Monday 21 October 2019

தோழர் ஏ.எம்.கே வழியை உயர்த்திப் பிடித்து தனது புரட்சிகரப் பயணத்தை மீண்டும் துவங்குகிறான் சமரன்!


தோழர் ஏ.எம்.கே வழியை உயர்த்திப் பிடித்து தனது புரட்சிகரப் பயணத்தை மீண்டும் துவங்குகிறான் சமரன்!

மார்க்சிய லெனினியப் புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறான் சமரன்!!


மாபெரும் மார்க்சிய லெனினியவாதியும், தலை சிறந்த புரட்சியாளரும், மிகச்சிறந்த பாட்டாளி வர்க்க ஜனநாயகவாதியும், அரை நூற்றாண்டு காலம் இரகசிய ஸ்தாபன முறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவரும், போல்ஷ்விக் கட்சி மற்றும் சமரன் ஏட்டின் நிறுவனருமான தோழர் ஏ.எம்.கே கடந்த 25.11.2018 அன்று வீரமரணம் அடைந்தார். தியாக தீபம் தோழர் ஏ.எம்.கே அவர்களுக்கு தனது புரட்சிகர சிவப்பு அஞ்சலியை உரித்தாக்குகிறான் சமரன்.

சமரன் என்ற பெயர் ஏ.எம்.கே அவர்களையே குறிக்கிறது என்பதை இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாறு நன்கறியும். சமரன் என்பது மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனையை இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளின் ஸ்தூலமான நிலைமைகளுக்குப் பொருத்துகின்ற அரசியல் சித்தாந்த தலைமையின் சிறப்பம்சத்தைக் குறிக்கிறது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் ஒளியில், தோழர் ஏ.எம்.கே வழியில் சமர் புரிய மீண்டும் வருகிறான் சமூகப் புரட்சியாளன் சமரன்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கு இடையில் செல்வாக்கு மண்டலங்களுக்கான முதல் பனிப்போர் மேகம் சூழ்ந்ததொரு சர்வதேசச் சூழலில்; சர்வதேச நிதி மூலதன நலன்களிலிருந்து இந்திரா கும்பல் தேசிய ஒருமைப்பாடு எனும் பெயரில் பெரும் தேசியவெறி பாசிசத்தை கட்டியமைத்ததொரு தேசியச் சூழலில் சமரன் தனது முதல் பயணத்தை துவங்கினான்.

அமெரிக்க - நேட்டோ மற்றும் இரசிய - சீன ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான இரண்டாவது பனிப்போர் துவங்கியுள்ளதொரு சர்வதேசச் சூழலில்; அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களிலிருந்து மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசத்தை கட்டியமைத்து வரும் ஒரு தேசியச் சூழலில் தனது புரட்சிகரப் பயணத்தை மீண்டும் துவங்குகிறான் சமரன்.

முதல் பனிப்போர் கட்டத்தில் சீனா முதலாளித்துவப் பாதைக்கு திரும்பிய காரணத்தாலும், உலகில் சோசலிச முகாம்எங்குமே இல்லாத காரணத்தாலும், ‘உலகப் போரை உள்நாட்டு போராக மாற்றுவோம்!என்று லெனினிய வழியில் முழங்கினான் சமரன்.

இரண்டாவது பனிப்போர் கட்டமான இன்றையச் சூழலிலும், ‘சோசலிச முகாம்எங்கும் உருவாகாத காரணத்தால், ‘உலகப்போரை உள்நாட்டு போராக மாற்றுவோம்!!என்று லெனினிய வகைப்பட்ட ஏ.எம்.கே வழியில் முழங்குகிறான் சமரன்.

பாசிச இந்திரா கும்பலின் எமர்ஜென்சி ஆட்சிக்கு மாற்று ஜனதா-திமுக கும்பலேஎன்ற திருத்தல்வாத கருத்துக்கள் கோலோச்சிய சூழலில், எந்தவொரு அதிகாரத்துவ தரகு முதலாளித்துவப் பிரிவும் பாசிசத்தை ஒழிக்காது எனவும், ‘புதிய ஜனநாயகப் புரட்சியே மாற்றுஎனவும் முழங்கினான் சமரன்.

இந்துத்துவப் பாசிச பாஜக-அதிமுக கும்பலுக்கு மாற்று காங்கிரசு-திமுக கும்பலேஎன்ற திருத்தல் வாதம் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் இன்றைய சூழலில், பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டியமைத்து, அதை புதிய ஜனநாயகப் புரட்சிக்கான ஐக்கிய முன்னணியாக வளர்த்தெடுக்க வேண்டும் என முழங்கி வருகிறான் சமரன்.

சமரனின் வரலாற்றுப் பாத்திரம் (Historical Role of Samaran)
 லெனினும், மாவோவும் முறையே இஸ்க்ரா’, ‘கம்யூனிஸ்ட்ஏடுகள் மூலம் அரசியல் வழியில் கட்சி கட்டினார்கள். கட்சிக்குள் நிலவிய வலது - இடது திரிபுகளை முறியடித்து புரட்சியைச் சாதித்தார்கள். ஆனால் இந்தியாவில் அத்தகையதொரு அரசியல் வழியில் துவக்கத்தில் கட்சி கட்டப்படவில்லை. சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் வலது திரிபு வழியில் கட்டப்பட்டன. இக்கட்சிகளின் வலது திரிபை எதிர்த்து எம்.எல் இயக்கம் கட்டப்பட்ட போதிலும், அவ்வியக்கம் அழித்தொழிப்பு எனும் இடது திரிபு வழியில்தான் கட்டப்பட்டதே ஒழிய, மா-லெ அரசியல் வழியில் கட்டப்படவில்லை. எம்.எல் இயக்கங்களில் பல இடது திரிபிலிருந்து மீள்வது என்ற பெயரில் மீண்டும் வலது திரிபில் வீழ்ந்தன.

தோழர் ஏ.எம்.கே. அவர்களை தத்துவ ஆசிரியராகக் கொண்டு டிசம்பர் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமரன்பத்திரிகை, கட்சியின் அன்றைய தன்னியல்பு வழியை மீறி மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. 1980இல் அமைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழுவானது (கூட்டக்குழு) இடது வலது தன்னியல்புகளை உள்ளடக்கியதொரு தன்னியல்பு வழியில் கட்டப்பட்டது. கட்சி தன்னியல்பு வழியில் இருந்த போதும், மார்க்சிய-லெனினிய அரசியல் வழியில் சமரன்பயணித்தது. இருப்பினும் அரசின் அடக்குமுறை மற்றும் பொருளாதார நெருக்கடிக் காரணமாக சமரன் ஏட்டைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இவ்வகை வலது இடது திரிபுகளை எதிர்த்துப் போராடி, மார்க்சிய லெனினிய வகைப்பட்ட ஓர் அரசியல் கட்சியைக் கட்டும் இலட்சியத்துடன், இந்திய அளவில் முதன்முதலில் வெளிவந்த ஏடு சமரன் ஆகும். மார்க்சிய-லெனினிய வழியில் பயணித்த தோழர் ஏ.எம்.கே-வின் சமரன் ஏடு, தனது வரலாற்றுப் பாத்திரத்தை இதன் மூலமே பெற்றுள்ளது.

சமரன் மீண்டும் 1982 முதல் எல்.ஜி.எஸ். அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளிவர தொடங்கியது. இரண்டாவது சுற்று பெரும் வரவேற்புடன் தத்துவத் தலைமை தாங்கியது. பிறகு இடையிடையே உட்கட்சிப் பிரச்சினைகள், நிதி நெருக்கடி, அரசின் ஒடுக்குமுறை ஆகிய காரணங்களால் தொடர்ச்சியாக வர இயலவில்லை.

1988ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு கோர்பச்சேவின் கலைப்புவாதத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. இத்துடன் சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதை அடுத்து, உலகம் முழுக்க கம்யூனிச இயக்கம் மத்தியில் தொண்டு நிறுவனங்கள் ஊடுருவின. மார்க்சியம் தோற்றுவிட்டது என்ற புதிய இடது முகாமின் பிரச்சாரத்தை எம்.எல். அமைப்புகளுக்குள் அவைகள் பரப்பின. எம்.எல். அமைப்புகளிலிருந்த குட்டி முதலாளித்துவ சக்திகள் இதற்குப் பலியாகினர்.

இதன் ஒரு பகுதியாகவே, அ.மார்க்ஸ் கும்பலின் புதிய இடது கலைப்புவாதத்தால் கட்சி பிளவுபடுத்தப் பட்டது. இதற்கு கோ.கேசவன் பலியாகி சமரன் ஆசிரியர் குழுவில் இருந்து வெளியேறினார். கேசவன் துவக்கத்தில் நிறப்பிரிகை கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டார். பிறகு கட்சியின் நிலைபாட்டில் இயங்குவதாகக் கூறி சமரன் ஆசிரியர் குழுவில் இணைந்தார். சமரனில் சாதிப் பிரச்சினையையும், தேர்தல் பிரச்சினையையும் எழுப்பினார். அதன் பிறகு அமைப்பை விட்டு வெளியேறி சாதியம் பற்றிஎன்ற நூலை வெளியிட்டார். அதில் சமூகத்தை அடித்தளம்-மேற்கட்டுமானமாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது; அவற்றை வரலாற்றின் ஒருங்கிணைந்த முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கிராம்சியத்தை முன்வைத்தார். சாதிப் பிரச்சினைக்கு மார்க்சியத்தில் தீர்வு இல்லை என்றார்; இவ்வாறு புதிய இடது கருத்துகளுக்குப் பலியாகி அடையாள அரசியலை முன்வைத்து, கட்சியை விட்டும் ஆசிரியர் குழுவை விட்டும் வெளியேறினார்.

கேசவனைத் தொடர்ந்து சமரனில் நிர்வாக ஆசிரியர் பொறுப்பிலிருந்த எல்.ஜி.எஸ். (லிநிஷி), தாஸ் மற்றும் பாரி உள்ளிட்ட சென்னை மாவட்ட கட்சிக் கமிட்டி கேசவனின் சாதியத்தைஆதரித்ததுடன், ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடு பொருந்தாது என்று கூறி, அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டை முன்வைத்து, கட்சியை விட்டு வெளியேறினர். அத்துடன் 1993 வாக்கில் பத்திரிகை நின்றுபோனது.

இவ்வாறு, கோர்பச்சேவ் கலைப்புவாதம், தொண்டு நிறுவன ஊடுருவல் மற்றும் புதிய இடது கலைப்புவாத துரோகத்தால் சமரன்பத்திரிகை நின்றுபோனது.

பிறகு 2005இல் துவங்கப்பட்ட மக்கள் புரட்சியும்’, சித்தானந்தம் தலைமையிலான அகிலம் புத்தகக் கடையின் கலைப்புவாதத்தால் நின்றுபோனது. சித்தானந்தம்-அனுப்பூர் செல்வராஜ் கும்பல், அ.மார்க்ஸ் மற்றும் விடியல் சிவா போன்றவர்களின் தொடர்போடும், தொண்டு நிறுவனங்களின் தூண்டுதலோடும் கலைப்புவாத அரசியலுக்கு இரையாகி கட்சியைப் பிளவுபடுத்தி வெளியேறினர்.

 சமரன் ஏட்டினைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் இருந்தாலும், ஏ.எம்.கே ம.ஜ.இ.க பிரசுரங்கள் வாயிலாக மா-லெ அரசியலை பரப்பினார். டங்கல் திட்ட எதிர்ப்பு; தனித் தமிழீழ ஆதரவு; ஆங்கில-இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் ஒரு மொழிக் கொள்கை - தாய் மொழிக் கல்விக்கான போராட்டங்கள்; செம்மொழி மாநாடு எதிர்ப்பு; காஷ்மீரின் தனி நாட்டு விடுதலை ஆதரவு; சாதி ஒழிப்பு பற்றிய  மார்க்சிய நிலைபாட்டிலிருந்தும், மதத்தை அரசிடமிருந்து பிரிக்கும் நிலைபாட்டிலிருந்தும்  சாதி-மதக் கலவரங்களை எதிர்த்தப் போராட்டங்கள்; சங்கரமட - திருப்பனந்தாள் மட எதிர்ப்பு இயக்கம்; ஊழல் பெருச்சாளி ஜெயா-சசி கும்பல் எதிர்ப்பு; கூடங்குள அணு உலை ஆதரவு; பாராளுமன்ற புறக்கணிப்பு செயல் தந்திரம்; ஏகாதிபத்திய புதிய காலனிய எதிர்ப்பு மற்றும் தொண்டு நிறுவன ஊடுருவல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மா-லெ வழியிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து அமைப்பை அடுத்தக் கட்டத்திற்கு தோழர் ஏ.எம்.கே. கொண்டு சென்றார். ஓரடி முன்னால் ஈரடி பின்னால்என்று லெனின் கூறியதைப் போல, அமைப்பு ஒவ்வொரு செயல்தந்திரத்திற்கும் ஓரடி முன்னேற, கலைப்புவாதத்தால் ஈரடி பின்னோக்கிச் சென்றது. ஒவ்வொரு கலைப்புவாத செயல்தந்திரத்திற்கும் ஆளும் வர்க்கம், புதிய இடதுகள், தொண்டு நிறுவனங்கள் பின்புலமாக இருந்தன.

டிராட்ஸ்கிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டது

திட்டப் பிரச்சினை, விவசாயப் புரட்சி திட்டம், பாசிச எதிர்ப்பு முன்னணி, ஆரிய-திராவிட இனவாதம், பாராளுமன்ற செயல்தந்திரம், ஸ்தாபனக் கோட்பாடுகள் உள்ளிட்ட பல நிலைபாடுகளை முழுமைப்படுத்தி அமைப்பை புனரமைத்து சமரன் ஏட்டை மீண்டும் நடத்துவதற்கு ஏ.எம்.கே முயற்சித்தப் போதுதான் பிரதீப்-ஞானம் கும்பலும், மனோகரன் கும்பலும் அம்முயற்சிகளை அடுத்தடுத்து சீர்குலைத்தனர். அமைப்பால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றபட்டப் பின்பும், அமைப்பு மற்றும் சமரன் பெயரை பிழைப்புவாதத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

சமரனை (ஏ.எம்.கே) பண்ணையார், எதேச்சதிகாரி, நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையாளர், தத்துவ அறிவு இல்லாதவர், கலைப்புவாதி, குறுங்குழுவாதி  என்றெல்லாம் முன்னால் ஓடுகாலிகள் தாக்கியது போலவே, ஞானம்-பிரதீப் கும்பலும் தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது சமரன்பெயரில் பத்திரிகை துவங்கி சமரனின் மார்க்சிய-லெனினிய வழிக்கு எதிரான திருத்தல்வாத கருத்துக்களை பரப்பிவருகிறார்கள். புதிய இடது கலைப்புவாதியும், ஏகாதிபத்திய ஏவலருமான அ.மார்க்ஸை தனது இறுதி அஞ்சலி நிகழ்விலும் கூட ஏ.எம்.கே.வின் மாணவர்கள் விரட்டியடித்தனர். ஆனால், அ.மார்க்ஸை எதிர்த்துப் போராடிய தோழர்களை குறைகுடம் என்று விமர்சித்த வசூல் ராஜாஞானம் தற்போது அதன் ஆசிரியர் என்பது வெட்கக்கேடு!

மனோகரன் கும்பலும் ஏ.எம்.கே வெறும் நடைமுறையாளர், நிரூபிக்கப்பட்ட தலைவர் இல்லை, எதேச்சதிகாரவாதி என்றெல்லாம் தாக்குதல் நடத்திவிட்டு பாட்டாளி வர்க்க சமரன்எனும் பெயரில் பத்திரிகையையும், சமரன் வெளியீட்டகத்தையும் தனது பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்து கொண்டது. மேலும் பாட்டாளி வர்க்க சமரன் அணி எனும் பெயரில் டிராட்ஸ்கிய கருத்துகளைப் பரப்பி வருகிறது.

இவர்களுக்கு தூற்றுவதற்கும் சமரன்வேண்டும், பிழைப்பதற்கும் சமரன்வேண்டும். அமைப்புக்குள் சிறுபான்மையாக இருந்து, கலைப்புவாத நடவடிக்கையால் வெளியேற்றப்பட்ட பிறகு, கொடி, ‘சமரன்மற்றும் அமைப்பின் பெயரை பயன்படுத்துவது, ஜனநாயக மத்தியத்துவத்தை மறுப்பது கலைப்புவாத நடவடிக்கையாகும். இதை முறியடித்து அமைப்பைக் காக்கும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை திரட்டி உறுதியுடன் போராட சமரன் சங்கல்பம் பூண்டுள்ளது. 

அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களின் புதிய காலனிய நலன்களுக்காகவும், இந்திய தரகு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க நலன்களுக்காகவும் இந்தியாவின் அனைத்து துறைகளும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம், கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு வருகின்றன. கல்வி, மருத்துவம், வங்கி, காப்பீடு போன்ற சேவைத் துறைகள் ஊக நிதி மூலதனத்திற்கு காவு கொடுக்கப்படுகின்றன. அந்நிய நிதி மூலதனத்தை தடையின்றி அனுமதித்து ஏகாதிபத்தியவாதிகளின் மறுபங்கீட்டிற்கான யுத்தக்களமாக இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் காஷ்மீரை மாற்றியுள்ளது. காஷ்மீர் தேசிய இனத்தை இரண்டாக உடைத்து இந்தியாவின் நகராட்சிகளாக மாற்றியுள்ளது. இதைப் போலவே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் இந்து இராஜ்ஜிய செயல்தந்திரத்தை தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட எல்லா தேசிய இனங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடுகிறது. முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை எதிர்த்து வீறுகொண்டு எழும் மக்கள் போராட்டங்களை திசைதிருப்ப சாதி-மத-தேசிய-இன வெறிப் பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வாலாகவே மாறி தமிழக மக்களை ஒடுக்குகிறது எடப்பாடி கும்பல். இவ்வாறு ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் சமரன் ஏடு போராடும் மக்களைச் சார்ந்து நிற்கிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களுக்கு இடையிலான முரண்பாடுகளும், மறுபங்கீட்டிற்கான பனிப்போர் நிலைமைகளும் தீவிரமடைந்து வருவதால் பாசிசமும் தீவிரம் அடைந்து வருகின்றன. வெனிசூலா, சிரியா, ஈரான், ஹாங்காங், தைவான், இலங்கை போன்ற நாடுகளிலும், தற்போது காஷ்மீரிலும் நடக்கும் நிகழ்வுகள் இதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதன நலன்களுக்காகச் சேவை செய்யும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களான காங்கிரசு-பாஜக கும்பல்கள் மற்றும் அவற்றின் தொங்கு சதைகளான மாநில தரகு முதலாளித்துவ வர்க்கக் கும்பல்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் அரசியல் பணியை சமரன் ஏடு தனது முழுமுதற் கடமையாக ஏற்கிறது.

உலகில் சோசலிச முகாம் எங்கும் இல்லாத சூழலில், ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்என்ற பெயரில், ‘மார்க்சியத்திற்கும், மார்க்சியத்திற்கு எதிரான முதலாளிய கருத்துகளுக்கும் பொது உடன்பாட்டுக் கூறுகளை கண்டறிவதுஎனும் பெயரில் புதிய இடது கும்பல்களின் கலைப்புவாதப் பிரச்சாரங்களை முறியடித்து, மா-லெ-மாவோ சிந்தனையைப் பாதுகாத்து, ஏ.எம்.கே. வழியில் புதிய ஜனநாயகப் போராட்ட உணர்வை பாட்டாளி வர்க்கத்திடம் வளர்க்க வேண்டியப் பணியை சமரன் ஏடு மனமுவந்து ஏற்கிறது.

மென்மேலும் ஆழப்பட்டு வரும் சர்வதேச நிதி மூலதன நெருக்கடியின் சுமைகளை தங்கள் மீது சுமத்தப்படுவதை எதிர்த்து இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. சிறுபான்மை ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை போல்ஷ்விக்மயமாக்கும் பொருட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக-விவசாயப் புரட்சியை நிறைவேற்ற வேண்டிய இன்றைய பிரதான அரசியல் பணிக்கு சமரன் ஏடு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறது.

தற்போது எழுச்சிமிக்க போராட்டங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்று வருகின்றன. புரட்சிக்கு சாதகமான புறநிலைமை நிலவுகிறது. ஆனால் அகநிலையில், மா-லெ குழுக்கள்  திருத்தல்வாத, கலைப்புவாதப் போக்குகளால் பிளவுண்டு கிடக்கும் பலவீனமான நிலைமை நீடிக்கிறது. கம்யூனிச அமைப்புகளிடையே நிலவும் வலது-இடது திரிபுகளும், நவீன திருத்தல்வாதம் மற்றும் கலைப்புவாதப் போக்குகளும், ஆரிய-திராவிட இனவாத மாயைகளும், ஒன்றுபட்ட கட்சி கட்டுவதற்கு தடையாக உள்ளன. சரியான கருத்துக்களை உயர்த்திப் பிடித்து மேற்கண்ட மார்க்சிய விரோதக் கருத்துகளை முறியடிப்பதன் மூலம், ஒரு புரட்சிகர அமைப்பை கட்டும் பொருட்டு, புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தும் அரசியல் கடமையை சமரன்ஏடு தனது தலையாய கடமையாக ஏற்கிறது.

சுருங்கக்கூறின், ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் இந்திய தரகு முதாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசமைப்பு முறையை முற்றாகத் தகர்த்தெறிந்து, அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கும் ஒரு மக்கள் ஜனநாயக சர்வாதிகாரக் குடியரசை நிறுவவும், சாதிக்கான பொருளியல் அடித்தளத்தை தகர்க்கவும், மதத்தை அரசிடமிருந்து பிரிக்கவும் மதத்தை தனிநபர் விவகாரமாக்கவும் புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றும் பணியில் வெற்றிபெற சமரன் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தத்துவார்த்த ஆயுதமான இவ்வேடு, உங்களுக்கு சொந்தமான ஏடு. இதனை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

விமர்சிப்பதன் மூலமும், கட்டுரைகளை காணிக்கையாக்குவதன் மூலமும், நிதியுதவி செய்வதன்  மூலமும் பிற எல்லாவித  முயற்சிகளின் மூலமும் சமரன் ஏட்டை வளரச் செய்யுங்கள். வாழச் செய்யுங்கள்.

மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் ஒளியில், ஏ.எம்.கே. வழியில்,

புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

சமரன் படியுங்கள், பரப்புங்கள்...

94/177, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005, 
பேசி: 9095365292, samaranpublisher@gmail.com


No comments:

Post a Comment