஆகும்.
தமிழ் ஈழ விடுதலைப் போரை நசுக்கியது போலவே காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தையும்
நசுக்கி அங்கு செல்வாக்கு மண்டலங்களை ஏகாதிபத்தியவாதிகள் நிறுவத் துடிக்கின்றன.
ஏகாதிபத்திய நிதி மூலதனம் காலனிய நாட்டை அமைதி வழியில் மறுபங்கிட்டாலும், இராணுவ வழியில்
மறுபங்கிட்டாலும் அது காலனியாதிக்கமே என்ற லெனினிய நிலைபாடு இங்கணம் மெய்ப்பிக்கப்
படுகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்புவதில்லை. அடிமைத்
தனத்தையே விரும்பும்.
அமெரிக்க-சீன நிதி
மூலதன நெருக்கடியும் முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருவதால், பனிப் போர் தீவிரம் பெற்று வருகிறது. மூலப் பொருட்களுக்கான
தேவை உக்கிரமடைகிறது. மூலப் பொருட்களின் தேவை எவ்வளவு தீவிரமாக உக்கிரமடைகின்றனவோ
அவ்வளவு தீவிரமாக மூலப்பொருட்கள் பரவிக்கிடக்கும் நாடுகளில் காலனியாதிக்கமும்
மறுபங்கீட்டிற்கான போர்களும் உக்கிரமடைகின்றன என்ற லெனினியக் கோட்பாடு வெனிசுலா
முதல் காஷ்மீர் வரை நிரூபிக்கப்பட்டு வருகின்றது. ஆகவேதான் பனிப்போரில் தெற்காசிய
யுத்தக்களமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசியல் பொருளாதார நலன்களிலிருந்தே
காஷ்மீரை மொத்தமாக விழுங்க அமெரிக்க-இந்திய அணியும் சீன-பாகிஸ்தான் அணியும்
காஷ்மீரில் நிதி மூலதன ஆக்கிரமிப்பிலும் இராணுவ ஆக்கிரமிப்பிலும் ஒருசேர ஈடுபட்டு
வருகின்றன. அமெரிக்க நிதி மூலதனத்தையும் இந்திய தரகு முதலாளித்துவ வர்க்க
மூலதனத்தையும் பாதுகாக்க இந்திய இராணுவம் துப்பாக்கி ஏந்தி நிற்கிறது. சீன நிதி
மூலதனத்தையும் பாகிஸ்தான் தரகு முதலாளித்துவ வர்க்க மூலதனத்தையும் பாதுகாக்க
பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கி ஏந்தி நிற்கிறது.
சீன முகாமிலுள்ள
இரஷ்யாவோ தெற்காசியாவின் முக்கியமான ஆயுத வியாபாரச் சந்தையாக இந்தியாவை கருதுவதால்
இப்பிரச்சனையில் ஐ.நா. விதிகளின்படி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கலாம் என்று கூறி
நடுநிலைமை வேடம் போடுகிறது.
இவ்வாறு, அமெரிக்க நிதி மூலதனத்தையும் அதைச் சார்ந்து வாழும் இந்திய
தரகு முதலாளித்துவ வர்க்க மூலதனத்தையும் காஷ்மீர் முழுக்க விரிவுபடுத்தும்
விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்தே மோடி கும்பல் 370, 35A சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் தேசிய இனத்தை இரண்டாக
உடைத்துள்ளது. இதன் மூலம் தமது நெருக்கடியைத் தீர்க்க முயல்வது மட்டுமின்றி
எதிர்வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை உணர்வை நசுக்கவும், பிளவுபடுத்தி மதவாதமாக மாற்றவுமே மதவாத அடிப்படையில்
காஷ்மீர் தேசிய இனத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது மோடி கும்பல். இந்த அரசியல்
பொருளாதார அடிப்படைகளின் மீது தான் இந்து இராஜ்ஜியத்தை மோடி கும்பல்
கட்டியமைக்கிறது; கட்டியமைக்கவும்
முடியும். காஷ்மீர் தேசிய இனத்தை உடைத்து மீண்டும் அங்கு சமஸ்தான ஆட்சியை
நிறுவியுள்ளதைப் போன்று இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களையும் உடைத்து சமஸ்தான
ஆட்சிகளை உருவாக்க திட்டமிடுகிறது மோடி ஆட்சி.
அவ்வாறே
சீன நிதி மூலதன ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொண்டு,
அதன்
மூலம் பாகிஸ்தானின் தரகு முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்க்க முயல்கிறது
பாகிஸ்தான் அரசு. இந்த பொருளியல் அடித்தளத்தின் மீது ‘புதிய பாகிஸ்தான்’ என்ற முழக்கத்தின் கீழ்
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நிலைநிறுத்த முயல்கிறது. காஷ்மீர் இஸ்லாமியர்களுக்காக
புனிதப் போர் நடத்துவதாக கூறும் இம்ரான் அரசு, சீனாவின்
உய்கூர் (Uyighur) இஸ்லாமியர்கள் மீது புனிதப் போர்
நடத்தும் சீன பாசிசம் பற்றி பேசத் தயாரில்லை. பாகிஸ்தானில் வறுமை, வேலைவாய்ப்பின்மைக் காரணமாக
துன்புற்றுவரும் இஸ்லாமியர்களைப் பற்றியும் கவலைப் படவில்லை.
முதலாளித்துவ
கட்சிகளின் நிலைபாடும் பாட்டாளிவர்க்க நிலைபாடும்
ஐ.நா.வில்
பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்த நேருவின் ஆட்சி காஷ்மீர் மக்களுக்கு
மாபெரும் துரோகமிழைத்தது. காஷ்மீர் தேசிய இனத்தின் மீது 370 மூலம் ஓர் உள்நாட்டு யுத்தத்தை துவக்கி வைத்ததே காங்கிரஸ்
கும்பல்தான்.
மோடி கும்பல் கொண்டு
வந்த ஜம்மு-கா£ஷ்மீர் மறு சீரமைப்பு
மசோதாவும் கூட காங்கிரசு கும்பலின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்
அடிப்படையில்தான் கொண்டுவரப்பட்டது. ஆந்திர தேசிய இனத்தை உடைத்து தனி தெலுங்கானாவை
உருவாக்கிய காங்கிரசு கும்பல்தான் பாஜக கும்பலுக்கு வழிகாட்டி.
செப்டம்பர்-11, 1964இல் 370, 35A சட்டப் பிரிவுகளை இரத்து
செய்யும் தீர்மானம் ஒன்று பாராளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி பிரகாஷ் விர் சாஸ்திரி
(பிஜினூர்) என்பவரால் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் கட்சி அதை ஆதரித்தது.
காங்கிரசுடன் இடதுசாரிகளும் (CPI MP Sarjoo Pandey)
ஆதரித்தன. ஆனால் தற்போது மோடி கும்பலின் நடவடிக்கையை எதிர்ப்பதாக காங்கிரசு கட்சி
நாடகமாடுகிறது.
பாராளுமன்றத்தில் 05.08.19 அன்று நடந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்
நபி ஆசாத் “370, 35A இரத்து
செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே 370, 35A இரத்தை வாபஸ் பெற வேண்டும்” என்றார். அதாவது காங்கிரசு கும்பல் கொண்டுவந்த 370, 35A சட்டப் பிரிவும் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டம் என்று கூறி
நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் குலாம் நபி ஆசாத். அதற்குப் பதிலளித்த அமித்ஷா “காஷ்மீர் இதுவரை 370 மூலம் துண்டிக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இந்தியாவுடன்
பிணைக்கப்பட்டுள்ளது” என்று
கூறினார். அதாவது 370
இரத்தின் மூலம் தான் காஷ்மீர் வளர்ச்சியடையப் போகிறது என்கிறார். உண்மையில்
காங்கிரசு கும்பல் 370
சட்டத்தின் மூலம் காஷ்மீர் அரசை பொம்மை அரசாக மாற்றியது. 370 சட்டத்தை இரத்து செய்ததன் மூலம் நேரடி அடிமைப்
பிரதேசங்களாக மோடி-அமித்ஷா கும்பல் மாற்றிவிட்டது.
ராகுல் காந்தி, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மோடி அரசின் நடவடிக்கை
சரியே என்றும் காஷ்மீர் கலவரங்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் கூறி, காங்கிரஸ் பாஜகவின் இன்னொரு முகம்தான் என்று காட்டினார்.
காங்கிரசு கட்சியைப்
போன்றே சிபிஐ, சிபிஎம் போன்ற
இடதுசாரி கட்சிகளும், திமுக
போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளும் 370, 35A இரத்தையும், இராணுவத்தையும், திரும்பப் பெறு என்பதைத் தாண்டி பேசவில்லை. இக்கட்சிகள்
காஷ்மீர் பிரச்சனை தேசிய இனப் பிரச்சனை என பேசவில்லை. அதை வெறும் மதப்
பிரச்சினையாகவே முன்வைக்கின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கம் பற்றி பேசவோ, நேரு ஐ.நா.வில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரவோ
தயாரில்லை. வைகோ மட்டும் ஏகாதிபத்திய தலையீடு குறித்து பேசினார். ஆனால் 370 இரத்தை திரும்பப் பெறவேண்டும் என்ற தீர்வையே முன்வைத்தார்.
காஷ்மீர் தனி நாடு விடுதலையை அங்கீகரிக்க இக்கட்சிகள் தயாரில்லை. 370 இரத்தை திரும்பப்பெறு என்பது காஷ்மீரிகளின் முழக்கம் அல்ல; அது காங்கிரசின் முழக்கம்.
தமிழ்த் தேசிய
அமைப்புகளான தமிழ் தேசிய பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, நாம் தமிழர் போன்ற அமைப்புகளும், பு.இ.மு, மக்கள்
அதிகாரம்,
ரெட் ஸ்டார், மாவோயிஸ்டு போன்ற அமைப்புகளும் காஷ்மீர் தனிநாடு விடுதலைப்
போராட்டத்தை ஆதரிப்பது வரவேற்புக்குரியதாகும்.
காஷ்மீர் தேசிய இனம்
வரலாற்று ரீதியாக இந்திய-பாகிஸ்தான் அரசுகளோடு இணைய விரும்பாமல் தனி நாடாகவே
இருக்கப் போராடி வருகின்றது.காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே
இந்தியாவுடன் காஷ்மீர் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை
காஷ்மீரிகளின் போராட்ட வரலாறு தனி நாட்டு விடுதலைக்கான வீரம் செறிந்த போராட்ட
வரலாறாகவே உள்ளது. இந்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ் காஷ்மீர் தேசிய-இன தேசிய மொழி
உரிமைகள் நசுக்கப்பட்டு வந்துள்ளன. காஷ்மீர் அரசின் ஆட்சி மொழிகளாக
ஆங்கிலமும்-உருதும்தான் உள்ளன. காஷ்மீரி மொழி ஆட்சி மொழியாக இல்லை. ஆங்கிலம்-உருது
மொழிகளின் இரட்டை ஆதிக்கத்தின் கீழ் காஷ்மீரி மொழி நசுக்கப்பட்டு வருகின்றது.
காஷ்மீரை ஆண்ட தரகு முதலாளித்துவ வர்க்க கும்பல்கள் இந்திய அரசின் எடுபிடிகளாக
இருந்துகொண்டு காஷ்மீர் தேசிய இனத்தின் சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியை
அனுமதிக்காமல் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே வைத்து
ஒடுக்கிவந்துள்ளன. காஷ்மீர் விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்திய
அரசுக்குத் துணை போயின.
காஷ்மீர் விடுதலைப்
போராட்டம் எந்த அளவிற்கு நசுக்கப்பட்டதோ அந்த அளவிற்கு வீறுகொண்டு எழுந்தே
வந்துள்ளது. பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்டாலும் காஷ்மீரிகள் தீரமிகு
போராட்டங்களில் ஈடுபட்டு தேச விடுதலைக்கு தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர்.
காஷ்மீர் பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் வீராங்கணைகளாக களத்தில் நிற்கின்றனர்; கற்களையே ஆயுதங்களாக்கி பீரங்கிகளையும் இந்திய இராணுவத்தின்
கபாலங்களையும் அடித்து நொறுக்குகின்றனர். இந்திய விஸ்தரிப்புவாதத்தை எட்டி
உதைக்கின்றனர். காஷ்மீரத்து சிறுவர்-சிறுமியர்கள்கூட போராளிகளாக நெஞ்சுரத்துடன்
டாங்கிகளை எதிர்த்து நிற்கின்றனர். காஷ்மீரிகள் தனி அரசு அமைத்துக் கொள்வதையே
விரும்புகின்றனர். இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாம் என்று தேசமெங்கும்
முழங்குகின்றனர்.
இந்திய-பாகிஸ்தான்
தரகு முதலாளித்துவ அரசுகளை எதிர்த்துப் போராடி வந்த காஷ்மீரிகளுக்கு அமெரிக்க, சீன ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தையும்
நடத்துமாறு வரலாறு பணித்துள்ளது. அமெரிக்க-இந்திய, சீன-பாகிஸ்தான் முகாம்களின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தனி
நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே காஷ்மீரிகளின்
வரலாற்றுக் கடமையாகும். அதுவே காஷ்மீர் தேசிய இன விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.
இந்திய சிறைக்கூடத்தில் துன்புற்று வரும் தேசிய இனங்கள் ஐக்கியப்பட்டு, காஷ்மீர் தேசிய விடுதலைக்கு துணை நிற்பது அவசியமாகும்.
இந்திய
இராணுவம் மற்றும் இராணுவ சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட பாசிசச் சட்டங்களைத் திரும்பப்
பெறக் கோரியும், 144 தடை
உத்தரவை இரத்து செய்யக் கோரியும், கைது
செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும்,
காஷ்மீரை
திறந்த வெளிச் சிறையாக மாற்றுவதை எதிர்த்தும், நவம்பரில்
நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட நாடுகள், சர்வதேச பத்திரிகையாளர்கள், ஜனநாயக அமைப்புகள், புரட்சிகர இயக்கங்கள்
முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் (referendum) பரந்துபட்ட உழைக்கும் மக்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும்
காஷ்மீர் மக்களுடன் இணைந்து போராடுவது உடனடிக் கடமையாகும்.
சமரன், அக்டோபர், 2019
No comments:
Post a Comment