Tuesday 19 November 2019

நவம்பர் புரட்சியின் சாதனைகளும் படிப்பினைகளும்


நவம்பர் புரட்சியின் சாதனைகளும் படிப்பினைகளும்

 
மாபெரும் நவம்பர் சோசலிசப் புரட்சியையும், லெனின்-ஸ்டாலின் உருவாக்கிய சோசலிச சோவியத் யூனியனையும் மக்கள் நினைவிலிருந்து மறைக்க முயலும் முயற்சிகளை எதிர்த்து, ஒரு சிறப்பான மகிழ்ச்சியான உலகத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், மக்கள் மற்றும் புரட்சியாளர்களின் நம்பிக்கை ஒளியாக, தூண்டுதலாக அது இன்றும் இருப்பதை முன்னிருத்துவது அவசியமாகிறது. இந்த தேவையிலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மகாகவி பாரதி முன்னறிந்து கூறிய ஆகா என்ற எழுந்த யுகப் புரட்சிஉலகத்திற்கு ஒப்பில்லாத ஒரு புதிய சமுதாயத்தை புதிய வகையிலான அரசை - சோவியத் சோசலிசக் குடியரசை - தொழிலாளி வர்க்க அரசை - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை - மனித குல வரலாற்றில் முதன்முறையாக தோற்றுவித்தது மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தையும் மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையையும் இல்லாமல் செய்தது. மனிதர் ஒருவருக்கு ஒருவர் செய்யும் அநீதி தூள்தூளானது. எல்லோரும் ஓர் நிறை என்ற நிலை உருவானது.

சோவியத் யூனியனின் உழைக்கும் மக்களுக்கு மட்டுமின்றி உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அந்நாட்டின் ஈடு இணையற்ற வளர்ச்சியும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையும், சோசலிச லட்சியங்களுக்காக வாழும் வாழ்க்கையின் பொருளையும், அதன் நியாயத்தையும் உணரும்படி செய்தது. 

அனைவருக்கும் உணவு என்பது அனைவருக்கும் வேலை; அனைவருக்கும் வேலை என்பது நாட்டின் வளமும் அனைவரின் நலனும் மேம்படுவது; ஓய்வும், கல்வியும், கலாச்சாரமும், பொழுதுபோக்கும் இதன் அடிப்படையிலேயே அமையும் என்பது நிரூபிக்கப்பட்டது. கண்ணீர் உப்பிட்டு, காவேரி நீரிட்டு சோறின்றி ஆடும் கலயத்தை நம் தாய்மார்கள் கண்ணில் வழியும் நீரோடு பார்க்கின்ற இன்றைய சூழலை ஒத்த நிலைமைகளுக்கு அன்று அங்கு முடிவு கட்டப்பட்டது. பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறித் துடிக்கும் இளைஞர்கள் வெறுங்கைகளோடு வேலைக்காக வீதி வீதியாக அலைந்தது பழங்கதையாயிற்று. மக்கள் அனைவருக்கும் உணவு, சிறந்தவை அனைத்தும் அனைத்தும் அனைத்து குழந்தைகளுக்கும் என்பதே தாரக மந்திரமாயிற்று. (இதுவே புரட்சியின் முதன்மையான சாதனை, பிற சாதனைகளை விளக்க இக்கட்டுரை இடம் தராது) இனி புரட்சியின்  படிப்பினைகளை சுருக்கமாகக் காண்போம்.

முதலாவதாக மார்க்சும் எங்கெல்சும் கண்டறிந்து கூறிய, மனித குல வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்த வர்க்கப் போராட்டம் இன்றைய கட்டத்தில் பாட்டளி வர்க்கமானது தன்னுடைய நலன்களுக்காக மட்டும் போராடும் ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து வரலாற்றில் தனக்குரிய கடமையை - அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தரும் கடமையை - ஆற்றும் என்ற உண்மை நிரூபணமாகியது.

இரண்டாவதாக, முதலாளித்துவம் - ஏகாதிபத்தியத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறுவதற்கான கட்டம் துவங்கியதை - நவம்பர் புரட்சி குறித்தது, மார்க்சின் வார்த்தைகளில் முதலாளித்துவம் எவ்வாறு நிலபிரபுத்துவத்தை தொடர்ந்து உருவானதோ அதைப் போன்றே சோசலிசமும் தவிர்க்கவியலாதவாறு உருவாகும்என்ற விதியின் உண்மை நிரூபனமாகியது.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய மார்க்சிய-லெனினிய கொள்கை நிரூபனமானது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஆதாரமான சரக்கு உற்பத்தி முறையை ஆய்வு செய்து முதலாளித்துவ சுரண்டலின் ரகசியத்தை (உபரி மதிப்பு விதியை) மார்கஸ் வெளிப்படுத்திய அதே முறையில் லெனின் முதலாளித்துவத்தின் புதிய கட்டமான ஏகாதித்திய கட்டத்தின் விதியை   ஏற்றத்தாழ்வான வளர்ச்சி விதியை வெளிப்படுத்தினார். (ஏற்றத்தாழ்வான பொருளாதார, அரசியில் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முற்றும் முழுமையான விதியாகும் - Absolute Law- லெனின்) இவ்விதிகளின் அடிப்படையில் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் என லெனின் நிரூபித்தார். இது நமக்கான படிப்பினை ஆகும்.

நான்காவதாக, புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம், அதன் வரலாற்றுப் பணி, அணி சேர்க்கை பற்றிய மூலவர்களின் ஆய்வுகள் உண்மை என புரட்சி நிரூபித்தது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே உண்மையில் புரட்சிகர வர்க்கமாகும்” (கம்யூனிஸ்ட் அறிக்கை). பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மூலதனத்தை எதிர்த்தப் போராட்டத்தில் அனைத்து உழைக்கும், சுரண்டப்படும் மக்களை தன்னை சுற்றி அணி திரள செய்யும் ஆற்றலுள்ள வர்க்கமாகும்”-லெனின். இதன் அடிப்படையிலேயே தொழிலாளர், விவசாயிகள் கூட்டணியை அமைத்து லெனின் புரட்சியை நடத்திக் காட்டினார், இது நமக்கு இன்றும் பொருந்துவதே.

ஐந்தாவதாக, ஒரு புரட்சிகரமான, லெனினிய வகைபட்ட கட்சி மட்டுமே புரட்சியை நடத்திக்காட்ட முடியும் என்ற உண்மை உறுதியாக்கப்பட்டது.

போல்ஷ்விக் கட்சியின் வரலாறுநமக்கு சுட்டிக்காட்டுவது போல ரஷ்ய புரட்சியாளர்கள் உழைக்கும் வர்க்கத்திலிருந்தும் வெகுஜனங்களில் இருந்தும் எப்போதும் தனிமைப்பட்டவர்களாக இருக்கவில்லை. மறுபுறம், பல லட்சக் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் கட்சியின் அரசியல் வழியையும், திட்டத்தையும் தங்கள் சொந்த வாழ்வின் ஒரு பகுதியாக பார்த்தனர். இதுவே மக்களுக்கும், கட்சிக்கும் இடையில் இருந்த உறவு, கட்சி தலைமறைவாகவும் சிறய கருவை மையமாக கொண்டும் அமைந்தது. முழு நேரப் புரட்சியாளர்கள் அறிவுத் தெளிவுடனும் உடல் வலிமையுடனும் அன்றாட நடைமுறைகளையும் புரட்சிகான அணிதிரட்டலையும் செய்தனர். கட்சி அனைத்து விதமான சட்டபூர்வ சட்ட விரோத வடிவங்களையும் சிறப்பாக பயன்படுத்தியது. சட்ட விரோத நடவடிக்கைகளே முதன்மைப் பெற்று இருந்தது. தலைமறைவுக் கட்சி, மக்களுடன் கலந்து பரந்திருந்த ஊழியர்கள், வெகு மக்களை பிரச்சார வடிவங்கள் மூலம் புரட்சிகர அரசியலுக்கு அணிதிரட்டல் ஆகியவை மூலம் நடத்தப்பட்ட புரட்சி நமக்கான படிப்பினையாகும்.

ஆறாவதாக, ஆயுதப்புரட்சி பற்றிய வரையறுப்பு புரட்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டது. முதலாளி வர்க்கத்தை வன்முறை மூலம் தூக்கி எறிவது தான் பாட்டாளி வர்க்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அடிப்படையானது”. (மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை). முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்புக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சி அமைதியாக நடத்தி முடிக்கப்பட கூடியது தான் என்று நினைப்பது ஒருவரின் மூளை சீர்கெட்டுப் போய்விட்டது, அது ஒரு சராசரி மனிதனின் அறிவாற்றலை கூட இழந்து விட்டது என்றோ அல்லது அவர் முழுமையாக பாட்டாளி வர்க்கப் புரட்சியை மறுக்கிறார் என்றோ தான் பொருள்படும் (ஸ்டாலின்)”. “சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு முதலாளிகளை கீழ் படிய வைக்க முடியும் என்ற எண்ணமோ அல்லது சோசலிசத்திற்கு அமைதியான, சீர்திருத்த வழியில் மாறமுடியும் என்பதோ மிகமோசமான குட்டி முதலாளித்துவ முட்டாள்தனமாகும் (லெனின்)”.

மிக உயர்வான ராணுவ போர்த்தந்திர, செயல்தந்திரம் வழிகளின் மூலமே நவம்பர் புரட்சி சாத்தியமாயிற்று என்பதும் இன்று வரை எந்த ஒரு நாட்டிலும் அமைதி வழியில் புரட்சி நடத்த பெறவில்லை என்பதும் நமது கவனத்திற்குரியவை.

ஏழாவதாக, புரட்சிக்குப் பின் அரசு கட்டமைப்பை அடித்து நொறுக்குவது பற்றிய போதனை புரட்சிக்குப் பின் முதலாளித்துவ அரசமைப்பை (ராணுவம், போலீஸ், நீதித்துறை, அதிகாரவர்க்கம்) அடித்து நொறுக்குவது என்பது தான் எந்த ஒரு மக்கள் புரட்சிக்கு அவசிய தேவை என்று மார்க்ஸ் டாக்டர் குகல்மானுக்கு எழுதினார். வன்முறை மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்க  புரட்சி என்ற விதியும் புரட்சிக்குப் பின் முதலாளித்துவ அரசமைப்பை அடித்து நொறுக்குவது என்ற விதியும் புரட்சிக்கான முன் நிபந்தனைகள் என்பது பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தவிர்க்கவியலாத விதியாகும் -ஸ்டாலின்”.

மேற்குறித்த இரண்டு மார்க்சிய-லெனினிய நிலைப்பாடுகள் தான் புரட்சியின்போது நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது நமக்கான போதனையாகும்.

எட்டாவதாக, புரட்சிக்குப் பின்னர் அரசியல் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் மேற்கொண்டு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்பவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை என்பதை நவம்பர் புரட்சி நிரூபித்துக் காட்டியது. முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையே புரட்சிகர மாற்றத்திற்கான ஒரு காலகட்டம் உள்ளது. அதற்கு இணையான வகையில் அரசியல் மாற்றத்துக்கான ஒரு காலகட்டமும் இருக்கும். அக்கட்டத்தில் அரசு என்பது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் ஆகவே இருக்கும்” - மார்க்ஸ்.

இவ்விதியை நடைமுறைப்படுத்த மறுத்து குருச்சேவ் பாட்டாளி வர்க்கத்துக்கு மாபெரும் துரோகம் இழைத்தான்.

அடுத்ததாக மார்க்சிய விரோதிகளான மென்ஷ்விக்குகள், பொருளாதார வாதிகள், காவுத்ஸ்கி வாதிகள், அதி தீவிர இடதுசாரிகள் ஆகியவர்களை எதிர்த்து தொடர்ச்சியாக கட்சிக்குள் நடந்த போராட்டமே கட்சியை பலப்படுத்தியது; அணிகளை போல்ஷ்விக் மயமாக்கியது. இந்த துரோகிகளை களை எடுத்ததால்தான் கட்சி எஃகு போன்ற உறுதியுடன் புரட்சியை நடத்திக் காட்டியது என்பது புரட்சி நமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.

இறுதியாக நவம்பர் புரட்சியின் நாயகர்களான நம் தலைவர்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பவர்களின் உள்நோக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். போலியான குற்றச்சாட்டுகளை கூறி புரட்சியின் விஞ்ஞானபூர்வமான தவிர்க்கவியலாத இயல்பை அவர்கள் மூடிமறைக்க முயலுகின்றனர். எதிர்ப் புரட்சிக்கு சேவகம் செய்கின்றனர். லெனின் தான் புரட்சியின் ஆன்மாவாகவும் முதன்மை தலைவராகவும் இருந்தார். லெனினுடைய உண்மையான சீடரான ஸ்டாலின் அவரை அடுத்து இரண்டாவதாக நிற்கிறார். இன்று புரட்சியை புதிதாக ஆய்வு செய்ய புறப்பட்டு உள்ள அறிவாளிகள் டிராட்ஸ்கி பிரெஸ்ட் - லிஸ்த்தோவ்ஸ் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்து புரட்சியை ஜெர்மனி ராணுவ வெறியர்களுக்கு பலிகொடுக்க முயன்றதை காட்ட மறுக்கின்றனர். புரட்சி குழந்தையை பலி கொடுக்கத் துணிந்த துரோகம் மன்னன் சாலமன் அவையில் ஒரு குழந்தைக்காக இரு தாய்கள் போராடியபோது குழந்தையை கூறுபோட்டு தரக்கோரிய துரோகியை போன்றதுதான். லெனின் டிராட்ஸ்கியை நவம்பர் ரஷ்ய புரட்சியின் யூதாஸ் (இயேசுவை காட்டிக் கொடுத்தவன்) என்று வர்ணித்தது உண்மை என்று இப்போது நிரூபணமாகியுள்ளது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அதுபோலவே நவம்பர் புரட்சி உலகத் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் நல்வாழ்விற்கான விடியலை காட்டிக் கொண்டுதான் இருக்கும். ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தால் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இன்றைய சூழலில் ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கு ஆட்சியையும் தூக்கியெறிந்து ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கு வழிகாட்டிய நவம்பர் புரட்சியின் உயரிய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல தியாகிகளின் பெயரால் சபதமேற்போம்.

-          சமரன், நவம்பர், 2019

No comments:

Post a Comment