Saturday, 7 December 2019

லெனினோவியம் தீட்டிய நவம்பர் புரட்சி....

லெனினோவியம் தீட்டிய நவம்பர் புரட்சி....


முதலாளித்துவம் ஏகபோக உருவெடுத்து
ஏகாதிபத்தியமாக வடிவெடுத்து
சவக் குழிக்குள் செல்ல வேண்டிய
புரட்சிக் குணமிழந்த
கிழட்டுப் பிணமாக
வரலாற்று வளர்ச்சியின்
வாயிற் கதவடைத்து
மரண ஓலமிட்டுக் கொண்டிருந்தது!

வரலாற்றில் தான் உடுத்தியிருந்த
முற்போக்கு ஆடைகளை அவிழ்த்தெறிந்து
எதிர்ப் புரட்சிகர ஆயுதம் தரித்து - அது
அம்மணமாய் நின்று
அதிகார ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது!

ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து - அதன்
ஏற்றத் தாழ்வினை கணக்கிலெடுத்து
ஆய்ந்தறிவித்தார் ஆசான் லெனின் !
இது ஏகாதிபத்திய பாட்டாளி வர்க்க
சகாப்தமென...

தனியொரு நாட்டில் புரட்சி பிறக்கும்
அது உலக முழுவதும் படர்ந்து முடிக்கும்
எனும் தீர்க்கப் பார்வையை
தெளிவுடன் தீட்டினார்!
பாட்டாளி வர்க்கப் புரட்சி தீ மூட்டினார்!

சந்தர்ப்பவாத கோமாளி கூட்டங்கள்
உருமாறிய முதலாளித்துவத்தின்
உருவத்தினை உற்று நோக்கும்
அறிவொளியற்று
பழைய சுதந்திர முதலாளித்துவ
காதல் மயக்கத்திலேயே
சொரணையற்று சொக்கி கிடந்தன!

அவைகளின் வாய்கள்
வாய்ப்பந்தலிட்டன...
கண்கள் வெற்றுக் கனவுகளில்
மூழ்கிக் கிடந்தன...
மூளைகள் முட்டுச் சந்துகளில்
முடங்கிக் கிடந்தன...
காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய சவங்களோ
தனி நாட்டில் புரட்சி எனும்
லெனினியத்தை மறுத்து
நிரந்தரப் புரட்சி எனும்
கல்லறைக் காவியம் பாடித் திரிந்தன!
அவைகளை கல்லறையில் புதைத்து
காரியம் செய்தது நவம்பர் புரட்சி!
ஆம்!
லெனின் ஸ்டாலின் தலைமையில்
உதித்தெழுந்தது அந்தப் பொன்னுலகு
இம் மண்ணுலகில்! இம் மண்ணுலகில்!

ஒன்று கூடி நின்றது - உழைக்கும் வர்க்கம்
உறுதி கொண்டு எழுந்தது!
எதிர்த்துக் கொன்றது
எதேச்சதிகார பேயாட்சியை!
எதிர்த்து வென்றது
கொலைகார ஜராட்சியை!

தனியொரு நாட்டில் புரட்சி மறுக்கும்
மலட்டு கூட்டங்களின் மடமை கிழித்து
கிழட்டுப் பிணங்களை சவக்குழியில் புதைத்து...
மார்க்சிய சிவப்பு மை கொண்டு
தீட்டப்பட்டதோர்
எழிலோவியம்! லெனினோவியம்!
புதியதோர் புரட்சிக் காவியம்!

ஏகாதிபத்திய சுரண்டல் கூட்டமெல்லாம்
அஞ்சி நடுங்கியது - உலகிலதன்
அதிகாரம் ஆட்டம் கண்டது!
உறுதியுடன் எழுந்தது!
உருக்கு போன்று நின்றது
சோவியத்!
உலகெங்கும் கோபக் கணல் கொண்டு
எழுந்தது!
உழைக்கும் வர்க்கம்!
ஆம்! நவம்பர் புரட்சி
உழைக்கும் வர்க்கத்தின் நரம்பெல்லாம்
முறுக்கேற்றி சூடேற்றிக் கொண்டிருந்தது
உலகெங்கும் விடுதலை அலையாய்
தீ மூட்டிக் கொண்டிருந்தது!

புதுமை சமைத்த புரட்சியின் நாயகன்
லெனின் மறைந்தார்!
அவர் அடி பற்றி
இரும்புத் தலைவராய்
ஸ்டாலின் மலர்ந்தார்!


அஞ்சி நடுங்கின
அலறித் துடித்தன
அதிகாரமிழந்த சுரண்டும் வர்க்கம்!
சோவியத்தை சிதைப்பதற்கு
சோசலிசத்தை தடுப்பதற்கு
எடுத்த முயற்சியெல்லாம்
எடுபடாமல் போயின...

டிராட்ஸ்கிய குள்ளநரிக் கூட்டங்களோ
குலாக்குகளை குத்திவிட்டன
பாலங்களை தகர்க்கும்
பாதக செயல்களை செய்து முடித்தன!

சோவியத்தை சிதைக்கும்
ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாய்
குழிபறிக்கும் வேலைகளை
குமுக்கமாக செய்து கொண்டே
கட்சிக்குள் கமுக்கமாக மறைந்திருந்தன!

சந்தர்ப்பவாத கயவர்களையும்
காட்டிக் கொடுக்கும் கருங்காலிகளையும்
களையெடுப்பு காரியம் பார்த்து
இரும்புக் கோட்டையாய்
எழுந்து நின்றது சோவியத்!
பாய்ந்து வந்த பாசிச அரக்கன்
ஹிட்லரை
அவன் புகழிடம் வரை
செம்படை ஓட, ஓட விரட்டிச் சென்று
வீழ்த்தியது
உலகே எழுந்து நின்று வாழ்த்தியது!
கோடிபல மக்கள் உயிரினைக் கொடுத்து
கொடுமை கொண்ட பாசிச பேய்தனை தடுத்து
உலகை காத்தது! அந்த கொடூரனை சாய்த்தது!
தன் இரும்புத் தலைவன் வழியில்...
அந்த சிவப்பு தேசம்!

ஆளப்பிறந்த இனம் ஆரிய இனமென்ற
ஆதிக்கக் கோட்பாட்டை
அடுப்புச் சாம்பலாக்கி
அடித்து விரட்டியது
சோவியத் உழைக்கும் வர்க்கம்!

எண்ணிலடங்கா சோதனைகளை அனுபவித்து
கண்ணிலடங்கா சாதனைகளை செய்து முடித்து
மனித குலத்தின் கலங்கரை விளக்காய்
உயரே ஒளிர்ந்து நின்றது ருஷ்ய புரட்சி!

அதுதான் மனிதனை மனிதனாக்கியது !
அதுதான் அவனுக்கு எட்டாத அனைத்தையும்
எட்டிப் பிடித்துக் கொடுத்தது!
மனித குல வரலாற்றின் வசந்தகால
வாயிற் கதவை அகல திறந்துவிட்டது
வானையும் வசப்படுத்தும் வல்லமையை
கற்றுக் கொடுத்தது!
ஏழைச்சொல்லை அம்பலமேற்றியது
ஏழையையே அரியணையேற்றியது!

வஞ்சகமாய் அனைத்தையும்
பறித்துக்கொண்ட முதலாளித்தும்-இன்று
மீண்டும் அதே பாதாள பள்ளத்தில்
உலகை தள்ளி சுரண்டிக் குடிக்கிறது!

இன்று மீண்டும் அதே அடக்குமுறைகள்
அதே ஒடுக்கு முறைகள்
அதே சுரண்டல் இன்னும் தீவிரமாக...
கொத்திக் கொத்திக் குதறும்
ஏகாதிபத்திய பிணம் திண்ணி
கழுவின் காலடியில்
நாயினும் கேடாய் செத்து செத்துப் பிழைக்கும்
அதே நரகத்தில்
மீண்டும் அதே வலிகள்!
வரலாற்றை பின்னுக்கிழுக்க
வம்பிழுத்து நிற்கிறது
சமூக வளர்ச்சிக்கு தடையாகிவிட்ட
அந்த கிழட்டுப் பிணம்!
ஒவ்வொரு முறையும் நெருக்கடி முற்றி
நாடி தளர்ந்து
முட்டுச் சந்துகளில் மூச்சடைத்து நிற்கிறது

அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கலாம்-மீண்டும்
அடிமைத்தனம் திணிக்கப்பட்டிருக்கலாம்
அதிகாரத்திற்கான போராட்டம்
தோய்ந்து போகவில்லை!
ஓய்ந்து போகவில்லை!
தொடந்துக் கொண்டேதானிருக்கிறது!
பகைமை கொண்ட
இரு வர்க்கங்களுக் கிடையே!

இன்று உலகம் நவம்பர் புரட்சியின்
வாசற்கதவை மீண்டும் தட்டும் சத்தம்
செவிகளை முட்டுகிறது!
உலகெங்கும் போராட்டப் பேரலைகள்
மேலெழும்பி வருகின்றன...
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
கலகக் குரல்கள் கம்பீரமாக
கர்ஜிக்கத் தொடங்கிவிட்டன!

உழைக்கும் மக்கள்
அமைப்பாய் திரள்வதை
உருகுலைக்க உலுத்துப்போன
தத்துவத்தை எல்லாம்
உருமாற்றி உலவ விடுகிறது-மீண்டும்
ஏகாதிபத்தியச் சுரண்டும் சவம்!

பாடையேறிய பழைய பிணமெல்லாம்
பட்டாடை கட்டி பல்லிளித்து நிற்கிறது
அவை மீண்டும் இரும்புத் தலைவன்
ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடுகிறது...
ஜனநாயகப் புரட்சி - சோசலிச புரட்சி
இரண்டையும் பிரித்து இடைக் கட்டம் வைப்பது
இறுதியில் புரட்சியையே மறுத்தோடுவது!
ஏகாதிபத்திய முரண்களை மறுத்து

அமைதி வழி மறுபங்கீட்டினை மறுத்து
போட்டியினை மறுத்து
ஒற்றை ஏகாதிபத்திய ஓலமிட்டு
உலகப் புரட்சி என்று ஊளையிடுவது!
பழைய கலைப்புவாத வாந்தியையே
புதிய கலரில் எடுத்து
மார்க்சிய வேடமிட்டுத் திரிவது!

ஏகாதிபத்தியங்கள் கலைப்புவாதத்தை
போர்தந்திரமாக பயன்படுத்தி
புரட்சி இயக்கங்களை சுக்கு நூறாக்கி
சிதறடிக்கின்றன... பாவம்
அவைகளின் பொருளாதாரத்தை போலத்தான்
கலைப்புவாத தந்திரமும்
எதிர்வரும் புரட்சிப் புயற்காற்றில்
சிதறுண்டு நொறுங்கி
சின்னாபின்னமாகப் போகிறது!
வெகுண்டெழுந்து வரப்போகும்
புரட்சிப் புயற்காற்றில்
ஏகாதிபத்திய வேரறுந்த பழைய பட்டமரம்
தப்புவதற்கில்லை!
நவம்பர் புரட்சியின் லட்சியங்களை
உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம்!
வாழ்க!  நவம்பர் புரட்சி!
வெல்க! மார்க்சிய - லெனினியம்!


No comments:

Post a Comment