Friday, 14 February 2020

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து
ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்
பகுதி 3

சென்ற இதழில் நவீன டிராட்ஸ்கியவாதம் பற்றியும் அது எம்.எல் அமைப்புகளுக்குள் ஊடுருவதற்கான காரணங்களையும் பார்த்தோம். இந்த இதழில் மனோகரன் டிராட்ஸ்கி பற்றியும், ஸ்டாலின் பற்றியும் முன்வைத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் பகுதி 2இல் காணலாம்.

மனோகரன் கூறுவது: தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பது என்ற பிரச்சினையில் ஸ்டாலினுக்கும் டிராட்ஸ்கிக்கும் அரசியல் முரண்பாடு ஏற்பட்டது.

டிராட்ஸ்கியைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி முடிந்தப் பிறகுதான் ரஷ்யாவில் சோசலிசத்தைக் கட்ட முடியும் என்று ஒரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்க முடியாது என்ற நிலையை எடுத்தார். தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத் என்பதை மறுத்தார். பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்ற நிலையை எடுத்தார்.

மாறாக, ஸ்டாலினோ ரஷ்யாவில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி சோசலிசத்தை கட்டியமைக்க முடியும் என்ற நிலையை எடுத்தார். தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத்துகளை முதன்மைப்படுத்தினார்.

இந்த கருத்து முரண்பாடுகள் தான் கோஷ்டியாக வெளிப்பட்டது. பின்னர் 1927 டிசம்பரில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1928ல் நாடுகடத்தப்பட்டார்.

மேலும் டிராட்ஸ்கியையும் அ.மார்க்ஸ் கும்பலையும் ஒன்றாக பார்க்க முடியாது. டிராட்ஸ்கி மார்க்சியத்தையும் லெனினியத்தையும் ஏற்பதாக கூறியவர். ஒரு நாட்டில் சோசலிசம் படைக்க முடியாது. மாறாக உலகு தழுவிய புரட்சி என்றக் கோட்பாட்டை முன்வைத்தவர்.

(பக்கம் 6ல்) நிரந்தரப் புரட்சி எனும் கோட்பாடு டிராட்ஸ்கி கோட்பாடு அல்ல. மாறாக அது மார்க்ஸ்-எங்கெல்ஸ் வகுத்தளித்த கோட்பாடு. அதை லெனின் ஏற்றுக் கொண்டார். அதனடிப்படையில்தான் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியை தொடர வேண்டும் என்று கூறினார். ஒரு தனி நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை லெனின் சூழ்நிலைக்கேற்றவாறு இயங்கியல் ரீதியாகக் கையாண்டார். இதுபற்றி நாம் பயில வேண்டும் என்றே கருதுகிறேன்.

லெனின் உயிரோடு இருக்கும்போது டிராட்ஸ்கி கட்டிய அனைத்து கோஷ்டிகளும் லெனினுடைய இறப்புக்கு பிறகும் தொடர்ந்து டிராட்ஸ்கி தலைமையில் இயங்கின. ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால் டிராட்ஸ்கி கோஷ்டிவாதி ஆனான்என்று மனோகரன் கூறுவது வரலாற்று உண்மைக்கு மாறானதாகும். இது ஸ்டாலினை தாக்குவதும் டிராட்ஸ்கியை ஆதரிப்பதுமாகும். மேலும் எதேச்சதிகாரம் கோஷ்டிகளை உருவாக்கும் என்பது கோஷ்டிவாதம் பற்றிய மார்க்சிய லெனினிய நிலைபாட்டிற்கு எதிரானதாகும் என்பது நால்வரணியை எதிர்த்த போராட்டத்தில் ஐவரணி அறிக்கை 2ல் விளக்கப்பட்டுள்ளது.

தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பது சாத்தியமில்லை என்பதும் உலகுதழுவிய புரட்சியே முதலில் சாத்தியம்; அதுவே தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் காப்பாற்றும் என்பதும் டிராட்ஸ்கி நிலைபாடாகும். ஆனால் இது அபத்தமான இடது நிலைபாடு என்றும், காவுத்ஸ்கி வாதம் என்றும் லெனின் விமர்சித்தார். இது திட்டத் துறையில் கலைப்புவாதம் என்று ஏ.எம்.கே. கூறியுள்ளார். டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிப் பற்றி லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலில் கோட்பாடு என்ற தலைப்பில் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.

இவ்வளவு கூறிய பிறகும், சிலர் கேட்கலாம், “நீங்கள் சொல்கிறதுதான் உண்மை என்றால், ‘நிரந்தரப் (தடைப்படாத) புரட்சிஎன்ற கருத்தை எதிர்த்து ஏன் லெனின் போராடினார்?”

ஏனெனில் விவசாயிகளின் புரட்சிகரமான ஆற்றலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்குபயனப்டுத்த வேண்டும் என்று லெனின் சொன்னார். ஜாரியத்தை அடியோடு ஒழிப்பதற்கும், தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு மாறிச் செல்வதற்கும் அவர்களுடைய புரட்சி ஆற்றலைப் பரிபூரணமாக உபயோகப்படுத்த வேண்டும் என்றும் லெனின் சொன்னார். ஆனால், “நிரந்தரப் புரட்சிஎன்று தத்துவம் பேசியவர்கள், ரஷ்யப் புரட்சியில் விவசாயிகள் வகிக்கும் முக்கியமான பாத்திரத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை. விவசாயிகளின் புரட்சிகரமான உறுதியின் பலத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள். அதோடு, விவசாயி மக்களுக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்ல ரஷயத் தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கும் பலத்தையும், ஆற்றலையும் குறைத்து மதிப்பிட்டார்கள். இதன் வழியாக, முதலாளிய வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து விவசாய மக்களை மீட்கும் வேலைக்கு விலங்கிட்டனர். தொழிலாளி வர்க்கத்தின் கீழ் விவசாயிகளைத் திரட்டும் வேலைக்கு விலங்கிட்டனர்.

மேலும் ஒரு காரணம் உண்டு: தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு அதிகாரம் மாறுவதானது உச்சியையெட்டிவிட்ட புரட்சிக்கு மகுடமிட்டதாக அமையவேண்டும் என்று லெனின் சொன்னார். நிரந்தரப் புரட்சிதத்துவ ஆசாமிகள் கூரியது என்ன? முதலில், எடுத்த எடுப்பில், தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் புரட்சியைத் தொடங்க வேண்டும் என்றார்கள். இப்படிச் சொன்னபோது, பண்ணையடிமை முறையின் அழிக்கப்படாத மிஞ்சிய சின்னங்கள் போன்ற அவர்கள் கருத்துப்படி, “அற்பமான விசயங்களைஅவர்கள் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்கிறோமே என்றோ, ரஷ்ய விவசாயி வர்க்கம் போன்றமிக மிக முக்கியமான ஒரு சக்தியை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையே என்றோ உணரத் தவறினர். இத்தகைய கொள்கை, தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் விவசாயிகளைத் திரட்டும்படி செய்வதில் இடையூறு செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினர்.

நடுவில் தடைபடாமல் புரட்சி நடந்தேற வேண்டும் என்ற கருத்துக்காக நிரந்தரபுரட்சிவாதிகளை லெனின் எதிர்க்கவில்லை. அந்த கருத்தை லெனினே வற்புறுத்தி வந்திருக்கிறார். தொழிலாளி வர்க்கத்துக்கு மிகவும் சக்தி வாய்ந்த துணை பலமாக விளங்கக் கூடிய விவசாயிகள் வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டதற்காகவும், தொழிலாளி வர்க்கம் புரட்சியில் மேலாதிக்கம் பெறுவது என்ற கருத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததற்காகவுமே, அவர்களை லெனின் எதிர்த்தார்.

நிரந்தரப்புரட்சி என்ற கருத்து புதியது அல்ல. இது 1850ல் மார்க்ஸ் வெளியிட்ட ஒரு கருத்தேயாகும். அவ்வருடத்தில், கம்யூனிஸ்ட் லீக்கில் செய்த பிரசங்கம் என்ற நூலில் இக்கருத்தை முதல் முதலாக மார்க்ஸ் முன்வைத்தார். அந்த ஆவணத்திலிருந்து தற்கால நிரந்தரப் புரட்சிவாதிகள்அக்கருத்தை எடுத்தார்கள். மார்க்சிடமிருந்து எடுத்தது ஒரு பக்கமிருக்க, அப்படி எடுத்துக் கையாண்டவர்கள் அந்த கருத்தைத் திரித்துக் கூறினார்கள். இந்தப் புரட்டின் விளைவாக அந்தக் கருத்தைக் கெடுத்து அடியோடு காரியத்துக்குப் பயனற்றதாக ஆக்கிவிட்டார்கள். இந்த தத்துவப் புரட்டை உடைத்து நேர் செய்வதற்கு அனுபவம் முதிர்ந்த லெனினின் உதவி அவசியமாயிற்று. மார்க்ஸ் கருத்தை, அதன் துல்லியமான வடிவத்தில், அர்த்தத்தில், கிரகித்துக்கொண்டு, புரட்சியைப் பற்றி தான் வரையறுத்த தத்துவத்துக்கு அச்சாணியாக லெனின் அமைத்துக் கொண்டார்.

அந்த (கம்யூனிஸ்ட் லீக்) சொற்பொழிவில் மார்க்ஸ் சொன்னதென்ன? கம்யூனிஸ்ட்டுகள் எந்தெந்த புரட்சிகரமான-ஜனநாயகக் கோரிக்கைகளை வெல்லவேண்டும் என்று அதில் வரிசையாக மார்க்ஸ் வகுத்துக் கூறுகிறார். அதன் பிறகு தடைப்படாது நடந்தேறவேண்டிய புரட்சியைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

மேலே நான் குறிப்பிட்ட கோரிக்கைகளில் கூடுமானவரை எல்லாவற்றையும் பெற்றவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புரட்சியை முடித்துவிட ஜனநாயக மனப்பான்மையுள்ள மத்தியதர வர்க்கம் விரும்பும். ஆனால், நம் நலன்களும், கடமையும் அந்த புரட்சியை நிரந்தரமானதாக ஆக்குவதில்தான் அடங்கியுள்ளது. உடமை வர்க்கங்கள் யாவும் ஆதிக்கபீடத்திலிருந்து வீழ்த்தப்படும் வரையில், தொழிலாளி வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், ஒரு நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் முக்கியமான நாடுகள் அனைத்திலும் தொழிலாளிகளுக்கு இடையில் போட்டி இல்லாதவாறு செய்து, பிரதான பொருளுற்பத்தி சக்திகள் யாவும் தொழிலாளிகளின் கையில் திரண்டு சேரும் நிலைமை உண்டாகும் அளவுக்கு தொழிலாளிகளின் கூட்டுறவு முன்னேறும் வரையில் புரட்சி நீடித்து நடத்தப்படவேண்டும்

இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்:

1.1850-60ல், ஜெர்மனியில், உடனடியாக தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் புரட்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மார்க்ஸ் கூறவில்லை. தற்கால நிரந்தரப் புரட்சி ஆசாமிகள்போடும் திட்டத்துக்கு நேர் மாறாகவே கூறினார்.

2.ஒன்றுக்குப் பின்னொன்றாக முதலாளிய வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும், படிப்படியாக அதிகாரப் பீடத்திலிருந்து தூக்கியெறிந்து புரட்சியின் காரியத்துக்கு முடிவாக மகுடமிட்டதுபோல் தொழிலாளி வர்க்கத்து அரசியல் அதிகாரம் ஸ்தாபிதம் ஆகவேண்டும் என்று மட்டுமே மார்க்ஸ் தனது அபிப்பிராயத்தை வரையறுத்தார். இதன் நோக்கம் என்னவென்றால், தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக் கனலை மூட்டி விடுவதற்காகத்தான் என்றும் மார்க்ஸ் நிர்ணயிப்பு செய்தார். ஏகாதிபத்தியம் நிலவிய நிலைமைகளில் தொழிலாளி வர்க்கப் புரட்சியைப் பற்றி தாம் வகுத்த தத்துவத்தை நமது புரட்சியின் போக்கில் கடைபிடித்த காலத்தில் லெனின் போதித்து நிறைவேற்றிய அத்தனை போதனைகளும் மார்க்சின் மேற்சொன்ன கருத்துக்கு முற்றிலும் பொருத்தமாயிருந்தன.

ஆக, இதிலிருந்து தெரிவதென்ன? ரஷ்யப் புரட்சியில் விவசாயிகள் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றியும், தொழிலாளி வர்க்கத்தின் மேலாதிக்கம் என்ற கருத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நமது ரஷ்ய நிரந்தரப் புரட்சிவாதிகள் குறைத்து மதிப்பிட்டார்கள் என்பது மட்டுமல்ல, மார்க்சினுடைய நிரந்தரப்புரட்சி கருத்தைக் திரித்து நடைமுறை காரியத்துக்கு உபயோகப்படாதபடி பாழ்படுத்திவிட்டனர் என்பது விளங்கும்.

இதனால்தான் நம் நிரந்தரப் புரட்சிவாதிகளின்தத்துவத்தை லெனின் பரிகசித்தார். ஒரிஜினர்என்றும் அபூர்வமானதுஎன்றும் கிண்டல் செய்தார். இந்த அபூர்வமான தத்துவம் பத்து வருடங்களில் ஒரு பலனையும் உண்டு பண்ணவில்லையே! இதற்கு காரணம் என்ன என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்!என்று அவர்களின் பேரில் லெனின் குற்றம் சாட்டினார். (ரஷ்ய நிர்ந்தரப் புரட்சிஆசாமிகளின், தத்துவம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த பிறகு, 1915ல் லெனின் கட்டுரை எழுதினார். (லெ.தே.நூ. 18, பக்கம் 317 காண்க)

அதனால்தான் இந்த தத்துவத்தை, ‘பாதி மென்ஷ்விக்தன்மை வாய்ந்தது என்று பின்வருமாறு கூறினார் லெனின்:

புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் போல்ஷ்விக்குகள் வெளியிட்ட முழக்கத்தை அவர்களிடமிருந்து அந்த தத்துவம் கடன் வாங்கி இருக்கிறது. மறுபக்கத்தில், விவசாயிகள், புரட்சியில் வகிக்கும் பாத்திரத்தை நிராகரிக்கும்மென்ஷ்விக்குகளின் கருத்தை அந்த தத்துவம் மென்ஷ்விக்குகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது.” (லெனினின் புரட்சியின் இரண்டு பாதைகள் என்ற கட்டுரையைக் காண்க. லெ.தே.நூ. 18)
இதுதான், முதலாளிய ஜனநாயகப் புரட்சி, தொழிலாளி வர்க்கப் புரட்சியாக மாறிச் செல்வது பற்றி லெனின் விளக்கிய கருத்து. தொழிலாளி வர்க்கப் புரட்சியை நோக்கி உடனடியாகமுன்னேறுவதற்காக முதலாளியப் புரட்சியைப் பயன்படுத்துவது என்கிற லெனின் கருத்தும் இதுதான்.

மேலே கவனிப்போம்.

இதற்கு முன்பு ஒரு தனி நாட்டில் மட்டும் புரட்சி நடந்து வெற்றியடைய முடியாது என்று கருதப்பட்டு வந்தது. ஏனெனில், முதலாளிய வர்க்கத்தை முறியடிப்பதற்கு, ஒரு நாட்டில் உள்ள தொழிலாளிகள் மட்டும் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போதாது. எல்லா நாடுகளிலும் அல்லது குறைந்தபட்சம், தொழில் வளர்ச்சி உள்ள பெரும்பாலான நாடுகளில் ஒரே சமயத்தில் தொழிலாளிகள் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற இந்தக் கருத்து உண்மைக்குப் பொருத்தமாக இல்லை. இப்போது தனிநாட்டில் நடக்கும் புரட்சி வெற்றியடையும் என்று கவனித்து நாம் காரியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ஏகாதிபத்தியம் நிலவும் நிலைமைகளின் கீழ் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவ வளர்ச்சி நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுடையதாக அப்போதுக்கப்போது நெருக்கடிகளில் விழுந்து, எழுந்து விழுந்துகொண்டே போகும் தன்மை பெற்றிருப்பதனாலும், ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே நாசகரமான முரண்பாடுகள் வளர்ந்து அவை தவிர்க்க முடியாதவாறு யுத்தங்களை மூட்டுவதனாலும் உலக நாடுகள் அனைத்திலும் புரட்சி இயக்கங்கள் வளர்வதினாலும் - இவையனைத்தின் விளைவாக தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் புரட்சி வெற்றியடைவது சாத்தியமே என்பது மட்டுமல்லாமல், தனித்தனியான நாடுகளில் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவது அவசியமும் கூட என்றாகிறது. ரஷ்ய புரட்சியின் சரித்திரம் இதற்கு நேரடியான ஆதாரமாகும். எனினும், அதே சமயத்தில், இதை மனதில் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக நிலவவேண்டிய சில அத்தியாவசிய நிலைமைகள் நாட்டில் நிலவினால் மட்டுமே, முதலாளிய வர்க்கத்தை வெற்றிகரமாக வீழ்த்த முடியும். அந்த நிலமைகள் நிலவாதபோது தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பிரச்சினையே எழாது.

எனவே, டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு, அதை லெனின் ஏற்றுகொண்டு இயங்கியல் ரீதியாக கையாண்டார் என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும். டிராட்ஸ்கியவாதிகள் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை மார்க்சியக் கோட்பாடு என்றும் அதையே லெனின் ஏற்று செயல்படுத்தினார் என்றும் கதையளக்கின்றனர்.

ஸ்டாலின் ரஷ்யாவில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி சோசலிசத்தை கட்டியமைக்க முடியுமென்ற நிலையெடுத்தார் என்று மனோகரன் கூறுகிறார். ஆனால் ஸ்டாலின் இவ்வாறு சொல்லவில்லை. லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலில் பக்கம் 56 (கீழைக்காற்று) ஸ்டாலின் கூறுவதாவது: பிறநாடுகளின் புரட்சி வளர்ச்சியடைவதற்கு ஆதரவளிப்பது என்பது, வெற்றிபெற்ற புரட்சியின் இன்றியமையாத கடமையாகிறது. எனவே, ஒரு நாட்டில் வெற்றி பெற்ற புரட்சியானது, பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு விரைவுபடுத்த உதவும் ஒரு சாதனமாகவே தனது புரட்சியைக் கருத வேண்டும்என்றார். ஆனால் லெனினியத்தை உயர்த்திப் பிடித்த ஸ்டாலின் மீதான டிராட்ஸ்கிவாதிகளின் அவதூறை மனோகரன் வழிமொழிகிறார்.

டிராட்ஸ்கியையும் அ.மார்க்ஸ் கும்பலையும் ஒன்றாக பார்க்க முடியாது. டிராட்ஸ்கி மார்க்சியத்தையும் லெனினியத்தையும் ஏற்பதாக கூறியவர். ஒரு நாட்டில் சோசலிசம் படைக்க முடியாது. மாறாக உலகு தழுவிய புரட்சி என்றக் கோட்பாட்டை முன்வைத்தவர்என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கியினுடைய நிரந்தரப் புரட்சியை ஆதரிப்பதாகும். அதாவது தனிநாட்டில் புரட்சியை மறுப்பதும் உலகப் புரட்சி பேசுவதுமாகும். லெனின் சொன்னவாறு இது காவுத்ஸ்கி வாதமாகும். ஏ.எம்.கே. சொன்னவாறு இது திட்டத் துறையில் கலைப்புவாதமாகும். இதனால்தான் லெனின் சொன்னவாறு ஐரோப்பா முழுவதும் ஏன் புரட்சி பரவவில்லை என்று லெனினியத்தை மனோகரன் கேள்விக்குள்ளாக்குகிறார்.
தொடரும்...

சமரன் டிசம்பர் 2019

No comments:

Post a Comment