Saturday, 7 December 2019

தோழர் ஆர்.கே.எஸ். உடன் ஓர் நேர்காணல்


தோழர் ஆர்.கே.எஸ். உடன் ஓர் நேர்காணல்

(80களில் புறப்பாடு இதழில் வெளிவந்த பேட்டியை மறுபதிப்பு செய்கிறோம். அன்றைய தொழிற்சங்கங்களில் நிலவிய பொருளாதாரவாத, தொழிற்சங்கவாத தன்னியல்புகளை புரிந்துகொள்ளவும், தொழிற்சங்கங்களை லெனினிய வழியில் ஏ.எம்.கே. எவ்வாறு வழிநடத்தினார் என்பதை புரிந்துகொள்ளவும், ஏ.எம்.கே. வின் தலைமை பாத்திரம் பற்றி அறிந்துகொள்ளவும் இந்த பேட்டி வெளியிடப்படுகிறது - ஆசிரியர், சமரன்)

{சென்னையிலுள்ள பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்களால் R.K.S. என்று அழைக்கப்படும் R.K.சுவாமிநாதன் தமிழக மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.வி.கோதண்டராமனின் அரசியல் மாணவர். R.K.S மா-லெ சித்தாந்தத்தை ஏற்று தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர். 1971-இல் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வெளி வந்தவர். ஏறக்குறைய நான்காண்டுகள் வரை சிறையில் கழித்தவர். இன்று தொழிற்சங்கவாதியாகவும், தாழ்த்தப்பட்ட இன மக்களை ஒன்றுபடுத்துவதற்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்கி வருபவர். புறப்பாடு பத்திரிக்கையில், இவரின் பேட்டி சென்னை தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட  வரலாறாகும் – புறப்பாடு}

புறப்பாடு: இன்று ஒரு தொழிற்சங்கத் தலைவராக இருக்கும் நீங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரணத் தொழிலாளியாக இருந்திருப்பீர்கள். அப்போது தொழிற்சங்கத்தைக் குறித்து உங்கள் மனோநிலை எப்படி இருந்தது? தொழிற் சங்கத்திற்கும் உங்களுக்குமுள்ள உறவு எப்படி?

ஆர்.கே.எஸ்:  நான் அன்று கிறித்துவ மதத்தின் மீது பற்றுடையவனாக இருந்தேன். எனவே கிறித்துவ மதத்தால் நடத்தப்பட்ட டான்பாஸ்கோ வாலிபர் மன்றத்தின் உறுப்பினனாக இருந்தேன். என் போன்ற வேலையற்ற இளைஞர்களுக்காக மன்ற பாதிரியார்கள் பல நிறுவனங்களை அணுகி வேலை வாய்ப்பைக் கோருனர். அவர்களின் முயற்சியின் பேரில் எனக்கு பாடி லூகாஸ் டிவிஎஸ்-சில் வேலை கிடைத்தது. இளைஞனாக இருந்த எனக்கு வேலைக்குச் செல்வதென்பது மிக விநோதமான உணர்வினைக் கொடுத்தது. பள்ளிக் கல்வியை முடித்து சுதந்திரமாக ஆடித்திரிந்த எனக்கு கம்பெனியில் டாய்லெட் போவது கூட சூபர்வைசரின் கண்காணிப்பின்படி போகவேண்டியதாயிருந்தது. இரண்டு நிமிடம் உள்ளே இருந்தால் கூட பொறுக்க மாட்டார்கள், கதவைத்தட்டி என்ன இவ்வளவு லேட்? போய் வேலையைப் பார்என்பார்கள்! நாள் முழுக்க வேலை, இடைவிடாத வேலை, தொழிலாளிகளாகிய நாங்கள் எங்கள் விருப்பம் இல்லாமலேயே அடிமையாக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தோம்!
உளவியலாக தொடர்ந்து ஓர் அச்சம் எங்களைப் பீடித்தது. வேலைக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும், நிர்வாகக் கொடுமைகளையும், கெடுபிடிகளைப் பற்றியும் பேசுவோம். இதைத் தட்டிக்கேட்க வேண்டுமென்ற பொதுவான உணர்வு எல்லோரிடமிருந்தும் வெளிப்படும். தங்கசாலையிலிருந்து பாடிக்கு சைக்கிளில் செல்லும் தொழிலாளர்களாகிய சிலர் போகும்போதும் வரும்போதும் இவ்வாறு பேசுவோம். அப்பொழுது பெரிய பெரிய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. அருகில் சில போராட்டங்கள் நடந்ததால் அதன் எதிரொலி எங்களிடையேயும் இருந்தது. அதற்கு முன்புவரை தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் கோர்ட்டின் மூலமாகவே நடந்தது. சமீப காலத்தில் அதாவது 1960, 70 களில் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள்தான் சங்கங்கள் என்றால் என்ன என்பதைத் தொழிலாளர்கள் மத்தியில் புரிய வைத்தது.

புறப்பாடு: அது எப்படி? அதற்கு முன்பே சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், திரு.வி.க. போன்றவர்கள் தொழிற்சங்கங்கள் கட்டினார்களே?

ஆர்.கே.எஸ்: ஆம், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு தொழிலாளி வர்க்கம் அரசியல் போராட்டங்களை நடத்தியது. சிங்காரவேலர், சக்கரைச்செட்டியார் போன்றவர்கள் இருந்தபோது தேசியப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அதனால் உத்வேகத்திற்கு ஆளான இவர்கள் தொழிலாளர்களை அரசுக்கு எதிராக திரட்டுகிறார்கள். கூலிக்காக அல்ல, தொழிற்சங்க உரிமைகளுக்காகத் திரட்டுகிறார்கள்.

புறப்பாடு: அப்படியானால் 1947க்குப் பிறகு தொழிற்சங்கங்களின் போக்கில் ஒரு விலகல் ஏற்பட்டதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆர்.கே.எஸ்: ஆம், சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சி மாறியபிறகு, எல்லோருமே ஒரு சமாதான நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள். பொதுவான போராட்ட இலக்கு முடிவிற்கு வந்ததினால் அப்போதைய அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைப் பங்கு போட புதியகட்சிகளைத் தோற்றுவிக்கின்றனர். எல்லா கட்சிகளுடைய ஆசையும் ஆட்சியை எப்படிப் பங்கு போட்டு ஆள்வது என்பதே. அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் ஆளும் கட்சியை எதிர்ப்பது; கட்சிக்குக் கட்சி தொழிற்சங்க இயக்கம் உருவாகியது. தொழிலாளி வர்க்கம் கட்சிகளால் பிளவு படுத்தப்பட்டது. கட்சிகளின் போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம், வர்க்க விடுதலைக்கானப் பார்வையுடன் கூடிய சரியானதொரு கட்சி இங்கே இல்லாதது ஆகியவற்றால் தவிர்க்கவியலாதபடி தொழிற்சங்கங்களின் போக்கையும் மாற்றிவிட்டது.

புறப்பாடு: எப்படி...?

ஆர்.கே.எஸ்: கட்சிகள் வக்கீல்களையே தொழிற்சங்கத் தலைவராக மேலிருந்து நியமனம் செய்தது. தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சட்டம் தெரிந்திருந்தாலே போதும் என்ற எண்ணம்... வர்க்க அரசியலை ஒதுக்கிவிட்டது. போராடித்தீர்க்க வேண்டிய தொழிலாளர் பிரச்சனைகள் கூட கோர்ட் மூலமாகப் பேசப்பட்டது. 1947க்குப் பிறகு தொழிற்சங்க இயக்கத்தில் ஏற்பட்ட குணமாற்றமாக இதனைக் கூறலாம்.

புறப்பாடு: இந்தப் போக்கு முதலாளித்துவக் கட்சிகளில் மட்டுமா அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளிலுமா?

ஆர்.கே.எஸ்: சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இந்தியாவின் இதர கட்சிகளுக்கும் நடைமுறையில் அடிப்படை வித்தியாசம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. இவர்கள் தங்கள் கட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிஎன்று பெயர் வைத்திருக்கிறார்களேயொழிய இவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இவர்கள் உண்மையான கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைபிடிப்பார்களேயானால் இவர்களுடன் முதலாளித்துவக் கட்சிகள் தேர்தலில்கூட கூட்டு சேராது என்பதே என் கணிப்பு. இவர்களும்கூட தொழிற்சங்க இயக்கத்தை தொழிலாளர் நல வாரியங்களுக்குள்ளும், கோர்ட்டுகளுக்குள்ளும் கட்டுப்படுத்தியே வைத்தனர். இவர்களின் இந்த நடை முறைக்கு காரணம் 1947 சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் சோசலிசத்தை அமைதி பூர்வமாகவே அடைந்துவிடலாம் என்ற நோக்கமே.

புறப்பாடு:     அப்படியானால் தமிழகத்தில் மேற்படி நடைமுறை யாரால் எப்படி உடைக்கப் பட்டது?

ஆர்.கே.எஸ்: சட்டவாத முறையை சென்னை செங்கற்பட்டு பகுதி தொழிலாளர்கள் 1960களில் தோழர் ஏ.எம்.கே.யின் தலைமையின் கீழ் உடைத்தார்கள்.

புறப்பாடு: ஏ.எம்.கே-வை முதன்முதலில் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுங்களேன்?

ஆர்.கே.எஸ்: எங்கள் கம்பெனிக்கருகில் நடந்த சில போராட்டங்களின் எதிரொலியால் நாங்களும் ஒரு சங்கம் கட்ட வேண்டும் என்று நினைத்தோம். பூனைக்கு மணிகட்டுவது யார்? டி.வி.எஸ்.சில் ஏற்கனவே ஒரு சங்கம்... அது முதலாளிகளால் நடத்தப்படுகிறது. ஐ.என்.டி.யு.சி....! அதன் மீது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. நான் கிறித்தவ பாதிரியாரிடம் மத நம்பிக்கையின் காரணமாகச் சென்று நாங்கள் ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் படும் கொடுமைக்கு ஒரு முடிவு காண வேண்டும்என்றேன். அவர் அதெல்லாம் வேண்டாம், என்று கூறிவிட்டு, உங்களிலேயே நான்கு பேர் சென்று நிர்வாகத்திடம் குறைகளை முறையிடுங்கள் என்றார். என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அப்போது டன்லப் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கவே அவர்களை அணுகினோம். அவர்கள் ஏ.எம்.கே. என்ற கோதண்டராமனிடம் அழைத்துச் சென்றனர். நாங்கள் அவர் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.

புறப்பாடு: ஏன் அதிர்ச்சி...?

ஆர்.கே.எஸ்: ஒரு தொழிலாளர் தலைவராக இருக்க வேண்டுமெனில் வசதியாக கார், பெரிய வீடு, டெலிபோன், அவரைச் சுற்றி ஆள்படை, அவர் பெயருக்குப் பின்னால், நீண்ட படிப்புப் பட்டியலை போட்டுக் கொள்ளும் பழக்கம்.!.. இது போன்று இல்லாமல் பாயில் அமர்ந்து படித்துக் கொண்டுடிருந்ததைப் பார்த்து, திகைத்தோம்... முதலில் ஒரு தேக்கம்.. இவரால் முடியுமா? இறுதியில் எங்கள் நோக்கத்தைத் தெரிவித்தது அவர், “அதெல்லாம் சரி டி.வி.எஸ். முதலாளியின் அரசியல் செல்வாக்கு, கொடூரம் இவற்றை அறிவீர்களா?” என்று எடுத்துச் சொல்லி அதையெல்லாம் எப்படிச் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். உங்களைப் பயமுறுத்துவதற்காக இதனை நான் சொல்லவில்லை. உங்கள் எதிரியைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்கவேண்டும்என்று தைரியம் சொல்லி முன்வைத்த காலை பின் வைக்கவேண்டாமென்றார். நாங்கள் இந்த முதல் சந்திப்பில் ஓரளவு தைரியம் அடைந்தோம். ஆனால் நாங்கள் தொழிற்சங்கத்தை உடனே துவக்கவில்லை.

புறப்பாடு: ஏன்...?

ஆர்.கே.எஸ்: டி.வி.எஸ். நிர்வாகம் காங்கிரஸ் அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது எங்களுக்கு யாரும் சொல்லாமலேயே தெரிந்திருந்தது. அச்சமயம் 1967-இன் பொது தேர்தலுக்கானப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது என்று அறிந்ததும் நாங்கள் ஏ.எம்.கே.யிடம் சென்றோம். தொழிற் சங்கம் துவங்க தயாராக உள்ளோம் என்று கூறினோம். அவர் சிரித்துக் கொண்டே சென்றமுறை தயங்கிக் கொண்டே சென்றீர்கள். இம்முறை இவ்வளவு உறுதியாகச் சொல்லக் காரணம் என்ன?” என்று கேட்டார். நாங்கள் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாயிற்றே, “உங்கள் கட்சி (சி.பி.எம்.) கூட அதன் கூட்டாளிதானேஎன்றோம். தி.மு.க. ஆட்சியைப் பிடித்தால் அதற்கென்ன?” என்றார். தி.மு.க. காங்கிரசுக்கெதிரானது. எனவே அது டி.வி.எஸ். முதலாளிக்கெதிரானதுஎன்றோம். ஏ.எம்.கே. புன்சிரிப்புடன் ஆட்சி மாற்றத்தைக் கண்டோ, கூட்டாளிகளைக் கண்டோ ஏமாறாதீர்கள். இப்போது சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள். போகப்போக உங்களுக்கே புரிந்து விடும்என்றார்.

புறப்பாடு: மன்னிக்கனும் ஏன் நீங்கள் குசேலரிடம் போகாமல் ஏ.எம்.கே-வைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணமிருக்குமில்லையா?

ஆர்.கே.எஸ்: மோகன் குமாரமங்கலத்திற்குப் பின்பு பட்டாபிராம் சதர்ன் ஸ்ட்ரக்சுக்கு குசேலர்தான் நியமிக்கப்பட்டார். சென்னையைச் சுற்றியுள்ள எல்லா சி.பி.எம். தொழிற்சங்கங்களிலும் அவர் தான் பிரசிடெண்ட். அப்படியிருந்தும் பட்டாபிராமிலுள்ள சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் தொழிற்சங்க இயக்கம் இந்தப் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் தொழிற்சாலையில் எல்லாமே காண்ட்ராக்ட்  அடிப்படையில்தான் வேலை நடந்தது கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு தொழிலாளி மேலிருந்து தற்செயலாக கீழே விழுந்து இறந்து விட்டர். தொழிலாளிகள் முதலாளியிடம் ஈட்டுத் தொகை கேட்கும்பொழுது உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்புகாண்ராக்டரிடம் போய்க் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். காண்ட்ராக்டரைக் கேட்ட போது, “உங்களுக்குக் கொடுக்கும் கூலியில் கொஞ்சத்தைத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். இதிலே ஈட்டுத்தொகை எங்கிருந்து கொடுப்பது? நீங்க முதலாளியைத்தான் கேட்கணும்என்றான். இந்தச் சூழல் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். காண்ட்ராக்டரும் அந்தப் பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆகவே பலாத்காரத்திற்கான நேரம் வந்ததுவிட்டது. அப்போது குசேலருக்குத் துணையாக ஒருவர் வேண்டுமென்று கட்சியின் மேலிடம் (சி.பி.எம்.) ஏ.எம்.கே-வை அணுகியது. அதுவரை கட்சி வழக்குகளை கோர்ட்டில் நடத்தி வந்த வழக்குரைஞரான ஏ.எம்.கே. ஒரு நிபந்தனை போட்டிருக்கின்றார். அதாவது கோர்ட்டுக்குப் போனா தொழிற் சங்க இயக்கத்துக்குப் போகமாட்டேன், தொழிலாளிகளிடம் போயிட்டா கோட்டை மாட்ட மாட்டேன், கட்சி வழக்குகளெல்லாம் எனக்குக் கொடுக்கக் கூடாதுஎன்று.

புறப்பாடு: ஏ.எம்.கே. ஏன் அவ்வாறு கூறினார்?

ஆர்.கே.எஸ்: ஏனென்றால் வக்கீல்கள்தான் அன்றைய தொழிற்சங்கத் தலைவர்கள். அவர்கள் தொழிற்சங்க வழக்குகளிலும் வாதாடிக்கொள்வார்கள். மற்ற வழக்குகளிலும் வாதாடிக்கொள்வார்கள். அப்படித்தான் அன்றைய நிலையில் குசேலரும் இருந்தார். பூந்தமல்லி கோர்ட்டில் சாராய வழக்குகளை நடத்திக் கொண்டிருந்தார். இந்த வழக்கத்திற்கு எதிராகத்தான் ஏ.எம்.கே. முடிவெடுக்கின்றார். அப்பொழுது கட்சி அவரிடம் உன் வாழ்க்கைக்கு ஏதேனும் வேண்டாமா? ஆகவே தொழிற்சங்கத்தையும் கோர்ட்டையும் சேர்த்தே பார்த்துக் கொள்என்று கூறியது. அவரோ தொழிலாளர்களே என் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பார்கள்; ஆகவே நான் கோர்ட்டுக்குப் போகத்தேவயில்லைஎன்று கூறியிருக்கின்றார். கட்சியும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. அன்று கழட்டிய கோட்டை இன்று வரை அவர் மாட்டவே இல்லை. இந்தச் சிறுகதைதான் ஏ.எம்.கே-யின் தொழிற்சங்கப் பிரவேசத்திற்கான காரணம். குசேலருக்குத் துணையாக பட்டாபிராம் சதர்ன் ஸ்ட்ரக்சுரல் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்கிறார். அப்போதுதான் நான் மேலே குறிப்பிட்ட கொந்தளிப்பான கட்டம். அக்கட்டத்தில் இவர் சுத்துப்பட்டியில் உள்ள எல்லாத் தொழிலாளிகளிடமும் சென்று பழகுகின்றார். அவர்களுடனேயே தங்குகிறார். தொழிலாளர்கள் பலம் அறிந்தார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளையும் ஒன்று திரட்டி, முதலாளி, காண்ட்ராக்டர் ஆகியோரின் பலாத்கார நடவடிக்கைகளை பலாத்காரமாகவே சந்திக்கிறார். இது வரை கோர்ட்டில் மட்டுமே தீர்த்து வந்த இம்மாதிரிப் பிரச்சனைகளை போராட்டத்தின் மூலம் தீர்க்க முடியும் என்று நிரூபித்து, இறந்துபோன தொழிலாளிக்கு ஈட்டுத் தொகையும் பெற்றுத் தருகின்றார். காண்ட்ராக்ட் முறையைப் போராட்டத்தின் மூலம் ஒழிக்கின்றார். இதன் வாயிலாக ஏ.எம்.கே-யைப் பற்றி பாடி, அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களுக்குத் தெரியவருகிறது. தொழிலாளர்கள் தங்கள் நடமுறையிலிருந்தே குசேலரைவிட ஏ.எம்.கே. தீவிரமானவர், தங்களுக்கான தலைவர் என்ற முடிவிற்கு வருகின்றனர். தலைவர் என்றால் தொழிலாளர்களிடமிருந்து ஒதுங்கி உயரே வாழும் நிலையிலிருந்து தொழிலாளர்களுடன் ஒட்டி வாழும் தலைவரை முதன் முறையாக அம்பத்தூர் வட்டாரம் அறிய வருகின்றது. ஆகவேதான் டன்லப் தொழிலாளிகள் எங்களை ஏ.எம்.கேயிடம் அழைத்துச் செல்கின்றார்கள். நாங்களும் எங்களுக்கான தலைவர் அவர்தான் என்று முடிவெடுத்து ஏ.எம்.கே-யைத் தலைவராகவும் குசேலரை உபதலைவராகவும் நியமித்தோம். இதுவரை எந்தத் தொழிற்சங்கதிற்கும் யார் தலைவர் என்பதை கட்சியே தீர்மானித்தது. முதல் முறையாக நாங்கள் அதை மாற்றியமைத்தோம்.

புறப்பாடு: ஏ.எம்.கே-யுடன் இரண்டாம் சந்திப்பிற்கு பிறகு என்ன செய்தீர்கள்?

ஆர்.கே.எஸ்: அவரது ஆலோசனையின்படி தொழிற்சங்கம் கட்டுவதை ரகசியமாகச் செய்தோம். ஆரம்பத்தில் பொறுக்கியெடுத்த நபர்களைக் கொண்டே கட்டப்பட்டது. எங்களுக்கான பிரச்சனைகளை பிரசுரமாக அடித்து வேறு தொழிற்சாலையைச் சார்ந்த தொழிலாளர்கள் மூலம் எங்கள் தொழிலாளிகளிடம் விநியோகித்தோம். எங்கள் தொழிலாளிகளிலேயே பலபேருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியாது. இப்படியாக தொழிற்சங்கம் கட்டும் வேலை முதற்கட்டத்தில் ரகசியமாகவே நடந்தேறியது.

புறப்பாடு: இரண்டாம் கட்டம் என்ன?

ஆர்.கே.எஸ்:  தொழிலாளர்கள் ஒன்று திரள்வதைக்கண்ட லூகாஸ் டி.வி.எஸ் நிர்வாகம் முதல் தாக்குதலைத் தொடுத்துவிட்டது. சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. பழிவாங்குதலைக் கண்டித்து தொழிலாளிகள் கிளர்ந்தெழுந்தபோது சட்ட விரோதமான முறையில் திடீர் கதவடைப்புச் செய்தது. தொழிற்சாலை தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் அதுவரை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு போனஸ், சம்பள உயர்வு பொன்ற உரிமைகளை அளிக்காமலேயே ஏமாற்றி வந்தது. இக்காலகட்டத்தில் தான் கேட்மீட்டிங் (வாயில் கூட்டம்) என்ற அதி அற்புதமான பிரச்சார முறையும் தோன்றியது. அதற்கு முன்பெல்லாம் பொதுக்குழுக் கூட்டம் மட்டும்தான் நடக்கும், அதுவும் தொழிற்சாலையைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்யாண மண்டபத்திலோ, காலி மனையிலோதான் நடக்கும்.

வாயில் கூட்டம் என்பது தொழிலாளர்கள் ஷிப்ட் முடித்து வெளியே வந்தவுடனேயே ஆலை முன்பே ஒன்று கூடுவது, தலைவர்கள், தொழிலாளர்களுடைய பிரச்சனையை அவர்களிடமே நேரடியாகப் பேசுவதுமாக நடைபெற்றது. இதனால் தொழிலாளிகள் தங்கள் பலத்தை உணர முடிந்தது. நிர்வாகத்தை எதிர்க்கும் துணிச்சலையும் இது கொடுத்தது. வழக்கத்தில் இல்லாது புதிதாக நடைபெறும் இம்முறையைப் பார்த்து நிர்வாகம் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த முறையில் வேறு தொழிற்சாலைகளில் இருந்து வரும் தொழிலாளர்களும், வாயில் கூட்டம் நடக்கும் போது அதில் கலந்துக்கொள்வது, வாழ்த்துக்கள் தெரிவிப்பது என்ற நிலைக்கு மாறியது. ஒரு தொழிற்சங்கப் பிரச்சனை அப்பகுதியில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்குச் சம்பந்தமுடையதாக மாறிற்று. இந்நிலையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவது என்பது நிர்வாகத்திற்கு முடியாத காரியம் ஆகும்.

புறப்பாடு: நிர்வாகம் இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததா?

ஆர்.கே.எஸ்: நிர்வாகம் அச்சப் பட்டாலும் பார்த்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஏற்கனவே ஏட்டளவில் இருந்த ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை உயிரூட்டப் பார்த்தது. ஆனால் முதலாளி பக்கம் நின்ற தொழிலாளிகள் கூட ஐ.என்.டி.யு.சி. கூட்டத்திற்கும் போக அஞ்சினார்கள். ஷிப்ட் முடிந்ததும் உடனடியாக வாயில்கூட்டம் துவக்கினோம். வெளியே வந்த எல்லாத் தொழிலாளிகளையும் கலந்து கொள்ளுமாறு செய்தோம். ஒரு முறை அப்படி பேசிக்கொண்டிருந்த போது மதுரையிலிருந்து நிர்வாகம் கொண்டு வந்திருந்த அடியாட்கள் எங்களைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் தொழிலாளர்களின் ஆர்ப்பரிப்பையும் உறுதியையும் கண்ட அடியாட்கள் அன்று இரவே நிர்வாகத்திடம் கெஞ்சி திரும்பிச் செல்வதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு மதுரைக்கு வண்டியேறினர். பேச்சு வார்த்தைக்குத் தயாராக இல்லாமல் நிர்வாகம் கதவடைப்பு செய்ததும் நாங்கள் தொழிற்சாலைக்கு எதிர்புறத்தில் கொட்டகை போட்டுக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் அங்கிருந்து finished goods வெளியேறுகிறதா என்று எல்லா வண்டிகளையும் சோதனையிட ஆரம்பித்தோம். சமையல் சாப்பாடெல்லாம் பந்தல் அருகிலேதான் தினமும் அவ்வழியே வரும் பிற தொழிலாளர்கள் நன்கொடை அளிப்பதும் ஆதரவு தருவதும் வழக்கமாக இருந்தது. ஆலையைக் கதவடைப்புச் செய்த இரண்டாம் நாள் ஒரு ஆலை அதிகாரி தனது காரில் போய்க் கொண்டே கொட்டகையில் கூடியிருந்த தொழிலாளிகள் பக்கம் ஒரு துண்டறிக்கையை கொத்தாக வீசிவிட்டுச் சென்றார். அதில் கோதண்டராமனும் குசேலனும் அம்பத்தூரை ஒரு குட்டி நக்சல்பாரியாக ஆக்குகின்றனர்என்றும் தொழிலாளர்களே, பொது மக்களே உசார்... உசார்!   என்றும் அச்சிடப் பட்டிருந்தது.

மேற்படி துண்டறிக்கையை வீசியெறிந்து விட்டுச் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் பாடி டி.வி.எஸ். குரூப் கம்பெனியான வீல்ஸ் இந்தியாவின் வாயில் புறத்தில் நின்றிருந்த எங்கள் தொழிலாளர்களை அத் தொழிற்சாலையிலிருந்து வந்த சிலர் தாக்க ஆரம்பித்தனர். அடுத்த வினாடி டி.வி.எஸ்.  குரூப் கம்பெனியிலிருந்து பல விதமான விசில் சத்தங்கள் கேட்டன. டி.வி.எஸ். குரூப்பைச் சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், வீல்ஸ் இந்தியா ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். வீல்ஸ் இந்தியா டைரக்டரை லூகாஸ் தொழிலாளர்கள் கம்பெனி வாயிலில் தாக்குகிறார்கள் என்ற பொய்யைக்கூறி ஆலை அதிகார்கள், தொழிலாளர்களை எங்களுக்கு எதிராகப் போகும்படி விரட்டியிருக்கிறார்கள். பொய்யை உண்மை என்று நம்பி ஓடிவந்த தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்த போது அங்கு எந்த டைரக்டரையும் காணாது தேங்கி நிற்க, நிர்வாகம் ஏற்கெனவே தொழிலாளிகளின் சீருடையை அணிவித்து, “செட் அப்செய்து வைத்திருந்த அடியாட்கள் எங்களை கற்களாலும் சைக்கிள் செயினாலும் தாக்க ஆரம்பித்தார்கள் (மற்ற தொழிலாளர்கள் எங்களுக்கு எதிராக நிற்கின்றார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே நிர்வாகம் இந்தத் தந்திரத்தைச் செய்தது. அடுத்த நாள் பத்திரிக்கைகளில் டி.வி.எஸ். தொழிலாளர்களிடையே மோதல் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது).

நிராயுதபாணியான நாங்கள் போராட்ட கொட்டகையிலிருந்து பின்வாங்கினோம். கொட்டகையை கைப்பற்றிய குண்டர்கூட்டம் கொடிக்கம்பம் உட்பட அனைத்தையும் சிதைத்து தீ வைத்தனர். நடுத்தெருவில் தீ சுவாலையோடு எரிய பந்தோபஸ்துக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காவல்துறையினர் அனைத்தையும் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். குண்டர்களின் தாக்குதல் காட்டுத் தீ போல அம்பத்தூர், ஆவடி வட்டாரத்தில் பரவியது. மாலை 4 மணிக்கெல்லாம் எங்களுக்கு ஆதரவாக அறிந்த, அறியாத தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் எங்களோடு கூடினர். அப்போதும் வீல்ஸ் இந்தியா வாசலில் நிர்வாகத்தின் அடியாட்கள் ஆயுத சகிதம் ராணுவத்தைப் போன்று வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தனர். கூடியிருந்த ஆதரவு சக்திகள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அம்பத்தூரை நோக்கி ஊர்வலமாகச் சென்றோம். சுமார் 2 பர்லாங் தூரம் சென்றிருப்போம். வீல்ஸ் இந்தியா முன்பு நிருத்தி வைக்கப் பட்டிருந்த குண்டர்கள் வேன்களிலும் கார்களிலும் ஏறிவந்து ஊர்வலத்தை கத்தி, கம்பு, இரும்புக்கழி, சைக்கிள் செயின் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.

புறப்பாடு: பந்தோபஸ்து போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஆர்.கே.எஸ்: வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புறப்பாடு: தாக்குதல் முடிவு எப்படி?

ஆர்.கே.எஸ்: வன்முறை மூலம் மட்டுமே தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் தகர்க்க முடியும் என்று எண்ணி அடியாட்களை அனுப்பி வைத்த முதலாளி டி.எஸ்.கிருஷ்ணா (இப்போது மண்ணாகி விட்டார்) வின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது.

புறப்பாடு: எப்படி?

ஆர்.கே.எஸ்: முதலாளித்துவ வன்முறை தொழிலாளர்களின் தற்காப்புத் தாக்குதல் முறையால் முறியடிக்கப் பட்டது. தாக்க வந்தவர்கள் தொழிலாளர்களின் வலிமையைக் கண்டு தறிகெட்டு ஓடினார்கள்.

புறப்பாடு:  ஏன் 1967 டி.வி.எஸ். போராட்டம் தோல்வியைக் கண்டது?

ஆர்.கே.எஸ்: அது தோல்வி என்று கூற முடியாது. போராட்டங்கள் எப்போதுமே தோல்வியைத் தழுவுவது இல்லை. ஒவ்வொரு போராட்டத்திலும் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று போராட்டத்தை வழிநடத்தும் அமைப்பு, இரண்டு அப் போராட்டம் எழுப்பியுள்ள பிரச்சனைகள் (கோரிக்கைகள், குறைபாடுகள்). ஒரு அமைப்பு தோற்கடிக்கப் பட்டிருக்கலாம் அதாவது அந்த அமைப்பிற்கு அல்லது போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கப் பட்டிருக்கலாம், இது தற்காலிகமானதே. ஏனென்றால் போராடிய அனைத்துத் தொழிலாளர்களையும் நிர்வாகத்தால் வெளியேற்ற முடியாது அல்லவா? அவ்வகையில் பார்த்தோமானால் நிர்வாகம் தான் தோல்வியைச் சந்திக்கிறது. அடுத்ததாக, போராட்டம் எழுப்பியுள்ள கோரிக்கைகளில் ஒரு பகுதியாவது நிர்வாகம் தவிர்க்க முடியாமல் நிறைவேற்றவே செய்கிறது. இக்கதவடைப்புக் காலகட்டத்திலேயே இரண்டாண்டுக்கான போனஸை நிர்வாகம் தொழிலாளிகளின் வீடுகளுக்கு மணியாடர் மூலம் அனுப்பியது. ஒரு உதாரணமாக. கதவடைப்பு நீங்கியபின்பு போண்டா சங்கத்தை” (ஐ.என்.டி.யு.சி.) முன் வைத்தாவது தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அளித்தது. ஆகவே போராட்டங்களின் முடிவில் தலைமைகள் பிரிக்கப்பட்டாலும் அவை எழுப்பிய பிரச்சனைகளை முழுமையாக ஒதுக்கிவிட நிர்வாகங்களினால் முடிவதில்லை (பாரிஸ் கம்யூன் உருவாக்கிய சீர்திருத்தங்களைக் கூட கம்யூனை முறியடித்தவர்களால் திரும்பப் பெற முடியவில்லை). ஆகவே ஒவ்வொரு போராட்டமும் தொழிலாளர்களுக்கு சில அனுகூலங்களையும் படிப்பினைகளையும் அளித்துவிட்டு மீண்டும் வருவேன் என்று சொல்லியே செல்கின்றது. அப்படித்தான் 1967இல் லூகாஸில் டா டாகொடுத்துவிட்டுச் சென்ற போராட்டம் மீண்டும் 1977இல் திரும்பிவந்து சில அனுகூலங்களைத் தொழிலாளர்களுக்கு அளித்து விட்டு விடை பெற்றுச் சென்றிருக்கின்றது. மீண்டும் அது எப்போதும் வரலாம். தொழிலாளியும் அதை அறிந்தேயிருக்கின்றார்கள்.

புறப்பாடு:  போராட்டம் இப்படி வருவதும் போவதுமாக இருக்கக் காரணம்...?

ஆர்.கே.எஸ்: தொழிலாளர்களின் கூலிக்கான போராட்டம் கூட அரசியலுடன் இணைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம். கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சங்கங்களைக் கட்டுவதில் காட்டக் கூடிய முக்கியத்துவத்தை வர்க்க அரசியலைப் பிரச்சாரம் செய்வதிலும், பரப்புவதிலும் காட்டுவதில்லை. இரும்பு காய்ச்சப்படும் பொழுதுதான் வலிமை பெறுகின்றது. போராடும் தொழிலாளிகளிடம் வர்க்க அரசியல் சேரும் பொழுதுதான் உறுதி பெறுகின்றது. அது இல்லாத போது தொழிலாளர்களை தாக்குதல் மூலமாக பிளவுபடுத்தவும், பின்வாங்க வைக்கவும் முதலாளிகளால் முடிகின்றது.

புறப்பாடு:  1967இல் ஏ.எம்.கே-யின் தலைமையை தொழிலாளர்களிடமிருந்து எப்படி பிரித்தார்கள்...?

ஆர்.கே.எஸ்: குண்டர்களின் தாக்குதலால் போராட்டத்தை உடைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டான் முதலாளி. பேச்சு வார்த்தைக்கு வராமல் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடமாட்டர்கள் என்பதையும் அவன் அறிந்தான். ஒரு புதுவழியைக் கண்டான். கோதண்டராமன், குசேலர் இதர பிற தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் பேசமாட்டேன், வேண்டுமானால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் (சி.பி.எம்.) மாநில தலைவர்கள் வந்து பேசட்டும்என்றான். பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம், வி.ஸி.வெங்கட்ராமன் முதலானோர் முதலாளியின் வாசலுக்கு பாய்ந்தோடினார்கள். தொழிலாளர் பிரதிநிதிகள் கூட இல்லாமல் ஓடிச் சென்ற இவர்கள் ஸ்டேல் மெட்டைஉடைக்கிறார்களாம். இவர்கள் உடைத்தது ஸ்டேல் மெட்டையல்ல போராட்டத்தை என்று நாங்களெல்லோரும் பழிவாங்கப்பட்ட பின்புதான் உணர்ந்தோம்.

புறப்பாடு:  அப்படி அவர்கள் என்னதான் பேசி முடித்தார்கள்?

ஆர்.கே.எஸ்: அவர்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் முடிக்கவில்லை. உற்பத்தியை உடனடியாகத் துவங்குவது என்ற முதலாளியின் கோரிக்கையைத்தான் ஒப்புக்கொண்டு வந்தார்கள். எங்களது கோரிக்கைகள் என்னாச்சு என்று கேட்டபொழுது பேச்சுவார்த்தைக்கு போய்வந்தபின்பு தொழிலாளிகளிடம் நிலைமையை விளக்கிய ஏ.பி-யும் எம்.ஆர்.-வியும் கம்பெனி திறந்து, சுமூகச் சூழ்நிலை வந்ததும் அப்போது பேசித்தீர்க்கலாம் என்று முதலாளி சொல்லியிருக்கிறார். அதில் எங்களுக்கு முழு நம்பிக்கைத் தெரிகிறது. ஆகவே சுமூகச் சூழ்நிலையை நாம் உருவாக்கி பேசலாம்என்று ஆலோசனைக் கூறினார்.

புறப்பாடு:  ஏ.எம்.கே. இதை எப்படி ஒப்புக்கொண்டார்?

ஆர்.கே.எஸ்: அதனை அவர் ஏற்காவிடில் உடனடியாகக் கட்சித் தலைமையைப் பகைக்க வேண்டியிருக்கும். தொழிலாளிகளாகிய எங்களுக்கு அரசியல் அறியாமை; தொழிலாளிகளின் பொது மனோநிலைமை நீண்ட போராட்டத்திற்குப் பக்குவப்படாமை; இந்நிலையில் தொழிலாளர்களை இன்னும் ஸ்திரப்படுத்திக் கொண்டுதான் துரோகத்தையும் தவறுகளையும் எதிர்க்க முடியும் என்று கருதினார். ஆகவே வேறு வழியின்றி கதவடைப்பு நீக்கப்பட்டு நாங்கள் திரும்பினோம். ஆனால் ஏ.எம்.கே.எண்ணியபடி தொழிலாளர்களை ஸ்திரப்படுத்துவதற்கான அவகாசத்தை எதிரி தரத் தயாராயில்லை. போலீஸைப் பயன்படுத்தி அப்பகுதியில் 144 தடையுத்தரவைப் போட்டு நாங்கள் வாயிற் கூட்டம் கூடவிடாமல் தடுத்தான். தொழிற்சாலை திறந்த அடுத்த வாரத்திலேயே போலீசாரைக் கொண்டே முன்னணி ஊழியர்களைக் காரணமின்றி வில்லிவாக்கத்தில் தாக்கி மண்டைகளை உடைத்தான். இதன் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான அச்சத்தை உண்டாக்கினான். குண்டர்களைச் சமாளித்து தொழிலாளர்களைப் போலீசாரே நேரடியாக தாக்கியதும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். முதலாளியிடம் பேச்சுவார்த்தைக்கு நாயாய்ப் பறந்த எந்தத் தலைவனும் (ஏ.எம்.கே. நீங்கலாக) தொழிலாளர்களின் அதிர்ச்சியைப் போக்கவும், உரமூட்டவும் தயாராகவில்லை.

புறப்பாடு: தொழிலாளர்களின் மனோநிலை பக்குவமடைவதற்கு முன்னால் எதற்காகப் போராட்டத்தை முன்வைத்தீர்கள்?

ஆர்.கே.எஸ்: போராட்டத்தினை நாங்கள் முன்வைக்கவில்லை. எதிரிதான் முந்திக்கொண்டு கதவடைபு செய்தான். இன்னும் சிறிது காலக் கெடு கொடுப்பானானால் தொழிலாளர்கள் ஸ்திரப்பட்டுவிடுவார்கள்; அதன் பின் அவர்களைப் பிளவுபடுத்த முடியாது என்று கணக்கிட்டே அவன் முதல் தாக்குதலைத் தொடுத்தான். இருப்பினும் சூழ்நிலைக்கேற்ப சமாளித்து வந்தபோது சொந்தக் கையே கண்ணைக் குத்திற்று.

புறப்பாடு: அப்போது புதிதாக ஆட்சியமைத்த தி.மு.க. போராட்டத்தில் என்ன நிலை மேற்கொண்டது?

ஆர்.கே.எஸ்: அவர்கள் தங்களின் தொழிலாளர் எதிர்ப்பை மிக நிதானமாகவே மேற்கொண்டனர். தொழிலாளர் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குமிருந்த முரண்பட்ட உறவை உணர்ந்த பின்பே தைரியமாக போலீஸை எங்களுக்கு எதிராகப் பகிரங்கரமாக ஏவினர். முதலாளிகளுக்கு எதிராக மக்கள்தான் நிற்கமுடியுமே தவிர ஆளும் கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ நிற்காது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்.

புறப்பாடு: தாமதமாகக் கேட்கிறேன். போராட்டத்தின்போது குட்டி நக்சல்பாரிஎன்று ஒரு துண்டறிக்கையை அதிகாரி ஒருவர் வீசியதாகச் சொன்னீர்களே! அதைப் பற்றி ஏ.எம்.கே-யிடம் கேட்டீர்களா? அதற்கு அவர் என்ன சொன்னார்?

ஆர்.கே.எஸ்: நக்சல்பாரி (மேற்கு வங்கத்திலுள்ள மாவட்டம்) என்ற பகுதியில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். அம்பத்தூரில் தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறீர்கள். அங்கே மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் சில தலைவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக நக்சல்பாரிகள்என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இங்கே நானும் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்தே போராடுகிறேன். என்னையும் இவர்கள் நக்சல்பாரி என்று பெயர்சூட்டி இருக்கிறார்கள். எதிர்காலத்தில் போராடுபவர்கள் எல்லோரையும் நக்சல்பாரிகள் என்றே சொல்வார்கள். இப்போது என்னைச் சொல்கிறார்கள், நீங்களும் உறுதியுடனிருந்து போராடுவீர்களானால் நாளை உங்களையும் நக்சல்பாரி என்றுதான் சொல்வார்கள்.

புறப்பாடு: உங்களையும் பின்னால் நக்சல்பாரி என்றுதானே சொன்னார்கள்?

ஆர்.கே.எஸ்: நான் லூகாஸ் டி.வி.எஸ்- ஸிலிருந்து நிர்வாகத்தால் பழிவாங்கப்- பட்ட பின்பு ஏ.எம்.கே-யுடன் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கியதும் எனக்கும் அந்தப் பெயர் சூட்டினார்கள்.

புறப்பாடு: 1967-ஆம் ஆண்டு லூகாஸ் டி.வி.எஸ். போராட்டம் ஏ.எம்.கே-வுக்கு நக்சல்பாரி பட்டத்தை அளித்த பின்பு அவர் எவ்வளவு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யில் இருந்தார்?

ஆர்.கே.எஸ்: அவரை கட்சியைவிட்டு வெளியேற்றுவதற்காகவே டி.வி.எஸ். நிர்வாகத்தின் வாயால் நக்சல்பாரிஎன்று அறிவிக்கச் செய்ததே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைதானே...! டி.வி.எஸ்-இல் கட்சித் தலைமையின் துரோகம் வாகை சூடியவுடன் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தீக்கதிர் பத்திரிகையில் அறிவிப்பு வந்தது.

புறப்பாடு: நீக்கியதற்கு கட்சி முன்வைத்த காரணம்...?

ஆர்.கே.எஸ்: அவர் ஒரு முதலாளித்துவ ஏஜெண்ட் என்று கூறி, அவரை கட்சியை விட்டு வெளியேற்றியிருப்பதாக கூறியிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொழிலாளி வர்க்கத்தை அதன் உரிமைகளுக்காக ஒன்று திரட்டி போராடுபவர்கள் முதலாளித்துவ ஏஜெண்டாம்...! சந்தா வசூலிப்பதற்காக மட்டுமே சங்கங்களை கட்டி சட்டம் அமைதியை செவ்வனே கட்டிக் காப்பவர்கள் முதலாளித்துவ எதிரிகளாம்...!
புறப்பாடு: இவ்வறிவிப்பைக் கண்ட தொழிலாளர்களின் நிலை என்ன-வாயிருந்தது...?

ஆர்.கே.எஸ்: அதுவரை (வர்க்க) அரசியலில் நுழையாத ஆவடி-அம்பத்தூர் தொழிலாளி வர்க்கம் இவ்வறிவிப்பைக் கண்டு ஆத்திரத்துடன் ஒன்றுகூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தலைமையையும் தீக்கதிர் பத்திரிகையையும் வன்மையாக கண்டித்தது. கட்சியின் தொழிலாளி வர்க்க துரோக அறிவிப்பைக் கண்டித்து தீக்கதிர் பத்திரிகை அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் சென்று அப்பத்திரிக்கையைக் கொளுத்துவது என்றும் தீர்மானித்தது. அதனை நிறைவேற்றவும் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டு, “நக்சல்பாரி பாதையே நமது பாதைஎன்று சென்னை தெருக்களிலே முதன் முதலாக முழங்கினர்.

புறப்பாடு: ஏ.எம்.கே-வை வெளியேற்றியதைப் போன்று கட்சி குசேலரையும் வெளியேற்றியதா...?

ஆர்.கே.எஸ்: குசேலர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புறப்பாடு: அப்படியென்றால் குசேலர் மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர்ந்து நீடித்தாரா?

ஆர்.கே.எஸ்: அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர்ந்து நீடித்திருப்பாரானால் அம்பத்தூர் தொழிலாளர்கள் அவரை புறக்கணித்திருப்பார்கள். ஏ.எம்.கே. பிரச்சினையில் கட்சி மேற்கொண்ட நிலையை எதிர்த்து நின்றதால்தான் தொழிற்சங்கத் தலைவராக தான் நீடிக்கமுடியும் என்பதை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

புறப்பாடு: கட்சியின் நிலைபாட்டை எதிர்த்து ஏ.எம்.கே-யுடன் நிற்க வேண்டுமென்று அவர் எடுத்த முடிவு சரிதானே...?

ஆர்.கே.எஸ்: முடிவு சரிதான் ஆனால் அன்றைய சந்தர்ப் பத்திற்காக எடுக்கப்பட்டது.

புறப்பாடு: அதை சந்தர்ப்பவாத முடிவு என்றா கூறுகிறீர்கள்...?

ஆர்.கே.எஸ்: எந்த முடிவும் தொழிலாளி வர்க்க நலனை முன்னெடுத்து செல்லும் நோக்கத்துடனானதாக இருக்குமானால் பாதையும் அந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் எடுக்கப்படும் முடிவானது தன்னை தொழிற்சங்கத் தலைமையில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக மட்டுமே இருக்குமானால் அது ஒரு சந்தர்ப்பவாத முடிவேயாகும்.

புறப்பாடு: குசேலர் தன்னை தலைமையில் நிலைநிறுத்திக் கொள்ளத்தான் ஏ.எம்.கே-யை ஆதரித்து நின்றார் என்று எப்படி அறுதியிட்டு உங்களால் கூறமுடியும்...?

ஆர்.கே.எஸ்: ஏ.எம்.கே-வை குசேலர் அரசியல் ரீதியாக ஆதரித்து கட்சியை விட்டு வெளியேறவில்லை. ஏ.எம்.கே-யின் அரசியல் நிலைபாடு அவரையும் அவரைச் சார்ந்துள்ள சங்க முழுநேர ஊழியர்களையும் (குசேலர் நீங்கலாக) தொழிற் சங்கங்களை விட்டு விலக்கி கொள்ளும் என்பதை உணர்ந்து கொண்டு, பின் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் காட்டுராஜாவாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தே ஏ.எம்.கே. பிரச்சனையை முன்வைத்து கட்சிக் கட்டுப்பாடு என்ற வளையத்தை உடைத்துக்கொண்டு வெளியேறினார். ஆனாலும் அவர் வெளியேறியது பிரச்சினையின் மீதானதொரு சரியான முடிவென்றாலும் அது சந்தர்ப்பவாதமானது என்று குறிப்பிடக் காரணம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறியவர். ஏ.எம்.கே-யையும் உள்ளடக்கி புதியதாக அமைக்கப்பட்ட இந்தியா தழுவிய புரட்சிகரமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)யின் கட்டுப்பாட்டுக்குள் வரமறுத்துவிட்டார். அங்கேதான் அவரது அன்றைய முடிவு சந்தர்ப்பவாதமென்று தீர்மானமாகிறது. மேலும் தொடர்ந்தாற்போல் அவர் தொழிற்சங்க இயக்கத்தில் மேற்கொண்ட நடைமுறையும் அதற்கு போதுமானச் சான்றாகும்.

புறப்பாடு: நடைமுறை என்னவென்று குறிப்பிட்டுக் கூறமுடியுமா?

ஆர்.கே.எஸ்: தொழிற்சங்க நடைமுறையில் ஒரு பூர்ஷூவா தன்மையைப் புகுத்தினார். எந்தக் கட்சி ஏ.எம்.கே -வையும் அவரை சார்ந்தத் தோழர்களையும் முதலாளித்துவ ஏஜெண்டுகள் என்று கூறியதோ அதே கட்சியைச் சார்ந்த தொழிற்சங்க இயக்கத்துடன் (சி.ஐ.டி.யு) கூட்டணி சேர்ந்தார். முடிந்தமட்டும் தொழிலாளர்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக அவைகளை முனை மழுங்கச் செய்தார்.

புறப்பாடு: ஏ.எம்.கே-யும் இதர தோழர்களும் தொழிற்சங்க இயக்கத்தைவிட்டு விலகிச் சென்ற பின்பு இயக்கத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான தொழிற்சங்கத்துடன் குசேலர் கூட்டுச் சேர்ந்திருக்கலாமல்லவா?

ஆர்.கே.எஸ்:தொழிலாளிவர்க்கம் திரிபுவாதத் தன்மை யிலிருந்து போர்குணமிக்கப் பாதையில் திரும்பிய பின்பு அதனை மீண்டும் திரிபுவாதக் குட்டைக்கே கொண்டு செல்வது தவறல்லாமல் வேறென்ன.

புறப்பாடு: ஏ.எம்.கே-யும் மற்ற தோழர்களும் முற்றிலுமாக தொழிற்சங்க இயக்கத்தைவிட்டு விலகிச் சென்ற பின்பு குசேலரின் நடைமுறையை விமர்சிப்பது எவ்வகையில் சரியாகும்?

ஆர்.கே.எஸ்: தொழிற்சங்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதிகள் தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்கவும், விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் விலகிச் சென்றவர்கள் விமர்சனம் செய்ய என்ன உரிமை உண்டுஎன்று அவ்வப்போது கூப்பாடு போட்டார்கள். ஆனாலும் குசேலர் தலைமை தாங்கிய இயக்கத்தைக் கட்டுவதில் அவரைக்காட்டிலும் அதிகமான உழைப்பையும், இரத்தத்தையும் அளித்தவர்கள்தான் விலகிச் சென்றார்கள். தொழிற்சங்க இயக்கத்தை விட்டு விலகிச் சென்ற ஏ.எம்.கே. போன்ற தோழர்கள் தொழிலாளி வர்க்கத்தைவிட்டு விலகியோ அல்லது தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்யவோ இல்லை. மாறாக, உழைக்கும் வர்க்கத்தை (தொழிலாளி வர்க்கம் உட்பட) முற்றிலுமாக சுரண்டலிலிருந்து விடுவிக்க மேற்கொண்டதோர் அரசியல் முடிவையொட்டியே தொழிற்சங்க இயக்கத்திலிருந்து விலகிச் சென்றார்கள். அவர்களது விலகிச் சென்ற அந்த முடிவு, சுகம் அனுபவிப்பதற்கானதல்ல; துன்பங்களை மேற்கொண்டு தியாகம் செய்வதற்கானது.

இதில் இன்னொரு விசயத்தையும் அறியவேண்டும். ஏ.எம்.கே-யின் விலகலைத் துரிதப்படுத்தியதே அரசு-திரிபுவாதிகள்-சந்தர்ப்பவாதிகள் ஆகியோரின் கூட்டுச் சதிதான். வளர்ந்து வந்த ஆவடி-அம்பத்தூர் தொழிலாளிவர்க்க இயக்கத்தில் அவர் அரசியல் வித்துக்களைச் சரியாக ஊன்றுவதற்கு முன்பே அவரை தொழிலாளர்கள் மத்தியிலிருந்து பிரித்துவிட முடிவு செய்தனர். அரசுக்கெதிராக தொழிலாளர்களை ஆயுதப் புரட்சிக்கு அவர் தூண்டிவிட்டார் என்ற தேசத்துரோக(!) வழக்கை அவர் மீது போட்டனர். இவ்விசயத்தில் அவருக்கு அப்போது ஆலோசனை வழங்கிய சந்தர்ப்பவாதிகள் வழக்கை எதிர்த்து வாதிடுவதற்கு பதில் தலைமறைவாக போவதே சரி என்று கூறி தொழிலாளர்களிடமிருந்து அவரை விரைவிலேயே விலக்கிவிட்டனர் என்பதுதான் என் கணிப்பு.
புறப்பாடு: ஏ.எம்.கே. இதை உணரவில்லையா...

ஆர்.கே.எஸ்: அவர் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைபாடு இதை விட முக்கியமானது என்று அவர் கருதியிருக்க வேண்டும்.

புறப்பாடு: அப்போதைய விலகல் முடிவு சரியல்ல என்று கூறுகிறீர்கள் - அப்படித்தானே?
ஆர்.கே.எஸ்: அப்படித்தான் கருதுகிறேன். ஏ.எம்.கே. ஏற்றுக்கொண்ட கட்சி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள், வளர்ந்து வந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டுவரும் வரையாவது அவர் தொழிலாளி வர்க்கத்தோடு இயங்கி இருக்க வேண்டும்.  

புறப்பாடு: குசேலர் தொழிற்சங்க இயக்கத்தில் பூர்ஷூவா தன்மையை எப்படிப் புகுத்தினார்?

ஆர்.கே.எஸ்: பூர்ஷூவா நடைமுறையென்று நான் குறிப்பிடுவது ஆவடி-அம்பத்தூர் வட்டாரத்தில் அப்போது நிலவி வந்த பாட்டாளி வர்க்க தொழிற்சங்க நடைமுறையைப் பூர்ஷூவா வர்க்க நடைமுறையாக மாற்றினார்.

புறப்பாடு: பாட்டாளி வர்க்க தொழிற்சங்க நடைமுறை என்னவென்று விளக்க முடியுமா...?

ஆர்.கே.எஸ்: தொழிற்சங்க இயக்கத்தில் ஏ.எம்.கே-யின் நுழைவை ஒட்டி ஆவடி-அம்பத்தூர் வட்டாரத்தில் வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைக் கூறுகள் உருவாகின்றன. தொழிலாளர்களிடம் அதுவரை இருந்து வந்த அமைதியான மனோபாவம் மறைந்து ஒரு போர்க்குணம் உண்டாக்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு ஏற்படுகின்ற பிரச்சினை எல்லாத் தொழிலாளர்களின் பிரச்சினையாகவும், ஒரு தொழிற்சங்கத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினை எல்லாத் தொழிற்சங்கப் பிரச்சினையாகவும் ஏற்கப்படுகிறது. இதனால் அவ்வட்டாரத்து தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வர்க்க உணர்வு (Class Conscience) தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த ஆரம்பம் தொழிலாளர்களின் சிந்தனையைக் கிளருகிறது. இன்றைய அரசு தொழிலாளர்களுக்கு எதிரானது. ஆளும் கட்சிகளினாலோ, எதிர்கட்சிகளினாலோ பிரச்சினைகள் தீராது. போராட்டங்களின் மூலமாகத்தான் பிரச்சினைகள் தீருமேயொழிய மனுக்களின் மூலமாகவோ, கோர்ட்டுகளின் மூலமாகவோ தீராது.
ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம். அரசு-போலீஸ்-சட்டங்கள் ஆகியவை மக்களை ஒடுக்குவதற்கென்றே உண்டானவை. இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களின் சாதாரண கோரிக்கைகளை அடையவேண்டுமானால் கூட தனது தொழிற்சங்கம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லாத் தொழிலாளர்களையும், எல்லாத் தொழிற்சங்கங்களையும் இணைத்துப் போராட வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறார்கள். இவ்வுணர்வை தொழிலாளி வர்க்கம் அடையும்போது அது வர்க்கப் போராட்டத்தின் (Class Struggle) வாயிலில் அடியெடுத்து வைக்கிறது. ஏ.எம்.கே. தொழிற்சங்க இயக்கத்திலிருந்தபோது ஆவடி-அம்பத்தூர் தொழிலாளர்கள் இக்கட்டத்தில்தான் இருந்து கொண்டிருந்தார்கள். சங்கிலிக் கோர்வை போன்று போராட்டங்கள் வரிசையாக எழுகின்றன. சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் போராட்டம், டன்லப் போராட்டம், ஷாவாலாஸ் போராட்டம், சதர்ன் சுவிட்ச்கியர் போராட்டம், டி.வி.எஸ். போராட்டம், டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டம், இந்தியா போர்ஜ், விக் இந்தியா, கோரமண்டல், மெட்ராஸ் ரேடியேட்டர், விம்கோ, ஈ.ஐ.டி. பாரி இன்னும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எண்ணற்ற சிறு தொழிற்சாலைகளில் அலையலையான போராட்டங்கள் இப்போராட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. எங்கு திரும்பினும் செங்கொடிகளும், செந்தோரணங்களும்... இதற்கு எதிரணி போல எங்கு நோக்கினும் காக்கி உடையணிந்த போலீஸ் மயம். அரசு கட்டிலேறிய ஓராண்டிலேயே தொழிலாளர்களின் இப்போராட்டங்களை கண்டித்து தினமும் திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைவிடாத வானொலி பிரச்சாரம்... முதலாளி-போலீஸ்-அரசு ஆகியோரின் முக்கூட்டு ஒடுக்குமுறையையும் மீறி இயக்கம் முன்னோக்கிச் சென்றதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம், ஒவ்வொரு போராட்டத்தையும் எல்லாத் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் சேர்ந்த கூட்டுக் குழுவே ஆய்வு செய்து முடுவெடுத்து செயல்பட்டது. அதன் முடிவுகள் சரியான வகையில் இருப்பதற்கு ஏ.எம்.கே. வழி காட்டினாரே தவிர முடிவுகளை அவர் திணிக்கவோ, முடிவுகளையெடுக்கும் உரிமையை தலைவர் என்ற முறையில் தன்னிடமே வைத்துக்கொள்ளவோ இல்லை.
இக்கட்டத்தில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மற்ற தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். இதன் மூலம் ஆவடி-அம்பத்தூர் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நேரத்தில் ஒரே கருத்து பரவலாக ஊடுருவி செல்லத் துவங்கியது. இந்நடைமுறைக்குப் பெயர்தான் பாட்டாளி வர்க்கத் தலைமைஎன்பது (பாட்டாளி வர்க்கத் தலைமை என்பது தலைமை தாங்குபவர் பிறப்பால் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவரா என்று பார்த்து அப்படி இல்லாவிட்டால் அது பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லை என்று சிலர் தவறாக விவாதிக்கின்றனர்) தலைவர் அல்லது வழிகாட்டி எந்த வர்க்கத்தில் பிறந்தாலும், அவர் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் ஊன்றி நின்று கொள்கை, போராட்டம் சம்பந்தமான முடிவுகளெடுக்கும் உரிமையை பாட்டாளி வர்க்கத்தை உள்ளடக்கிய குழுவிடம் ஒப்படைத்து அதற்குள் தன்னையும் உட்படுத்தி வழிகாட்டுவாரேயானால் அது பாட்டாளி வர்க்கத் தலைமைதான். இந்நடைமுறையினால் எல்லா சங்க பிரதிநிதிகளுக்கும் இயக்கத்தைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் அறிவு மேலோங்கியது. பிரச்சினைகள் மீது பிரதிநிதிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்ட அதே வேலையில் கடமைகளையும் தாங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளும் முனைப்பை இது கொடுத்தது. அமைப்பை தலைவன் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அமைப்புக்குத் தலைவனும் கட்டுப்பட்டவன்தான் என்ற கோட்பாடு தோன்றி வளர்ந்தது. தலைவன் என்பவன் அமைப்பு ரீதியாக தலைவனாக இருந்தாலும், தொழிலாளர்களுடனான உறவுகளில் தோழனாக இருந்தான். மேற்சொல்லப்பட்ட பாட்டாளி வர்க்க தொழிற்சங்க நடைமுறை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் வர்க்கப் போராட்டமானது அடுத்தக் கட்டத்தில் தொழிலாளி வர்க்க அரசியல் போராட்டமாக (Political Struggle of the working class) மலரும்.
இவ்வளர்ச்சியை நோக்கிப் போகவேண்டிய காலகட்டத்தில்தான் துரதிருஷ்டவசமாக ஏ.எம்.கே-வும் அவருடனான இதர தொழிற்சங்க ஊழியர்களும் தொழிற்சங்க இயக்கத்தை விட்டு விலகி செல்கின்றார்கள். ஆனால் குசேலர் மட்டும் தொழிற்சங்க இயக்கத்தோடேயே நின்று கொள்கிறார். மேற்சொல்லப்பட்ட மூன்றாவது கட்டத்திற்கு அவர் இயக்கத்தை வளர்த்துச் சென்றிருப்பாரேயானால் அவரை இழுத்து நிறுத்தவோ, தடுத்து ஆட்கொள்ளவோ எந்த சக்தியாலும் முடிந்திருக்காது. தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தனது காலடிகளை அழுத்தமாகப் பதித்திருப்பார். மாறாக அவர் இரண்டாவது கட்டமான வர்க்கப் போராட்டம் என்ற நிலையிலிருந்தும் தொழிலாளர் இயக்கத்தை இன்னும் கீழே கொண்டு சென்று விட்டதனால் தொழிற்சங்க இயக்கங்கள் சென்னை சுற்றுவட்டாரத்தில் இன்று ஒரு மாபெரும் தேக்க நிலையை அடைந்திருக்கிறது.

..... (பேட்டி தொடருகிறது. வேறு விசயங்களைப் பற்றி பேசும் அந்தப் பகுதியை மையப்பொருளுக்கு தேவையில்லை என கருதி தவிர்க்கப்படுகிறது)

சமரன் நவம்பர் 2019

No comments:

Post a Comment