செஞ்சூரியன்
ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்
பகுதி 1
மாபெரும்
மார்க்சிய-லெனினிய வாதியும், மிகச்
சிறந்த ஜனநாயகவாதியும், பாசிசத்தை
வீழ்த்தி உலக மக்களை காப்பாற்றியவரும், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் தலைவரும் ஆசானுமான தோழர்
ஸ்டாலின்,
ஓர் எதேச்சதிகாரி; உலகப் புரட்சியின் எதிரி; கொலைகாரர்; தேசியவாதி; எதிர்ப் புரட்சியாளர் என்றெல்லாம் நவீன டிராட்ஸ்கியர்கள்
ஓயாமல் ஊளையிடுகிறார்கள். நவீன டிராட்ஸ்கியம் என்பது லெனினியத்தால் குழிதோண்டிப்
புதைக்கப்பட்ட பழைய டிராட்ஸ்கியத்தின் முடை நாற்றமெடுத்த வடிவமாகும். சர்வதேச நிதி
மூலதனத்தின் புதிய காலனியாதிக்கத்திற்குப் பிறந்த இந்த நவீன டிராட்ஸ்கியம்
குருசேவ் கும்பலின் நவீன திருத்தல்வாதம் முதல் கோர்பசேவ் கலைப்புவாதம் மற்றும்
புதிய இடது கலைப்புவாதம் - பின் நவீனத்துவம் வரையிலான அனைத்துவித மார்க்சிய விரோத
கருத்துகளுக்கும் மேடை அமைத்து தருகிறது.
நவீன
டிராட்ஸ்கியர்கள், மார்க்சிய
லெனினியத்தின் கொடிய விரோதியான டிராட்ஸ்கியை மார்க்சியவாதி எனவும், புரட்சியாளர் எனவும் வீண் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
தங்களை வெளிப்படையாக டிராட்ஸ்கியர்கள் என்று அறிவித்துக் கொண்டு செயல்படும் இவ்வகை
நான்காம் அகிலம் எனும் ஏகாதிபத்திய ஐந்தாம் படையைச் சேர்ந்த டிராட்ஸ்கியர்களை
விடவும் நயவஞ்கமான டிராட்ஸ்கியர்கள் சிலர் மார்க்சிய முகமூடியுடன் உலா
வருகின்றனர். இவர்கள் நான்காம் அகிலத்தின் சோசலிச சமத்துவக் கட்சியினரைப் போலவே
ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, மாவோ வழியில் விமர்சனம் வைப்பதாக கூறி, மார்க்சிய-லெனினிய அமைப்புகளில் இருக்கும் குட்டி முதலாளிய
சக்திகளை ஏமாற்றி வருகின்றனர். புதியதொரு நய வஞ்சகப் போக்கான இது, உண்மையில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர். போன்ற புதிய இடதுகளின் அழுகிப்போன வடிவமாகும்.
டிராட்ஸ்கி, ஸ்டாலின்
இருவரிடமுள்ள சரி-தவறுகளை நடுநிலைப் புத்தியோடு அணுகுவதாக வேடமிட்டு, மார்க்சியத்தையும் கலைப்புவாதத்தையும் சமப்படுத்துவதன்
மூலம்,
இவர்கள் முதலாளிய ஜனநாயகவாதிகளாகவும், பாட்டாளி வர்க்க துரோகிகளாகவும் விளங்கிவருகின்றனர்.
நான்காம் அகிலத்து
டிராட்ஸ்கியர்களின் அணுகுமுறையும், புதிய இடது கும்பல்களின் அணுகுமுறையும் வெவ்வேறாக
தோன்றினாலும், ஸ்டாலின் மீதன
விமர்சனம் எனும் பெயரில், டிராட்ஸ்கி
பற்றிய ஆய்வு எனும் பெயரில் ஸ்டாலினை தாக்கிவிட்டு, டிராட்ஸ்கியை ஆதரிக்கும் துரோகச் செயல்களில் ஈடுபடுவதன்
மூலம்,
இவர்கள் நான்காம் அகிலத்து டிராட்ஸ்கியர்களுடன்
ஒன்றுபடுகிறார்கள். ஸ்டாலினின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்பதையே வழிபாடு என்று
கூறுவதன் மூலம் ‘ஸ்டாலின்
நீக்கம்’
எனும் ‘லெனினிய
நீக்கத்தை’ முன்வைக்கிறார்கள். ஸ்டாலின்
மீதான தாக்குதல் ஐயத்திற்கிடமின்றி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மீதான
தாக்குதலே ஆகும். ஸ்டாலினின் சர்வாதிகார எதிர்ப்பு எனும் பெயரில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதன் மூலமும், தனியொரு நாட்டில் புரட்சியையும், சோசலிசக் கட்டுமானத்தையும் மறுப்பதன் மூலமும் லெனினியத்தை
மறுக்கும் கலைப்புவாத, எதிர்
புரட்சிகரப் புள்ளியில் இயல்பாகவே இவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.
ஏகாதிபத்திய நிதி
மூலதனத்தாலும், திருச்சபை மற்றும்
தொண்டு நிறுவனங்களாலும் ஊட்டி வளர்க்கப்படும் இந்த டிராட்ஸ்கிய கருத்துகள், முற்போக்கு முகமூடியுடன் மார்க்சிய-லெனினிய
அமைப்புகளுக்குள் ஊடுருவ முயற்சித்து வருகின்றன. அவ்வாறு எமது சமரன் (ஏ.எம்.கே)
அமைப்பிற்குள் ஊடுருவ முயன்ற காவுத்ஸ்கிய - டிராட்ஸ்கியவாதிகளை லெனினிய வழியில்
ஊன்றி நின்று சமரன் அமைப்பு எவ்வாறு முறியடித்தது என்பதே இக்கட்டுரையின்
உள்ளடக்கமாகும்.
டிராட்ஸ்கியிசம்
என்றால் என்ன?
உண்மையில்
சொல்வதெனில், டிராட்ஸ்கியிசம்
என்று எந்தவொரு ‘இசமும்‘ இல்லை. டிராட்ஸ்கி, தனது எழுத்துகளுக்குத் தானே ‘டிராட்ஸ்கியிசம்‘ என்று (எவ்வித கூச்சமுமின்றி) பெயரிட்டுக் கொண்டான்.
டிராட்ஸ்கியின் எழுத்துக்கள் அனைத்தும் லெனினியத்திற்கு விரோதமாகவே இருந்தன.
டிராட்ஸ்கிக்கென்று எந்தவொரு கொள்கையும் இல்லை. லெனினையும் லெனினியத்தையும்
தாக்குவதை மட்டுமே டிராட்ஸ்கி தனது ஒரே வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்தான். “மார்க்ஸ்தான் தத்துவ மேதை; லெனின் வெறும் நடைமுறையாளர்; சர்வாதிகாரி” என்று மார்க்ஸிற்கு எதிராக லெனினை நிறுத்தினான். பிறகு
ஸ்டாலின் வெறும் நடைமுறையாளர் என லெனினுக்கு எதிராக ஸ்டாலினையும் முன்நிறுத்தி
வரலாற்றில் தோற்றுப்போனவன் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கியவாதிகள் தற்போது இதே
பாணியில்தான் லெனினுக்கு எதிராக ஸ்டாலினையும், ஸ்டாலினுக்கு எதிராக மாவோவையும் முன்நிறுத்துகிறார்கள்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நிழலில் இளைப்பாறும் இந்த நவீன டிராட்ஸ்கியவாதிகள், புதிய இடது மற்றும் பின் நவீனத்துவ சூன்யவாத முகாமில்
இருந்து கொண்டு மார்க்சிய - லெனினிய விஞ்ஞானத்தை மறு பரிசீலனை செய்யக் கோருகின்றனர்.
மார்க்சிய லெனினியம் என்பது அழிக்க முடியாத சமூக விஞ்ஞானம் என்பதை அந்த எண்ண
முதல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
லெனின் “கலைப்புவாதிகளுடன் கூட என்னால் வாதம் நடத்த முடியும், ஆனால் தனக்கென்று எந்தவொரு கொள்கையுமற்ற டிராட்ஸ்கியுடன்
வாதம் நடத்த முடியாது” என்றார்.
ஆம்! உண்மைதான் டிராட்ஸ்கியிசம் இருவழிப் போராட்டத்திற்கு தகுதியற்ற வாதமே; வாதம் நடத்துவதற்கு டிராட்ஸ்கியர்கள் தகுதியற்றவர்களே.
ஏனெனில் தோழர் லெனினாலும், ஸ்டாலினாலும்
டிராட்ஸ்கியிசம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு நூறாண்டுகள் ஆகிவிட்டன. மார்க்சியத்தால்
கணக்கு தீர்க்கப்பட்ட இந்த டிராட்ஸ்கிய எலும்புத் துண்டுகளை சவக்குழியிலிருந்து
தோண்டி எடுத்து வந்து “டிராட்ஸ்கியின்
நிரந்தரப் புரட்சி வெல்லும்; நல்ல
காலம் வரும்” என்று ஜக்கம்மா
சோதிடம் கூறுகிறார்கள். நவம்பர் புரட்சி அன்றே செத்துப்போன டிராட்ஸ்கியத்தை
பிணக்கூறாய்வு செய்யும் இந்த திருப்பணிக்கு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின்
ஆசீர்வாதம் நிரம்ப உண்டு.
லெனின்
டிராட்ஸ்கியைப் பற்றி எழுதிய பல்வேறு கட்டுரைகளிலிருந்து ‘டிராட்ஸ்கியிசம்’ என்றால் என்ன? என்பதை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
டிராட்ஸ்கியிசம்
என்பது...
கோஷ்டிவாதம்; பாராளுமன்றவாதம்; மூலதனம் நிதி மூலதனமாக மாறியதை பார்க்க மறுக்கும் இயக்க
மறுப்பியல் வாதம்; திருத்தல்வாதம்; நிதி மூலதன முரண்பாடுகளையும் தனி நாட்டில் புரட்சி
சாத்தியம் என்பதையும் மறுக்கும் கலைப்புவாதம்; இடது சாகசவாதம்; போலிப் புரட்சியின் சாரம்; ‘நிரந்தரப் புரட்சி’ எனும் பெயரில் ஏககால உலகப் புரட்சி பேசும் எதிர்ப்புரட்சிகர
வாதம்;
சிண்டிகலிச திரிபு; கதம்பக் கோட்பாட்டு வாதம்; சட்டவாதம்; இடது
சாகசவாத வேடமிட்ட வலது சந்தர்ப்பவாதம்; இடது சந்தர்ப்பவாதம்; அராஜகவாதம்; தோல்வி மனப்பான்மையின் சாரம்; தற்புகழ்ச்சி; பிழைப்புவாதம்; ஏகாதிபத்திய நிதி மூலனம் மற்றும் அதன் பாசிசத்திற்கு
தலைவணங்கும் கோழைத்தனம் மற்றும் இன்னும் பல.
உலக ஓடுகாலிகளைக்
கொண்டு டிராட்ஸ்கி உருவாக்கிய நான்காம் அகிலம் சிதறுண்டு போனதால் கலைக்கப்பட்டது.
ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல், தொண்டு நிறுவனங்களின் மூலம் நான்காம் அகில கலைப்புவாதிகளை
மீண்டும் ஒருங்கிணைத்து இயக்கி வருகிறது. அதன் நோக்கம், உலகெங்கிலும் உள்ள மா.லெ. அமைப்புகளுக்குள் டிராட்ஸ்கிய
கருத்துகளை திட்டமிட்டு ஊடுருவிப் பரப்புவதேயாகும். குட்டிமுதலாளித்துவ சித்தாந்தமான
டிராட்ஸ்கியத்தின் இலக்கும் குட்டி முதலாளித்துவ சக்திகளே ஆவர். ஊதிப்
பெருக்கப்பட்ட டிராட்ஸ்கியின் சாகசவாதத்திற்கு குட்டிமுதலாளித்துவ ஊசலாட்ட
சக்திகள் எளிதில் பலியாகிவிடுகின்றனர். நான்காம் அகிலத்தின் கீழ் இயங்கும் சோசலிச
சமத்துவக் கட்சி, இத்தகைய
ஊடுருவல் முயற்சிகளை செய்துவருகின்றது. இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள சோசலிச
சமத்துவக் கட்சியினர் டிராட்ஸ்கிய விஷத்தை மா.லெ. அமைப்புகளுக்குள்ளும் சமூக
வலைதளங்களிலும் பரப்ப முயற்சித்து வருகின்றனர்.
ருஷ்யாவில் தோழர்
ஸ்டாலின் மறைவிற்கு பிறகு, ‘ஸ்டாலின்
எதேச்சதிகார எதிர்ப்பு’ எனும்
பெயரில்,
‘ஸ்டாலின் நீக்கம்’ (ஞிமீ-stணீறீவீஸீவீsனீ) என்ற லெனினிய விரோத செயல்களை குருச்சேவ் கும்பல்
துவக்கிவைத்தது. ஸ்டாலின் காலத்தில் நடந்த சில பிழைகளை, வரலாற்று ரீதியாக தொகுக்காமல் அவர் மீது தனி நபர் தாக்குதல்
நடத்தி,
‘ஸ்டாலின் சர்வாதிகார எதிர்ப்பு’ எனும் பெயரில், ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகார எதிர்ப்பு’ பிரச்சாரத்தைக் கட்டியமைத்தது. இதன் மூலம் நவீன
திருத்தல்வாதத்தை முன்வைத்து, முதலாளித்துவ
மீட்சிக்கு வித்திட்டது குருச்சேவ் கும்பல். ஸ்டாலின் பற்றிய குருச்சேவின்
பொய்யுரைகள் அனைத்தும், ஸ்டாலின்
மீதான டிராட்ஸ்கியின் அவதூறுகளிலிருந்தே புனையப்பட்டன. ஆகவேதான், ஓடுகாலி டிராட்ஸ்கியின் உண்மையான சீடனாக குருச்சேவ்
விளங்கியதாக மாவோ குறிப்பிடுகிறார். குருச்சேவின் நவீன திருத்தல்வாதம்
கோர்பச்சேவின் கலைப்புவாதமாக முடிவுற்று, சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது. குருசேவ் கும்பலின்
சீனத்து வாரிசுகளான டெங் கும்பலின் ‘நான்கு நவீனப்படுத்துதல்கள்’ எனும் திரிபுவாதம், சீனாவிலும் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது. ரசிய, சீன சோசலிச நாடுகளில் முதலாளித்துவ மீட்சிக்கு ஏகாதிபத்திய
நாடுகள் பின்புலமாக இருந்தன. அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டுதான் சோசலிசம்
தோற்றது,
வரலாறு முடிந்தது என அறிவித்தான் கோர்பசேவ். கோர்பசேவ்
கலைப்புவாதத்திற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கும் பிறந்ததே “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” எனும் மார்க்சிய விரோத கோட்பாடாகும்.
ரசியாவிலும்
சீனாவிலும் ஏற்பட்ட இந்த பின்னடைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின்
அடிவருடி அமைப்பான பிராங்பர்ட் (திக்ஷீணீஸீளீயீuக்ஷீt) பள்ளியும்
தொண்டு நிறுவனங்கள் மூலமாக மார்க்சியத்தையும் முதலாளிய பிற்போக்கு கருத்துகளையும்
ஒன்றிணைக்கும் கலைப்புவாதத்தைப் பரப்பி, கம்யூனிச அமைப்புகளைப் பிளவுபடுத்தின. இது, புதிய இடது மற்றும் பின்நவீனத்துவ சூனியவாதப் பிரச்சாரம்
பலப்படுவதற்கு வழி வகுத்தது. இவை அனைத்திற்கும் ஸ்டாலின் எதேச்சதிகாரி என்ற பொய்
பிரச்சாரமே துவக்கப் புள்ளியாக இருந்தது.
ஸ்டாலின் மீது நடத்தப்படும்
ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு எலும்புத்துண்டை வீசுகிறது ஏகாதிபத்தியம். அதை
வாயில் கவ்விக் கொண்டுதான் டிராட்ஸ்கியர்கள் ஸ்டாலின் சர்வாதிகாரி என பிரச்சாரம்
செய்து வருகிறார்கள். ஸ்டாலின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது எனும் பெயரில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதே புதிய இடது
அரசியலின் அடி நாதமாகும்.
நவீன
டிராட்ஸ்கியமும் புதிய இடது கலைப்பு வாதமும் பல இழைகளில் பிண்ணிப் பிணைந்துள்ளது.
அடித்தளம், மேல்கட்டுமானம்
இரண்டும் ஒருங்கிணைந்த வரலாற்று முழுமை (Historical
Block), கலாச்சார
மேலாதிக்கம் (cultural hegemony) போன்ற கிராம்சியின்
மார்க்சிய விரோத கருத்துகளையும், பாசிசம்
பற்றிய கிராம்சிய கருத்தான “பாசிசம்
என்பது எதுவுமில்லை (Fascism is nothing); பின்தங்கிய நிலப்பிரபுத்துவ
உற்பத்தி முறையின் சர்வாதிகாரம்; ஒவ்வொரு
அரசும் ஒரு சர்வாதிகாரம்” போன்ற
மார்க்சிய-லெனினிய விரோதக் கருத்துகளையும், மார்க்சிய
வட்டத்துக்குள் வைத்தே பார்க்க வேண்டும் என்று புதிய இடது கும்பல் பிரச்சாரம்
செய்கிறது. அதைப் போலவே டிராட்ஸ்கி ஒரு மார்க்சியவாதி எனவும் டிராட்ஸ்கியின்
கருத்துகள் மார்க்சிய வட்டத்துக்குள் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை எனவும் புதிய
இடது கும்பல் பிரச்சாரம் செய்துவருகிறது. தமிழகத்தில் எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ஆர், கோவை ஞானி, அ.மார்க்ஸ், ந.முத்துமோகன் போன்றவர்களின்
புதிய இடது கருத்துகள் ஏகாதிபத்திய சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. பாசிசம்
என்பது நிதி மூலதன சர்வாதிகாரத்தின் பிற்போக்கான அரசு வடிவம் என்ற மார்க்சிய
வரையறையை மூடிமறைத்து, பாசிசம்
என்பது போனபார்ட்டிசம் - அதாவது தனி நபர் சர்வாதிகாரம் என்ற டிராட்ஸ்கியின்
கருத்துகளை புதிய இடது கும்பல் எடுத்தாள்கிறது. மேலும் பாட்டாளி
வர்க்கத்திற்கென்று தனியாக கலை இலக்கியம் ஏதும் இல்லை என்ற டிராட்ஸ்கியின்
கருத்துகளை வரித்துக்கொண்டு, கலை
இலக்கியம் பற்றிய மார்க்சிய கருத்துகளை புதிய இடதுகள் திரித்துப் புரட்டுகின்றனர்.
இவ்வாறே, ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பிரச்சாரத்திற்கும்
டிராட்ஸ்கியின் அவதூறுகளையே புதிய இடதுகள் பயன்படுத்தி வருகின்றன.
ஏகாதிபத்திய நிதி
மூலதனத்தின் டிராட்ஸ்கிய கருத்துகள் மார்க்சிய வேடத்தில் எம்-எல் அமைப்புகளுக்குள்
ஊடுருவ முயற்சிப்பது ஏன்?
ஏகாதிபத்தியவாதிகள்
குருச்சேவின் திருத்தல்வாதம், கோர்பச்சேவின்
கலைப்புவாதம், புதிய இடது, பின்நவீனத்துவக் கருத்துகளை கருவியாகப் பயன்படுத்தி
கம்யூனிச அமைப்புகளை பிளவுபடுத்தினர். தற்போது அக்கருவிகள் அம்பலப்பட்டு வருவதால்
டிராட்ஸ்கியம் என்ற இடது சாகசவாத - இடது சந்தர்ப்பவாதக் கருத்துகளை கருவியாகப்
பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆகவேதான் டிராட்ஸ்கிய வாதிகள் மார்க்சிய வேடம்
தரித்துக்கொண்டு மா-லெ அமைப்புகளில் ஊடுருவி கலைக்கின்றனர். மீண்டும் ஸ்டாலின்
வேண்டும் என்று ருஷ்யாவில் துவங்கி உலகெங்கிலும் மக்கள் முழங்கத் துவங்கியுள்ளதைக்
கண்டும்,
ருஷ்யா முழுவதும் ஸ்டாலின் சிலைகள் நிறுவப்படுவது ஒரு
இயக்கமாகப் பரவி வருவதைக் கண்டும் அஞ்சி நடுங்கும் ஏகாதிபத்திய காகிதப் புலிகள்
ஸ்டாலின் எனும் பாட்டாளி வர்க்க ஆயுதத்தை வீழ்த்துவதற்கு டிராட்ஸ்கி என்ற பாட்டாளி
வர்க்க துரோகச் சக்திகளின் ஆயுதத்தையே உகந்த கருவியாக கருதுகின்றனர். ஆனால்
அவர்கள் தோற்பது உறுதி.
சர்வதேச நிதி மூலதனம்
மீள முடியாத நெருக்கடியில் சிக்குண்டதால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை
மறுப்பங்கீடு செய்வதற்கான ‘பனிப்போர்’ நிலைமைகள் உருவாகியுள்ளன. மூலப் பொருட்களுக்கான தேவை
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உருவாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு காலனிய நாடுகள்
சூறையாடப்படுவதும் உக்கிரமடைகின்றன. மூலப்பொருட்களும், இயற்கை மற்றும் கனிம வளங்களும் மனித வளங்களும் எங்கெல்லாம்
கொட்டி கிடக்கிறதோ அங்கெல்லாம் மறுபங்கீட்டிற்கான யுத்தம் தீவிரமடைகின்றன.
வெனிசுலா,
சிரியா, ஈரான்
தொடங்கி தற்போது காஷ்மீர் வரை மறுபங்கீட்டிற்கான யுத்த களமாக அவை மாற்றப்படுவதன்
அரசியல்-பொருளாதாரம் இதுவே ஆகும்.
ஏகாதிபத்திய நிதி
மூலதனம் தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இராணுவத்தை பலப்படுத்தி பனிப்போரில்
ஈடுபட்டு வருகிறது; இது
நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துகிறது. இந்த போர்வெறியும், பாசிசமும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் அழுகலில் இருந்தே
உதிக்கிறது. போரும் பாசிசமும் நிதி மூலதனத்தின் பலவீனத்தையே குறிக்கிறது; பலத்தை அல்ல. ஏகாதிபத்திய நிதி மூலதனச் சுரண்டலால்
ஏகாதிபத்திய நாடுகளிலும், காலனிய
நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் சொல்லொன்னா துயரத்தில் உழன்று வருகின்றனர்.
எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் உலகெங்கும் பலம்பெற்று வருகின்றன.
முன்பு நவீன
திருத்தல்வாதம், வலது சந்தர்ப்பவாதம், கோர்ப்பச்சேவ் கலைப்புவாதம், புதிய இடது கலைப்புவாதம், பின்நவீனத்துவம் போன்ற பாட்டாளிவர்க்க விரோதக் கொள்கைகளை
கருவியாகப் பயன்படுத்தி உலக கம்யூனிச அமைப்புகளைப் பிளவுபடுத்தின. தற்போது
அக்கருவிகள் அம்பலப்பட்டு வருவதால் ‘டிராட்ஸ்கியம்’ எனப்படும் இடது சாகசவாத - கலைப்புவாதத்தைக் கருவியாகப்
பயன்படுத்தி உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனினிய அமைப்புகளுக்குள் ஏகாதிபத்தியங்கள்
ஊடுருவி பிளவுபடுத்தி வருகின்றன.
உலக சமூக மாமன்றம் -
மும்பை எதிர்ப்பு 2004
ஏகாதிபத்திய உலகமயம்
மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2000ஆம் ஆண்டுகளில் மாபெரும் கிளர்ச்சிகள் ஏகாதிபத்திய
நாடுகளிலேயே வெடித்தன. இவை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாக மாறாமல்
தடுக்கவே ‘உலக சமூக மாமன்றத்தை (WSF) உருவாக்கினர். இதில் இந்தியாவிலுள்ள சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற வலது சந்தர்ப்பவாத கட்சிகள் பங்குபெற்றன.
இந்த மன்றம் உலகமயத்தையும், ஆக்கிரமிப்புப்
போர்களையும் மட்டுமே எதிர்ப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய புதிய காலனிய
ஆதிக்கத்தையும், அமைதி வழியிலான நிதி
மூலதன மறுபங்கீட்டையும் மூடிமறைத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை நீர்த்துப் போகச்
செய்தது. முதலாளித்துவ ஜனநாயகம் பேசியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை
காலனியாதிக்க எதிர்ப்பு தேச விடுதலை இயக்கங்களாக மாறவிடாமல் தடுத்து யுத்த
எதிர்ப்பு இயக்கங்களாக மடை மாற்றியது. ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள், ஃபோர்ட் பவுன்டேஷன், ஆக்ஸ்ஃபாம் போன்றவற்றின் நிதி உதவியில் இவை நடந்தேறின.
உலக சமூக
மாமன்றத்திற்கு மாற்றாக மும்பை எதிர்ப்பியக்கத்தை (MR-2004)
தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகள், டிராட்ஸ்கியக் குழுக்கள், புதிய இடதுகள், உலக திருச்சபை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய தொண்டு
நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இவ்வமைப்பு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தங்களை
எதிர்ப்பது என்ற பெயரில் ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாமை மறைமுகமாக ஆதரித்தது. ‘ஏகாதிபத்திய முரண்பாடுகளைப் பயன்படுத்துவது’ என்ற பெயரில் அமைதி வழியிலான நிதி மூலதனச் சுரண்டலை
ஆதரித்தது. ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாட்டைக் கைவிட்டு காவுத்ஸ்கியத்தை
முன்வைத்து சி.பி.ஐ, சி.பி.எம்
போன்ற கட்சிகளின் நிலைபாட்டுடன் ஒன்றிப் போயின. தன்னியல்பு போராட்டங்களையே
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வரையறுத்தது. தொண்டு நிறுவனங்களுடன் ஒற்றுமை
- போராட்டம் எனும் பெயரில் சமரசம் செய்து கொன்டு அருந்ததிராய், அ.மார்க்ஸ், எஸ்.வி. இராஜதுரை போன்ற ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை மேடை ஏற்றி
வருகின்றன. நேபாள மற்றும் இந்திய மாவோயிஸ்ட் கட்சிகள் ‘தொண்டு நிறுவனங்களைத் தனிமைப்படுத்துவது’ என்ற மார்க்சிய அனுகுமுறைக்கு மாறாக அவற்றுடன்
உறவாடத்துவங்கின; மேலும்
இக்கட்சிகள் ஏகாதிபத்தியம் பற்றிய நிலைபாட்டில் சமரசவாதப் போக்கையும், தொண்டு நிறுவனங்கள் பற்றிய நிலைபாட்டில் இரட்டைத்
தன்மையையும் கொண்டிருந்தன. உலக சமூக மாமன்றத்திற்கு வலது சந்தர்ப்பவாதம் தலைமை
தாங்கியது எனில், மும்பை
எதிர்ப்பியக்கத்திற்கு இடது சாகசவாதம் - இடது சந்தர்ப்பவாதம் தலைமை தாங்கியது.
மும்பை எதிர்ப்பியக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் எய்ம் (AIM - ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம்) போன்ற
தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
டிராட்ஸ்கியிசத்தை
காவுத்ஸ்கிவாதம் என்றார் லெனின். காவுத்ஸ்கியிசம் என்பது ‘அதீத ஏகாதிபத்தியம்’ பேசி, ‘தனி
நாட்டில் புரட்சி’ என்ற
லெனினியத்தை மறுத்து, உலகு
தழுவிய புரட்சியை முன்வைக்கும் கலைப்புவாதக் கோட்பாடாகும். டிராட்ஸ்கியிசத்தின் ‘நிரந்தரப் புரட்சியும்’ உலகப்புரட்சி பேசி தனி நாட்டு புரட்சியை மறுக்கும் லெனினிய
விரோத கலைப்புவாத நிலைபாடாகும்.
டிராட்ஸ்கிய ஊடுருவலை
முறியடித்தோம்! மார்க்சிய-லெனினியத்தை பாதுகாத்தோம்!!
மேற்கூறிய உலகுதழுவிய
போக்கின் ஒரு பகுதியாக சமரன் அமைப்பிற்குள் டிராட்ஸ்கிய, காவுத்ஸ்கிய கருத்துகள் ஊடுருவ முயற்சித்தன. கடந்த ஆண்டு
எய்ம் தொண்டு நிறுவனத்தின் டிராட்ஸ்கிய கருத்துகள் ரவீந்திரன் மூலம் அமைப்பிற்குள்
ஊடுருவ முயற்சித்தன. எய்ம் ஊடுருவலுக்கு ஞானம்-பிரதீப் கும்பல் அமைப்பின் கதவுகளை
திறந்துவிட முயற்சித்தது. ஏ.எம்.கே. மறைவிற்குப் பிறகு நான்காம் அகிலத்தின் சோசலிச
சமத்துவக் கட்சியின் டிராட்ஸ்கிய கருத்துகள் மனோகரன் மூலம் ஊடுருவ முயற்சித்தன.
இவ்விரு கும்பல்களின் டிராட்ஸ்கியக் கருத்தை, இருவழிப் போராட்டத்தின் மூலம் அமைப்பு முறியடித்து இவர்களை
வெளியேற்றியது.
ஞானம்-பிரதீப்-ரவீந்திரன்
கும்பலின் டிராட்ஸ்கியவாதம்
மனோகரனின்
எதிச்சதிகாரத்தை எதிர்ப்பது எனும் பெயரில் பிரதீப்-ஞானம் கும்பல் தங்களது
எதேச்சதிகாரத்தை மூடிமறைத்துக்கொண்டு கோஷ்டி வாதத்தில் ஈடுபட்டது. கோஷ்டி
கட்டிக்கொண்டே கோஷ்டி இல்லை என்ற டிராட்ஸ்கியத்தை முன்வைத்தது. இது எய்ம் தொண்டு
நிறுவன ஊடுருவலுக்கு வழிவகுத்தது. இவர்கள் பரப்பிய, பரப்பி வருகிற திருத்தல்வாதக் கருத்துகள் வருமாறு:
1. ஸ்டாலின், இட்லர் இருவரும் சர்வாதிகாரிகள் என்று பேசினர். இதை
கருத்துச் சுதந்திரம் என்றனர்;
2. ஸ்டாலின்
சர்வாதிகாரி என்ற டிராட்ஸ்கியத்தில் துவங்கி ஏ.எம்.கே. சர்வாதிகாரி, பண்ணையார், நிலப்பிரபுத்துவக்
கொடுங்கோன்மையாளர் என்று முடித்தனர்;
3. லெனின்
டிராட்ஸ்கியை கையாண்டது போல ஏ.எம்.கே. எங்களை ஜனநாயகமாக கையாளவில்லை என்கின்றனர்.
அமைப்பில் எதேச்சதிகாரம் நீடிக்கும்வரை கோஷ்டிவாதம் தவிர்க்கமுடியாது என்று
டிராட்ஸ்கி முன்வைத்த அதே வாதத்தை முன்வைக்கின்றனர். மிகச் சிறந்த
மார்க்சியவாதியும், ஜனநாயகவாதியுமான
ஸ்டாலினை எதேச்சதிகாரவாதி என்று சொல்லி, அவரின் எதேச்சதிகாரத்தால்தான் டிராட்ஸ்கி கோஷ்டி கட்டினான்
என்று டிராட்ஸ்கிய வாதிகள் கூறுகின்றனர். இதே போன்ற கருத்தையே ஞானம் கும்பலும்
முன்வைக்கிறது. எதேச்சதிகாரம், கோஷ்டிவாதம்
இரண்டும் அந்நிய வர்க்க போக்குகள் என்றாலும் இரண்டுக்குமான காரணமும் தீர்வுகளும்
வெவ்வேறானவை என மார்க்சியம் முன்வைக்கிறது. அதாவது எதேச்சதிகாரத்திலிருந்து கோஷ்டி
உருவாவது இல்லை. எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது நீண்டகால போராட்டம் எனவும், கோஷ்டிவாதம் நிபந்தனையின்றி உடனடியாக கலைக்கப்பட வேண்டும்
எனவும் லெனினியம் கூறுகிறது.
கம்யூனிஸ்ட்
அமைப்பில் கோஷ்டிவாதம் பற்றிய கோட்பாட்டு வரையறையை லெனின்தான் முதன்முதலில்
முன்வைத்தார். அதனடிப்படையில் கோஷ்டிவாதத்திற்கு அமைப்பு ரீதியாக, வரலாற்று ரீதியாக 1921ஆம் ஆண்டு பத்தாவது மாநாட்டில்தான் தீர்வு காணப்பட்டது. “கோஷ்டிவாதம் கட்சியின் சித்தத்தின் ஒற்றுமைக்கு எதிரானது.
பெயரளவில் ஒற்றுமை பேசி தனிக் குழுவாக இயங்குவது... ...குட்டி முதலாளித்துவ
சந்தர்ப்பவாதிகளின் அணிசேர்க்கையே கோஷ்டிவாதத்திற்கு அடிப்படை. கோஷ்டியை
நிபந்தனையின்றி கலைக்க மறுக்கும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை கட்சி தன்
மத்தியிலிருந்து கழிப்பதனால் பலமடைகிறது” என்கிறார் லெனின். ஆகவே வரலாற்றில் தீர்வுகாணபட்ட அதே
அனுகுமுறையை அதுவும் குறிப்பாக கலைப்புவாத எதிர்புரட்சிகரக் கட்டத்தில்
கையாளவேண்டும். ஏனெனினில் இன்று கலைப்புவாதமே ஏகாதிபத்தியங்களின் போர்த்தந்திரமாக
மாறியுள்ளது.
4. ஏகாதிபத்தியங்களுக்கு
இடையிலான ஆழமான உள் முரண்பாடுகளையும் பனிப்போரையும் மறுத்து
காவுத்ஸ்கியம்-டிராட்ஸ்கியம் பேசுகின்றனர்; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் மறுபங்கீட்டிற்கான போரை
மறுப்பது அரசியல்துறையில் கலைப்புவாதம் என்ற ஏ.எம்.கே.வின் நிலைபாட்டை
மறுக்கின்றனர்;
5. ஒருபுறம்
ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மூடிமறைத்தனர், மறுபுறம் சந்தர்ப்பவாதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான
முரண்பாடுகளை பயன்படுத்தலாம் எனவும், அதே போன்றே ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம்
எனவும் பேசினர். இவ்வாறு எய்ம் நிலைபாட்டை முன்வைத்தனர்;
6. இவர்களின்
2019 மே தினப் பிரசுரத்திலும் காவுத்ஸ்கியம்-டிராட்ஸ்கியம்
வெளிப்பட்டது. வெனிசுலாவின் நெருக்கடிக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பே பிரதானக்
காரணம் என்று கூறி அமைதி வழியில் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களையும் வேளாண்மைத்
துறையையும், மூலப் பொருட்களையும்
சுரண்டும் ரஷ்ய- சீன நிதிமூலதன ஆதிக்கத்தை மூடிமறைத்து மறைமுகமாக
ஆதரவளிக்கின்றனர். அதாவது ஆக்கிரமிப்பு யுத்தம் (பிரதேசக் கைப்பற்றல்) நடத்துவது
மட்டுமே ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கியத்தை முன்வைத்து லெனினியத்தை
மறுக்கின்றனர். சி.பி.எம்., புதிய
ஜனநாயகத்தின் (மக்கள் அதிகாரத்தின்) திருத்தல்வாத நிலைபாட்டை முன்வைக்கின்றனர்.
7. உலகில்
சோசலிச முகாம் எங்கும் இல்லாத சூழலில் ஏகாதிபத்திய முரண்பாடுகளை பயன்படுத்துவது
என்பது கோட்பாடு ரீதியாக திருத்தல்வாதம் எனவும், உலகப் போரை உள்நாட்டு போராக மாற்றவேண்டும் எனவும் முதலாம்
பனிப்போரில் ஏ.எம்.கே. லெனினிய வழியை முன்வைத்தார். இது இன்றைய இரண்டாவது
பனிப்போர் காலத்திற்கும் பொருந்தும் என்ற ஏ.எம்.கே. நிலைபாட்டை துறந்து
ஓடுகின்றனர்.
8. அண்மையில்
1988ஆம் ஆண்டு சிறப்புக்கூட்ட அறிக்கையை மறுபதிப்பு செய்து அதன்
முன்னுரையில் 70 திட்டத்தை மீளாய்வு
செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளனர். 1970 திட்டம் அடிப்படையில் சரி என்பதும், அதன் அடிப்படையில் செயல்தந்திரம் வகுத்து செயல்படுவது
என்பதும்தான் சிறப்புக் கூட்ட அறிக்கையினுடைய முக்கிய முடிவாகும். இந்த முடிவின்
அடிப்படையில் இத்தனை ஆண்டுகள் இயங்கிவிட்டு தற்போது முழுவதையும் மீளாய்வு பற்றி
பேசுவது எவ்வித சுயவிமர்சனமும் அற்ற சந்தர்ப்பவாதமாகும். 1970 திட்டம் அடிப்படையிலேயே தவறு என்ற சூன்யவாதத்தை
முன்வைத்துள்ளனர்.
9. காஷ்மீர்
பற்றிய நிலைபாட்டிலும் கூட 370
இரத்தை திரும்பப் பெறு என்ற சி.பி.எம்., காங்கிரஸ் நிலைபாட்டையே முன்வைக்கின்றனர். மேலும், 370 இரத்து செய்ததின் மூலம் காஷ்மீர் இந்தியாவிலிருந்து
துண்டிக்கப் பட்டதாகவும், அவ்வாறு
துண்டித்ததால் காஷ்மீர் மீது இந்தியா தற்போது ஆக்கிரமிப்பு அரசாகவே நீடிக்கிறது.
தற்போது யுத்தம் நடத்துவதாகவும் எழுதுகின்றனர். அவ்வாறெனில் காஷ்மீர்
தனிநாடாகிவிட்டதா? இதுவரையில்
இந்தியா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தவில்லையா? 370 இரத்தை திரும்பப் பெறு என்ற கோரிக்கை காஷ்மீரை
இந்தியாவுடன் இணைப்பதற்கான கோரிக்கையா? பாகிஸ்தானை திருப்திபடுத்தவே சீனா காஷ்மீர் பிரச்சினையில்
தலையிட்டது என்று கூறி காஷ்மீரில் சீன நிதி மூலதன ஆதிக்கத்தை மூடி மறைக்கிறார்கள்.
இந்திய ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் பேசுவதிலும், ஏகாதிபத்திய நிதிமூலதனங்களுக்கிடையில் மறுபங்கீட்டிற்கான
யுத்தக் களமாக காஷ்மீர் மாற்றப்படுவதற்கான நிலைமைகள் உருவாகிவருவது அறிந்தும் கூட
அதை மூடி மறைப்பதிலும் தாங்கள் காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கியர்கள் என மீண்டும்
நிரூபித்துள்ளனர்.
10. ‘கார்ப்பரேட்-காவி
பாசிசம்’
என்ற செங்கொடி (ரெட் ஸ்டார்), மக்கள் அதிகாரத்தின் நிலைபாட்டையே இவர்களும்
முன்வைக்கின்றனர். ஏகாதிபத்திய நிதி மூலதன எதிர்ப்பை கார்ப்பரேட் நிறுவன
எதிர்ப்பாக சுருக்குகின்றனர். காவி பாசிசம் என்று மட்டும் சொல்வதின் மூலம் கதர்
பாசிசத்திற்கு முட்டுக் கொடுக்கின்றனர். காவி பாசிசம் என்பதை மட்டும்
குறிப்பிடுவது சாராம்சத்தில் பார்ப்பனிய பாசிசத்தை வர்க்க உள்ளடக்கம் இல்லாமல்
பேசுவதாகும். அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும்
கார்ப்பரேட் பாசிசம் என்பதும் இதில் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒன்றே; இந்திய பாசிசத்தின் இரு முகங்களே என்பதுதான் சமரன்
(ஏ.எம்.கே.) நிலைபாடாகும்.
11. அமைப்பிற்குள்
தங்கள் கருத்துகள் சிறுபான்மையாக இருந்த ஆத்திரத்தில் இருவழிப் போராட்டத்தை
சீர்குலைத்தனர். பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு செயல்படுவது என்ற
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை தூக்கியெறிந்தனர். கோஷ்டிவாதத்தை
நியாயப்படுத்துவது, இருவழிப்
போராட்டம், ஜனநாயக
மத்தியத்துவத்தை மறுப்பது போன்ற டிராட்ஸ்கிய வாதங்களை முன்வைத்தனர்.
அமைப்பை
கோஷ்டிவாதத்தின் மூலம் பிளவுபடுத்தியதற்கும், எய்ம் தொண்டு நிறுவன ஆதரவிற்கும், ஓராண்டிற்கும் மேலான இருவழிப் போராட்டத்திற்குப் பிறகும்
சுயவிமர்சனம் வர மறுத்ததால் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் அமைப்பு அவர்களை
நீக்கியது. அதன் பிறகும் சமரன் பெயரையும், சமரன் உழைப்பையும் திருடி பிழைப்பிற்காக
பயன்படுத்துகிறார்கள். துரோகி டிராட்ஸ்கி லெனின் சொன்னதாக திருத்தல்வாத, கலைப்புவாதக் கருத்துகளைக் கட்சியில் பரப்பியது போல்
இவர்களும் சமரன் பெயரில் திருத்தல்வாதக் கருத்துகளைப் பரப்புகிறார்கள்.
இவ்வாறு சமரன்
நிலைபாட்டை கைவிட்டு ஓடிப்போய் சமரனைத் தாக்கிய ஞானம்-பிரதீப்-ரவீந்திரன் கும்பல்
சமரன் பெயரை எவ்வித கூச்சமுமின்றி, மானவெட்கமின்றி, ஈனத்தனமாக பயன்படுத்துகின்றது. சமரன் பத்திரிகை, சமரன் வெளியீட்டகம் மற்றும் புதுமை பதிப்பகம் போன்றவற்றை
அமைப்பு விரோதமாக பயன்படுத்தி வருகிறது; மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி என்ற பெயரில் இயங்கிக்கொண்டு
ம.ஜ.இ.க.வின் கொடி மற்றும் அமைப்பின் பெயர் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறது. இவை
அனைத்தும் சமரனால் ஸ்தாபிக்கப்பட்டவை ஆகும். இவை அமைப்பு பெரும்பான்மைக்கு
உரிமையுடையதாகும். சிறுபான்மையினரான இக்கும்பலுக்கு இவற்றை பயன்படுத்துவதற்கு
எவ்வித அதிகாரமும் தார்மீக உரிமையும் இல்லை. அவ்வாறு பயன்படுத்துவது கேடுகெட்ட
பிழைப்புவாதம் மற்றும் அரசியல் வேசித்தனமாகும்.
மனோகரனின்
டிராட்ஸ்கிய வாதம்
ஏ.எம்.கே மறைவிற்குப்
பிறகு,
நான்காம் அகிலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி எனப்படும் டிராட்ஸ்கிய
கும்பலைச் சேர்ந்த பொன்னையா வீரபாகு, ஜரதுஷ்டிரா, டிராட்ஸ்கி ஓஷோ மற்றும் இவர்களுடன் உறவாடும் காலன்துரை, ஏலகிரி இராமன், அனுப்பூர் செல்வராஜ் போன்ற டிராட்ஸ்கியர்களின் கருத்துகள்
மனோகரன் மூலம் அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி எடுத்தது. மனோகரன் ‘டிராட்ஸ்கி பற்றிய ஆய்வு’ எனும் பெயரிலும், ‘ஸ்டாலின் மீதான விமர்சனம்’ எனும் பெயரிலும், அப்பட்டமாக டிராட்ஸ்கி ஆதரவு - ஸ்டாலின் எதிர்ப்புக்
கருத்துகளை சதித்தனமாக பிரச்சாரம் செய்து கோஷ்டி கட்டி, பிறகு தனி அமைப்பு கட்டி அமைப்பை பிளவுபடுத்தினார்.
மனோகரனையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு களையெடுத்தது. தற்போது ‘பாட்டாளி வர்க்க சமரன் அணி’ எனும் பெயரில் டிராட்ஸ்கிய அணியாக செயல்பட்டு வருகிறது.
மனோகரன்
டிராட்ஸ்கியர்கள் பேசும் கருத்துகளையே அமைப்புக்குள்ளும் பேசினார். மனோகரன் தனது
அறிக்கையில் டிராட்ஸ்கிய ஆதரவு, ஸ்டாலின்
எதிர்ப்பு கருத்துகளை நயவஞ்சகமாக ‘ஆய்வு’ எனும்
பெயரில் புதிய இடது பாணியில் முன்வைத்துள்ளார். அறிக்கை மீதான வாதத்தில்
அப்பட்டமாக நான்காம் அகிலத்தின் கருத்துகளை முன்வைத்தார். ஆனால் மாவோ வழியில்
ஸ்டாலினை விமர்சிப்பதாகக் கூறி மாவோவை இழிவுபடுத்தி தாக்கினார். வாதத்தில் அவர்
முன்வைத்த மார்க்சிய விரோதக் கருத்துகள் பின்வருமாறு:
1. ஸ்டாலின்
இந்தியப் புரட்சியின் எதிரி; சீனப்
புரட்சிக்குத் தடையாக இருந்தார்; அவர்
உலகப் புரட்சியின் எதிரி.
2. ஸ்டாலின்
அகிலம் கலைத்தது தவறு; அவர்
கலைப்புவாதி; அகிலம்
கலைத்ததால்தான் கம்யூனிச அமைப்புகள் பிளவுண்டன; அகிலம் கலைத்ததற்கு ஸ்டாலின் சொன்ன காரணங்கள்
சிறுபிள்ளைத்தனமானவை.
3. ஸ்டாலினின்
பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு; அதில் இடது வலது விலகல் போக்குகள் ஏற்பட்டன.
4. சோசலிசக்
கட்டுமானத்தில் ஸ்டாலின் செய்த கடுமையான மார்க்சிய விரோத தவறுகளே ருஷ்யாவில்
முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதற்கு காரணம். கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டம்
என்பது கூட முதலாளித்துவ மீட்சி பற்றிய இந்த ஆய்விலிருந்தே துவங்க வேண்டும்.
ஸ்டாலின்தான் கலைப்புவாதத்தின் தொடக்கம். அவர் சர்வாதிகாரி; பலரைக் கொன்ற கொலைகாரன்.
5. ஸ்டாலின்
வெறும் துப்பாக்கி; தத்துவவாதி
இல்லை.
6. காந்தி
கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்தார். ஸ்டாலின் வழிகாட்டுதலால் தான் இந்திய
பொதுவுடைமை இயக்கம் ஏகாதிபத்திய ஆதரவு நிலையெடுத்தது.
7. மாவோ
அகிலம் கலைத்ததை ஆதரித்தார்; அகிலம்
கட்ட முயற்சிக்கவில்லை; அவர்
சர்வதேச பாத்திரம் ஆற்றவில்லை.
8. மாவோ-லின்பியோ
கூட்டணியே இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் அழிந்து போனதற்கு காரணம்.
9. மாவோவின்
கலாச்சாரப் புரட்சி தோல்வி அடைந்தது. கலாச்சாரப் புரட்சி முதலாளித்துவ மீட்சியைத்
தடுக்க முடியவில்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட மாவோதான் காரணம்.
10. ஸ்டாலின்-மாவோவை
விமர்சிக்காமல் கட்சி கட்ட முடியாது. ஸ்டாலின் வழியில் சென்று அழியப் போகிறோமா? ஸ்டாலினை மறுத்து கட்சி கட்டப் போகிறோமா? இதுவே நம்முனுள்ள கேள்வி.
11. லெனின்
சொன்னவாறு ஏன் ஐரோப்பா முழுதும் புரட்சி நடக்கவில்லை? தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று டிராட்ஸ்கி முன்பே
சொன்னார்.
12. டிராட்ஸ்கியின்
‘நிரந்தரப் புரட்சி’ பரிசீலனைக் குரியது. அவர் மா-லெ வாதி. புரட்சியில் பங்கு
பெற்றார். டிராட்ஸ்கி ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால்தான் கோஷ்டிவாதியாகவும்
எதிர்ப்புரட்சியாளனாகவும் மாறினான். (இது மாவோவின் விமர்சனம் என்கிறார். ஸ்டாலினை
எதேச்சதிகாரி என்றும் ஸ்டாலினால்தான் டிராட்ஸ்கி எதிர்புரட்சியாளனாக மாறியதாக மாவோ
கூறினாரா?)
லெனின் டிராட்ஸ்கியைத்தான் வாரிசாக பார்த்தார். ஸ்டாலினை
எதிர்த்தார். லெனின் உயிலை இவ்வமைப்பு ஏற்கிறதா? இல்லையா? என்று
கேட்டார்.
13. ஸ்டாலின்-மாவோவை
மறுபரிசீலனை செய்ய இந்த அமைப்பு அனுமதித்தால்தான் இந்த அமைப்பில் இருப்பேன்.
14. மார்க்சிய-லெனினியத்தை
மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின்
மீதான விமர்சனம் எனும் பெயரில் டிராட்ஸ்கியவாதிகளின் கருத்துகளை அடிப்படையாகக்
கொண்டு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் மீது மனோகரன் கடும் தாக்குதல்
தொடுத்தார். டிராட்ஸ்கியை எதிர்ப்பது என்பதே மாவோ சிந்தனையைக் கைவிடுவது என்றும், அது தொண்டு நிறுவன அரசியல் என்றும், கலைப்புவாதம் என்றும் பேசுகிறார்.
மனோகரன் பாசிச
காலகட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி பேசுவது டிராட்ஸ்கியம் என்கிறார். ஆனால் இது
புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு ஓடுவதும், அப்பட்டமான முதலாளித்துவ தேசியவாதமும் ஆகும் .
ஞானம் கும்பலைப்
போலவே,
மனோகரன் கும்பலும் ஏ.எம்.கே மீது தாக்குதல் நடத்தியது. டிராட்ஸ்கியத்தை
ஞானம் கும்பல் துவக்கி வைக்க, மனோகரன்
கும்பல் முடித்து வைத்தது. ஏ.எம்.கே. மீதும் அவர் நிலைபாட்டின் மீதும் மனோகரன்
நடத்திய தாக்குதல் வருமாறு:
1. ஏ.எம்.கே
தத்துவ அறிவு இல்லாதவர்; அவர்
வெறும் நடைமுறையாளர்; 30
ஆண்டுகளாக செயல்தந்திர கண்ணோட்டம் இல்லாமல் இருந்தார்; ஏதும் எழுதி வைக்கவில்லை; அவர் எதேச்சதிகார வாதி; குறுங்குழுவாதி; அவர் நிரூபிக்கப்பட்ட தலைவர் இல்லை;
2. ஏ.எம்.கே-வின்
காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் என்ற கோட்பாடு பொருந்தாது; காங்கிரஸ்-திமுக அணிக்கு நிபந்தனைகளுடன் வாக்களிக்க
மக்களைக் கோரலாம்; புதிய
ஜனநாயகப் புரட்சியை கைவிடவேண்டும்; பாசிச எதிர்ப்பு அரசாங்கம் அமைப்பதும், அதில் காங்கிரசை அமர்த்துவதும் அவசியம்; பாஜக மட்டுமே பாசிசக் கட்சி;
3. நிரந்தரமாக
பாராளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும்; தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும்; தலைமறைவு அமைப்பு தேவையில்லை; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் பனிப்போர் இல்லை; ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தும் ஏகாதிபத்தியத்தைத்தான்
முதன்மையாக எதிர்க்க வேண்டும். தாய்நாட்டை காப்பது என்ற பெயரில் அமைதி வழியில்
நிதி மூலதன ஆதிக்கத்தில் ஈடுபடும் ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார்; வெனிசுலா பிரச்சினையில் அமெரிக்காவை எதிர்த்து சீன-ரஷ்ய
முகாமை ஆதரிக்க வேண்டும் என்றார்;
4. காஷ்மீரை
ஆக்கிரமிப்பதால் டெல்லிக்கு ஏகாதிபத்திய குணாம்சம் உண்டு. இந்தியா துணை
ஏகாதிபத்தியம்; பிரபாகரன் பாசிஸ்ட்;
5. ஆறு மாத
கால போராட்டத்திற்குப் பிறகும் சுயவிமர்சனம் வர மறுத்து டிராட்ஸ்கிய கருத்துகளைக்
கொண்டு தனி அமைப்பு கட்டி பிளவுபடுத்தினார். எனவே, அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு பெரும்பான்மை
முடிவின் அடிப்படையில் களையெடுத்தது. தற்போது தனது அமைப்புக்கு பாட்டாளி வர்க்க
சமரன் அணி என பெயரிட்டுள்ளார். பாட்டாளி வர்க்க சமரன் பெயரில் பத்திரிகையையும்
சமரன் வெளியீட்டகத்தையும் தன் பெயருக்கு அமைப்பிற்குத் தெரியாமல் கள்ளத்தனமாக
பதிவுசெய்துகொண்டார். சமரன் நிலைபாட்டை விட்டு ஓடிவிட்டு, சமரனை தாக்கிவிட்டு ஞானம் கும்பலைப் போலவே மனோகரனும் சமரன்
பெயரை வைத்து ஈனத்தனமாக பிழைப்பு நடத்துகிறார்.
இவ்வாறு, ஏ.எம்.கே மீதும் அவரது நிலைபாடுகள் மீதும் தாக்குதல்
நடத்தினார். எய்ம் எதிர்ப்பு போராளி என்று தன்னையே பெருமையாகக் கூறியவர், இறுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய
எய்ம் நிலைபாட்டையே அவரும் முன்வைத்தார்.
தொகுத்துச்
சொல்வதெனில்,
ஏகாதிபத்தியம் பற்றிய
லெனினிய கோட்பாடுகளைக் கைவிட்டு காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய வாதத்தை முன்வைப்பது; ஆனால் டிராட்ஸ்கிய எதிர்ப்பு வேடம் போடுவது;
தொண்டு நிறுவனங்களைப்
பயன்படுத்தலாம் என்பது;
கார்ப்பரேட் காவி
பாசிசம் என பேசுவது;
ஜனநாயக
மத்தியத்துவத்தை, இருவழிப்
போராட்டத்தை மறுப்பது;
கோஷ்டி கட்டுவதை
நியாயப்படுத்துவது;
பாராளுமன்றவாதத்தை
முன்வைப்பது, தலைமறைவு அமைப்பை
துறந்து ஓடுவது;
அமைப்பை முதலாளிய
நிறுவனமாக, திருத்தல்வாத
அமைப்பாக மாற்ற முயற்சிப்பது;
தாங்களே
கலைப்புவாதிகளாக மாறிவிடுவதால், மா-லெ
அமைப்பின் பிளவுகளுக்குக் காரணம் கலைப்புவாதம் என்ற சமரன் நிலைபாட்டை மறுத்து
சமரனையே (ஏ.எம்.கே.) கலைப்பு வாதியாக, குறுங்குழுவாதியாக மாற்றி விடுவது;
சமரன் மீது தாக்குதல்
தொடுப்பது; சமரன் நிலைபாட்டை கைவிட்டு
ஓடுவது;
ஆனால் சமரன் பெயரில் பிழைப்பு நடத்துவது;
என எல்லாவற்றிலும்
ஞானம் கும்பலும் - மனோகரன் கும்பலும் ஒரே நிலைபாட்டில் பிண்ணிப் பிணைந்துள்ளது.
திருத்தல்வாதமும் பிழைப்புவாதமும் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
கலைப்புவாதம் பற்றி
ஏ.எம்.கே.
தோழர் ஏ.எம்.கே மா-லெ
அமைப்புகளை பிளவுபடுத்திவரும் கலைப்புவாதப் போக்குகளாக நான்கு கலைப்புவாதப்
போக்குகளை வகைப்படுத்தியுள்ளார். அவை வருமாறு:
1. மண்ணுக்கேற்ற
மார்க்சியம் எனும் பெயரில் மார்க்சியத்தோடு எண்ணமுதல்வாத, முதலாளித்துவ பிற்போக்குத் தத்துவங்களை (உ.ம்-பெரியாரியம், அம்பேத்கரியம், கிராம்சியம், அத்வைதம், துவைதம்
முதலியன) கலப்பது தத்துவத் துறையில் கலைப்புவாதமாகும்.
2. ஏகாதிபத்தியங்களுக்கு
இடையில் மறு பங்கீட்டிற்கான போர் இல்லை என்றும்; எனவே தனி நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்றும் கூறி காவுத்ஸ்கியின்
அதீத ஏகாதிபத்தியத்தை முன்வைப்பது அரசியல் துறையில் கலைப்புவாதமாகும்.
3. முதலாளித்துவ
நாட்டு பாராளுமன்றங்களைப் போலவே காலனி நாட்டுகளின் பாராளுமன்றங்களையும்
பயன்படுத்தலாம் என்று கூறி நிரந்தரப் பங்கேற்பு பேசுவதன் மூலம் அமைப்பை
பாராளுமன்றவாத அமைப்பாக மாற்றியமைக்க முயற்சிப்பதும் பாராளுமன்ற சோசலிசம்
பேசுவதும் செயல் தந்திரத்துறையில் கலைப்புவாதம் ஆகும்.
4. தலைமறைவு
ஸ்தாபனத்தை மறுப்பதும்; இருவழிப்
போராட்டத்தை மறுப்பதும் அமைப்புத் துறையில் கலைப்புவாதம் ஆகும்.
டிராட்ஸ்கியிசம் இந்த
நான்கு கலைப்புவாதப் போக்குகளையும் தன்னகத்தே தழுவி நிற்கிறது. ஆகவே
டிராட்ஸ்கியிசத்தை முறியடித்து சவக்குழிக்கு அனுப்புவது மார்க்சியர்களின்
இன்றியமையாதக் கடமையாகும்.
ஏகாதிபத்தியவாதிகளும், புதிய இடதுகளும், திருச்சபை-தொண்டு நிறுவனங்களும், பிராங்க்பர்ட் பள்ளியும் ஒன்றிணைந்து மா-லெ
அமைப்புகளுக்குள் தற்போது ‘மார்க்சிய வேடம் தரித்த டிராட்ஸ்கிய கருத்துகள்’ ஊடுருவ முயற்சிக்கின்றன. கம்யூனிச
அமைப்புகளில் உள்ள குட்டி முதலாளித்துவ ஊசலாட்ட சக்திகளை இலக்காகக் கொண்டு அவை
செயல்படுகின்றன. டிராட்ஸ்கி ஆதரவு-ஸ்டாலின் எதிர்ப்பு கருத்துக்களை விஷமத்தனமான
பிரச்சாரம் செய்து வருகின்றன. அவற்றை இனங்கண்டு முறியடிப்பதும், டிராட்ஸ்கிய சவங்களை லெனினிய எரிதழல் கொண்டு
சாம்பலாக்குவதும், மாபெரும்
மார்க்சிய-லெனினிய வாதியும் நம் ஆசானுமான ஸ்டாலினின் சாதனைகளை உயர்த்திப்
பிடிப்பதும், மார்க்சிய-லெனினிய
மாவோ சிந்தனையைக் காப்பாற்றுவதும் நமது உயிர் மூச்சான கடமையாகும்.
தொடரும்…