Saturday 7 December 2019

சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான, ஆசியான் (ASEAN) நாடுகளைச் சுரண்டுவதற்கான “ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பை (RCEP)” எதிர்ப்போம்!



சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான, ஆசியான்
(ASEAN) நாடுகளைச் சுரண்டுவதற்கான ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பை (RCEP)எதிர்ப்போம்!

சீன அதிபர் ஜி ஜிங்பிங் கடந்த அக்டோபர் 11-13ம் தேதிகளில் தமிழகத்திற்கு வருகை தந்து இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தார். சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்புஎனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA - Free Trade Agreement) இந்தியாவை இணையுமாறு வலியுறுத்தவே ஜிங் மோடியை சந்தித்தார். மோடி கும்பலும் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை எனில் இந்தியா தனிமைப்பட்டு விடும். இந்திய நலன்களைக் காப்பதற்காக இக்கூட்டமைப்பில் இணைவது அவசியம்என்று கூறி இதில் இணைய முடிவெடுத்தது. ஆனால் தற்போது இந்திய நலன்களுக்கும், காந்தியத்திற்கும் எதிரானதாக இக்கூட்டமைப்பு உள்ளதுஎன்று கூறி இணையும் முடிவை கைவிடுவதாக மோடி அறிவித்துள்ளார். உண்மையில் இந்திய நலன்களுக்காகவே மோடி இம்முடிவை எடுத்துள்ளாரா? எனில், நிச்சயம் இல்லை. அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்தே மோடி கும்பல் இம்முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்க-இந்திய போர்த்தந்திரம் மற்றும் கூட்டமைப்பு மன்றத்தின் (US-India Strategic and Partnership Forum). இரண்டாவது ஆண்டுக் கூட்டம் புது டில்லியில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வளர்ச்சிக்கான கூட்டாளி நாடுகள் (Partners for Growth)என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா-இந்தியாவிற்கிடையில் பல்வேறு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் (bilateral agreement) கையெழுத்திடுவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் முதல் வர்த்தக ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகே மோடி கும்பல் சீனாவின் வர்த்தகக் கூட்டமைப்பில் இணைவதில்லை என்று முடிவெடுத்தது. ஆகவே, மோடி கும்பலின் முடிவு சுயேச்சையாக எடுக்கப்பட்டது அல்ல. ஆனால் இந்திய நலன், காந்தியம், மனசாட்சிஎன்றெல்லாம் சுதேசிய நாடகமாடுகிறது மோடி கும்பல்.


எனினும் சீனாவின் வர்த்தகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதில்லை என்பது தற்காலிக முடிவுதான் எனவும் இந்தியாவின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்பு உண்டென்றும் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். சீனாவும் மோடி அரசு கடைசி நேரத்தில் புதிய நிபந்தனைகளை விதித்துவிட்டு விலகுகிறது. இருப்பினும் இந்தியாவிற்கு கதவுகள் திறந்தே இருக்கும்எனக் கூறியுள்ளது. ஆகவே மோடி அரசின் முடிவில் ஏற்பட்ட கடைசி நேர மாற்றத்தின் பின்புலத்தில் அமெரிக்க மாமனின் கட்டளைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. தற்போது கூட்டமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இதில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ASEAN - ஆசியான்) மற்றும் 6 வர்த்தகக் கூட்டாளி நாடுகளில் இந்தியாவைத் தவிர்த்த மற்ற 5 நாடுகள் கையெழுத்திடுவது என்று முடிவெடுத்துள்ளன. அடுத்த வருடம் 2020 பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெறவுள்ள மாநாட்டில் கையெழுத்திடப்பட்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே மோடி கும்பல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்கவும், பிற ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்கவும், இந்திய தரகு வர்க்க கும்பலின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகவேனும் போக்கவும், இக்கூட்டமைப்பில் இணைவதற்கான முடிவை மீண்டும் எடுக்க வாய்ப்புள்ளது. இந்திய தரகு வர்க்க முதலாளிகளின் தலைமையில் இயங்கும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) இந்தியா இக்கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்என்று கோரிக்கை வைத்துள்ளதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

சீனாவின் வர்த்தக கூட்டமைப்பில் இந்தியா இணைய வாய்ப்புள்ளதா?

மோடி கும்பல் இந்த வர்த்தகக் கூட்டமைப்பில் இணைவதற்கு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது:

1) பால் வளத்துறை,மோட்டார் வாகனத் துறை மற்றும் ஜவுளித்துறையில் இறக்குமதியில் கட்டுப்பாடு

2) 2014 வரி விதிப்பு முறைகளுக்கு மாறாக 2019 வரி விதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்

3) இறக்குமதி கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி அதிகமாகும் பட்சத்தில் வரிகளை அதிகப்படுத்தும் சுய தூண்டல்“ (ஆட்டோ டிரிக்கரிங் - Auto Triggering mechanism) முறை தேவை

4) முதலீட்டாளர்களின் நட்டத்தை அரசே ஏற்கும் விதிகளை தளர்த்த வேண்டும்

5) ஆன் லைன் வர்த்தக விதிகளில் தளர்வு தேவை

6) ஜவுளிப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், எலெக்டிரானிக் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களின் மீதான மறைமுக இறக்குமதி வரிகளில் (Back loading Tariff reduction) தளர்வு தேவை

மேற்கண்ட நிபந்தனைகள் ஏற்கப்படும் பட்சத்தில் சீனாவின் வர்த்தகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கான முடிவை மீண்டும் எடுக்க வாய்ப்புள்ளது என மோடி அரசு அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதுதான் அதில் இணைவது என மோடி கும்பல் முடிவெடுத்தது. ஆனால் இதையே காரணமாக முன்வைத்தும், சில புதிய நிபந்தனைகளை விதித்தும் மோடி அரசு விலகுவதாக முடிவெடுத்திருப்பதற்கு அமெரிக்காவின் தலையீடே காரணமாகும்.

நவம்பர் 4ஆம் தேதி பாங்காக்கில் நடந்த இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை. தனது வர்த்தகச் செயலாளர் வில்பர் ரோஸ் என்பவரை மட்டுமே அனுப்பினார். அங்கு இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு நாடுகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய வில்பர், சீனாவின் தலைமையிலான இந்த ஒப்பந்தம் தரம் தாழ்ந்த ஒப்பந்தம் (low grade treaty), சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக இதைக் கருத முடியாதுஎன விமர்சித்துள்ளார். மேலும், தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவது தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தென்றும், அமெரிக்கா தெற்காசிய நலன்களுக்கு பாடுபடும் என்றும், இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலதனமே அதிகம் என்றும் கூறியதோடு, அடுத்த ஆண்டு டிரம்பின் வேண்டுகோளை ஏற்று வாஷிங்டனில் நடக்கவுள்ள அமெரிக்க-ஆசியான் (US-ASEAN Summit)சிறப்பு மாநாட்டில் தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துச் சென்றுள்ளார்.

2017ஆம் ஆண்டில் டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பிலிருந்து டிரம்ப் விலகி இந்தோ பசிபிக் கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனாலும் டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பானது அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவைத் தவிர்த்துவிட்டு ஒருங்கிணைந்த முன்னேறிய டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு (CPTPP)எனும் பேரில் ஜப்பான், ஆஸ்திரேலியா தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஜப்பான், ஆஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, மலேசியா, மெக்சிகோ, பெரு, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள ஏழு நாடுகள் சீனாவின் வர்த்தகக் கூட்டமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தகக் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியாவை உள்ளடக்கிய குவாட் (QUAD)அணியும், “இந்தோ-பசிபிக் கூட்டமைப்பும்தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவும், சீன மேலாதிக்கத்தை முறியடிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஐரோப்பிய யூனியன்-ஜப்பான் கூட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனா இந்த பிராந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வீழ்த்த முயற்சிக்கிறது. இக்கூட்டமைப்பு நடைமுறைக்கு வருமானால் ஆசியான் நாடுகளின் அமெரிக்க சார்பு நிலை சீன சார்பு நிலைக்கு மாறும். இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் உற்பத்தியும் கூட 0.16 சதவீதம் குறையும் என கூறப்படுகிறது. இக்கூட்டமைப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அது தெற்காசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தையும் பாசிசத்தையும் பலப்படுத்தும்.

மேற்கூறிய நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் நெருக்கடியும் உலகச் சந்தையை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியும், போரும் தீவிரம் பெற்றுவருவதையும், அவை காலனிய நாடுகளின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துகின்றன என்பதையுமே காட்டுகின்றன.

இக்கூட்டமைப்பில் (RCEP) இணைவதால் ஆசியான் நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தியா இணையும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளையும் அறிந்துகொள்வதும், இதை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். எனவே, அது குறித்து காண்போம்.

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பின் ஒப்பந்தம்சமநிலை ஒப்பந்தமா?

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு (RCEP என்பது உலக வர்த்தகக் கழகத்தின் அனுமதியுடன் அமல்படுத்தப்படும் புதிய காலனிய-தாராளமய-தனியார்மய- கார்ப்பரேட் கொள்கைகளின் தொடர்ச்சியாகும். இது பிராந்திய அளவிலான பலதரப்பு ஒப்பந்தங்களுக்கான (Multi lateral and Regional Agreement) கூட்டமைப்பாகும். சுங்கவரிகளற்ற (ஜீரோ வரி - Zero Tariffs) சுதந்திர இறக்குமதியை இக்கூட்டமைப்பு கோருகிறது.

கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற ஆசியான் (ASEAN) அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளும், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கொரியா போன்ற 5 வர்த்தகக் கூட்டாளி நாடுகளும் இக்கூட்டமைப்பில் இடம் பெற்று உள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உறவுகளை பேணும் பொருட்டும், உலக மதிப்புச் சங்கிலியில் (global value chain) இணைக்கப்பட்டு பரஸ்பரம் சந்தைகளை பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் சுமார் 20 ஆண்டுகளுக்கு போடப்படும் சமநிலை ஒப்பந்தம் என கூறப்படுகிறது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் காலனிய நாடுகளுக்கும் இடையில் போடப்படும் ஒப்பந்தங்கள் எப்போதும் சமநிலை ஒப்பந்தங்களாக இருக்க முடியாது. எனவே, இதில் இடம்பெற்றுள்ள சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகள்தான் அதிகளவு பலனடையப் போகின்றன. இந்தியா, கம்போடியா போன்ற காலனிய நாடுகள் மேலும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இந்தியா, கம்போடியா போன்ற ஆசியான் (ASEAN) நாடுகளில் தரப்படும் மானியங்களை மேலும் வெட்டச் சொல்வதுடன் சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் தரப்படும் மானியங்களைப் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்கிறது இக்கூட்டமைப்பு.

இக்கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் மட்டுமின்றி அரசியல், இராணுவ ஒப்பந்தங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் முழுமையான ஒப்பந்த நகலை சீனா வெளியிடத் தயாரில்லை. வர்த்தகம் பற்றிய ஒப்பந்தங்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன.

இதில் உள்ள 15 நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே வர்த்தக உறவுகளும் வர்த்தகப் பற்றாக்குறையும் ஏற்கனவே நிலவுகின்றன. அவ்வாறெனில் இப்புதிய கூட்டமைப்பின் அவசியமென்ன? இக்கூட்டமைப்பை சீனா உருவாக்குவதன் நோக்கம் தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே என்பது தெளிவு. உலக மக்கள் தொகையில் 50% சதத்தையும், உலகத்தின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், 25 டிரில்லியன் பொருளாதாரத்தையும் இக்கூட்டமைப்பு நிர்வகிக்கப் போகிறது. எனவே இது சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கானது மட்டுமின்றி அதன் உலக மேலாதிக்கத்திற்கானதுமாகும். இது உலக வரலாற்றில் முதன் முதலாக போடப்பட்டுள்ள மாபெரும் வர்த்தகக் கூட்டமைப்பாகும்.

சீனாவின் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு (RCEP) சாத்தியமானது எப்படி?

 அமெரிக்காவில் 2008இல் தொடங்கி வெடித்த மிகு உற்பத்தி நெருக்கடியானது, மிகு வர்த்தகத்திற்கும், பெரும் வர்த்தக பற்றாக்குறைக்கும் இட்டுச்சென்றது. அமெரிக்கா பெரும் நெருக்கடியைச் சந்தித்து அதன் உலக மேலாதிக்க கனவு நொறுங்கிப்போனது. மறுபுறம் இரசிய-சீன ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களின் கூட்டணி உருவாகி அமெரிக்க-நேட்டோ முகாமுடன் போட்டி போடும் அளவிற்கு வளரத் தொடங்கின. அமெரிக்க-சீன வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள அமெரிக்கா சீனாவின் மீது வர்த்தகப் போரைப் பிரகடனப்படுத்தியது. வர்த்தகக் போரை எதிர்கொள்ள தயார் என்ற சீன-ரஷ்ய முகாமின் அறிவிப்பும், சீன-ரஷ்ய நாடுகளை எதிரி நாடுகள் என்று அறிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு யுத்த தந்திர பிரகடனமும் பனிப்போருக்கான நிலைமைகளை உருவாக்கின. அமெரிக்க-நேட்டோ, சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர்நிலைமைகளால் உலக முதலாளித்துவ நெருக்கடி மென்மேலும் ஆழப்பட்டு ஏகாதிபத்திய, காலனிய நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகள் மென்மேலும் சுமத்தப்பட்டு வருகின்றன. போர் வெறியும் பாசிசமும் தீவிரமடைகின்றன.

அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் அமெரிக்கா மட்டுமின்றி சீனாவும் மிகு உற்பத்தி நெருக்கடிச் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவிலிருந்து சீன நிறுவனங்களும் வெளியேறத் துவங்கி விட்டன. இந்நிறுவனங்கள் காலனி நாடுகளில் கால்பதிக்கும் பொருட்டு பிரயத்தனப்படுகின்றன. எனவே சீன ஏகாதிபத்தியம் தனது நிதி மூலதன நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்கவும் தெற்காசிய மற்றும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும், அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கத்திற்கான இந்தோ-பசிபிக் மற்றும் குவாட்திட்டங்களை முறியடிப்பதற்காகவும் உருவாக்கிய புதிய பட்டுச் சாலை - ஒரு இணைப்பு ஒரு சாலை (BRI - NSR - OBOR)திட்டங்களை அடுத்து, ‘ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பையும்உருவாக்கியுள்ளது. இவ்விரு திட்டங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கவுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலகயமக் கொள்கைகளையும், பலதரப்பு ஒப்பந்தங்களையும் கைவிட்டு, காப்புக் கொள்கைகளையும், இருதரப்பு ஒப்பந்தங்களையும் அமல்படுத்த தொடங்கியது. அமெரிக்காவின் இக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், ‘ஆசியான்நாடுகளும், பிற இந்தோ-பசிபிக் நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. அமெரிக்க அணியிலிருந்த ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளில் உடன்பாடு இல்லை எனவும், இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுள்ளதாகவும் என வெளிப்படையாகவே அறிவித்தன. பிற ஆசியான் நாடுகளும் கூட காப்புக் கொள்கைகளால் நெருக்கடியை சந்தித்தன. எனவே நெருக்கடியிலிருந்து மீள விரும்பி சீனாவின் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதற்கான பூர்வாங்க அறிவிப்பு 2011இல் கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் வெளியிடப்பட்டாலும், அமெரிக்க-சீன வர்த்தகப் பற்றாக்குறையும், அமெரிக்காவின் காப்புக் கொள்கை மற்றும் இருதரப்பு ஒப்பந்த திட்டங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார நெருக்கடியும் இக்கூட்டமைப்பு (RCEP) இறுதிவடிவம் எடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்கின.

இக்கூட்டமைப்பில் இணையும் பட்சத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளில் நெருக்கடி தீவிரமடையும்

மத்தியில் ஆண்ட காங்கிரசு, பாஜக அரசுகள் அமெரிக்காவின் புதிய காலனியாதிக்க நலன்களிலிருந்து நாட்டின் இராணுவம், விவசாயம், தொழில்துறை, வர்த்தகம், சேவை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் காவு கொடுத்தன. இதன்மூலம் அம்பானி, அதானி போன்ற ஒரு சில பெரும் தரகு முதலாளிகள்தான் பலன் பெற்றனர். இந்திய பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி விவசாயிகள், தொழிலாளிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்நிய முதலீட்டிற்கான தடை அகற்றப்பட்டும் அமெரிக்கா தனது கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா போன்ற காலனிய நாடுகளின் உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்ய முடியவில்லை. ஊக மூலதனமே பெருகியது. எனவே மோடி கும்பலின் டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் தோல்வி அடைந்தன.

அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்குள்ளானது. காப்புக் கொள்கைகள் என்பது அமெரிக்காவின் சந்தை நலன்களுக்கானது மட்டுமானதாகும். அதாவது அமெரிக்காவின் நெருக்கடியைத் தீர்க்க காலனிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளி நாடுகளும் தமது சந்தைகளை புதிய பொருளாதார உலகமயக் கொள்கைகள் மூலம் திறந்துவிட வேண்டும் எனக் கோருகிறது அமெரிக்கா. அதாவது அமெரிக்கா உலகமயக் கொள்கைகளை தான் கடைபிடிக்காமல் காலனிய நாடுகளை மட்டும் கடைபிடிக்க சொல்லும் கொள்கையே காப்புக் கொள்கையாகும். அமெரிக்காவுடனான தனது வர்த்தகப் பற்றாக்குறையை (24 மில்லியன் டாலர்கள்) போக்க இந்தியாவால் முடிய வில்லை. மாறாக இந்தியாவை வர்த்தக முன்னுரிமை பட்டியலில் (Trade Preferential List) இருந்து அமெரிக்கா நீக்கியது. ஆகவே இந்த வர்த்தகப் பற்றாக்குறையைச் சரி செய்யவும் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்யவும், சீனாவின் தலைமையிலான பிராந்திய கூட்டமைப்பில்இணைய மோடி கும்பல் முன்பு முடிவெடுத்தது. இந்தியா சீனாவின் முகாமில் சேராமல் தடுக்கும் பொருட்டு அண்மையில் (அக்டோபர் 20) புது டெல்லியில் நடந்த அமெரிக்க - இந்திய போர்தந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்தியாவுடன் பல்வேறு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்கும்பட்சத்தில் சீனாவின் கூட்டமைப்பில் இணைவதற்கு வாய்ப்புள்ளது என்றும் மோடி அரசு அறிவித்துள்ளது. எனவே, இவ்வொப்பந்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துகொள்வது அவசியமாகும். மேலும், இதே பாதிப்புகளைத்தான் ஆசியான் நாடுகளும் எதிர்கொள்ளப்போகின்றன.

இக்கூட்டமைப்பில் இணைவதற்கு மோடி கும்பல் கையெழுத்திடும் பட்சத்தில் சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வேளாண் மற்றும் வர்த்தகப் பொருட்கள் சுதந்திர-தாராள-இறக்குமதியின் மூலம் இந்தியச் சந்தையில் கொட்டப்படும். இதனால் இறக்குமதி அதிகமாகி ஏற்றுமதி குறைந்து இந்திய-சீன வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரித்து இந்திய பொருளாதார நெருக்கடி தீவிரமடையும். இது பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீதான மத்திய அரசின் பாசிச ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரப்படுத்தும்.

நமது நாட்டின் பால்வளத் துறை, வேளாண் துறை, இரும்பு, அலுமினியம், காப்பர், உணவு பாதுகாப்பு, தேயிலை, மின்னணு சாதனம், பொறியியல், கால்நடை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், தொலைபேசி, பொம்மைகள் (TOYS), ஆன்லைன் வர்த்தகம், தோல், பிளாஸ்டிக், மருந்து பொருட்கள், விதைகள், அறிவுசார் சொத்துரிமை, மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் சுங்க வரிகள் நீக்கப்பட்டு தாராள இறக்குமதி அனுமதிக்கப்பட நேரிடும். இதன் மூலம் ஏற்கனவே அமெரிக்காவின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளால் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இத்துறைகள் மேலும் நெருக்கடிக்குள்ளாகும். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை ஒரு சில இந்திய தரகு முதலாளிகளை வாழ வைக்கும் பொருட்டு மோடி கும்பல் அழித்துவிடும் ஆபத்துள்ளது. 85% சீன இறக்குமதி பொருட்கள் மீதும், 86% நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இறக்குமதி பொருட்கள் மீதும், 90% ஜப்பான்-தென்கொரிய இறக்குமதி பொருட்கள் மீதும் இந்தியா சுங்க வரியை நீக்க நேரிடும். இது இந்தியாவிற்கு மட்டுமின்றி, அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளிலிருந்து மீள்வதன் பெயரில், அதற்கு மாற்றாக இக்கூட்டமைப்பை நம்பி அதில் இணையும் பிற நாடுகளுக்கும் இதேநிலைதான் நேரப்போகிறது.

இந்தியாவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 120 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 24 பில்லியன் டாலர்களாகும். சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 54 பில்லியன் டாலர்களாகும். இந்தியாவிற்கும் பிற ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையானது 2013-2014இல் 8.1 பில்லியன் டாலரிலிருந்து இருந்து 2017-2018இல் 11.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 73.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சுங்கவரிகளுடன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சீனப் பொருட்களில் 85 சதவீதம் இறக்குமதி வரியை முற்றிலுமாக இந்தியா நீக்க வேண்டும் என சீனா கோருகிறது. அவ்வாறு நீக்கப்படும் பட்சத்தில் சுமார் 62.3 (73.3ல் 85%) பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவிற்கு நட்டம்தான் ஏற்படும். மட்டுமின்றி இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தியாகும் பொருட்களை சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் உள்நாட்டு தொழில் எவ்வாறு வளரும்? சுங்கவரி இருக்கும்போதே வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும்போது, சுங்க வரிகளை நீக்கினால் பற்றாக்குறை அதிகமாகவே செய்யும்.

அதிகளவு மானியம் பெறும் சீனாவின் இரும்பு உற்பத்தியாளர் மற்றும் நியூசிலாந்தின் பால் உற்பத்தியாளருடன் மானியமே பெறாத இந்தியாவின் இரும்பு பொருளுற்பத்தியாளரும், பால் உற்பத்தியாளரும் எவ்வாறு போட்டி போட முடியும்? போட்டி போட முடியாமல் நமது உள்நாட்டு தொழில்கள் அழியும். வர்த்தகப் பற்றாக்குறை பன்மடங்கு பெருகி நாடு மேலும் திவாலாகும்.

நியூசிலாந்திலிருந்து பால் மற்றும் பால் பொருட்கள்-வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை இவ்வொப்பந்தம் அனுமதிக்கிறது. இதனால் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார் ஒரு கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவர். ஏற்கனவே தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாலும், பிரான்சின் டேனோன், லாக்டாலிஸ் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் நெருக்கடியிலுள்ள பால் வளத்துறை (Dairy Industry) முற்றாக அழிந்துவிடும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும். மேலும் பால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு புரதக் குறைபாட்டால் குழந்தைகள் மரணமும் கூடும். நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் 25% சதம் பங்களிக்கும் பால் உற்பத்தி மொத்தமாக அழிக்கப்பட்டு தேசிய உற்பத்தி வீதம் (GDP) மேலும் நான்கில் ஒரு பங்கு (25%) குறையும். ஏற்கனவே இவை இலங்கை மற்றும் தூரக்கிழக்கு நாடுகளின் பால்வளத்துறையை அழித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ், புற்றுநோய், இரத்த அழுத்தம் இருதய நோய் சம்பந்தமான மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இறக்குமதி செய்ய நேரிடும். இது இந்தியாவில் செயல்படும் ஜெனிரிக் (GENERIC) மருந்து நிறுவனங்களை அழித்து, மக்கள் இவற்றைக் குறைந்த விலையில் பெறுவது தடுக்கப்படும். மருந்துகள் மற்றும் விதைகளுக்கான காப்புரிமை விதிகளையும், தரக் கட்டுப்பாடுகளையும் உயர்த்துவதை இக்கூட்டமைப்பு முக்கிய நிபந்தனையாகக் கோருகிறது. அதாவது மருந்து, மாத்திரைகளை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் உற்பத்தி செய்வதற்கான காப்புரிமையைக் கோருகிறது. இது சிறு நிறுவனங்களின் உற்பத்தியை அழிக்கும் நோக்கம் கொண்டதாகும். மருந்து பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்வது தடைபட்டு விலை உயரும். மேலும் விவசாயிகள் பாரம்பரிய விதைகள் வைத்துக் கொள்வதையும் இக்கூட்டமைப்பு மறுக்கிறது. அதாவது அமெரிக்க நிதி மூலதனக் கும்பல்கள் முன்பு என்னென்ன நிபந்தனைகளை விதித்ததோ அதே நிபந்தனைகளை சீன நிதி மூலதன கும்பல்களும் விதிக்கின்றன.

சீனாவிலிருந்து இரும்பு, பொம்மைகள், வேளாண் பொருட்கள், அலுமினியம், காப்பர், தேயிலை, மின்னணுப் பொருட்கள் (எலக்ட்ரானிக் பொருட்கள்) போன்றவை இறக்குமதி செய்ய நேரிடும். மோடி கும்பல் காலாவதியாகிப்போன டிஜிட்டல் இந்தியாவைசீன நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் மீண்டும் உயிர் கொடுக்க நினைக்கிறது. ஆனால் சீனாவின் மேட் இன் சீனா - 2025’ (Made in China - 2025) திட்டத்தையே -அதாவது சீனாவின் மிகு உற்பத்திப் பொருட்களையும் சீன தொழில் நிறுவனங்களையுமே மோடி அரசு இறக்குமதி செய்யப் போகிறது. ஆன்லைன் வர்த்தகம், மின்னணு வர்த்தகம் (Ecommerce), தகவல் தொழில்நுட்பம், தொலைபேசி உள்ளிட்ட துறைகளிலும் சீன நிதி மூலதனம் அனுமதிக்கப்பட நேரிடும். டிசிஎஸ் (TCS), இன்போசிஸ் (Infosys), டெக் மஹிந்திரா (Tech Mahindra) போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் இயங்குவதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற மோடி கும்பலின் கோரிக்கையைச் சீனா ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களும், சீனாவிலிருந்து பல்வேறு வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமெரிக்காவின் கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளால் அழியும் தருவாயில் உள்ள வேளாண்மைத்துறை மேலும் நெருக்கடிக்குள்ளாகி விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் பன்மடங்கு பெருகும்.

முதலீட்டாளர்களுக்கு நட்டம் ஏற்படுமானால்,  முதலீடு செய்யப்படும் நாடுகளின் அரசாங்கமே நட்ட ஈடு தரவேண்டும் என்று கூட்டமைப்பு கூறுகிறது. இதற்காகவே முதலீட்டாளர் பிரச்சினையை அரசாங்கம் சரி செய்யும் முறையை (ISDS -Investor State Dispute Settlement Mechanism) உருவாக்கியுள்ளது. அண்மையில் குஜராத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள்மீது அமெரிக்காவின் பெப்சி நிறுவனம் 1.05 கோடி நட்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார்மயம், தாராளமயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட் மயமாக்குதல், தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்குதல், நிலம், மூலப் பொருட்கள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான கார்ப்பரேட்டுகளின் உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட 25 அம்சங்களை உள்ளடக்கியதாக இக்கூட்டமைப்பு உள்ளது. இன்னும் பல அம்சங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் முழுமையான ஒப்பந்தமே வெளியிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மையின்மை, கார்ப்பரேட் மயமாக்குதல், பாராளுமன்ற-சட்டமன்றங்களின் ஒப்புதலை மறுத்தல், நாடுகளின் தற்சார்பையும் இறையாண்மையையும் ஒழித்துக்கட்டுதல் மற்றும் அவற்றின் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்தல் போன்ற ஜனநாயக விரோத, மக்கள் விரோத நாசகர கூட்டமைப்பாக இக்கூட்டமைப்பு (RCEP) திகழ்கிறது. சீன ஏகாதிபத்திய டிராகன் இரத்தவெறியுடன், சிவப்பு முகமூடியுடன் தெற்காசிய நாடுகளை வேட்டையாட இக்கூட்டமைப்பு அனுமதிக்கிறது.

சீனாவின் வர்த்தக கூட்டமைப்பிற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள்

இக்கூட்டமைப்பு உருவானதிலிருந்தே ஆசியான்’ (ASEAN) நாடுகளில் கடும் எதிர்ப்புகள் துவங்கிவிட்டன. கடந்த 6 ஆண்டுகளாக கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.

தாய்லாந்தின் எய்ட்ஸ் ஆக்சஸ் பவுண்டேஷன் (AIDS   Access Foundation of Thailand) சாதாரண மக்கள் எயிட்ஸ் மருந்துகளைப் பெறுவதற்கு இந்த வர்த்தகக் கூட்டமைப்பு தடையாக மாறும் என அறிவித்து 6 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகிறது. செப்டம்பர் 2019-இல் தாய்லாந்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆசியான் சிவில் சொசைட்டி (ASEAN CIVIL SOCIETY) மற்றும் ஆசியான் பீப்பிள் போரம் (ASEAN PEOPLE FORUM) போன்ற அமைப்புகள் சீனாவின் வர்த்தகக் கூட்டமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்தோனேஷியா விவசாயிகள் சங்கம் (Indonesean Peasant Union), இது விதைகள் மீதான விவசாயிகள் உரிமையைப் பறிக்கும் வர்த்தகக் கூட்டமைப்பு எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கிழக்கு ஜாவா (East Java) மற்றும் மற்றும் ஏசக் (Acech) பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய விதைகளை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்படுவது தொடங்கி விட்டதாகவும் இச்சங்கம் கூறுகிறது.


பிலிப்பைன்ஸ் பெண்கள் குழு (Philipines Women Group) விவசாயத்தையும், சுகாதாரத்தையும், தனியார்மயமாக்கும் மோசமான கூட்டமைப்பு எனவும், இது பெண்களின் நல்வாழ்விற்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவைச் சேர்ந்த கோசல் (Kosal) என்ற தொழிலாளி, குறைவான கூலி, அதிகபட்ச உற்பத்தி இலக்கு, நீண்ட நேரம் வேலை, கொத்தடிமைத்தனமான காண்ட்ராக்ட் ஒப்பந்தமுறைத், தொழிலாளர்களை அழிக்கும் தொழிற்கொள்கை என்று இக்கூட்டமைப்பின் வர்த்தகக் கொள்கை குறித்து தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

தெற்குலகின் மீதான பிராந்தியக் கூட்டமைப்பு (Regional Organization for Focus on Global South) மற்றும் பிலிப்பைன்ஸின் வர்த்தக நீதி அமைப்பு (Trade Justice of Global South) முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு தரும் முறையைக் (ISDSM  Investor State Dispute Settlement Mechanism of RCEP) கடுமையாக ஆட்சேபித்துள்ளது. இது மக்கள் நலக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும், கார்ப்பரேட் நலன்களுக்கானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் உலக நீதி (Indonesia for global justice) எனும் அமைப்பானது இக்கூட்டமைப்பு சட்டங்களையும், தேசிய இறையாண்மையையும் தகர்க்கிறதுஎன்று கடுமையாகக் கண்டித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்படுவது குறித்து தனது ஐயப்பாட்டை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகள்

2017 ஜூலை மாதம் 17-28 தேதிகளில் இக்கூட்டமைப்பின் 18 வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஐதராபாத்தில் நடந்தது. இதை எதிர்த்துத் தெலுங்கானா ரைத்து ஆர்ஏசி (Telugana Rythu RAC) ஆல் இந்தியா கிசான் சபா (All India Kisan Sabha) என்ற அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஏஐகேஎம்ஸ் (AIKMS), ரைத்து சுவராஜ் வேதிகா (Rythu Swaraj Vedika), ஐஎப்டியூ, தெலுங்கானா ரைதாங்க சமிதி, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பிஎஸ்ஐ, தலித் பெண்கள் அமைப்பு, தலித் அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு, ஜன வியாக்யான வேதிகா, தலித் பகுஜன் ஃப்ரண்ட், டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Doctors without borders) போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தின. இரண்டு ஆண்டுகளாக இந்த வர்த்தகக் கூட்டமைப்பில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

பாஜக அரசின் அமைச்சரவையிலிருந்தே கூட்டமைப்பில் மோடி கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வேளாண்துறை அமைச்சர் நரேந்திரதோமர், ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி, இரும்புத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுரங்கம்-கனிம வளத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் போன்றோர் இக்கூட்டமைப்பில் மோடி கையெழுத்திடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு என்பது சந்தர்ப்பவாதமாக உள்ளது. அமெரிக்க நிதி மூலதனக் கும்பல்களுக்கு நாட்டைத் திறந்து விடும்போது வாய்மூடிக் கிடந்தவர்கள் தானே இவர்கள்? “பொருளாதாரப் புலிநிர்மலா, அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவித்தபோது கைதட்டிய கும்பல்கள் தானே இவை? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இவ்வொப்பந்தம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அமெரிக்க நலன்களுக்கான தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். ஆர்எஸ்எஸின் சுதேசியம்என்பதன் உண்மை முகம் இதுதான். இக்கூட்டமைப்பில் இந்தியா இணைவதை அமெரிக்கா எதிர்த்துள்ளதை இத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸின் சகோதர அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரான் மன்ச் (Swadhesi Jagran munch) எனும் விவசாயிகள் அமைப்பு  இக்கூட்டமைப்பில் இணையும் மோடி அரசின் முந்தய முடிவை எதிர்த்து  பத்து நாட்கள் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. அதன் தலைவர் அஸ்வானி மகாஜன்  கூறுவதாவது: “1991-லிருந்து சுதேசிய தொழிற்கொள்கை இல்லாததால் உற்பத்தி, வேளாண்துறை இரண்டும் நெருக்கடியில் உள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இந்திய உற்பத்தியை ஒழித்துவிட்டன. அதேபோல் சீனாவின் பிராந்திய வர்த்தக கூட்டமைப்பின்உலக மதிப்புச் சங்கிலி (Global Value chain) என்பது ஏமாற்று வேலையாகும். அது தனித்து உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. அவை பன்னாட்டு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களே பயனடையப் போகின்றன. இந்தியாவிற்கு எந்தப் பலனும் இல்லைஎன்று அறிக்கை விடுத்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தின் முழு விவரத்தை மட்டுமின்றி இதுவரை இந்தியா மீது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் பற்றிய ஆய்வுமுறைகளையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான தீபக் சர்மா, இந்த வர்த்தக ஒப்பந்தம்மூலம் பால் உற்பத்தியில் ஈடுபடும் சுமார் 100 மில்லியன் விவசாயிகள், சிறு-குறு நடுத்தர, தேசிய முதலாளிகள் , நிலமற்ற மற்றும் சிறு உடமை விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும், இவர்களால் சர்வதேச சந்தையுடன் போட்டி போட முடியாது எனவும் கூறியுள்ளார். 

மேற்கண்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிக்குள்ளும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகள் மத்தியிலும்  எழுந்த கடும் எதிர்ப்புகளும் மோடி கும்பல் தன் முடிவை மாற்றியதற்கு ஒரு காரணமாக அமைந்தன.

இக்கூட்டமைப்பை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளில் நடக்கும் போராட்டங்களின் பின்புலத்தில் அமெரிக்கா இருப்பதற்கான வாய்ப்புகளை நாம் மறுப்பதற்கில்லை. அதே போன்று சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான முயற்சிகளை எதிர்த்தும், இந்த வர்த்தகக் கூட்டமைப்பை எதிர்த்தும் வெடித்துக் கிளம்பும் போராட்டங்களை தொண்டுநிறுவனங்கள் கைப்பற்றி அமெரிக்க சார்பு நிலை எடுக்கின்றன. ஏனெனில் இவை அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிகளையும், புதிய பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றியும் மவுனம் காக்கின்றன.

காங்கிரஸ் கட்சி இவ்வொப்பந்தம் தற்கொலைக்குச் சமம் எனவும், இதில் மோடி கையெழுத்திடக் கூடாது எனவும் கூறியது. ஆனால் 2011-இல் கம்போடியாவில் வெளியிடப்பட்ட இதற்கான பூர்வாங்க அறிவிப்பையும் மன்மோகன் சோனியா கும்பல் ஆதரித்தது மட்டுமின்றி 2014 வரை நடந்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டது. சீனா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்தது முதல் 120க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) சீனாவுடன் மன்மோகன் கும்பல் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதித்துள்ளது. ஆனால் தற்போது இக் கூட்டமைப்பை எதிர்ப்பதாக அப்பட்டமாக நாடகம் போடுகிறது. காங்கிரசுக்கு வால் பிடிக்கும் திமுக போன்ற மாநில கட்சிகள் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. சிதம்பரத்தின் கைது கண்முன் வந்து போவதால் திமுக கள்ள மௌனம் காக்கிறது. மோடி கும்பலின் எடுபிடிகளான எடப்பாடி-ஓபிஎஸ் கும்பல் பாஜக-ஆர் எஸ்எஸ்ஸின் அறிவிக்கப்படாத தமிழக கிளையாகவே மாறி விட்டது. அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாகவே இந்துத்துவ பிற்போக்கு குப்பைகளைகக்குகின்றனர். இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படையாகவே பேசுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் மீதான ஆதிக்க சாதி வெறி மற்றும் தீண்டாமை வன்கொடுமைகளை திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு.

சிபிஐ சிபிஎம் போன்ற திருத்தல்வாத கட்சிகள் இந்தியா இக்கூட்டமைப்பில் இணைவதை எதிர்ப்பது வரவேற்புக்குரியது. ஆனால் ஒருபுறம் சீன ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடு எனவும், சீன அதிபரை அன்போடு’ ‘தோழர்ஜிங்பிங் என்றும் கூறுகின்றன. மறுபுறம் சீனாவின் மேலாதிக்கத்திற்கான வர்த்தக கூட்டமைப்பைஎதிர்த்துப் போராட்டங்களையும் அறிவித்தன. இவ்வாறு இரட்டை நிலை எடுக்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் கூலி எழுத்தாளரும் இந்துத்துவ பிற்போக்குவாதியுமான சமஸ் இந்து தமிழ் திசை நாளிதழில் சீனாவை சோசலிச நாடு என்றும், சிபிஐ, சிபிஎம் கட்சிகளை சோசலிச கட்சிகள் என்றும் கூறி திருத்தல்வாதத்திற்கு சோசலிச நாமகரணம் சூட்டுகிறார். திருத்தல்வாதத்தின் பின்னடைவை சோசலிசத்தின் பின்னடைவாக எழுதுகிறார். காந்தி சோசலிசம், அண்ணா சோசலிசம், கருணாநிதி சோசலிசம் தேவை என்று அக்கட்சிகளுக்கு அருளுரை வழங்குகிறார். ஆனால் அக்கட்சிகள் விஜயகாந்த் சோசலிசம்வரை பார்த்த கட்சிகள்தான். இப்படிப்பட்ட சமஸ்க்கு மறுப்பு எழுதும்போது தீக்கதிர் ஹாங்காங் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து எழுதுகிறது. ஹாங்காங்கின் இறையாண்மையைக் காலில் போட்டு நசுக்கும் சீன பாசிசத்தை சோசலிசம் என மக்களை ஏமாற்றுகிறது. இதன் மூலம் கட்டியமைக்கப்படும் சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தீனி போடுகிறது. சீனா நாளை இந்தியாவை ஆக்கிரமித்தாலும், இந்தியா மீது போர் தொடுத்தாலும் தோழர் ஜிங்பிங்கின் ஆக்கிரமிப்புப் போர் வெல்க! என தீக்கதிர் முழங்கும் என்று நம்புவோமாக! புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதில் தமிழ் இந்துவும், தீக்கதிரும் ஒன்றுதானே!

பாட்டாளி வர்க்க நிலைபாடு

சீனாவின் RCEP திட்டம் என்பது டங்கல் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆகும். டங்கல் திட்டம் அமெரிக்க, ஐரோப்பிய மேலாதிக்க நலன்களுக்கானதாக இருந்தது. சீனாவின் இந்த பிராந்திய ஒப்பந்தத் திட்டம் சீன மேலாதிக்க நலன்களுக்கானதாக உள்ளது.

பாட்டாளி வர்க்க அணுகுமுறை என்பது எந்த ஒரு ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தையும் எதிர்ப்பதாக இருக்க வேண்டும். நிதி மூலதனம் என்பது புல்லுருவித்தனமானது; அழுகல் தன்மை கொண்டது; அது அமெரிக்காவின் வெள்ளைநிதி மூலதனமாக இருந்தாலும், சீனாவின் சிவப்புநிதி மூலதனமாக இருந்தாலும் ஒரே பண்புதான். சுதேசிய தொழில் வளர்ச்சியை முற்றாக அழித்து சில தரகர்களை உருவாக்கி தான் வாழ்வதே நிதி மூலதனத்தின் ஒரே பண்பாகும். நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்புவதில்லை, அடிமைத் தனத்தையே விரும்பும்.

அந்நிய நிதி மூலதனம் இந்தியா போன்ற காலனிய நாடுகளை வாழவைக்கவில்லை. இனியும் வாழவைக்காது. மாறாக இந்திய தரகு வர்க்க மூலதனம்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தை வாழவைக்கிறது. அதன் மூலம் தானும் வாழ்கிறது.

இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இணையும்பட்சத்தில் சீனாவின் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் சென்றுவிட்டதாகவோ, புதிய பொருளாதாரக் கொள்கைகளை துறந்துவிட்டதாகவோ பொருள் கொள்ள முடியாது. இந்தியா அமெரிக்காவின் புதிய காலனிய அடிமை நாடாகவே நீடிக்கும் வகையில் பல்வேறு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க நிதிமூலதன கும்பல்களின் நுகத்தடியில் இந்தியா வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இந்திய தரகு ஆளும் வர்க்கங்களால் வெளிவர முடியாது. சீனாவின் கூட்டமைப்பில் இணைவதில்லை என்ற மோடியின் முடிவும் கூட இதையே உணர்த்துகின்றன. சீனாவின் கூட்டமைப்பில் இணைந்து தற்காலிகமாக இந்திய தரகு முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்க்க நினைத்து ஜிங்பிங்குடன் தரகு வர்க்க மோடி ஆட்சி பேரம் பேசியது. இதனால், இந்தியாவிற்குள் நுழையும் சீன நிதி மூலதனத்தை தடுக்கும்பொருட்டு அமெரிக்கா இந்தியாவுடன் புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் உடன்பாடு கண்டுள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு தரகு வர்க்க முரண்பாடுகளை அமெரிக்க, சீன ஏகாதிபத்திய நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதையும்; ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால், இதைப் பயன்படுத்தி இந்திய தரகர்களின் பேரம் பேசும் தன்மை கூடியிருப்பதையுமே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன. சீனாவின் வர்த்தக கூட்டமைப்பில் இந்தியா இணையும் பட்சத்தில் கூட இந்தியாவின் மீதான அமெரிக்காவின் புதிய காலனிய சுரண்டல் மேலும் தீவிரமடையும். ஏகாதிபத்திய முரண்பாடுகளும் தீவிரமடையும். இந்திய தரகு வர்க்க முரண்பாடுகளும் கூர்மையடையும். ஏனெனில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தங்களும் இந்தியாவின் நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை; மாறாக நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தவே செய்யும். சீனாவின் கூட்டமைப்பில் இணைந்தால் என்னென்ன பாதிப்புகள் நிகழுமோ அதே அளவிலான பாதிப்புகள் அமெரிக்கவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாகவும் ஏற்படும் என்பது நிச்சயம். ஆகவே அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளும், இருதரப்பு ஒப்பந்தங்களும் உலக முதலாளித்துவ நெருக்கடிகளையும், காலனிய நாடுகளின் நெருக்கடிகளையும் தீர்க்கப்போவதில்லை; சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், பலதரப்பு ஒப்பந்தங்களும் கூட மேற்கண்ட நெருக்கடிகளை தீர்க்கப்போவதில்லை.

எந்தவொரு ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தையும் சாராத சுதேசிய சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியே இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளின் நெருக்கடிகளைத் தீர்க்கும். அதற்கு அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு சேவை செய்யும் இந்திய தரகு முதலாளித்துவ, நிலவுடமை உற்பத்தியை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தகர்த்து மக்கள் ஜனநாயக குடியரசை அமைப்பதுதான் ஒரே வழியாகும்.

சமரன், நவம்பர், 2019

No comments:

Post a Comment