Saturday 7 December 2019

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் பகுதி 2

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து
ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்
பகுதி 2
 

சென்ற இதழில் நவீன டிராட்ஸ்கியவாதம் பற்றியும் அது எம்.எல் அமைப்புகளுக்குள் ஊடுருவதற்கான காரணங்களையும் பார்த்தோம். இந்த இதழில் மனோகரன் டிராட்ஸ்கி பற்றியும், ஸ்டாலின் பற்றியும் முன்வைத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் பகுதி 2இல் காணலாம்.

1) டிராட்ஸ்கி பற்றிய மனோகரனின் மதிப்பீடு

மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி 14 ஆண்டுகள் (1903 - 1917) லெனினுடைய நிலைபாடுகளுக்கு எதிராகவும் போல்ஷ்விக் கட்சிக்கு எதிராகவும் போராடினார். முதலில் மென்ஷ்விக் பக்கம் நின்றார், நடுநிலை நாடகம் போட்டார், கோஷ்டிவாதியாக செயல்பட்டார், லெனின் கடுமையாக விமர்சித்தார், கெட்டவார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். ஆனால் போல்ஷ்விக் கட்சியில் டிராட்ஸ்கி சேர்ந்த பிறகு லெனின் அவரை கோஷ்டிவாதி என்று விமர்சிக்கவில்லை என்கிறார். 

தோழர் லெனின் டிராட்ஸ்கியை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் என்கிறார். ஆனால் டிராட்ஸ்கி மீது லெனின் முன்வைத்த அரசியல், தத்துவ விமர்சனங்களை பற்றி மனோகரன் ஏதும் பேசவில்லை. இது லெனினை இழிவுபடுத்துவதாகும். மேலும் டிராட்ஸ்கியை லெனின் கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார் என்று கூறி லெனின் மீதே வன்மத்தை கக்குகிறார். 

டிராட்ஸ்கி மீதான லெனினின் அரசியல் விமர்சனம் வருமாறு:

கோஷ்டிவாதம் பற்றி என்ற கட்டுரையில் லெனின் கூறுவதாவது: 

-டிராட்ஸ்கி 1901-03 இல் தீவிர இஸ்க்ராவாதியாக இருந்தார். 1903 இறுதியில் டிராட்ஸ்கி தீவிர மென்ஷ்விக் ஆனார். அதாவது இஸ்க்ராவாதிகளைக் கைக்கழுவி விட்டு பொருளாதாரவாதிகள்பக்கம் தாவினார். பழைய இஸ்க்ராவுக்கும் புதிய இஸ்க்ராவுக்கும் இடையே ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது என்று அவர் கூறினார். 1904-05 இல் மென்ஷ்விக்குகளைத் துறந்த ஓர் ஊசலாட்டமான நிலையை மேற்கொண்டார். ஒரு சமயம் மார்த்தினவுடன் (பொருளாதாரவாதி) ஒத்துழைத்தும் இன்னொரு சமயம் தனது அபத்தமான இடதுசாரி நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை பிரகடனம் செய்தும் ஊசலாடினார். 1906-07இல் போல்ஷ்விக்குகளை அனுகினார். 1907 வசந்த பருவத்தில் ரோசா லுக்சம்பர்க்குடன் தான் உடன்பாடு கொள்வதாக அறிவித்தார். 

சீர்குலைவு நாட்களில் நீண்ட கோஷ்டி சார்பற்ற ஊசலாட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் வலதுசாரிகள் பக்கம் சென்றார். 1912 ஆகஸ்டில் கட்சிக் கலைப்புவாதிகளைக் கொண்ட ஒரு கூட்டணியில் பிரவேசித்தார். இப்போது மீண்டும் அவர்களை விட்டு நீங்கினார். எனினும் சாராம்சத்தில் அவர்களது போலிக் கருத்துகளை ஆதரிக்கிறார்.  (LCW 20, Page 327-332, 346-347)

இவ்வாறு லெனின் டிராட்ஸ்கியின் மீது துல்லியமான அரசியல் சித்தாந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளபோது அவர் டிராட்ஸ்கியை வேசி மகன் போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளதாக கூறுகிறார். அரசியல் விமர்சனங்கள் வைத்ததைப் பற்றி எழுதாமல் லெனினை இழிவுபடுத்துகிறார். டிராட்ஸ்கியின் மீது அன்பைப் பொழிகிறார்.

மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்த பிறகு லெனின் அவரை கோஷ்டிவாதி என்றோ, கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்றோ கூறவில்லை:

டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்த பிறகும் கடுமையான அரசியல் விமர்சனங்களை லெனின் முன்வைத்துள்ளார். இதைப் பற்றி பேசாமால் லெனினை மேலும் இழிவுப் படுத்துகிறார். டிராட்ஸ்கியை கோஷ்டிவாதி என்றும், கோஷ்டியை கலைக்க வேண்டும் என்றும் லெனின் கடுமையாக எச்சரித்தார். 

மீண்டும் தொழிற்சங்கங்கள் பற்றியும், இன்றைய நிலை பற்றியும், டிராட்ஸ்கி, புகாரின் ஆகியோரின் தவறுகள் பற்றியும்என்ற கட்டுரையில் லெனின் டிராட்ஸ்கியை கோஷ்டிவாதி என்று விமர்சித்துள்ளார். தொழிற்சங்கம் பற்றிய விஷயங்களில் லெனினியத்தை டிராட்ஸ்கி தாக்கினான். தொழிலாளர் எதிர்ப்பு கோஷ்டியை உருவாக்கினான். 

அது குறித்து லெனின் கூறுவதாவது: கோஷ்டிவாதப் பிரகடங்களால் கட்சிக்கு ஆபத்து என்ற (மேற்கண்ட கட்டுரையின்) துணைதலைப்பில் பின்வருமாறு கூறுகிறார். தொழிற்சங்கங்களின் பாத்திரமும் பணிகளும் என்ற டிராட்ஸ்கியின் பிரசுரம், ஒரு கோஷ்டிவாத பிரசுரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய்ப் பேசாதிருப்பது மாஸ்கோ கமிட்டி உறுப்பினர்களுக்கு மிகவும் மனதிற்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறதுஎன்று டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதத்தை அம்பலப்படுத்தினார். மேலும் அவர் கூறுவதாவது பத்தொன்பது பேரில் ஒருவர் (டிராட்ஸ்கி) மத்தியக் கமிட்டிக்கு வெளியே ஒரு கோஷ்டி அமைக்கிறார். அதன் கூட்டு உழைப்பை (பிரசுரம்) சமர்ப்பிக்கிறார்”. 

அப்பிரசுரம் பற்றி லெனின் கூறுகிறார்: இன்று 25.01.1921 தேதியோடு டிராட்ஸ்கியின் கோஷ்டிவாத பிரசுரம் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. வடிவத்தில் பொருத்தமற்றதும், சாரம்சத்தில் தவறானதுமான இந்த பிரசுரம், கட்சியில் அதன் நடைமுறை, பொருளாதார, உற்பத்தி முயற்சியிலிருந்து அரசியல் சித்தாந்த தவறுகளை திருத்தும் பணிக்கு திருப்பிவிடப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆனால் ஒரு முதுமொழி கூறுவது போல இது கெட்ட அறிகுறியாகும்என்கிறார்.

அதே கட்டுரையில் டிராட்ஸ்கியின் தொழிற்சங்கக் கண்ணோட்டம் இயக்கவியல் கதம்ப கோட்பாட்டு வாதம் என்று பின்வருமாறு விமர்சிக்கிறார்: டிராட்ஸ்கி முதலில் சுத்திகரிப்பை விரும்பினார்; ஆனால் இப்போது அந்த யோசனையை கைவிட்டுவிட்டார் என்று புக்காரின் தனது ஜனவரி 3ம் நாள் பேச்சில் கதம்ப கோட்பாட்டுவாத தவறுகளில் மற்றொன்றைச் செய்துள்ளார். இது நடைமுறைக் கண்ணோட்டத்தில் கேலிக்கூத்தானது. தத்துவார்த்த ரீதியில் ஒரு மார்க்சிஸ்ட் விசயத்தில் அனுமதிக்க முடியாதது.

அவருடைய கதம்ப கோட்பாட்டுவாத அணுகுமுறை அவரை குழப்பி சிண்டிகலிசத் திரிபிற்கு இட்டுச் சென்றுள்ளது. ஒருவழிச் சிந்தனை, நிர்ப்பந்த போக்கு, மிகைப்படுத்துதல், பிடிவாதம் ஆகியவை டிராட்ஸ்கியிடம் காணப்படும் பலவீனங்கள்என்கிறார்.   (LCW 32, Page 70-107)

டிராட்ஸ்கி தனது கோஷ்டியை கலைக்க வேண்டும் என பத்தாவது காங்கிரசு பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியது: “6வது தீர்மானம்: எனவே ஏதேனும் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்த எல்லா கோஷ்டிகளும் (தொழிலாளர் எதிர்ப்பு கோஷ்டி, ஜனநாயக மத்தியத்துவ கோஷ்டி) எத்தகைய விதிவிலக்குமின்றி கலைக்கப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கிறது. அவற்றை உடனடியாக கலைக்கும்படி உத்திரவிடுகிறது.  
(LCW 32, Page 241-244)

ஆனால் பத்தாவது காங்கிரஸ் தீர்மானம் டிராட்ஸ்கிக்காக போடப்பட்டது இல்லை எனவும், கோஷ்டியை அடக்குவதற்கு லெனின் டிராட்ஸ்கியையே அனுப்பினார் எனவும் மனோகரன் கூறுகிறார். டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதத்தை மூடி மறைக்கிறார்.

மனோகரன் கூறுவதாவது: லெனின் பாட்டாளிவர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஏப்ரல் கொள்கையை வெளியிட்டார் ஆனால் போல்ஷ்விக் கட்சி அதை ஏற்க மறுத்தது. 1917 மே மாதம் மாஸ்கோ வந்த டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று முழங்கினார். பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற இந்த நிலைபாட்டில் லெனினும் டிராட்ஸ்கியும் ஒன்றிணைந்தனர். இந்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் போல்ஷ்விக் கட்சி போராடித்தான் (ஏப்ரல் கொள்கை) பெரும்பான்மைப் பெற்றது. பல குழுக்களை வென்றெடுத்து டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்தார். அதனடிப்படையில் 1917 ஜூலை மாதம் ஆறாவது மாநாட்டில் டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் இணைக்கப்பட்டார். லெனினுடைய ஆணைப்படி 1917 அக்டோபர் புரட்சியில் ஒரு பிரிவு சோவியத் செம்படைக்கு (டிராட்ஸ்கி) தலைமைத் தாங்கி புரட்சி முடிக்கப்பட்டது. 

லெனின் முன்வைத்த ஏப்ரல் கொள்கையை மத்தியக் கமிட்டி ஏற்க மறுத்தது என்பது வரலாற்று புரட்டாகும். ஏப்ரல் கொள்கையை மத்தியக் கமிட்டி பெரும்பான்மையாக அங்கீகரித்தது. அப்போது டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேரவேயில்லை. ஜூலை மாதம்தான் கட்சியில் சேர்ந்தான். ஆனால் டிராட்ஸ்கியால்தான் ஏப்ரல் கொள்கை பெரும்பான்மை பெற்றதாக மனோகரன் கூறுவது டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும். 

இது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு பக்கம் 274-278 (பாரதி புத்தகாலயம்) கூறுவதாவது: “1927 ஏப்ரல் 24ஆம் தேதியன்று போல்ஷ்விக் கட்சியின் ஏழாவது மாநாடு கூடியது. .... அன்றைய அரசியல் நிலைமை யுத்தம், தற்காலிக சர்க்கார், விவசாயப் பிரச்சினை, தேசிய இனப் பிரச்சினை முதலிய அடிப்படையான பிரச்சினைகளை யுத்தத்தையும் புரட்சியையும் பற்றிய பிரச்சினைகளை மாநாடு விவாதித்து கட்சிக் கொள்கையை வரையறுத்தது. லெனின் ஏப்ரல் கொள்கையை வகுத்து ஏற்கெனவே கூறியிருந்த முடிவுகளை இந்த மாநாட்டில் சமர்பித்த அறிக்கையில் முன்பைவிட விரிவாக விளக்கிக் கூறினார்.

...இந்த மாநாட்டில் காமினோவ், ரைகோவ் இருவரும் லெனினை எதிர்த்தனர். மென்ஷ்விக் கோஷத்தை எதிரொலி செய்து சோசலிசப் புரட்சிக்கு இன்னும் ரஷ்யா பக்குவப்படவில்லை என்று கூறினார்.

...இவ்விதம் காமனெவ், ஜினோவீவ், பியாடகோவ், புக்காரின், ரைகோவ் ஆகியோருடைய லெனினியத்திற்கு விரோதமான சந்தர்ப்பவாதக் கொள்கையை ஏப்ரல் மாநாடு அம்பலப்படுத்தி முறியடித்தது.

ஏப்ரல் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது டிராட்ஸ்கி அமெரிக்காவில் இருந்தான். இருப்பினும் அவன் ஏப்ரல் கொள்கையை எதிர்த்ததில் அவனது கூட்டாளிகளோடு மானசீகமாக நின்றான். அதாவது ஏப்ரல் கொள்கையை டிராட்ஸ்கி ஏற்கவில்லை.

லெனின் டிராட்ஸ்கியை கட்சியில் சேர்த்தார் எனவும், லெனினினுடன் இருந்ததால் அவர் லெனினியவாதி எனவும் மனோகரன் போன்ற டிராட்ஸ்கியவாதிகள் பொய்பேசி வருகின்றனர். டிராட்ஸ்கி கட்சியில் சேர்ந்த வரலாறு வருமாறு:

டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேருதல்:

டிராட்ஸ்கி போல்ஷ்விக்குகளின் பரம விரோதியாக இரசியாவிற்கு 1917 மேமாதம் திரும்பினான். அந்த சமயத்தில் அங்கீகாரம் பெற்ற தலைவர்களைக் கொண்டிருந்த கடுமையான நெருக்கடியின் பிடிப்பிலிருந்த எந்தவொரு மென்ஷ்விக் ஸ்தாபனத்திலும் கலந்துவிட மறுத்துவிட்டான் டிராட்ஸ்கி. சமரசத்தன்மை வாய்ந்த மத்திய நிலை மேற்கொண்டிருந்த, இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் பிராந்தியங்களுக்கு இடையிலான ஐக்கிய அமைப்பில் டிராட்ஸ்கி உறுப்பினராக சேர்ந்தான். இந்த ஸ்தாபனத்தின் மாநாடு 1917 மே மாதம் நடைபெற்றபோது லெனின் இந்த அமைப்பு போல்ஷ்விக்குகளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த மாநாட்டில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்த டிராட்ஸ்கி லெனின் முன்வைத்த ஆலோசனையை தோற்கடித்தான். எல்லா சமூக சனநாயகவாதிகள் ஒற்றுமைக்கும் போராடுபவன்போல பாவனை செய்த டிராட்ஸ்கி, பிரதேச ரீதியிலான அமைப்பு மட்டுமின்றி அப்பட்டமான மென்ஷ்விக்குகளையும் கொண்ட ஒற்றுமை மா நாடு நடத்தப்பட வேண்டும். கட்சி ஒரு டிராட்ஸ்கிய வழியில், மென்ஷ்விக் பாதையில் ஒருமுகப்படுத்தப் படுவதையே டிராட்ஸ்கி வலியுறுத்தினான். போல்ஷ்விக் கோட்பாடுகள் அடிப்படையிலான ஒற்றுமையை அவன் ஆதரிக்கவில்லை.

1917 ஜூலை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, இடைக்கால அரசாங்கம் டிராட்ஸ்கியை கைது செய்தது. அவன் சிறையில் இருந்தபோது, டிராட்ஸ்கி அங்கம் வகித்த பிராந்திய அமைப்பு போஷ்விக் கட்சியுடன் இணைந்துவிட்டது. ஆகவே, டிராட்ஸ்கியும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு கட்சியில் சேர்க்கப்பட்டான். 

போல்ஷ்விக்குகள் சர்வாதிகார செயல்களில் ஈடுபடுவார்கள் என்று பிராந்திய அமைப்பினை அச்சுறுத்தி, போல்ஷ்விக் கட்சியில் தனிக் குழுவாகவே இயங்கும்படி டிராட்ஸ்கி வலியுற்றுத்தியதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறினார். பின்னாட்களில் லெனினை எதிர்த்தப் போராட்டத்தில் பயன்படும் என்று கருதிய டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சிக்குள் தனது சொந்த அமைப்பான அந்த பிராந்திய குழுவை தனியாகவே வைத்து இயக்கினான் எனவேதான் இந்த பிரதேச அமைப்பு, போல்ஷ்விக் கட்சியுடன் சேர்ந்த பிறகு வெகு சனங்களுடன் உணர்வு பூர்வமாக வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை டிராட்ஸ்கி தொடர்ந்து நிராகரித்து வந்தான்.

1917 அக்டோபரின் சோதனையான நாட்களில் உலக வரலாற்றின் திருப்பு முணையில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் உணர்வைச் சோர்வடைய செய்ய டிராட்ஸ்கி இயன்றதனத்தையும் செய்தான். புரட்சி என்பது தன்னியல்பான வெகுஜன எழுச்சியின் வடிவத்தை எடுக்கும்போதுதான் சாத்தியம் என்றும், அதன் நோக்கம் தற்போதுள்ள அரசாங்கத்தை அகற்றுவது என்பதைவிட, அதன் மீது ஆயுதமேந்திய நிர்பந்த்தம் கொடுத்தால், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் கொடுத்துவிடும்படிஅரசை கட்டாயப்படுத்தலாம் என்றான்; அதாவது ஆயுதம் ஏந்திவிட்டாலே, பூர்ஷ்வா அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை தானாக முன்வந்து பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்துவிடும் என்று பேசினான் டிராட்ஸ்கி. லெனின் வலியுறுத்திய ஆயுத எழுச்சி இராணுவத் தொழில் நுட்ப தயாரிப்புகள், இராணுவ யுத்த தந்திர உத்திகள் அனைத்தையும் சதித் தன்மை வாய்ந்த சூழ்ச்சிகள்என்றான். புரட்சி நடைபெறும்பொழுது முற்றிலுமான இராணுவ நடவடிக்கைகள் தற்காப்புஅடிப்படையிலும், ஒரு வரையறைகுட்பட்ட அளவிலும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது டிராட்ஸ்கியின் கருத்தாகும். அவன் பிரதானமாக சட்டப்பூர்வ போராட்ட முறைகளையே சார்ந்து நின்றான். குறிப்பாக முற்றிலும் பாராளுமன்ற முறைகளையேசார்ந்து நின்றான்.

 
1917 அக்டோபர் புரட்சியின் துவக்க நாட்களில், காங்கிரசு கூட்டப்பட வேண்டும் எனவும், புரட்சிகர அரசியல் அதிகாரம் பற்றி முடிவு செய்யும் உரிமையுடைய புரட்சிகர மக்களை திரட்டுவது அவசியம் அல்ல எனவும் கருதினான்.


1917 அக்டோபரில் ஆயுதம் தாங்கிய புரட்சி ஏற்பட்ட சமயமும், அதற்கு சிறிது முன்பும் தான் எழுதிய எண்ணற்ற கடிதங்களில் லெனின் டிராட்ஸ்கியின் போலிப் புரட்சிகர சாரத்தை எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை அம்பலப்படுத்தினார். லெனின் எழுதினார்: இந்தக் கடமையை (அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் கடமையை) சோவியத்துகளின் காங்கிரசுடன் இணப்பதும், அதை காங்கிரசுக்கு கீழடக்குவதும், திட்டவட்டமான தேதியை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு அரசு படைகளை தயார் செய்து கொள்ளவும், மக்கள் காங்கிரசு தீர்மானம் ஒன்றே, வன்முறை மூலம் புரட்சி நடத்தும் பாட்டாளிவர்க்கம் தீர்வு காண வேண்டிய பிரச்சானைக்கு தீர்வு கண்டுவிடும் என்ற பிரமை மூலம் வெகுஜனங்களைக் குழப்புவதும் புரட்சி விளையாட்டு விளையாடுவதாகும். (LCW Vol.26, P-143).

டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் இணைக்கப் பட்டது பற்றி போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலில் பக்கம் 288-89 (பாரதி புத்தகாலயம்) கூறப்படுவது: ஆறாவது காங்கிரஸ் மெஸ்ராயோண்ட்ஸிகளையும், அதன் தலைவன் டிராட்ஸ்கியையும் கட்சியில் சேருவதற்கு அனுமதித்தது. அவர்கள் ஒரு சிறு பிரிவினர். 1913ம் வருடத்திலிருந்து பெட்ரோகிராடில் இருந்து வந்தனர். டிராட்ஸ்கிய மென்ஷ்விக்குகளும், முன்பு கட்சியை விட்டு வெளியேறிய சில போல்ஷ்விக்குகளும், அக்கோஷ்டியில் உறுப்பினர்களாயிருந்தனர். யுத்த காலத்தில் மெஸ்ராயோண்ட்ஸி, ‘மத்தியத்துவ வாதிகளின் அமைப்பாக இருந்தது. அதாவது, அவர்கள் போல்ஷ்விக்குகளை எதிர்த்தனர்; எனினும் அநேக விஷயங்களில் மென்ஷ்விக்குகளோடு ஒத்துக்கொள்ளவில்லை. போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கும் இடையில் மத்தியத்துவவாதிகளாக ஊசலாடும் நிலையில் நின்றிருந்தனர். ஆறாவது கட்சிக் காங்கிரஸ் நடைபெற்றபோது சகல விஷயங்களிலும் போல்ஷ்விக் கொள்கையைப் பரிபூரணமாக ஆதரித்து ஒப்புக்கொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே போல்ஷ்விக் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். காலப் போக்கில் அவர்கள் திருந்தி உண்மையான போல்ஷ்விக்குகளாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில், ஆறாவது காங்கிரஸ் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதித்தது. அவர்களில் சிலர், உதாரணமாக வோலோடார்ஸ்கி, உரிட்ஸ்கி முதலியோர் கட்சியின் நம்பிக்கைக்கு ஏற்ப உண்மையான போல்ஷ்விக்குகளானார்கள். ஆனால் டிராட்ஸ்கியும் அவனுக்கு மிகவும் நெருங்கிய சகாக்களும் கட்சியின் நலன்களுக்காக வேலை செய்யும் பொருட்டு கட்சியில் சேரவில்லை என்பது போகப் போக வெட்ட வெளிச்சமாயிற்று. கட்சிக்குள் புகுந்து உள்ளிருந்தே கட்சியை சீர்குலைத்து அழிப்பதற்காக அவர்கள் கட்சியில் சேர்ந்தனர்”. 

அதாவது டிராட்ஸ்கி கட்சியை கைப்பற்றி முதலாளித்துவ கட்சியாக மாற்றுவதற்காக ஊடுருவும் நோக்கத்துடன் கட்சிக்குள் சேர்ந்தான் என்று போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுகிறது. புரட்சி நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சியில் வந்து சதித்தனமாக ஒட்டிக்கொண்டவன் டிராட்ஸ்கி. வாழ்நாள் முழுதும் கட்சி கட்டுவதற்கும், புரட்சிக்காகவும், சோசலிச நிர்மாணிப்பிற்கும் தன்னையே அர்ப்பணித்த ஸ்டாலினின் பங்களிப்பு பற்றி பேச மறுத்து, டிராட்ஸ்கியை புரட்சியாளர் என்றும் அவனால்தான் புரட்சி நடந்ததாகவும் டிராட்ஸ்கியவாதிகள் ஈனத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.
டிராட்ஸ்கி தனிநாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என்றும் நிரந்தரப் புரட்சி என்ற ஏககால ஐரோப்பிய புரட்சிதான் சாத்தியம் என்று பேசியவன். லெனினால் காவுத்ஸ்கிவாதி என்று விமர்சிக்கப்பட்டவன். அதாவது காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடும் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடும் ஒன்றுதான் என்றார் லெனின். இரண்டுமே தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்தை மறுப்பவையே. எனவே டிராட்ஸ்கியும் லெனினும் ஒரே நிலைபாட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்ததால் கட்சியில் சேர்க்கப்படவும் இல்லை, அவனால் ஏப்ரல் கொள்கை நிறைவேற்றப்பட்டு புரட்சி நடக்கவும் இல்லை. இது டிராட்ஸ்கியவாதிகள் பரப்பும் கட்டுக்கதையே.

போல்ஷ்விக் கட்சியில் டிராட்ஸ்கி சேர்க்கப்பட்டது குறித்தும் அவனால்தான் புரட்சியே நடந்தது என்பது பற்றியும் மனோகரன் கூறும் தகவல்கள் எதுவும் போல்ஷ்விக் கட்சி வரலாற்று நூலில் இல்லை. லெனின் முன்வைத்த அரசியல் வழியை போல்ஷ்விக் கட்சியும் ருஷ்ய மக்களும் பிரதிநிதித்துவப் படுத்தி புரட்சியை சாதித்துக் காட்டினர். டிராட்ஸ்கியால் அல்ல. போல்ஷ்விக்குகளால் நீடித்து அரசாள முடியுமா என்ற கட்டுரையில், தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத்துகளின் ஆட்சியை லெனின் டிராட்ஸ்கி ஆட்சி என்று பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டித்தார் லெனின்.
மனோகரன் கூறுகிறார்: ஸ்டாலின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து 46 பேர் கொண்ட எதிர்ப்பு அணி லெனினுடைய மனைவி குரூப்ஸ்கயாவையும் உள்ளடக்கி செயல்பட்டது. அதில் கொஞ்சகாலம் டிராட்ஸ்கி சேர்ந்து செயல்பட்டார்.

இது பொய்யான தகவலாகும். இது டிராட்ஸ்கிய வாதிகள் கூறும் மற்றுமொரு கட்டுக்கதை. 46 பேர் கொண்ட எதிர்ப்பு அணி லெனின் நோய்வாய்ப் பட்டிருந்த நேரத்தில் தலைமையைக் கைப்பற்றுவதற்கு டிராட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட கோஷ்டியாகும். லெனின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்க்க உருவானதல்ல. இதில் தோழர் குரூப்ஸ்கயா செயல்படவும் இல்லை. குரூப்ஸ்கயா டிராட்ஸ்கியை ஜெர்மன் பாசிசத்தின் ஒற்றன் என்றும், ஸ்டாலினை லெனினின் உண்மையான சீடர் என்றும் கூறியவர்.

இது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுவதாவது: பக்கம் 385 (பாரதி புத்தகாலயம்)
சோவியத் அரசு கஷ்டமான நிலையிலிருந்த இந்தச் சந்தர்ப்பத்தில்தான், கட்சியின் தலைவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த சமயத்தில், டிராட்ஸ்கி தன் தாக்குதலை போல்ஷ்விக் கட்சி மீது தொடுத்தான். அவன் லெனினிஸ்ட்களுக்கு விரோதமான சக்திகள் யாவற்றையும் ஒன்று திரட்டினான். கட்சியையும், அதன் கொள்கையையும், அதன் தலைமைப் பதவியையும் எதிர்த்து ஒரு அரசியல் அரங்கத்தை உருவாக்கினான். “46 எதிர்ப்புக்காரர்களின் பிரகடனம்என்று இந்த அரசியல் அரங்கத்திற்குப் பெயர். இதில் டிராட்ஸ்கியவாதிகள், “ஜனநாயக மத்தியத்துவ வாதிகள்மிஞ்சி நின்ற இடதுசாரி கம்யூனிஸ்டுகள்,” “தொழிலாளரின் எதிர்ப்புக் கோஷ்டியினர்முதலிய எதிர்ப்புக் கோஷ்டிவாதிகள் யாவும் லெனினியக் கட்சியை ஒழிப்பதற்காக ஐக்கியப்பட்டன. மிக, மிக அபாயகரமான பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது சோவியத் ஆட்சி சரிந்து வீழ்வது திண்ணம்என்று இவர்கள் தங்களுடைய பிரகடனத்தில் தீர்க்க தரிசனம்கூறினர். இந்த நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு, கட்சிக்குள் தனித்தனி கோஷ்டிகள் அமைத்து வேலை செய்வதற்கு உரிமையளிப்பது ஒன்றுதான் வழிஎன்று கூறினார்.
தொடரும்...

 சமரன்  2019 நவம்பர்









No comments:

Post a Comment